அல்லாஹ்வின் அல்ஜமீல் - الجميل என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அஷ் ஷாஃபீ பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அல்ஜமீல் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல் ஜமீல் - الجميل என்றால் அழகானவன் என்பது பொருளாகும்!
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அழகானவன்! அழகையே அவன் விரும்புகின்றான்! தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்! என்று கூறினார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 147)
• இந்த ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு அல்ஜமீல் என்ற பெயர் உள்ளதாக அடையாளப்படுத்தியுள்ளார்கள்!
• உண்மையிலேயே அல்லாஹ் அழகானவன், அவனுடைய தாத்தில் அல்லாஹ் அழகானவன், அந்த அழகு எப்படிப்பட்டது என்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவனாக இருக்கிறான்!
• அல்லாஹ்வுடைய பெயர்கள் அழகானவை, அதனால் தான் அவற்றை “ அல் அஸ்மா உல் ஹுஸ்னா ” (அழகிய பெயர்கள்) என்று குறிப்பிடுகிறோம்!
இமாம் இப்னு கய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் அழகு நான்கு நிலைகளில் உள்ளன! 1) உள்ளமையின் அழகு, 2) பண்புகளின் அழகு, 3) செயல்களின் அழகு, 4) பெயர்களின் அழகு ஆகியவையாகும்!
அவனது பெயர்கள் அனைத்தும் அழகானவை. அவனது பண்புகள் அனைத்தும் முழுமையானவை. அவனது செயல்கள் அனைத்தும் நோக்கம் நிறைந்தவை. அவனது உள்ளமையின் அழகை அவனைத் தவிர யாராலும் உணர முடியாது!
படைப்புகளிடம் அதைக் குறித்த அறிமுகங்களைத் தவிர வேறொன்றும் இல்லை. பார்க்க முடியாதபடி அவனது அழகு அடியார்களை விட்டும் மறைவாகவே வைக்கப்பட்டுள்ளது!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் அழகானவன்! அழகையே அவன் விரும்புகின்றான்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 147)
• அல்லாஹ் அழகானவன் என்பதை கூறிய நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அழகையே விரும்புகிறான் என்றும் கூறினார்கள்! இது முஃமின்களுடைய நடத்தையில் ஏற்படவேண்டிய ஒரு மாற்றமாகும்!
• பொதுவாக, அல்லாஹ் மனிதனை அழகிய வடிவத்தில் தான் படைத்திருக்கிறான், அப்படி படைக்கப்பட்ட மனிதன் தன்னையும், தன்னுடைய சூழலையும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும், என்பது மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது!
அபுல் அஹ்வஸ் தன் தந்தை கூறியதாக அறிவிக்கிறார்கள் :
நான் அழுக்கான ஆடையுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன்! நபி (ஸல்) அவர்கள் என்னிடம் உங்களிடம் செல்வம் உண்டா? என்று வினாவினார்கள் ,
நான் ஆம் உண்டு என்றேன்! பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னை நோக்கி எவ்வகையான செல்வம் என்று கேட்டார்கள்? ஒட்டகம் , மாடு , ஆடு, குதிரைகள், அடிமை ஆகியவை உள்ளது என்று கூறினேன்!
உடனே நபி (ஸல்) என்னிடம் கூறினார்கள் : அல்லாஹ் உனக்கு செல்வத்தை வழங்கியிருந்தால் அல்லாஹ்வினுடைய அருட்கொடை மற்றும் அவனின் சங்கையின் பிரதிபலிப்பு உன் மீது காணப்பட வேண்டும் என்று கூறினார்கள்.
(நூல் : ஸஹீஹ் முஸ்னத் : 1109)
• சிலரை பார்க்கலாம், ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுகிற சில சகோதரர்கள், அழுக்காகவும், அலங்கோலமாகவும் தங்களை அமைத்துக் கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம், அதுதான் அல்லாஹ்வுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறார்கள், ஆனால், சுத்தமாக, அழகிய ஆடைகள் அணிந்து, அழகிய தோற்றத்தில் இருப்பதையே அல்லாஹ் விரும்புகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!
• இன்னும் சிலரை பார்க்கலாம் தொழுகைக்கு வரும் பொழுது அசுத்தமான ஆடை அல்லது வேர்வை நாற்றத்துடன் வருவார்கள் இன்னும் சிலர் பஜ்ர் தொழுகைக்கு பல் துலக்காமலும் வருவார்கள் இதனால் அருகில் தொழும் நபருக்கு சிரமத்தை ஏற்படத்துவார்கள்!
• அல்லாஹ் அழகானவன் எனவே நாம் எப்போதும் நம்மை தூய்மையாகவும், சுற்றுப்புற சூழ்நிலையும் அழகாகவும் வைத்து இருக்க வேண்டும்!
• சுவனவாசிகளுக்கு வழங்கப்படும் அருட்கொடைகளை முழுமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு அல்லாஹ் தன் திருமுகத்தைக் காட்டுவான்! இதுதான் வழங்கப்படும் அருட் கொடைகளில் மிக உன்னதமானது! கண்களுக்குக் குளிர்ச்சியை, உள்ளங்களுக்கு மகிழ்ச்சியை, முகங்களுக்கு மலர்ச்சியைத் தரக் கூடியதாகும்!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்து விடும்போது (அவர்களிடம்) அல்லாஹ், உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்பான். அதற்கு அவர்கள் "(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்க வில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)? என்று கேட்பார்கள்!
அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதை விட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 297)
• அல்லாஹ்வே, உன் திருமுகத்தைக் காணும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக! எங்களுடைய உள்ளமும், உடலும், சூழலும் அழகானதாக அமைய எங்கள் எல்லோருக்கும் தவ்ஃபீக் செய்வாயாக ஆமீன்!
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்களான அல் காபிழ், அல் பாஸித் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment