மீலாதுன் நபி நரகமே பரிசு!
• ரபீயுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாள் என்று கவிதை, பாடல் என பித்அத் ஆன செயல்களில் ஒரு கூட்டம் செய்ய ஆரம்பித்து விடும்!
• மீலாத் கொண்டாடுவது பர்ளு போன்றும் அதை எதிர்ப்பது, அதை ஆதரிக்காமல் இருப்பது குப்ர் போன்றது என்பது போல் கூறுவார்கள்!
• மீலாத் நபி என்றால் என்ன? இது எப்படி இஸ்லாத்தில் தோன்றியது? இதை கொண்டாடலாமா? இவ்வாறு ஒன்று இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளதா இல்லை என்பதை பற்றி இன்ஷாஅல்லாஹ் இந்த பதிவில் பார்ப்போம்!
• நபிமார்கள் அனுப்பப்பட்ட காலத்தில் இருந்து எந்தவொரு நபியும் தன்னுடைய பிறப்பிற்காக அந்த நாளை கொண்டாடியது கிடையாது! இன்னும் அவர்களுடைய சமூக மக்களுக்கும் தங்கள் பிறந்த நாளை அறிமுகப்படுத்தியதும் கிடையாது!
• இதே போன்று தான் நபி (ஸல்) அவர்களும் தன் பிறப்பிற்காக பிறந்த நாள் கொண்டாடவுமில்லை, தன் உம்மத்திற்கு இதனை செய்யுமாறு கற்றுக் கொடுக்கவுமில்லை!
• இதனால் தான் சிறப்பான மூன்று தலைமுறையினர்களான ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபா தாபியீன்கள் வாழ்ந்த காலத்தில் இந்த பிறந்த நாள் வழிமுறை காணப்படவுமில்லை!
• நபி (ஸல்) அவர்கள் பிறந்தநாளை நினைவு வைத்து எந்த ஒரு ஸஹாபியும் வருடம் வருடம் கொண்டாடியதாக எந்த வித ஸஹீஹான ஆதாரமும் கிடையாது!
• எகிப்தில் வாழ்ந்த சிலை வணங்குபவர்கள் பிறந்த நாட்களை கொண்டாடுபவர்களாக இருந்தார்கள்! சிலை வணங்குபவர்களிடம் இருந்து கிறித்தவர்கள் இதனை உள்வாங்கிக் கிறிஸ்துமஸ்ஸாக கொண்டாடத் தொடங்கினார்கள்!
• பின்பு ஹிஜ்ரி 385ல் ஷீஆக்களில் மிகவும் மோசமான பாத்திமிய்யாக்கள் கிறித்தவர்களிடம் இருந்து உள்வாங்கி மீலாது கொண்டாட்டத்தை ஆரம்பித்தார்கள்!
• பின்பு ஈராக்கில் இர்பில் என்ற இடத்தில் வசித்த முதஃபர் சைனுத்தீன் என்பவரால் ஹிஜ்ரி 595 ஆம் ஆண்டு முஸ்லிம் பொது மக்களிடையே பரப்பிலிடப்பட்டது தான் இந்த மீலாது நபியும், மல்லீது பாடல்களும் ஆகும்!
(ஆதாரம் : இமாம் மக்ரீஸி அவர்களுடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது)
• 4ம் நூற்றாண்டில் ஃபாதிமய்யாக்கள் என்ற ஷீஆப்பிரிவினை சேர்த்த அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி என்பவனால் முதன் முதலில் மௌலித் எனும் பித்ஆத்தை உருவாக்கினான் !
• ஃபாதிமிய்யாக்கள் (ஃபாதிமா (ரழி) அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள்) என தமக்கு தாமே பொய்யான பெயர் சூட்டிக் கொண்ட ஒரு கூட்டம்!
• பனுஉபைத் என்ற கூட்டத்தினர் பக்தாதிலுள்ள அப்பாஸியர் ஆட்சியை எதிர்த்து எகிப்தில் கிளர்ச்சி செய்து, அங்கு ஆட்சியைக் கைப்பற்றினர்கள்!
• இவர்கள் ஆட்சிக்கு வந்தது அந்த நாட்டு மக்களுக்கும் மற்றும் தமது நிர்வாகத்தில் உள்ள மக்களுக்கும் இவர்கள் மீது வெறுப்பு காணப்பட்டது!
