பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

தாருஸ் ஸலாம் ” அர்கம் (ரழி) அவர்களின் வாழ்கை வரலாறு சுருக்கம்💞


“ தாருஸ் ஸலாம் ” அர்கம் (ரழி) அவர்களின் வாழ்கை வரலாறு சுருக்கம்💞

• அர்கம் இப்னு அபுல் அர்கம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறைஷி குலத்தில் மக்சூம் கிளையில் அபுல் அர்கம், என்றழைக்கபட்ட அப்துல் மனாப் இப்னு அஸத் இப்னு உமர் இப்னு மக்சூம் என்பவருக்கும், குஸாஆ குலத்தைச் சேர்ந்த அன்னை உமைமா பின்த் அல் ஹாரிஸ் என்பவருக்கும் மகனாக மக்காவில் பிறந்தார்கள். இவருக்கு மிகவும் சக்தி வாய்ந்த பாம்பு என பொருள் படும் அர்கம் என அவரது பெற்றோர்கள் பெயரிட்டனர்.

• அர்கம் (ரழி) பிரபலமான நபித் தோழரான இவர் இஸ்லாம் மக்காவில் பரவிய துவக்க காலத்திலயே இஸ்லாத்தை ஏற்று நிறைய உதவிகள் செய்துள்ளார்கள்!

• இஸ்லாத்தை ஏற்ற அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்கள், மறுநாளே நிறைய நபர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுத்தார்கள். அவர்களின் அழைப்பு ஏற்று இஸ்லாத்தை பலர் ஏற்றார்கள் அவர்களின் பெயர்கள் பின்வருமாறு :

1) உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி), 2) தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி), 3) ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி), 4) ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி), 5) அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரழி), 6) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி), 7) அபூ ஸலாமா இப்னு அப்துல் அஸத் (ரழி) அவரது 8) மனைவி உம்மு ஸலமா, 9) அர்கம் இப்னு அபுல் அர்கம் (ரழி) ஆகியோர் அபூபக்ர் (ரழி) அவர்கள் கையில் இஸ்லாத்தை தழுவினார்கள்! இவர்கள் அனைவரும் “ அஸ்ஸாபிகூனல் அவ்வலூன் ” முந்தியவர்கள் முதலாமவர்கள் ஆவார்கள்.

• மக்காவில் ஒரு சிலரே ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்று இருந்தார்கள். மக்கா காஃபிர்களுக்கு தெரியாமல் இஸ்லாம் மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பது, மறைமுகமாக தொழுதும் வந்தார்கள். ஒரு முறை சில காஃபிர்கள் இவர்கள் தொழுவதை பார்த்து இருவருக்கும் இடையே சண்டையும் ஏற்பட்டது.

• இவ்வாறு அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்படவே நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்கள் உடன் ஆலோசனையை தொடங்கினார்கள். நமக்கு ஒரு பாதுகாப்பான ஒரு இடம் கட்டாயம் வேண்டும், அங்கிருந்து இஸ்லாமிய அழைப்பு தரப்பட வேண்டும், இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்கு மார்க்கத்தை பற்றி கற்று கொடுக்கவும், நாம் இருக்கும் இடம் பிறருக்கு தெரியாத வண்ணம் இருக்க வேண்டும் என்று பல இடங்களை பற்றி ஆலோசனை செய்தார்கள். 

• அப்போது தான் அர்கம் (ரழி) அவர்கள் எழுந்து யாரசூலுல்லாஹ் எனது வீட்டை தேர்வு செய்யலாமே, சபா மலையின் அருகாமையில் கஃபத்துல்லாஹ்வுக்கு பக்கத்தில் இருக்கிற எனது வீட்டை நான் தருகிறேன், என்று சொல்ல, நபி (ஸல்) அவர்கள் அர்கமின் வீட்டை தேர்வு செய்தார்கள்.

• காரணம் அர்கம் (ரழி) அவர்கள் வாலிபர் மக்காவிலும் மக்கள் மத்தியில் பிரபலம் இல்லாதவர், இதனால் இவர் வீட்டில் முஸ்லீகள் இருப்பார்கள் என்று யாரும் யோசிக்க கூட மாட்டார்கள் எனவே தான் நபி (ஸல்) அவர்கள் இவரின் வீட்டை தேர்வு செய்தார்கள். இந்த வீடு தான் இஸ்லாத்தின் முதல் மதரஸா (கல்விகூடம்), தஃவா (அழைப்பு) பணிக்கான முதல் மையம், இஸ்லாம் துவங்கிய இடமாகும். 

• இங்கு நாம் மற்றொன்றை கவனிக்க வேண்டும், அர்கம் (ரழி) அவர்கள் மக்காவில் மக்சூம் கோத்திரத்தை சேர்ந்தவர் இந்த குலத்தை சார்ந்தவர்கள் தான் அபூஜஹ்ல், வலீது பின் உகைரா இவர்கள் எல்லாம் இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள் ஆனால் அல்லாஹ் அவர்கள் குலத்தை சார்ந்த ஒருவரை வைத்தே இஸ்லாம் பரவ வழி வகுத்தான்.

• அர்கம் (ரழி) அவர்கள் வீடு ஸஃபா மலையின் அடிவாரத்தில் இருந்ததனால் முஸ்லிம்கள் தங்களின் தொழுகையை இங்கு தான் நிறைவேற்றினர். எனவே மக்கா வரும் வெளியூர்வாசிகள் இவ்வில்லத்திற்கு குறைஷிகளின் கண்களுக்கு தென்படாமல் அழைத்து வரப்பட்டனர். 

• இவரின் வீடு தான் முதல் மதரஸா, முதல் தொழுகை பள்ளிவாசல், மக்காவில் முஸ்லிம்கள் கூடி கலந்தாலோசிக்க ஆறுதலாய் கிடைத்த இடம், இந்த இடம் வரலாற்றில் ‘தாருஸ் ஸலாம்’ அமைதி இல்லம் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கியது. இன்றும் கஃபாவின் ஒரு அங்கமாக இவர் வீடு இருந்த இடம் உள்ளது. இவருடைய வீட்டில் தான் அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஜா (ரழி), உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள்.

• முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குக் (ஹிஜ்ரத்) குடி பெயர்ந்த பொழுது அர்க்கமும் அவ்வாறே செய்தார். இவர் அங்கு பனூ ஸுரைக் குடும்பத்தினர் வாழ்ந்த பகுதியில் குடியேறி வாழ்ந்தார். இவர் ஆங்கு வாழ்ந்த இல்லமும் ‘அர்க்கமின் இல்லம்’ என்றே அழைக்கப்பட்டது.

• நபி (ஸல்) அவர்கள் சதாகாவுடைய பொருட்களை, அமானிதமும் நம்பிக்கையும் நிறைந்தவரை தான் பொறுப்பாளராக நியமிப்பார்கள். முஸ்லிம்களின் சதகாவுக்கு பொறுப்புதாரியாக அர்கம் (ரழி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

• பத்ர் போர், உஹது போர், அகழ் போர் மற்றும் நபி (ஸல்) அவர்கள் பங்கு பெற்ற அனைத்து போர்களிலும் அர்கம் (ரழி) அவர்கள் பங்கு கொண்டார்கள்.

• நபி (ஸல்) அவர்களின் நுபுவத் (நபித்துவத்)திற்கு முன்னர் மக்காவிற்கு வரும் பயணிகளுக்கும், ஏழைகளுக்கும் சேவையாற்றிட உறுவாக்கிய ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’ என்ற சேவை அமைப்பில் இவர் சிறுவராக இருந்த காலத்திலேயே இணைந்து பணியாற்றினர். 

• அர்கம் (ரழி) அவர்கள் மதீனாவில் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். மரண நேரத்தில் தன்னுடைய மகன் அப்துல்லாஹ் இப்னு அர்கம் (ரழி) அழைத்து வஸீயத் கூறினார்கள் : எனது ஜனாஸா தொழுகையை அப்பொழுது உயிருடன் இருந்த மூத்த ஸஹாபி ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களை கொண்டு நடத்த வேண்டும் எனக் கூறினார்கள்.

• சில நாட்கள் கழித்து முஆவியா (ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் அவர்கள் மரணமடைந்தார்கள். மதீனாவிற்கு அருகில் அகீக் என்ற இடத்தில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு செய்தி சொல்லி விடப்பட்டது.

• அர்கம் (ரழி) அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதற்கு மஸ்ஜித் அந்நபவியில் வைத்தனர். மதீனாவின் அன்றைய கவர்னர் மர்வான், இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு வீடு தானம் கொடுத்த ஸஹாபியின் ஜனாஸாவிற்கு நான் தொழுகை நடத்துக்கிறேன் என்று கூறி அவர் முன் வந்தார்.

• அர்கம் (ரழி) அவர்களின் மகன் அவரிடம் எனது தந்தையின் வஸீயத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும் என்று என்னிடம் கூறியுள்ளார். நாங்கள் செய்தி சொல்லி உள்ளோம் அவர் வந்த உடன் தொழுகை நடத்தி கொள்ளுகிறோம் என்றார்.

• மர்வான் அவர்கள் சிறந்த நபி தோழர் ஜனாஸாவை ஏன் காக்க வைக்க வேண்டும்? நீங்கள் கூறிய ஸஹாபி தற்பொழுது ஏங்கு உள்ளார்? எப்போது வருவார் என்று தெரியாது? என்று கூற அர்கம் (ரழி) அவர்களின் மகன் தந்தையின் வஸியத் அதனால் கொஞ்சம் காத்திருக்கலாம் என்று கூறினார்கள். 

• இதற்கிடையே அர்கம் (ரழி) அவர்களின் உறவினர்கள், இது எங்கள் உறவினர் ஜனாஸா, எங்கள் விருப்பம் படி அடக்கம் செய்வோம் இதில் அரசாங்கம் தலையிட வேண்டாம் என்று கூற, இப்படியே இரு பக்கமும் வாய் சண்டை ஏற்பட அதற்குள் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் வந்து விட்டார்கள். பின்பே அவர் ஜனாஸா தொழுகை நடத்தி ஜன்னத்துல் பஃகீயில் அடக்கம் செய்யப்பட்டார்கள்!

• மக்காவிலுள்ள அர்க்கம் (ரழி) அவர்கள் வீட்டில் அவரின் வாரிசுகளே வாழ்ந்து வந்தனர். அப்போது இருந்த கலீபா தன்னுடைய வீட்டார் அந்த வீட்டில் வசிப்பதற்கு பெரிதும் விரும்பியதனால் அவர்கள் அதனை அவருக்கு விற்றனர். 

• சில காலம் ஹாரூன் அல்ரஷீத் மன்னரின் அன்னை கைஸுரான் அதில் வாழ்ந்து வந்தார். எனவே அது ‘கைஸுரானுடைய இல்லம்’ என்றும் அழைக்கப் பட்டது. 

• பின்னர் சவுதி அரேபியா என நாடு உறுவாகிய பின் அந்த வீடு ‘தாருஸ் ஸலாம்’ அமைதி இல்லம் என அழைக்கப்பட்டது. அந்த வீட்டில் “ஹாதா தாருல் அர்க்கம்” என்ற வாசகம் அரபியில் பொறிக்கப்பட்டு இருந்தது. இன்றைய நிலையில் கஃபாவின் விரிவாக்க பணியால் கஃபாவுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் உள்ள வாசலுக்கு ‘பாபுல் அர்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

@அல்லாஹ் போதுமானவன் 💞

No comments:

Post a Comment