பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

முஹர்ரம் மாதமும் ஆஷுரா நோன்பும்


💞 முஹர்ரம் மாதமும் ஆஷுரா நோன்பும் 💞

• இஸ்லாத்தில் மாதங்கள் 12 ஆகும். இதில் அல்லாஹ்வும் & நபி (ஸல்) அவர்களும் நான்கு மாதங்களை புனித மாதங்களாக அறிவித்து உள்ளார்கள் அவைகள் ;

1) துல்கஅதா, 2) துல்ஹஜ், 3)  முஹர்ரம், 4)  ரஜப்

(நூல் : ஸஹீஹ் புகாரி : 3197)

• இந்த நான்கு மாதமும் அல்லாஹ்வும் ரசூலும் புனித மார்க்கம் என்று கூறி உள்ளார்கள்! இம்மாதங்களில் போர் புரிவதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது!

(சூரத்துல் : அத் தவ்பா : 36 & 37)

இமாம் இப்னு கஸிர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ் நாட்களில் வெள்ளிக்கிழமையை சிறந்த நாளாக தேர்வு செய்து உள்ளான்! நோன்புகளில் ரமலான் நோன்பு சிறந்த நோன்பாக தேர்வு செய்து உள்ளான்! மனிதர்களில் இருந்து சிறந்த இறைத்தூதர்களை தேர்வு செய்தான் ஊர்களில் சிறந்த இடமாக பள்ளிவாசல்களை தேர்வு செய்தான் அதே போல் மாதங்களில் சிறந்த மாதமாக முஹர்ரம் மாதத்தை தேர்வு செய்து உள்ளான்!

(நூல் : தஃப்சீர் இப்னு கசிர்)

• முஹர்ரம் மாதம் இஸ்லாத்தில் புனித மிக்க மாதங்களில் ஒன்றாகும் இந்த மாதத்தில் போர் செய்வது மட்டும் அல்லாமல் மற்ற மாதங்களில் பாவம் செய்வதை விடவும் இந்த மாதத்தில் பாவம் செய்வது  மிக கடுமையான குற்றமாகும்! 

• இஸ்லாத்தின் முதல் மாதம் முஹர்ரம் (26/06/2025) வியாழக்கி ழமை மாலையில் இருந்து ஆரம்பம் ஆகி விட்டது!

• சிறப்புமிக்க ஆஷுரா நோன்பு இன்ஷாஅல்லாஹ் பிறை 9 (05/07/2025) சனிக்கிழமை ஒன்றும், பிறை 10 (06/07/2025) ஞாயிற்றுக்கிழமை ஒன்றும் வைக்க வேண்டும்! இது சுன்னத்தான நோன்பாகும்!

💟 இஸ்லாத்தின் முதல் மாதம் :

• ஆரம்ப காலத்தில் மக்கள் மாதங்களை முன்னும் பின்னுமாக மாற்றிக்கொண்டு இருந்தார்கள்! அதில் ஏகப்பட்ட குளறுபடிகள் அரபிகள்போல மற்ற சமுதாயங்களிடமும் சரியான கணக்கு இல்லை! ரோமர்களின் பழைய காலண்டர் ஆண்டுக்குப் பத்து மாதங்களுடன் இருந்தது!

• நிலா வளருவதையும் தேய்வதையும் வைத்து மிக எளிதாக மாதங்களைக் கணக்கிட வழி செய்த அல்லாஹ், அதன் சரியான எண்ணிக்கையை 12 என்று அறிவித்து பெரிய குழப்பத்தை ஒழித்தான்!

• ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தில் முதல் மாதம் இரண்டாம் மாதம் எதுவும் இருக்க வில்லை! உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்தில் தான் மாதங்களின் அவசியம் கருதி ஸஹாபாக்கள் உடன் ஆலோசனை செய்து முஹர்ரம் மாதத்தை இஸ்லாத்தின் முதல் மாதமாக அறிவிப்பு செய்தார்கள்!

(நூல் : பத்ஹுல் பாரி : 7 / 268)

• இஸ்லாத்தில் மாதங்களை பிறை தோன்றுவதையும் மற்றும் மறைவதையும் வைத்து கணக்கிடுவார்கள்! நபி (ஸல்) அவர்கள் எப்போது மக்காவில் இருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்றார்களோ அன்றில் இருந்து ஹிஜ்ரி என்ற கால அளவை மக்கள் கணக்கிட ஆரம்பம் செய்தார்கள். இன்றும் நம்முடைய இஸ்லாமிய நாட்காட்டி ஹிஜ்ரி அடிப்படையில் தான் உள்ளது!