• இதை சமாளிப்பதற்காகவும்! தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், மக்கள் தமக்கெதிராக எந்த விதமான புரட்சியில் ஈடுபடாமல் இருப்பதற்காகவும் இன்னும் மக்களின் கவனத்தை தமது பக்கம் ஈர்ப்பதற்காகவும் முதன் முதலில் மீலாத் எனும் ஒன்றை உருவாக்கினார்கள்!
• இந்த மீலாத் மக்கள் இடையே அதிகம் வரவேற்பு பெற்றது இதனால் ஷியாக்கள் மேலும் இது போன்று நிறைய உருவாக்கினார்கள்!
1) மவ்லிதுன் நபி, 2) மவ்லிது அலி, 3) மவ்லிது ஹஸன், 4) மவ்லிது ஹுஸைன், 5) மவ்லிது ஃபாத்திமா
• இது போன்று நிறைய பித்அத் ஆன மவ்லீத்களை உருவாக்கினர்கள்! அல் முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி இவனைத் தொடர்ந்து அல்முயிஸ என அழைக்கப்படும் இவனது மகன் மீலாத்தை பேணி வந்தான்!
• இவனை விட இவனது கூட்டம் வட ஆப்பிரிக்க சேர்ந்த மக்கள் நபி (ஸல்) அவர்களை கடவுளாகவே எடுத்து கொண்டார்கள்! இப்படி தான் வரலாற்றில் மீலாத் தோன்றியது!
(நூல் : அர்ரவ்ழதைன் ஃபீ அக்பாரித்தவ்லதைன் : 1 / 201)
• நபி (ஸல்) அவர்களை உயிருக்கும் மேல் நேசித்த ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு செயலையும் பதிவு உள்ளார்கள்! நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள் நபி (ஸல்) அவர்கள் அழுதார்கள் நபி (ஸல்) அவர்கள் முகம் கோபத்தில் சிவந்து விட்டது என்று,
• அதே போல் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது சரி எப்படி மரணித்தார்கள்? உடன் யார் இருந்தார்கள்? கடைசியாக என்ன கூறினார்கள் என்று ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்து உள்ளார்கள்!
• நபி (ஸல்) அவர்களின் நிகழ்வை அணு அணுவாய் பதிவு செய்த ஸஹாபாக்கள் கூட யாரும் நபி (ஸல்) அவர்கள் பிறந்தநாள் வருடம் தேதி நினைவு வைத்து அதை சிறப்பாக கொண்டாடியது கிடையாது!
• காரணம் அந்த காலத்தில் பொதுவாக அரபிகளிடம் பிறந்த நாளை குறித்து வைக்கும் பழக்கம் இல்லை!
• நபி (ஸல்) அவர்கள் பிறக்கும் பொழுது நபியாக பிறக்க வில்லை! மக்கள் மத்தியில் பிரபலம் இல்லாத நபராக தான் நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்! பிறந்த சில நாட்களிலே அவருடைய தாயும் மரணித்து விட்டார்கள்! இதனால் நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த நாள் எது என சரியான செய்தி வரலாற்றில் கிடையாது!
• வரலாற்று அறிஞர்கள் கூட நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளை யூகங்களின் அடிப்படையில் இந்த நாளில் இருக்கலாம் என்றே எடுத்து வைத்தார்கள்! இன்னும் கூற வேண்டும் என்றால் நபி அவர்கள் பிறந்த நாளைப் பற்றி சரியான குறிப்பு எந்த வரலாற்று நூல்களிலும் கிடையாது!
(நூல் : இமாம் இப்னு கஸீர் (ரஹ்) : அல் பிதாயா வந் நிஹாயா)
• ஆனால் நபி (ஸல்) அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் 12வது நாளில் தான் மரணித்தார்கள் என்பது அனைத்து வரலாற்று ஆசிரியர்களுடைய ஒருமித்த முடிவாகும்!
இமாம் இப்னுல் ஹாஜ் அல் மாலிகி (ரஹ்) அவர்கள் 'மத்கள்' என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் :
• ஆச்சரியத்திலும் ஆச்சரியம் எப்படி முஸ்லிம்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் இசையுடன் குதூகலமாக நபி (ஸல்) பிறந்த நாள் எனக்கூறி கொண்டாடுகிறார்கள்! ஆனால் அந்த மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள், இதுதான் இந்த உம்மத்திற்கு ஏற்பட்ட மிக மோசமான சோதனையாகும்! இந்த சோதனைக்கு நிகரானது எதுவும் கிடையாது!
• எனவே நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் முஸ்லிம்களே! நபியின் இறந்த நாள் எது? என உங்களை ஏமாற்றுபவர்களிடம் கேளுங்கள்!!!!
