பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

அல்லாஹ்வின் அல் முதகப்பிர் - المتكبر என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞


அல்லாஹ்வின் அல் முதகப்பிர் - المتكبر என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞
~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா : 53
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் வாரிஸ் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயர்களான அல் முதகப்பிர் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல் முதகப்பிர் என்றால் பெருமைக்குரியவன் என்பது பொருள்! இந்த பெயர் அல்குர்ஆனில் ஒரே ஒரு வசனத்தில் மட்டும் இடம்பெற்று உள்ளது!
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை! அவனே பேரரசன்! மிகப்பரிசுத்தமானவன்! சாந்தியளிப்பவன்! தஞ்சமளிப்பவன்! பாதுகாப்பவன்! (யாவரையும்) மிகைப்பவன்! அடக்கியாள்பவன்! பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்!
(சூரத்துல் : அல் ஹஷ்ர் : 23)
• அல்லாஹ் மட்டும் தான் உண்மையிலேயே பெருமை குரியவனாக இருக்கிறான், ஏனென்றால், அல்லாஹ் தான் அரசன் மற்ற அனைவரும் அவனுடைய அடிமைகள், அல்லாஹ்தான் எஜமானன், ரட்சகன், அவன்தான் படைத்தவன் மற்ற எல்லோரும் படைப்பினங்கள்!
• அல்லாஹ் உயர்ந்த, மேலான அனைத்து ஸிஃப்பத்துகளையும் கொண்டவனாக இருக்கிறான், பலவீனங்களுக்கு அப்பார்பட்டவனாக இருக்கிறான்!
• மனிதர்களும் அல்லாஹ்வுடைய அனைத்து படைப்புகளும் பலவீனமாக படைக்கப்பட்டிருக்கின்றன!
• உண்மையிலே பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான், எனவே தான், நபி (ஸல்) அவர்கள் அவர்களுடைய ஸுஜூதுகளிளும், ருகூஉகளிலும் ஓதி வந்த ஒரு திக்ரு :
سُبْحَانَ ذِي الْجَبَرُوْتِ وَالْمَلَكُوْتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ
சுப்ஹான தில் ஜபரூத் வல்மலகூத், வல்கிப்ரியாஇ வஅன்மதி
பொருள் : மிகைத்த ஆளுமை, வெளிப்படை மற்றும் அந்தரங்க ஆட்சி அதிகாரம், பெருமைகள் கண்ணியம் கொண்ட இறைவன் தூய்மையாகி விட்டான்!
(நூல் : சுனன் அபூதாவூத் : 873)
• மேல் கூறப்பட்ட திக்ரில் “கிப்ரியாஇ” என்றால் பெருமை என்று அர்த்தமாகும்!எனவே, பெருமைக்குரிய அல்லாஹ் தூய்மையானவன் என்று அர்த்தம்!
• அல்லாஹ் தான் உண்மையிலேயே பெருமைக்குரியவனாக இருக்கிறான், அதற்கான முழுத் தகுதியும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது! இந்த உலகத்தில் அந்த பண்பை வேறு யாருமே அடைந்து கொள்ள முடியாது!
• மனிதர்களில் அனைவரும் பலவீனமானவர்கள், ஆட்சியாளர்களாக இருந்தாலும், அல்லது மிகப் பெரிய, படித்த மேதைகளாக இருந்தாலும், செல்வந்தர்களாக இருந்தாலும், தலைவர்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர்கள் பெருமை படுவதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது!
• எல்லோருமே பலவீனமானவர்கள், அவர்கள் அனைவரும் இந்த உலகத்தில் மரணிக்க வேண்டியவர்கள், அல்லாஹு தஆலா மட்டுமே தான் நிலையானவன், எனவே, அவன் மட்டுமே பெருமைக்குரியவனாக இருக்கிறான்!
• யாரெல்லாம் இந்த பெருமை என்கிற பண்பை தங்களுடைய பண்பாக கொள்ள முயற்சி செய்கிறார்களோ, அவர்கள் மிகக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்பதை அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான பல ஹதீஸ்களில் நாம் காணலாம் :
உங்கள் இறைவன் கூறுகிறான் : எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்!
(சூரத்துல் : அல் முஃமின் : 60)
பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?
(சூரத்துல் : அல் ஜுமர் : 60)
நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள் ; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள் என்று (அவர்களுக்குக்) கூறப்படும்! பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது!
(சூரத்துல் : அல் ஜுமர் : 72)
(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை!
(சூரத்துல் : லுக்மான் : 18)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கண்ணியம், அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும்! பெருமை அவனுடைய மேலாடையாகும்! (அல்லாஹ் கூறினான்:) ஆகவே, (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வதைத்து விடுவேன்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5114)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தமது உள்ளத்தில் கடுகு மணியளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 148)
• இதுபோன்ற பல்வேறு வசனங்களிலும், ஸஹீஹான ஹதீஸ்களிலும் பெருமை அடிக்கக் கூடியவர்கள் இழிவடைவார்கள், நரகத்தில் அவர்கள் நுழைவார்கள் என்பதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்!
• அல்லாஹ்வுடைய அன்பிலிருந்தும், அவனுடைய நெருக்கத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட இப்லீஸ், அதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது அவனிடத்தில் காணப்பட்ட பெருமைதான், பெரும் ஆட்சி செல்வம் பலம் கொண்ட பிர்அவ்ன், மிக பெரிய செல்வந்தன் காரூன், பெரும் உடல் வலிமை கொண்ட ஆது கூட்டம் என இவர்கள் அழிய காரணம் அடிப்படை பெருமை தான்! எனவே, பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!
• அல்லாஹ் தான் அல் முதகப்பிர், நாம் எவ்வளவு தான் உயர்ந்தாலும், எவ்வளவு தான் நாம் அருட்கொடைகளை பெற்றாலும், பெருமை அடிப்பதற்கு நம்மிடத்திலே இருக்கவே கூடாது!
• பெருமை அடிக்கின்றவர்களை நிச்சயமாக அல்லாஹ் இவ்வுலகிலும் சரி! மறுமையிலும் சரி இழிவுப் படுத்துவான், அல்லாஹ்வுக்காக பணிந்து வருகிறவர்களை அல்லாஹ் உயர்த்துவான் என்பதை நாம் பல ஹதீஸ்களில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்!
• எனவே, அல்லாஹ் அல் முதகப்பிர் என்பதை சரியாக புரிந்து, அவனை கண்ணியப்படுத்த கூடியவர்களாகவும், அவனை மதிக்கக் கூடியவர்களாகவும், அவனை புகழக் கூடியவர்களாகவும் நாம் மாற வேண்டும், நம்மிடத்தில் பணிவு என்கிற பண்பை கொண்டுவந்து, பெருமை என்கிற பண்பை அகற்ற வேண்டும்!
• அல்லாஹ்வே, எங்களுக்குச் சுவனத்தைத் தருவாயாக. கர்வம் கொண்டவர்களின் பாதையையை விட்டும், அவர்களின் குணத்தை விட்டும் எங்களுக்குப் பாதுகாவல் தருவாயாக நீயே எங்கள் உதவியாளன், கிருபையாளன்..!
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்களான அல் முஃமின் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன்


 

No comments:

Post a Comment