• இன்னும் சிலர் அல்லாஹ் பாதுகாக்கணும் யூதர்கள் வழிமுறைகளான வருட பிறப்பை கொண்டாடுவது போல் முஹர்ரம் மாதம் இஸ்லாத்தின் முதல் வருடம் என்று அதை கொண்டாடுகிறார்கள். அன்றைய நாளில் புது ஆடை அணிவது, வீட்டில் விஷேச உணவு தயாரிப்பது என்று அனைத்து மாற்று மத கலாச்சாரத்தையும் இஸ்லாத்தில் புகுத்தி அதை செய்து வருகிறார்கள்!

• ஆனால் இவ்வாறு செய்வது தெளிவான பித்அத் ஆகும் நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் தபா தாபியீன்கள் காலம் வரை யாரும் இவ்வாறு செய்ததாக எந்த செய்தியும் கிடையாது! இந்த மாதத்தில் நாம் அமல்களை எப்படி செய்யலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர எவ்வாறு கொண்டலாம் என்று சிந்திக்க கூடாது!

💟 முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2157)

• நபி (ஸல்) அவர்கள் இந்த மாதத்தை அல்லாஹ்வுடன் சேர்த்து கூறி உள்ளார்கள் அந்த அளவுக்கு இந்த மாதம் சிறப்புக்குறிய மாதம் ஆகும்!

• ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தை தவிர்த்து வேறு எந்த மாதத்திலும் முழுமையாக நோன்பு வைக்கவில்லை. மாறாக இந்த ஹதீஸ் இந்த மாதத்தில் அதிகம் நோன்பு வைக்க ஊக்குவிக்கிறது.

• கடமையான நோன்பை தவிர மற்ற நோன்புகளை தொடர்ச்சியாக வைக்க கூடாது எனவே நாம் இந்த மாதத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு விருப்பம் பட்டால் வைக்கலாம் கட்டாயம் கிடையாது! ஆஷுரா நோன்பு பிறை 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் இரண்டு நோன்பு வைக்கலாம்! அதே போன்று பிறை 13 - 14 - 15 ஆகிய நாட்களில் நாம் மூன்று நோன்புகள் தொடர்ந்து வைக்கலாம்! திங்கள், வியாழன் நோன்பு வைக்கலாம்.

(நூல் : ஷர்ஹுன் நவவி அலா சஹீஹ் முஸ்லிம்)

💟 ஆஷுரா நாளில் ஏன் நோன்பு வைக்க வேண்டும்?

• கொடுக்கோலன் ஃபிர்அவ்னிடம் இருந்து நபி மூஸா (அலை) மற்றும் அவர்களின் சமூகத்தை அல்லாஹ் காப்பாற்றி! ஃபிர்அவ்னையும் அவனது படைகளையும் செங்கடலில் முழ்கடித்தான்!  இந்த நிகழ்வு சரியாக முஹர்ரம் மாதத்தில் தான் நடைபெற்றது!

• அதனால் தான் நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதமாக முஹர்ரம் 9 மற்றும் 10 வது நாளில் நோன்பு வைக்கிறோம் இந்த நோன்புகள் வைப்பது சுன்னத் ஆகும்!

💜 ஆஷுரா நோன்பு ஏன் கடமை ஆனது :

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள்!

நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்? என்று கேட்டார்கள்! அதற்கு யூதர்கள், இது ஒரு மகத்தான நாள்! இந்த நாளில் தான் மூஸாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான்!

எனவே, மூஸா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள்! ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம் என்று கூறினர்!

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம் என்று கூறினார்கள்!

பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2083)

💜 ஆஷுரா நாளில் எத்தனை நோன்புகள் வைக்க வேண்டும் :

• நாம் முஹர்ரம் 9 மற்றும் 10 வது நாளில் இரண்டு நோன்புகள் வைக்க வேண்டும்! இது சுன்னாஹ் ஆகும்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2088)

• நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் ஒரு நோன்பு மட்டுமே வைத்தார்கள். யூதர்களும் அந்த நாளில் ஒரு நோன்பு வைத்தாதல் அவர்களுக்கு மாறு செய்யும் விதமாக இரண்டு நோன்புகள் வைக்க சொன்னார்கள்!

💜 ஆஷுரா நோன்பில் ஒன்றை விட்டு விட்டால் :

• ஆஷுரா நாளில் முஹர்ரம் 9 மற்றும் 10 வது நாளில் இரண்டு நோன்புகள் வைப்பது சுன்னத் ஆகும்!

