அல்லாஹ்விற்கு அழகிய முறையில் நன்றி செலுத்துவோம்!
• மனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி என்னும் வார்த்தையை அடிக்கடி கூறிக்கொள்வதை நாம் பார்க்கிறோம்! நன்றி செலுத்தும் வழக்கம் மனிதர்களுக்கு இயல்பிலேயே இருக்கும் உணர்ச்சியாகும்! ஒரு மனிதருக்கு சக மனிதரிடம் இருந்து ஏதேனும் உதவி அல்லது நன்மை கிடைத்தால் அப்பொழுது அவர் உதவி செய்த நபருக்கு முகமும் மலர தன் நன்றியைத் தெரிவிப்பார்!
• உதவி தேவைப்படும் பொழுது அல்லாஹ்விடம் உதவி தேடும் மனிதன் அல்லாஹ்வின் உதவி வந்து பிரச்சனைகள் தீர்ந்த பிறகு அதற்கு நன்றி செலுத்தாமல் படைத்த இறைவனை உதாசீனம் செய்யும் போது நன்றி கெட்ட மனிதனாக அவன் மாறி விடுகிறான்!
• அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவது ஒவ்வொரு முஸ்லீம் மீதும் கடமையானா ஒன்றாகும்! அல்லாஹ் நமக்கு ஏராளமான அருட்கொடைகளை நமக்கு தெரிந்து அல்லது மறைவில் வழங்கி கொண்டு உள்ளான் ஆனால் இதை எல்லாம் சிந்தித்து இதற்கு நன்றி செலுத்தும் மக்கள் மிக குறைவே!
• உதாரணமாக : ஒரு குதிரையை வாங்கி வளர்த்தால் அது போரில் கடுமையான சண்டையின் போது கூட தன்னை வளர்ந்த எஜமானை விட்டு செல்லாமல் உயிர் போகும் வரை போராடுகிறது காரணம் தன்னுடைய எஜமான் தனக்கு தினம் உண்ண உணவு அருந்த பாணம், இருக்க இடம் என அனைத்தும் கொடுக்கிறார் உடல் நிலை சரி இல்லை என்றால் கூட மருத்துவம் பார்க்கிறார் இதற்கு நன்றியாக அது அவருடன் உறுதுணையாக இருக்கிறது!
• ஆனால் மனிதன் இறைவன் பிறப்பில் இருந்து மௌத் வரை எவ்வளவு அருட்கொடைகளை சுபஹானல்லாஹ் கொடுத்து உள்ளான் ஆனால் இதில் பெரும்பாலான மக்கள் அல்லாஹ்விற்கு மாறு செய்யவே செய்கிறார்கள்!
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்!
(சூரத்துல் : அல் ஆதியாத் : 06)
• இன்று நாம் பலரை பார்க்கலாம் : வாழ்வில் பிரச்சனைகள் வரும் போது அல்லாஹ்வை அழைக்கிறார்கள்! பிரச்சனைகளிலிருந்து அல்லாஹ் அவர்களை காப்பாற்றியதற்கு பிறகு சிலர் அமல்கள் மூலம் நன்றியுணர்வோடு நடந்துக் கொள்கிறார்கள் ஆனால் பெரும்பாலான மக்கள் அல்லாஹ் செய்த நன்றிக்கு பகரமாக நன்றி கெட்டவர்களாக இருக்கிறார்கள்!
• அல்லாஹ்வை பொருத்த வரை தன்னுடைய அடியார்கள் எப்போதும் தனக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றும் என்பதற்காக அல்குர்ஆனில் பல இடங்களில் தான் கொடுத்த அருட்கொடைகளை குறிப்பிட்ட தனக்கு நன்றி செலுத்துமாறு அல்லாஹ் கூறியுள்ளான்!
ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில், உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான்! மேலும், உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், இதயங்களையும் (அறிவையும்) கொடுத்தவன் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!
(சூரத்துல் : அந் நஹ்ல் : 78)
• அதே நேரம் நாம் அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளை தவறான வழியில் பயன்ப்படுத்தி கொண்டு அவனுக்கு மாறு செய்து கொண்டு அவன் கூறிய அமல்களை செய்யாமல் விட்டால் நம்மை தண்டிப்பதாகவும் எச்சரித்து உள்ளான்!
நீங்கள் (இவ்வாறு) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், அவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டுமிருந்தால் உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன (லாபம்) அடையப்போகிறான்?
(சூரத்துல் : அன்னிஸா : 147)
• மனிதர்கள் நன்றி செலுத்தவும், புகழுவும் மிகவும் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே! இதை முதன்மையாக செய்தவர்கள் நபி மார்களே!
• ஏனெனில் அல்லாஹ் தான் தனது அடியார்களுக்கு மார்க்க ரீதியாகவும் உலக ரீதியாகவும் அருட்கொடைகளை வழங்கிய பெரும் உதவி செய்து நம் மீது அவனது அருளை புரிந்து நமக்கு உதவி செய்கிறான்! இதற்காக தான் அல்லாஹ் மனிதர்களை தனக்கு நன்றி செலுத்துமாறு கூறி உள்ளான்!
நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்! நானும் உங்களை நினைவு கூறுவேன்! இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு மாறு செய்யாதீர்கள்!
(சூரத்துல் : அல் பகரா : 152)
• அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளை ஏற்றுகொண்டு, அதை பொருந்தி கொண்டு அஷ் ஷுக்கூர் : (நன்றி பாராட்டுபவன்) அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவது, புகழ்வதில் (அஷ் ஷாகிர் : நன்றியை ஏற்ப்பவன்) இதில் முதன்மையானவர்கள் இறைத்தூதர்கள் ஆவார்கள்!
• உதாரணமாக நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் : சமுதாயத்தில் ஒரு நல்ல தலைவராவும், ஒரு சிறந்த நபியாகவும், நீதியான மனிதராகவும், அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவராகவும், படைத்த இறைவனை தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்றும் பல தெய்வ வழிபாடுகளை கடுமையாக எதிர்க்க கூடியவராகவும் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் இருந்தார்கள் இதனால் தான் அல்லாஹ் நபி இப்ராஹிம் (அலை) அவர்களை உற்ற நண்பனாக தேர்ந்தெடுத்து கொண்டான்!
(சூரத்துல் : அந் நஹ்ல் : 120,121)
• நபி நுஹ் (அலை) பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான் : நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்!
(சூரத்துல் : பனீ இஸ்ராயீல் : 03)
• அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதில் முதன்மையானவர்கள் நபிமார்களாக இருந்து உள்ளார்கள் இதனால் தான் அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் அவர்கள் வரலாற்றை நமக்கு முன்னுதாரணமாக கூறியுள்ளான்!
• ஆனால் நமது நிலை இதற்கு மாற்றமாகவே உள்ளது அல்குர்ஆனில் சில இடங்களில் அல்லாஹ் சிலவற்றை குறிப்பிட்டு இதை உங்களுக்கு நான் வழங்கி உள்ளேன் அதனால் எனக்கு நன்றி செலுத்துங்கள் என்று கூறி உள்ளான்! ஆனால் ஒரு சிலர் மட்டுமே அவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள் என்பதையும் அல்லாஹ் குறிப்பிட்டு உள்ளான்!
1) நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றில் இருந்தே புசியுங்கள்! மேலும், நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள்!
(சூரத்துல் : அல் பகரா : 172)
2) (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களுக்குப் பூமியில் எல்லா வசதிகளையும் அளித்து, அதில் (நீங்கள்) வாழ்வதற்குத் தேவையான காரணங்களை உங்களுக்கு ஏற்படுத்தினோம்! (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகக் குறைவு!
(சூரத்துல் : அல் அஃராஃப் : 10)
3) இன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக்கொண்டு வருபவையாகக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும்!
(சூரத்துல் : அர் ரூம் : 46)
• இவ்வாறு அல்லாஹ்வின் பல அருட்கொடைகளை பற்றி நாம் குறிப்பிட்டு கொண்டே போகலாம் ஆனால் அனைத்தையும் இதில் கூறுவது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும்!
இன்னும், நீங்கள் கேட்டவற்றை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான். ஆகவே, அல்லாஹ்வுடைய அருட் கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதை உங்களால் எண்ண முடியாது! (இவ்வாறு எல்லாமிருந்தும்) நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறவன், மிக மிக நன்றிகெட்டவன் ஆவான்!
(சூரத்துல் : இப்ராஹிம் : 34)
• நாம் நன்றி செலுத்தவோ, நல் அமல்கள் செய்யவோ, பாவங்களில் இருந்து விலகவோ நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி நமக்கு வேண்டும்! அல்லாஹ்வின் உதவி இல்லை என்றால் நம்மமல் இதை செய்ய முடியாது!
என்னுடைய ரப்பே, எப்போதும் உனக்கு நன்றி உடையவனாக என்னை ஆக்கி வைப்பாயாக!
(நூல் : சுனன் திர்மிதி : 3551)
• இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் பல இடங்களில் அல்லாஹ்விடம் நன்றி செலுத்த உதவி செய்யுமாறு துஆ கேட்டு உள்ளார்கள்! குறிப்பாக தொழுகைக்கு பின்பு வழமையாக இந்த திக்ரை ஓதியும் உள்ளார்கள் :
اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
அல்லாஹூம்ம அ'இன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக , வஹுஸ்னி இபாததிக்
பொருள் : யா அல்லாஹ், உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும் மேலும் மிகச் சிறந்த முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக!
(நூல் : சுனன் அபூதாவூத் : 1522)
• அல்லாஹ் நமக்கு கொடுத்த அருட்கொடைகளுக்கு நாம் அதிகம் நன்றி செலுத்தினால் அல்லாஹ் நம்முடைய இம்மை மறுமை அனைத்து அருட்கொடைகளையும் அதிகப்படுத்தி கொடுப்பதாக அல்லாஹ் கூறி உள்ளான்!
நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என் அருளை மேலும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்! நீங்கள் (என் அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என் வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீர் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக!
(சூரத்துல் : இப்ராஹிம் : 07)
• அல்லாஹ்விற்கு எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்பதை அறிஞர்கள் மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள்! அவைகளை பற்றி விரிவாக பார்ப்போம்!
1) மனிதன் சக மனிதனுக்கு செய்யும் நன்றிகள்!
2) உள்ளம் மற்றும் நாவினால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவது!
3) அல்லாஹ் கொடுத்த அருட்கொடை அவன் கூறிய வழியில் செலவு செய்வது
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவர் மக்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவராக ஆக மாட்டார்!
(நூல் : சுனன் திர்மிதி : 1954)
• முதலாவது மனிதன் சக மனிதனுக்கு செய்யும் நன்றியாகும்! அதாவது ஒரு மனிதன் சக மனிதனுக்கு ஏதாவது ஓர் உதவியை செய்தவுடன் அதற்கு பகரமாக அழகிய முறையில் ஜஸாகல்லாஹு கைரன் (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) என்று கூற வேண்டும்!
• மேலும் ஒரு முஸ்லீம் தும்பினால் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) சொல்ல வேண்டும்! இதை கேட்கும் நாம் யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்ல வேண்டும்! பிற முஸ்லீம்களுக்கு ஸலாம் கூறுவது! அவர்களை எப்போதும் மலர்ந்த முகத்துடன் சந்திப்பது என சக மனிதர்களுக்கு நாம் அழகிய முறையில் எப்போதும் நன்றி செலுத்த வேண்டும்!
• முஸ்லீம்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வது! பேரிடர் அல்லது பிறருக்கு உதவி ஏதேனும் தேவைப்படும் பொழுது இயன்ற உதவிகளை செய்வது! அழைப்புபணி செய்வது போன்று சக மனித வாழ்விலும் நாம் நம்மால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும்!
• பிராணிகளை போல் யார் எப்படி இருந்தால் எனக்கு என்ன என்று தன்னுடைய வியாபாரம் வீடு மனைவி மக்களை மட்டும் பார்த்து அவர்கள் நலமாக இருந்தால் போதும் என்று இருக்க கூடாது!
• இன்னும் ஒன்றையும் நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்! நமக்கு உதவி செய்தவர்களை நினைவில் வைத்து நம்முடைய சக்திக்கு இயன்ற உதவிகளை செய்யவேண்டும் அதற்கு முடியவில்லை என்றால் உதவி செய்த நபருக்கு நாம் துஆ செய்ய வேண்டும்!
• அதே போல் தான் உதவி செய்த நபர் தனக்கு கட்டாயம் மறு உதவி செய்யவேண்டும் அல்லது அவன் எனது காலடியில் கிடக்க வேண்டு மென்றோ அல்லது என்னுடைய சொல் கேட்டு நடக்க வேண்டும் என்றோ நினைப்பது கூடவே கூடாது!
• ஒரு மனிதருக்கு மற்றொரு மனிதர் மூலம் உதவி கிடைக்கும் பொழுது, அந்த உதவி அல்லாஹ்வின் நாட்டப்படியே கிடைத்து என்றும், அல்லாஹ் நாடியிருக்காவிட்டால், இன்ன மனிதரிடம் இருந்து இந்த உதவி எனக்குக் கிடைத்திருக்காது என்றும் உறுதியாக நாம் நம்ப வேண்டும்!
• சக மனிதர்களுக்கு நாம் அநீதி இழைக்க கூடாது : பிறரை ஏமாற்றுதல், பொய் கூறி வியாபாரம் செய்வது, பிறர் இடத்தை அபகரிப்பது, பிறரை அநியாயமாக அடிப்பது, உறவுகளை முறித்து வாழ்வது, மனைவி / கணவன் துரோகம் செய்வது, பிறறை அடக்குமுறை செய்வது, பிறருக்கு துரோகம் செய்வது போன்று சக மனிதனுக்கு நாம் எந்த வகையிலும் அநீதி அணு அளவுக்கு கூட செய்ய கூடாது!
• இவ்வாறு செய்வது நாம் அவர்களுக்கு அநீதி இழைப்பது போல் ஆகும்! நாம் பிறருக்கு அநீதி இழைத்தால் அவர்கள் விட்டாலும் அல்லாஹ் நம்மை விட மாட்டான்!!! இம்மையிலும் அல்லாஹ் நம்மை பிடிப்பான் மறுமை நாளிலும் அல்லாஹ் நம்மை விட மாட்டான்! (அல்லாஹ் பாதுகாக்கணும்)
• அல்லாஹ் அளித்த அருட்கொடைகளில் சிறந்த ஒன்று தான் உள்ளமாகும்! அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் உள்ளத்தை பற்றி பேசியுள்ளான்!
• அந்த அழகிய உள்ளத்தில் ஒரு அடியான் அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளை உண்மையாக உணர்ந்து, இவையாவும் நம்முடைய ஆற்றலால் கிடைக்க வில்லை அல்லாஹ்வினால் தான் கிடைத்தது என்று நம்பிக்கை கொண்டு, உள்ளத்தில் மனத்தூய்மையுடன், எந்த வித ஷிர்க், முகஸ்தூதியும் இல்லாமல் அழகிய முறையில் நன்றி செலுத்த வேண்டும்!
• இம்மை சார்ந்தவற்றிலும், மறுமை சார்ந்தவற்றிலும் எல்லா வித அருட்கொடைகளும் அல்லாஹ்விடமிருந்து மட்டுமே நமக்கு வருகின்றன என்று தனது உள்ளத்தில் உறுதியாக நம்பிக்கை கொண்டு அதை நாவினால் கூறி செயலினால் அதை வெளிப்படுத்த வேண்டும்!
உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவை தான்! உங்களை ஒரு தீங்கு அணுகும் போது அவனிடமே முறையிடுகிறீர்கள்!
(சூரத்துல் : அந் நஹ்ல் : 53)
• நம்முடைய உள்ளத்தை அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதமாக மாற்ற நாம் முதலில் நம்முடைய உள்ளத்தை சீராக்க வேண்டும்! நம்முடைய உள்ளம் சீராகி விட்டால் எமது அறிவு சீராக இருக்கும், எமது அமல்கள் சீராக இருக்கும், எமது நடத்தைகளும் சீராக இருக்கும்! எமது உள்ளம் சீர்கெட்டு விட்டால் எல்லாமே சீர்கெட்டு விடும் எனவே எமது உள்ளத்தை அதனை மாசுபடுத்தக் கூடிய அனைத்து காரணிகளை விட்டும் சுத்தப்படுத்துவது மிக அவசியமான ஒரு கடமையாகும்!
• உள்ளத்தை அசுத்தப்படுத்தும் காரணிகள் : ஷிர்க், முகஸ்தூதி, அறியாமை, கஞ்சத்தனம், இயலாமை, சோர்வு, தற்பெருமை, வஞ்சகம், பகைமை, பெருமை, பொறாமை, உலக பொருளாதார ஆசைகள், தீய எண்ணம், சந்தேகம், இசை கேட்பது போன்றவற்றை நாம் முழுமையாக விலகி தவிர்த்து இருக்க வேண்டும்! இவைகள் எல்லாம் நம்முடைய உள்ளத்தை அசுத்தப்படுத்தி அல்லாஹ்வின் எண்ணம் இல்லாமல், அச்சம் இல்லாமல் உள்ளத்தை சீர்க்கெட்டதாக ஆக்கி விடும்!
• உள்ளதை தூய்மைப்படுத்தும் காரணிகள் : அல்லாஹ்வை தனிமையில் அதிகம் அஞ்ச வேண்டும் மேலும் அதிகம் பாவமானிப்பு கேட்டு உள்ளத்தை தூய்மைப்படுத்த வேண்டும்! ஒவ்வொரு செயல் சொல்லிலும் இக்லாஸை நாம் பேன வேண்டும்! போதும் என்ற உள்ளத்தை நாம் கொண்டு இருக்க வேண்டும்! அல்குர்ஆனை பொருளுணர்ந்து ஓத, திக்ர்கள் அதிகம் செய்ய தினமும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்!
• எப்போது பிறர் மீது அன்பு பாசம் காட்டுவது, படைப்பினங்களிடம் கருணை காட்டுவது, உலக வாழ்கையில் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் கஷ்டத்திலும் நாம் பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு போன்ற உயர்ந்த குணங்களை கொண்டு கடந்து செல்வது, இது போன்ற நற்ச்செயல்கள் மூலம் உள்ளத்தை தூய்மையாகவும், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதமாக பக்குவப்படுத்தி வைத்து கொள்ள வேண்டும்!
அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா! எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்)!
(சூரத்துல் : அஷ் ஷுஃரா : 88,89)
எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டார்!
(சூரத்துல் :அஷ் ஷம்ஸ் : 09)
அல்லாஹ் கூறியதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன்! அவன் என்னை நினைவு கூரும் போது நான் அவனுடன் இருப்பேன்! அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன்! அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களை விடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 7405)
• அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதில் வழிமுறையில் ஒன்று தான் நாவினால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாகும்! அதாவது உள்ளத்தினால் உறுதி கொண்டு பின்பு நாவினால் அதை வெளிப்படுத்துவதாகும்!
• நம்மிடம் உள்ள அனைத்துமே அல்லாஹ் நமக்கு கொடுத்த ஒன்றாகும்! எதுவும் நம்முடைய ஆற்றலை கொண்டு திறமை கொண்டு கிடைக்க வில்லை!
அவன் உம்மை ஏழையாய்க் கண்டான்! பிறகு செல்வராய் ஆக்கினான்!
(சூரத்துல் : அள்ளுஹா : 08)
• அல்லாஹ் நமக்கு கொடுத்த அருட்கொடைகளை முழுமையாக பொருந்தி கொண்டு அதற்கு நாவினால் நன்றி செலுத்த வேண்டும் அவனை புகழ்வது, அல்லாஹ்வின் அருட்கொடைகளை பற்றி பிறருக்கு எடுத்து கூறுவது போன்றவையாகும்!
மேலும், உம் இறைவனின் அருட்கொடைபற்றி எடுத்துரைப்பீர்!
(சூரத்துல் : அள்ளுஹா : 11)
• நம்மிடம் உள்ள வீடு வியாபாரம் மனைவி பிள்ளை குடும்பம் பொருள் செல்வம் உணவு பாணம் வாகனம் என அனைத்துமே அல்லாஹ் நமக்கு கொடுத்த ஒன்று தான்! அல்லாஹ்வின் அருட்கொடைகளை குறை கூறாமல் அதனை பொருந்தி கொண்டு அவனை நாம் புகழ வேண்டும்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முறை உணவு உண்ட பின்னர் அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற, அல்லது ஒரு முறை பானம் அருந்திய பிறகு அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற அடியான் குறித்து அல்லாஹ் திருப்தியடைகிறான்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5282)
• இன்று நாம் பலரை பார்க்கலாம்! அல்லாஹ் கொடுத்தவற்றை பற்றி சிந்திக்காமல், நன்றியும் செலுத்தமால் அல்லாஹ் தனக்கு கொடுக்காதவற்றை எண்ணி அல்லது பிறரிடம் உள்ளவற்றை பார்த்து வருத்தம் படுவார்கள்! பிறரிடம் கூறி புலம்புவார்கள்! இவ்வாறு செய்வது நாம் அல்லாஹ்விற்கு மாறு செய்வதும், நன்றி கெட்டதனமாகும்!
• நாவின் மூலம் ஏற்படும் பாவங்கள் : பொய் சொல்வது, புறம் பேசுவது, தீய வார்த்தைகள் பேசுவது, பிறரை குறை கூறுவது, அவதூறு பேசுவது, பாவத்தில் இருந்து விலகியவர்களிடம் அவர்களின் கடந்த கால பாவத்தை பற்றி கூறி குறை கூறுவது, பிறை திட்டுவது, இசை பாட்டுப்பாடுவது போன்ற அனைத்து விதமான தீய செயல்களை விட்டும் ஒரு முஸ்லீம் முழுமையாக தவிர்த்து இருக்க வேண்டும் இவை எல்லாம் நாம் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தமால் நாவை பாவத்தில் பயன்ப்படுத்த காரணமாக அமைந்து விடும்!
• மாறாக, தவ்பா செய்வது, இஸ்திக்பார் செய்வது, இஸ்லாத்தை பற்றி பிறருக்கு எடுத்து கூறுவது, அல்குர்ஆன் ஓதுவது - ஓதுவதை கேட்பது, திக்ர்கள் செய்வது, இஸ்லாமிய நூல்களை வாசிப்பது, ஹதீஸ்களை வாசிப்பது, வாரத்திற்கு ஒரு முறையாவது தனிமையில் அமர்ந்து இறைவனுடன் மனம் விட்டு துஆவின் மூலம் அல்லது தனிமையில் பேசுவது, நோயாளிகள், கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறுவது, பெற்றோர்களிடம், பிள்ளைகளிடம் மனைவிடம், உறவினர்கள், நண்பர்களிடம் என அனைவரிடமும் அன்பாக கணிவாகவும் பேச வேண்டும்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(அல்லாஹ்வின் அருள்களை நினைவுகூறும்) நன்றியுள்ள இதயம், (அடிக்கடி) அல்லாஹ்வைக் திக்ரு செய்யக்கூடிய நாவு, உலக, மார்க்க விவகாரங்களில் உங்களுக்கு உதவக்கூடிய ஸாலிஹான மனைவி! இவை தான் மனிதன் வைத்திருக்கக்கூடிய சிறந்த பொக்கிஷங்களாகும்!
(நூல் : ஸஹீஹ் அல் ஜாமி : 4409)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வை நினைவுகூர்வதில் உமது நாவு பசுமையாக இருக்கும் நிலையில் நீர் மரணிப்பதுதான் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான செயலாகும்!
(நூல் : தப்ரானீ : 181 | சுனன் திர்மிதி : 3375)
• உடல் உறுப்புகள் மூலம் அல்லாஹ் கூறிய வழிமுறை சட்டங்களை, கட்டளைகளை முறையாக நம்முடைய சொல் செயல் வாழ்கையில் கொண்டு வர வேண்டும் எவற்றையேல்லாம் அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்து உள்ளார்களோ அவற்றை விட்டு நாம் முழுமையாக விலகி கொள்ள வேண்டும்! எவற்றையேல்லாம் அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறி உள்ளார்களோ அவற்றை முழுமையாக நம்முடைய வாழ்கையில் பின்ப்பற்ற வேண்டும்!
உதாரணமாக : அல்லாஹ் கொடுத்த அருட்கொடை அவன் கூறிய வழியில் செலவு செய்ய வேண்டும்! உடல் ஆரோக்கியம் இருந்தால் அதிகம் இபாதத் செய்வது - நோன்பு வைப்பது - பிறருக்கு உதவி செய்வது, பொருளாதாரம் அதிகம் இருந்தால் தர்மம் செய்வது ஜகாத் கொடுப்பது, ஹஜ், உம்ரா செய்வது! அல்லாஹ் தடுத்த ஹரமான மற்றும் பித்அத்களை விட்டும் தவிர்த்து இருப்பதாகும்!
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள்! எனவே நான், ஏன் இப்படிச் செய்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே? என்று கேட்டேன்! அவர்கள், நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பவேண்டாமா? என்று கேட்டார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 4837)
• கண்களை கொண்டு நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும் அதவாது, நாம் யாரிடமாவது நல்லவற்றை கண்டால் அதை பற்றி அவரிடம் கூறலாம்! அவரை பார்த்தால் முகம் மலர்ந்த முகத்துடன் பார்ப்பது! ஸலாம் கூறுவது! மேலும் அவரிடம் உள்ள குறைகளை கண்டால் அதை மறைப்பது,
• நம்மை விட பொருளாதாரம், அருட்கொடைகளில் மேலே உள்ள மக்களை பார்க்காமல் நம்மை விட எவ்வளவு மக்கள் நம்மிடம் உள்ள அருட்கொடைகள் இல்லாமல் இருக்கின்றார்கள்! அவற்றை பார்த்து அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் நம்மை இந்த அளவிற்கு வைக்க வில்லை என்று மகிழ்ச்சி கொள்வது!
• அல்லாஹ்வின் அருட்கொடைகள், படைப்புகளை பார்த்து அல்லாஹ்வை புகழ்வது இவ்வாறு நாம் கண்களை கொண்டு பல வழிகளில் அல்லாஹ்விற்கு நாம் நன்றி செலுத்தலாம்!
• இது அல்லாமல் அல்லாஹ் தடுத்தவைகள் அந்நிய ஆண் / அந்நிய பெண்களை பார்ப்பது, சினிமாக்களை பார்ப்பது, ஹரமான விசியங்களை பார்ப்பது! போன்ற கண்களால் ஏற்படும் அனைத்து தீய செயல்களை விட்டும் நாம் முழுமையாக ஒதுக்கி இருக்க வேண்டும்!
• கைகள் மற்றும் கால்களை உடல் ஆரோக்கியம் வலிமை கொண்டு கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய, ஸதகா மற்றும் ஜகாத்களை சேகரித்து அதை உரிய நபர்களுக்கு கொண்டு சென்று கொடுப்பது! பிறரை சார்ந்து இருக்காமல் ஹலால் ஆன வருமானத்தை கொண்டு ஏதேனும் ஒரு வழியில் பொருளாதாரம் ஈட்டுவது! நமது பொறுப்பில் உள்ள மக்களுக்கு நம்முடைய சக்திக்கு இயன்ற அளவு கொடுத்து உதவி செய்வது! குர்பானி கொடுப்பது, போன்று நம்முடைய உறுப்புகளை கொண்டு நம்மால் இயன்ற அளவுக்கு நல்ல அமல்களை செய்யவேண்டும்!
• பர்ளு தொழுகையுடன் விட்டு விடாமல் உபரியானா தொழுகைகள், சுன்னத் தொழுகைகள் என அனைத்தும் இயன்ற அளவுக்கு நாம் பேணி தொழுது வரவேண்டும்!
• இவை இல்லாமல் உடல் உறுப்புகளை ஹரமான வழியில் செல்லாமல் பாதுகாக்க வேண்டும் : அந்நிய ஆண் / பெண்களை பார்ப்பது, பேசுவது, பார்க்க வாகனத்தில் அல்லது நடந்து செல்வது! ஹரமான உறவில் இருப்பது! மார்க்கம் தடுத்த ஹராமான போதை பொருட்களை பயன் படுத்துவது! வட்டி சார்ந்த கணக்குகளை எழுதுவது! படைப்பினங்கள் மீது வரம்புமீறி அடிப்பது! ஒட்டுகேட்பது! லஞ்சம் வாங்குவது! திருடுவது! சூதாட்டம் பந்தயம் விளையாடுவது! உருவப்படம் வரைவது போன்றவற்றில் நமது உடல் உறுப்புகளை பயன்படுத்தி பாவத்தில் ஈடுப்பட்டு அல்லாஹ்விற்கு நாம் மாறு செய்யக்கூடாது!
• உலகில் எவ்வளவோ மக்கள் உடல் ஆரோக்கியம் இல்லாமல் உள்ளார்கள் அல்லாஹ் நம்மை அந்த நிலையில் வைக்கவில்லை! எனவே நாம் அல்லாஹ் தடுத்தவற்றை முழுமையாக விலகி அல்லாஹ்வும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறிய முறையில் நம்முடைய உறுப்புகளை பயன்படுத்த வேண்டும்!
• அல்லாஹ் கூறிய முறையில் வாழ்ந்து, அவன் கொடுத்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் மக்களாக, அவனுடைய நேசத்தை பெற்று தரும் அமல்களை செய்ய கூடியவர்களாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி அருள்வானாக ஆமின்!
நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா?
(சூரத்துல் : அல் அன்ஆம் : 53)
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment