பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

துல் ஹஜ் மாதமும் அதன் சிறப்புகள் பற்றியும் அறிந்து கொள்ளுவோம் 💞

💞 துல் ஹஜ் மாதமும் அதன் சிறப்புகள் பற்றியும் அறிந்து கொள்ளுவோம்   💞

• ரமலான் முடிந்து அதற்குள் துல் ஹஜ் மாதம் வந்து விட்டது! சுபஹானல்லாஹ் எவ்வளவு சீக்கிரம் நாட்கள் செல்லுகின்றன!

• இஸ்லாத்தில் புனித நான்கு மாதங்களில் ஒரு மாதமான! இஸ்லாத்தின் இறுதி மாதமான சிறப்பும் புனிதமிக்க மாதமான துல் ஹஜ் மாதத்தை நாம் எல்லோரும் இன்ஷாஅல்லாஹ் சந்திக்க இருக்கின்றோம்!

• ஒரு வருடத்தில் 12 மாதங்கள் வருகின்றன! இதில் சிறந்த நான்கு மாதங்கள் இஸ்லாம் நமக்கு தனி சிறப்புகள் உடன் கூறி உள்ளது அவைகள் : 1) துல்கஅதா , 2) துல்ஹஜ் , 3) முஹர்ரம் , 4) ரஜப் மாதம்

(நூல் : ஸஹீஹ் புகாரி : 3197)

இமாம் இப்னு ஹஜ்ர் அல் அஸ்கானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

• இந்த நான்கு சிறந்த மாதங்களை நாம் ஒப்பிடும் போது பொழுது மற்ற மாதங்களை விட துல் ஹஜ் மாதம் தான் சிறந்தாக விளங்குகிறது!

• ஏன் என்றால் இந்த துல் ஹஜ் மாதத்தில் மட்டும் தான் இஸ்லாத்தில் வலியுறுத்திய கடமைகள் அனைத்தும் ஒரே மாதத்தில் நம்மால் செய்ய முடிகிறது அவைகள் ;

1) தொழுகை, 2) நோன்பு , 3) தர்மம், ஜகாத் , 4) ஹஜ் ஆகியவையாகும்!  இந்த ஒற்றுமை வேறு எந்த மாதங்களிளும் ஏற்படுவது கிடையாது!

(நூல் : ஃபத்ஹுல் பாரி : 2 : 460)

💟 துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்புகள் :

1) போர் செய்ய அனுமதி இல்லை!

• துல் ஹஜ் மாதம் புனிதமிக்க மாதங்களில் ஒன்றாகும்! அதனால் தான் இந்த மாதத்தில் போர் கூட செய்ய கூடாது என்று அல்லாஹ் நமக்கு தடை செய்து உள்ளான்!

(சூரத்துல் : அத் தவ்பா : 36)

2) அல்லாஹ் சத்தியம் செய்கிறான் :

• துல் ஹஜ் மாதத்தில் முதல் 10 நாட்கள் மிகவும் சிறப்பு மிக்க நாளாகும் இதனால் தான் அல்லாஹ் இந்த 10 நாட்கள் மீது சத்தியம் செய்கிறான்!

பத்து இரவுகளின் மீது சத்தியமாக,

(சூரத்துல் : அல் பஜ்ர் : 02)

(நூல் : தப்ஸீர் இப்னு கஸீர் :  8 / 413)

3) அமல் செய்ய சிறந்த நாட்கள் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

துல்ஹஜ் பத்து நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்ததல்ல என்று நபி (ஸல்) கூறினார்கள்!

ஜிஹாதை விடவுமா? என்று நபித் தோழர்கள் கேட்டனர்! தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்து விட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர என்று கூறினார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 969)

ஹதீஸ் விளக்கம் இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

உயிர், செல்வம் இரண்டை இழந்தவரின் ஜிஹாது தவிர மற்ற எந்த வகை ஜிஹாதை விடவும் இந்தப் பத்து நாட்களின் அமல்கள் மிக உயர்ந்தவை. அல்லாஹ்வுக்குப் பிரியமானவை! இப்படியே மற்ற அமல்களும் அமைகின்றன! அமல் சிறியது என்றாலும், அதை ஒரு சிறப்புக்குரிய நேரத்தில் நிறைவேற்றினால் அதன் கூலி மிகப் பெரியது, பன்மடங்கு என்பதைக் காட்டுகிறது இது!