• ஏதேனும் நிர்பந்த சூழ்நிலை முஹர்ரம் 9 வது நாளில் நோன்பை விட்டு விட்டால் முஹர்ரம் 10 வது ஒரு நாள் மட்டும் நோன்பு வைத்தால் போதும்! அல்லது முஹர்ரம் 9 வது நாளில் நோன்பு வைத்து விட்டு 10 வது நாளில் வைக்க முடியவில்லை என்றால் எந்த குற்றமும் இல்லை!

• முஹர்ரம் 11 வது நாளில் நோன்பு வைக்கலாம் என்று சில செய்திகள் உள்ளன ஆனால் அவை அனைத்துமே மிகவும் பலகீனமானவையே!

💜 ஆஷுரா நோன்பின் கூலி :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாகும்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2152)

• சிறு பாவங்கள் மட்டுமே மன்னிக்கப்படும்! பெரும் பாவங்களுக்கு தவ்பா செய்ய வேண்டும்!

(நூல் : அல்மஜ்மூவு : 6 / 431)

💟 நோன்பு வைக்க முடியவில்லை என்றால்?

• சிலர் ஒவ்வொரு வருடமும் ஆஷுரா நோன்பு வைப்பார்கள் ஆனால் நிர்பந்த சூழ்நிலை சிலர் பயணத்தில் இருப்பார்கள் இன்னும் சிலர் இந்த காலங்களில் நோய் வாய்ப்பட்டு இருப்பார்கள் ! இன்னும் சிலருக்கு ஹைலு அல்லது நிபாஸ் இருக்கும்!

• இவர்கள் வைக்க விருப்பப்ட்டாலும் நிர்பந்த சூழ்நிலை வைக்க முடியாமல் போகும் இப்படி பட்டவர்கள் பாவ காரியங்களில் எதுவும் ஈடுப்படாத வரை அல்லாஹ் இவர்களுக்கு நோன்பு வைத்த நன்மையை வழங்குகிறான்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 2996)

💟 விடுப்பட்ட களா நோன்பை இந்த நாட்களில் வைக்கலாமா?

• நாம் முதலில் களா நோன்புகளை நீண்ட நாட்கள் வைக்காமல் இருக்க கூடாது இயன்ற அளவுக்கு விரைவாக வைக்க முயற்சி செய்யவேண்டும்! காரணம் இல்லாமல் களா நோன்புகளை நாம் வைக்காமல் இருக்க கூடாது!

• நாம் முஹர்ரம் மாதத்தில் விடுப்பட்ட களா நோன்புகளை வைக்கலாம்! ஆனால் நமக்கு விடுப்பட்ட நோன்பை வைத்த நன்மை மட்டும் கிடைக்கும்! முஹர்ரம் மாதத்தில் நோன்பு வைத்த நன்மை கிடைக்காது!

• நாம் இயன்ற அளவுக்கு ஆஷுரா நோன்பை வைக்க முயற்சி செய்யவேண்டும் இந்த நோன்பிற்கு அதிகம் சிறப்பு உண்டு!

💟 முஹர்ரம் மாதத்தின் அறியாமை செயல்கள் :

• ஷியாக்களில் இந்த மாதத்தை மிகவும் சிறப்பாக ஷிர்க் ஆனா செயல்கள் மூலம் கொண்டாடுவார்கள்! அதில் சில ;

1) பஞ்சாகம் எடுத்தல்!

2) ஆஷுரா நாளில் சிறப்பு துஆ & சிறப்பு தொழுகை தொழுவது!

3) இஸ்லாமிய புது வருட கொண்டாட்டம்!

4) நிக்காஹ் செய்ய கூடாது, கணவன் மனைவி சேர கூடாது இவர்கள் நம்பிக்கை!

5) குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கொழுக்கட்டை செய்வார்கள்!

6) அசைவம் சாப்பிட மாட்டார்கள்!

7) முஹர்ரம் 10 வது நாளை துக்க நாளாக அனுசரிப்பார்கள்!

• இவ்வாறு நிறைய வழிமுறைகளை இன்றும் பலர் பின் பற்றி கொண்டு உள்ளார்கள் அல்லாஹ் நம்மை இவ்வாறான மார்க்கத்தில் இல்லாத காரியங்களில் ஈடுப்படுவதை விட்டும் நம்மை பாதுகாக்க வேண்டும்!

@அல்லாஹ் போதுமானவன் 💞

#muharram1447 #islamicreminder #ashura

No comments:

Post a Comment