• இன்று பலரும் மீலாதை பர்ளு அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பின் பற்றுகிறார்கள் அதற்கு நிறைய கட்டுக்கதைகளையும் முன் வைக்கிறார்கள்! ஆனால் உண்மையில் நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் ஹதீஸ்களை தொகுத்த இமாம்கள் காலம் வரை இந்த மீலாத் என்று ஒன்று வரலாற்றில் கிடையாது!
• ஸஹாபாக்கள் காலம் முதல் இமாம்கள் வாழ்ந்த காலம் வரை யாரும் ரபீவுல் அவ்வல் மாதத்தை நினைவு வைத்து கொண்டாடி கிடையாது! மார்க்கத்தை அதிகம் தேடி கற்று அதை அமல் செய்த இவர்களுக்கு கிடைக்காத அல்குர்ஆன் வசனம் அல்லது தப்ஸீர் அல்லது ஹதீஸ்களா நமக்கு கிடைத்து விட்டதா???
1) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபியாக அருளப்பட்ட பின்பு மக்காவில் 10 வருடமே, மதினாவில் 13 வருடம் வாழ்ந்து உள்ளார்கள் ஆனால் நபி (ஸல்) அவர்கள் மீலாத் கொண்டாடியது கிடையாது!
2) நபி (ஸல்) அவர்கள் நேசத்திற்குரிய மனைவி, அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின்பு 40 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து உள்ளார்கள்! இவர்கள் வாழ்நாளில் ஒரு நாள் கூட மீலாத் கொண்டாடியது கிடையாது!
3) நான்கு கலீபாக்கள் : அபூபக்கர் சித்திக் (ரழி), உமர் பின் கத்தாப் (ரழி), உஸ்மான் பின் அஃப்ஹான் (ரழி), அலி இப்னு அபூ தாலிப் (ரழி) இவர்கள் மொத்தம் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து உள்ளார்கள் ஆனால் இவர்களில் யாரும் மீலாத் கொண்டாடியது கிடையாது!
4) அடுத்தது, 90 ஆண்டுகள் உவமய்யா மன்னர்களின் ஆட்சி, இதில் பலநூறு ஸஹாபாக்கள், தாபீயின்கள் இருந்தார்கள் இவர்களில் யாரும் மீலாத் கொண்டாடியது கிடையாது!
5) அடுத்தது, அப்பாசி மன்னர்களின் ஆட்சி, ஹிஜ்ரி 300 வரை தபா தாபியின்கள், ஃபிக்ஹ் கலை இமாம்கள், இமாம் அபூ ஹனிபாஃ (ரஹ்) ஹிஜ்ரி 150 - இமாம் மாலிக் (ரஹ்) ஹிஜ்ரி 170 - இமாம் ஷாபிஈ (ரஹ்) ஹிஜ்ரி 204 - இமாம் அஹ்மத் இப்னு பின் ஹம்பல் (ரஹ்) ஹிஜ்ரி 241, இவர்களில் யாரும் மீலாத் கொண்டாடியது கிடையாது!
6) ஹதீஸ்களை தொகுத்த இமாம்கள் இமாம் புகாரி (ரஹ்) ஹிஜ்ரி 256 - இமாம் முஸ்லீம் (ரஹ்) ஹிஜ்ரி 261 - இமாம் அபூதாவூத் (ரஹ்) ஹிஜ்ரி 275 - இமாம் திர்மிதி (ரஹ்) ஹிஜ்ரி 279 - இமாம் நஸயீ (ரஹ்) ஹிஜ்ரி 303 ஆகிய இமாம்கள் வாழ்ந்து உள்ளார்கள்! ஹதீஸ் தொகுப்பு எழுதி முடிக்கப்பட்டு விட்டது! இவர்களில் யாரும் மீலாத் கொண்டாடியது கிடையாது!
• நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் ஹதீஸ்களை சேகரித்த இமாம்கள் வாழ்ந்த காலம் வரை இந்த மீலாத் என்று ஒன்று இஸ்லாத்தில் இருக்கவில்லை!
• இதனால் தான் நம்மால் இந்த மீலாத் என்று ஒரு வார்த்தை கூட எந்த ஹதீஸ்களிலும் காண முடியவில்லை!
• மேலும் இந்த மீலாத் சம்பந்தமாக ஹதீஸ்களை தொகுத்த இமாம்கள் அல்லது நான்கு மத்ஹப் இமாம்கள் கூட எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை! இதில் இருந்தே நாம் அறிந்து கொள்ளலாம் இந்த மீலாத் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என்று!