(நூல் : லதாஇஃப் : 521)

💟 துல் ஹஜ் முதல் 10 நாட்களில் நாம் செய்ய வேண்டிய அமல்கள் : 

• துல் ஹஜ் உடைய முதல் 10 நாட்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுப்படவும்! அல்லாஹ்வின் நெருக்கத்தை அடையவும் மிகவும் சிறந்த நாளாகும்!

• இந்த நாட்களில் நாம் நம்முடைய பாவங்களை விட்டு ஒதுங்கி நம்முடைய சக்திக்கு ஏற்ற அளவுக்கு அமல் செய்ய வேண்டும்! மற்ற நாட்களில் போல் கணக்கு பார்த்து கடமையான அமல் மட்டும் செய்யாமல் உபரியான அமல் தொழுகை அல்குர்ஆன் ஓதுதல் தஸ்பீக் செய்தல் பாவமன்னிப்பு தேடுதல் போன்ற காரியங்களில் நாம் ஈடுப்பட வேண்டும்!

• நாம் வழமையாக மற்ற நாட்களில் அமல் செய்வதை விட இந்த துல் ஹஜ் உடைய 10 நாட்களில் செய்யும் அமல்கள் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது ஆகும்! அதனால் நாம் இந்த நாட்களில் அதிகம் அமல் செய்ய வேண்டும்!

• குறிப்பிட்ட தொழுகை துஆ என்று இஸ்லாம் நமக்கு கூறவில்லை நல்ல அமல்கள் நாம் எதுவாக இருந்தாலும் இந்த 10 நாட்களில் செய்தால் அது அல்லாஹ்விடம் சிறப்பிற்குறியதாக இருக்கும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

துல் ஹஜ் 10 நாட்களில் செய்யும் நல்லறங்கள், மற்ற நாட்களில் செய்யப்படும் நல்லறங்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது ஆகும்!

(நூல் : அபூதாவூத் : 2440 | திர்மிதி : 762)

1) அல்லாஹ்வை நினைவு கூறுவோம் :

 وَالذّٰكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا‏
 
அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கின்றான்!

(சூரத்துல் : அஹ்ஜாப் : 35)

• அல்லாஹ்வை நினைவு கூறப்பல வழிகள் உள்ளன! அதில் ஒன்று தக்பீர் கூறுவது (அல்லாஹூ அக்பர்), தஹ்லீல் (லா இலாஹ இல்லல்லாஹ்), தஹ்மீது (அல்ஹம்துலில்லாஹ்) இவ்வாறன திக்ர்களை அதிகம் கூறுவது! காலை மாலை திக்ர்களை கூறுவது ஒவ்வொரு தொழுகைக்கும் பின்பு திக்ர் செய்வது இவ்வாறான திக்ர்களை நாம் செய்யவேண்டும்!

2) அதிகம் பாவமன்னிப்பு தேடவேண்டும் :

• அதிகம் நாம் இஸ்திஃப்பார் (பாவமன்னிப்பு) அஸ்தஃப்பிருல்லாஹ் கூறவேண்டும்! நம்முடைய பாவங்களை நினைத்து வருந்த வேண்டும்! அதிகம் அல்லாஹ்விடம் நாம் தவ்பா செய்யவேண்டும்!

• நாம் ஏதேனும் பாவத்தில் ஈடுப்பட்டு கொண்டு இருந்தால் அதை முழுமையாக விட சிறந்த மாதம் இது முற்றிலும் அதில் இருந்து விலகி தவ்பா செய்து அந்த பாவம் பக்கம் செல்லாமல் இருக்க அல்லாஹ்விடம் அதிகம் நாம் துஆ வேண்டும்! இதன் பின்பு நாம் தொடர்ந்து நல்ல அமல்கள் செய்யவேண்டும்! அமல்களில் மறக்க கூடாத முக்கியமான அமல் தவ்பா ஆகும்!

3) நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத் கூறுவோம் :

• இந்த நாட்களில் நாம் அதிகம் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவோம்! குறிப்பாக வெள்ளிக்கிழமை தினத்தில் அதிகம் கூறுவோம்!

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்! அந்த நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்!

(நூல் : சுனன் அபூதாவூத் : 1047)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 687)

4) துஆ & திக்ர்களை அதிகப்படுத்த வேண்டும் :

• நபி (ஸல்) அவர்கள் நமக்கு சொல்லி கொடுத்த திக்ர் மற்றும் காலை மாலை துஆக்கள் & அன்றாட வாழ்வில் ஓதும் துஆக்கள் அதாவது காலை கண்விழித்தது முதல் இரவு உறங்கும் வரை உள்ள துஆக்களையும் திக்ர்களையும் இன்ஷாஅல்லாஹ் முழுமையாக ஓத முயற்சி செய்யவேண்டும்!

5) அதிகம் அல்குர்ஆன் ஓத வேண்டும் :

• அல்குர்ஆனை நாம் அழகாக, திருத்தமாக, இராகமாக, நிதானமாக ஓத முயற்சி செய்ய வேண்டும்! ஒவ்வொரு நாளும் அல்குர்ஆன் ஓதுவதற்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும்! ஓதத் தெரியாதவர்கள் பழகிக்கொள்ள வேண்டும்! நாமும் பிறருக்கு சொல்லி கொடுக்க வேண்டும்! பிள்ளைகளுக்கு வீட்டாருக்கு கணவன் மனைவிக்கு அல்லது மனைவி கணவனுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்!

• ஓரளவு ஓதத் தெரிந்தவர்கள் திக்கித் திணறியாவது ஓத வேண்டும் இவர்களுக்கு இரண்டு மடங்கு நன்மை உண்டு! முடிந்த வரை அல்குர்ஆனை மனனம் செய்யவும் முயற்சி செய்ய வேண்டும்! சின்ன சின்ன சூராக்கள் ஏற்கனவே நமக்கு மனனமாக இருக்கலாம்! அவற்றைச் சரியாக, திருத்தமாக ஓத நேரம் ஒதுக்க வேண்டும்!

• நபி (ஸல்) அவர்கள் குறிப்பாக சில சூராக்களை ஓதி உள்ளார்கள் : காலை மாலையில் ஒவ்வொரு தொழுகைக்கு பின்பும் ஸூறா இக்லாஸ், ஃபலக், நாஸ் ஆகியவற்றையும் ஆயத்துல் குர்ஸியும் ஓதி உள்ளார்கள்! வெள்ளிக்கிழமை என்றால் சூரா கஹ்ப்! மாலை நேரத்தில் சூரா முல்க் இவ்வாறு சூராக்களை எல்லாம் நாம் வழமையாக ஓத வேண்டும்! 

6) அதிகம் துஆ செய்ய வேண்டும் :

• நம்முடைய ஹலால் ஆன தேவைகளுக்கும் இன்னும் பிறருக்கும் துஆ செய்ய வேண்டும்! 

• நம்முடைய குடும்பத்தார், சமுதாயத்தார். அனைவரின் இம்மை, மறுமை நலத்திற்கு துஆ செய்ய வேண்டும்! யாரேனும் நோயில் இருந்தால் கடனில் இருந்தால் பிரச்சனையில் இருந்தால் அவர்களுக்கு அந்த நிலை சரியாக அதிகம் நாம் துஆ செய்யவேண்டும்!

• குறிப்பாக, ஹஜ்ஜு செய்ய போனவர்கள் பாதுகாப்பாக திரும்பி வருவதற்கு துஆ செய்ய வேண்டும்! அவர்கள் அல்லாஹ்வின் விருந்தாளிகள் ஆவார்கள்! அதே போன்று அவர்களும் பிறருக்கு அதிகம் துஆ செய்யவேண்டும்!

• இவை இல்லாமல் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய குறிப்பிட்ட நேரங்களில் நாம் அதிகம் துஆ செய்யவேண்டும்!

• அல்குர்ஆனில் கூறப்பட்டு உள்ள துஆக்கள் - நபி (ஸல்) அவர்கள் நமக்கு கூறி உள்ள துஆக்களை எல்லாம் இன்ஷாஅல்லாஹ் நாம் கேட்க முயற்சி செய்யவேண்டும்!

7) கடமையான தொழுகைகளை நேரம் தவறாமல் தொழ வேண்டும் :

• நாம் இயன்ற அளவுக்கு கடமையான தொழுகைகளை பள்ளியில் ஜமாத் ஆக நேரம் உடன் தொழ வேண்டும்! இது மட்டும் அல்லாமல் பர்ளு தொழுகையுடன் சேர்ந்த சுன்னத் தொழுகைகள் மற்றும் லூஹா தொழுகை தஹ்ஜ்ஜத் தொழுகையும் நாம் வழமையாக தொழ முயற்சி செய்யவேண்டும்!

8) தான தர்மங்களை அதிக்கப்படுத்த வேண்டும் :

• நாம் மற்ற நாட்களில் செய்யும் தர்மத்தை விட இந்த 10 நாட்களில் செய்யும் தர்மம் சிறப்புமிக்கதாகும்! அனாதைகள், ஏழைகள், கடன்பட்டோர், கணவனை இழந்து பொருளாதாரத்திற்கு கஷ்டப்படுவோர்! போன்றவர்களுக்கு நாம்  நம்முடைய சக்திக்கு எற்றால் போல் தர்மம் செய்யவேண்டும்!

9) நோன்பு வைக்க வேண்டும் :

• நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் வியாழன் நோன்பு வைப்பார்கள் இன்ஷாஅல்லாஹ் நாமும் இவ்வாறு நோன்பு வைக்க முயற்சி செய்யவேண்டும்! இது மட்டும் அல்லாமல் இந்த துல் ஹஜ் மாதம் 9 வது நாளில் ஹஜ் செய்யாதவர்கள்  சிறப்புமிக்க இன்னொரு நோன்பு வைக்க வேண்டும் இது சுன்னாஹ் ஆகும்! அது தான் அரஃபா நோன்பு ஆகும்!

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அரஃபா தினத்தில் நோன்பு நோற்பவருக்கு அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாகும்! 

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2151)

❤️ துல் ஹஜ் முதல் 9 நாட்களும் நோன்பு வைக்கலாமா?

• துல் ஹஜ் உடைய முதல் 9 நாட்களும் நாம் நோன்பு வைக்கலாமா கூடாத என்பதில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது!

• நபி (ஸல்) அவர்கள் துல் ஹஜ் மாதத்தில் முதல் ஒன்பது நாட்களும் நோன்பு நோன்பு வைத்து உள்ளார்கள்! என்று சுனன் அபூதாவூத் : 2437 | நஸயீ : 2417 ஆகிய ஹதீஸ் நூல்கள் செய்தி இடம் பெற்று உள்ளது ஆனால் இது பலகீனமான ஹதீஸ் ஆகும்!

• ஆனால் ஒருவர் நன்மை எதிர்ப்பார்ந்து இந்த துல் ஹஜ் உடைய முதல் 9 நாட்கள் நோன்பு வைக்க விருப்பட்டால் அவர் தாராளமாக நோன்பு வைக்கலாம்! விரும்பினால் தொடர்ச்சியாக வைக்கலாம் அல்லது விட்டு விட்டும் வைக்கலாம்! ஆனால் இது சுன்னாஹ் நபி (ஸல்) அவர்கள் வைத்து உள்ளார்கள் என்ற அடிப்படையில் நாம் நோன்பு வைக்க கூடாது!

• குறிப்பாக : துல் ஹஜ் உடைய முதல் 9 நாட்கள் மட்டுமே நோன்பு வைக்க முடியும்!துல் ஹஜ் உடைய 10 வது நாள் ஹஜ் பெருநாள் ஆகும் அன்று நோன்பு வைக்க கூடாது! பெருநாளில் நோன்பு வைப்பது ஹராம் ஆகும்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1864)

10) ஹஜ் அல்லது உம்ரா செய்தல் :

• துல் ஹஜ் மாதத்தில் செய்யப்படும் மிக சிறந்த அமல் தான் ஹஜ் அல்லது உம்ரா ஆகும்! ஒவ்வொரு முஹ்மினும் ஹஜ் அல்லது உம்ரா செய்ய முயற்சி செய்ய வேண்டும் இதற்காக அல்லாஹ்விடம் அதிகம் நாம் துஆ செய்யவேண்டும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும்! ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1773)

• கடமையான ஹஜ் துல் ஹஜ் மாதத்தில் மட்டுமே செய்ய முடியும் இந்த மாதத்தை விட்டு விட்டால் வேறு எந்த மாதத்திலும் நம்மால் ஹஜ் செய்ய முடியாது!

• வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மீது ஹஜ் செய்வது கட்டாய கடமை ஆகும்! வசதி வாய்ப்பு இருந்தது ஹஜ் செய்யாமல் இருப்பது குற்றமாகும்! நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை மட்டும் ஹஜ் செய்து உள்ளார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 4404)

• உம்ரா பொறுத்த வரை இது ஒரு உபரியான அமல் ஆகும் கடமை கிடையாது! எந்த மாதத்தில் வேண்டும் என்றாலும் நாம் உம்ரா செய்யலாம்! நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் 4 முறை உம்ரா செய்து உள்ளார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1775)

11) துல் ஹஜ் 10 வது நாளில் குர்பானி கொடுக்க வேண்டும் :

• வாரத்தில் 7 நாட்களில் சிறந்தது வெள்ளிகிழமை ஆகும்! வருடத்தின் நாட்களில் சிறந்தது துல் ஹஜ்ஜு முதல் பத்து நாட்கள் ஆகும்! அந்தப் 10 நாட்களில் சிறந்தது நாளான து யவ்முந் நஹர் (பலியிடல் நாள்) ஆகும்!

• நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் செய்த தியாகத்தை நினைத்து பார்த்து அவர்கள் போல் நாமும் அல்லாஹ்விற்கு முழுமையாக கீழ் படிந்து, அர்ப்பணிப்பு மனதுடன் வாழ வேண்டும் அதற்கு அடையாளமாக தான் நாம் குர்பானி கொடுக்கின்றோம்!

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஹஜ்ஜின் நாளில் மிக உயர்ந்த நாள், அறுத்துப் பலியிடும் நாள் (யமுந் நஹ்ர்) ஆகும்!

(நூல் : சுனன் அபூதாவூத் : 1945)

• துல் ஹஜ் 10 வது இதே நாளைத்தான் நாம் ஈதுல் அள்ஹா (தியாக பெருநாள்) என்கிறோம்!

• குர்பானி கொடுப்பது அல்லாஹ்வுக்குப் பிரியமான அமல் ஆகும்! இதனால் தான் அல்லாஹ் தொழுகையுடன் சேர்த்து குர்பானியும் கூறி உள்ளான்!

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ‏
உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.

(சூரத்துல் : அல் கவ்ஸர் : 02)

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை!

(சூரத்துல் : அல் அன்ஆம் : 162)

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4002)

• குர்பானி கொடுக்கும் நோக்கம் அல்லாஹ்வின் பொருத்தம் பெற தான்! இதில் ஒரு போதும் புகழ் பாராட்டுக்காக, தான் பெரிய ஆள் என்பதைக காட்டுவதற்காக, நான் எத்தனை ஆடுகள் கொடுத்திருக்கிறேன் பாருங்கள் என்ற தம்பட்டத்திற்காக குர்பானி கொடுத்தால், அதை அல்லாஹ் ஏற்கமாட்டான் மாறாக தண்டனை தான் கிடைக்கும் என்பதையும் மறந்து விட வேண்டாம்!

• நாம் மட்டும் இந்த நாட்கள் சிறப்புகள் அறிந்து அமல் செய்யாமல் நம்முடைய வீட்டார் உறவினர்கள் நண்பர்கள் நமக்கு தெரிந்தவர்கள் என அனைவர்க்கும் இதை பற்றி எடுத்து சொல்லி அமல் செய்ய ஆர்வம் ஏற்படுத்த வேண்டும்!

@அல்லாஹ் போதுமானவன் 💞

No comments:

Post a Comment