• மீலாத் கொண்டாடுவது உண்மையில் நபி (ஸல்) அவர்கள் மீது உள்ள நேசத்தின் அடையாளம் என்றால் இதை செய்யாத ஸஹாபாக்கள், தாபியின்கள், தபாதாபியின்கள், நான்கு இமாம்கள், ஹதீஸ்களை இமாம்கள் இவர்கள் எல்லாம் நபி (ஸல்) அவர்கள் மீது நேசம் வைக்காதவர்களா? சிந்தியுங்கள்!!!
எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்! அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்!
(சூரத்துல் : அன்னிஸா : 115)
• இந்த இஸ்லாம் மார்க்கம் நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே முழுமை பெற்று விட்டது! இதற்கு பின்பு இஸ்லாத்தில் நன்மை காரியம் என்று ஒன்றை சேர்க்கவோ அல்லது இஸ்லாத்தில் உள்ள ஒன்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது!
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்!
(சூரத்துல் : அல் மாயிதா : 3)
• இஸ்லாத்தில் நன்மையான காரியம் என்று புதியதாக ஒன்றை சேர்க்கவோ அதே போன்று இஸ்லாத்தில் உள்ள ஒன்றை நீக்கவோ யாருக்கும் அனுமதி கிடையாது! அவ்வாறு யாரேனும் சேர்த்தாலும் அது மார்க்கமாக ஆகி விடாது!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2697)
• இஸ்லாம் பொறுத்த வரை அனைத்து செயல்களையும் அனைத்து விதமான ஒழுக்கங்களையும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி கொடுத்து உள்ளார்கள்!
• மலம் ஜலம் எவ்வாறு கழிக்க வேண்டும்? கணவன் மனைவி எவ்வாறு சேர கூடாது! ஹைலு நிபாஸ், குளிப்பு கடமை என அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவாக கூறி உள்ளார்கள்!
• இவ்வளவு சொல்லி கொடுத்த நபி (ஸல்) அவர்கள் ஒரே ஒரு முறை கூட இந்த மீலாத் பற்றி குறிப்பிட வில்லை! அல்லது எனது பிறந்தநாளில் என்னை எல்லோரும் புகழ வேண்டும் அந்த நாளில் கவிதை பாடுவது அல்லது எனக்கு ஸலவாத் அதிகம் ஓத வேண்டும் என்றும் கூறவில்லை!
• மீலாதை ஒருவர் கொண்டாடுகிறவர் என்றால் அவர் நபி (ஸல்) அவர்களை கண்ணியம் படுத்த அல்லது நினைவு கூற நோக்கத்தில் செய்கிறார் என்கிறார்கள்! அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை எப்படி கண்ணியம் படுத்த வேண்டும் எப்படி நினைவு கூறவேண்டும் என்பதை அல்லாஹ் கூற மறந்து விட்டான் என்பதை இவர்களின் இந்த கூற்று கூறுகிறது!
உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்!
(சூரத்துல் : மர்யம் : 64)
• இது மட்டும் அல்லாமல் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பற்றி முழுமையாக மக்களுக்கு சொல்லாமல் மோசடி செய்து விட்டார்கள் (அஸ்தஃப்பிருல்லாஹ்) என்பதை இவர்கள் கூற்று நமக்கு கூறுகிறது!
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
• யாரேனும் மார்க்கத்தில் பித்துத்தை உருவாக்கி அதனை நல்லது என கருதினால் திட்டமாக அவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூதுத்துவத்திற்கு மோசடி செய்து விட்டார் எனக் கருதுகிறான்! ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்!
• இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். (அல்குர்ஆன் 5:3) எனவே அன்று மார்க்கமாக இல்லாத ஒன்று என்றும் மார்க்கமாகாது!
(நூல் : இஃதிஸாம் இமாம் ஷாத்திபி)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் எதை செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல் உங்களுடைய முடிவுக்கு விட்டுவிட்டேனோ அதைப் பற்றி எதுவும் கேட்காமல் நீங்களும் விட்டுவிடுங்கள்!
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான்.
ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 7288)
• இந்த ஹதீஸ் நமக்கு போதுமானது நபி (ஸல்) அவர்களின் சொல் செயலை மட்டுமே நாம் பின் பற்ற வேண்டும் என்று! நபி (ஸல்) அவர்கள் கூறாத ஒன்றை அல்லது செய்ய சொல்லாத ஒன்றை நாம் பின் பற்ற கூடாது!
• மறுமை நாளில் நமக்கு மிகவும் தாகம் ஏற்படும் காரணம் சூரியன்ஒரு மையில் தொலைவில் வந்து விடும்! இதன் காரணமாக நம்மில் ஒவ்வொருவருக்கும் அதிகம் தாகம் ஏற்படும்!
• அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு மறுமை நாளில் அல்கவ்ஸர் எனும் ஒரு நீர் தாடகத்தை வழங்கி இருப்பான்!
• நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் நபி (ஸல்) கையால் அல்கவ்ஸர் எனும் தாடகத்தில் நீர் அருந்துவார்கள்! அதன் பின்பு சொர்க்கம் செல்லும் வரை நீர் தாகம் எடுக்காது!
• ஆனால் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது! இஸ்லாத்தில் இல்லாத பித்அத் ஆனா புதிய செயல்களை உருவாக்கிவர்களை மலக்கு மார்கள் அல் கவ்ஸர் நீர் தாடகத்தின் அருகில் கூட சேர்க்க மாட்டார்கள்! விரட்டி அடித்து விடுவார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6582)
• இஸ்லாத்தில் ஒரு முஸ்லீம் மார்க்க ரீதியாக கொண்டாட கூடிய நாட்கள் என்பது ; 1) ஹஜ் பெருநாள் (ஈதுல் அழ்ஹா), 2) நோன்பு பெருநாள்
(நூல் : சுனன் அபூதாவூத் : 1134)
• ஒரு முஸ்லீக்கு மார்க்க ரீதியான கொண்டாட்டம் என்பது இந்த இரண்டு நாட்கள் மட்டுமே! இதை தவிர்த்து இஸ்லாத்தில் வேறு கொண்டாட்ட நாட்கள் கிடையாது!
• நபி (ஸல்) அவர்களுக்கு நிறைய சிறப்புகள் அற்புதங்கள் செய்யும் ஆற்றலை அல்லாஹ் கொடுத்து உள்ளான் இருந்தாலும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை பார்த்து கூறுகிறான்!
முஹம்மது (ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்!
(சூரத்துல் : ஆல இம்ரான் : 144)
• ஆயிரம் தான் இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரே! நாம் நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து பேசலாம் ஆனால் ஒரு வரம்பு தான்!
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள் :
கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள்!
ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3445)
• ஆனால் இன்று மீலாத் என்ற பெயரில் நபி (ஸல்) அவர்களை புகழ்கிறோம் என்று அல்லாஹ்வின் அளவிற்கு உயர்த்தி புகழ்ந்து பேசுகிறார்கள்! உதாரணமாக :
கஷ்டங்களை நீக்க கூடியவர் பாவங்களை மன்னிக்க கூடியவர் நீங்கள் என்று அல்லாஹ்வின் ஆற்றலை நபி (ஸல்) அவர்களுக்கு ஒப்பிட்டு கூறுகிறார்கள்! இவை எல்லாமே தெளிவான ஷிர்க் ஆகும்!
(நூல் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் : 12)
• பிறந்தநாள் பொறுத்த வரை இது இஸ்லாத்தில் இல்லாத ஒரு செயல் ஆகும்! இது முழுவதும் மாற்று மத கலாச்சரமே!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே!
(நூல் : சுனன் அபூதாவுத : 4033)
• மீலாத் அடிப்படை நோக்கமே நபி (ஸல்) அவர்கள் பிறந்தநாளை சிறப்பித்து செய்வது தான்! நம்மை விட நபி (ஸல்) அவர்களை அதிகம் நேசித்தவர்கள் ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களுக்காக உயிரை கூட விட தயங்க மாட்டார்கள்!
• இவ்வளவு நேசித்த ஸஹாபாக்கள் யாரும் நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளை நினைவு வைத்து ஒவ்வொரு வருடமும் விஷேசமாக அமல் செய்தது கிடையாது! கொண்டாடியதும் கிடையாது!
• இன்று மீலாத் என்ற பெயரில் பள்ளியில் கூட்டாக அமர்ந்து நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து பாடி கொண்டு உள்ளார்கள் இவ்வாறு ஸஹாபாக்கள் யாரும் செய்தது கிடையாது!
• மாறாக ஸஹாபாக்கள் நபி (ஸல்) எவ்வாறு இருக்க சொன்னார்களே! எப்படி வாழ சொன்னார்களோ அதை தங்கள் மௌத் வரை பின் பற்றினார்கள்! நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி மௌத்துக்கு பின்பும் சரி!
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment