பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

இஸ்லாம் தடைசெய்த 70 பெரும் பாவங்கள்! தொடர் : 13


இஸ்லாம் தடைசெய்த 70 பெரும் பாவங்கள்!
தொடர் : 13
• பெரும் பாவம் என்றால் : அல்லாஹ்வும் அல்லது நபி (ஸல்) அவர்களும் ஒரு பாவத்தை தடுத்து அதனை பற்றி எச்சரிக்கை செய்து இருக்க வேண்டும் இவைகள் பெரும் பாவம் ஆகும்!
• உதாரணமாக : எந்தப் பாவத்தைச் செய்தால் அல்லாஹ்வின் சாபம் உண்டாகும் அல்லது நரகத்தில் வேதனை செய்யப்படும் அல்லது எதை மார்க்கம் ஹராம் என்று சொல்லப்படுகின்றதோ அவைகள் எல்லாம் பெரும் பாவங்கள் தான்! இவைகள் அனைத்திலிருந்தும் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!
• இஸ்லாம் தடுத்த பெரும் பாவங்கள் அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் மொத்தம் 70 பாவங்களை கூறி உள்ளது! இவற்றை பற்றி நாம் அறிந்து அவற்றில் இருந்து முற்றிலும் தவிர்த்து இருக்க வேண்டும்!
• அல்லாஹ்வின் உதவினால் ஒவ்வொரு வாரமும் 70 பெரும் பாவங்களில் ஆதாரம் உடன் ஐந்து ஐந்தாக பதிவு செய்து வருகிறோம்! சென்ற பதிவில் 61 முதல் 65 பெரும் பாவங்களை பற்றி கூறி இருந்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் 66 முதல் 70 வரையிலான பெரும் பாவங்களை பற்றி கூறி உள்ளோம்! அல்லாஹ் இவ்வாறான பெரும் பாவங்களை விட்டும் நம்மை பாதுகாப்பானாக ஆமீன்!
61) அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல் :
அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்! அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்! ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்! நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்கள் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
(சூரத்துல் : அல் முதஃப்ஃபிஃபீன் : 1,4)
நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்! (இன்னும்) சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள்! இதுவே நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகும்!
(சூரத்துல் : பனீ இஸ்ராயீல் : 35)
அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் எதையும் குறைத்து விடாதீர்கள்!
(சூரத்துல் : அல் அஃராஃப் : 85)
62) வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள் :
(நபியே! உம்மிடம்) இவ்வுலக வாழ்க்கை பற்றி(ப் பேசும்பொழுது) தன்னுடைய (சாதுர்யமான) வார்த்தையைக் கொண்டு, உம்மை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கக்கூடிய (அகனஸ் இப்னு ஷரீக் போன்ற) ஒருவன் அம்மனிதர்களில் உள்ளான். (அவன் உம்மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறித்) தன் மனத்திலுள்ளவற்றிற்கு (சத்தியஞ்செய்து) அல்லாஹ்வை சாட்சியாக்குவான். (உண்மையில்) அவன்தான் (உமக்கு) கொடிய விரோதி.
(சூரத்துல் : அல் பகரா : 204)
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அறிஞர்களிடம் வாதிட்டு வெல்வதற்கும், பாமரமக்களிடம் அறிவாளி எனப் பெயர் எடுப்பதற்கும், மக்களைத் தன்பக்கம் திருப்புவதற்கும் கல்வி கற்பவனை! அல்லாஹ் நரகில் நுழையவைப்பான்!
(நூல் : சுனன் இப்னு மாஜா : 254)
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தவறு என்று தெரிந்த பின்பும் அதன்மீது வாதாடுபவன் அதை விடும் வரை அல்லாஹ்வின் கோபத்தில் இருந்து கொண்டிருப்பான்!
(நூல் : சுனன் இப்னு மாஜா : 2320)
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவர் தான் நியாயமாக இருந்தும் வாக்குவாதம் செய்வதை விட்டு விட்டாரோ அவருக்குச் சுவனத்தின் ஓரப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்!
(நூல் : அஸ் ஸஹீஹா : 273)
63) அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல் :
• அல்லாஹ்வின் சோதனையில் யாரும் அவநம்பிக்கை கொள்ளக்கூடாது! அல்லாஹ்வின் சோதனை உண்மையென்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்!
• இன்று ஆரோக்கியமாக இருப்பவன் நாளை நிரந்தர நோயாளியாகிறான்! அடுத்த நிமிடம் இறந்து விடுவான் என நம்பும் நோயாளி எழுந்து நடமாடுகிறான்! வாயில் வைத்த உணவு தொண்டைக் குழியில் இறங்கு முன் உயிர்பிரிகிறது! இம்முறை அதிகம் லாபம் கிடைக்கும் என எதிர்பார்ப்பவன் ஏமாந்து போகிறான்!
• இவையெல்லாம் அல்லாஹ்வின் சோதனைகளாகும்! ஒவ்வொரு நபரின் சூழ்நிலை, தன்மை, நிலைக்கு எற்றால் போல் சோதனைகள் வரும்! இவ்வாறு அல்லாஹ்விடம் இருந்து வரும் சோதனைகளை மறந்து வாழ்வது அல்லது இவற்றை அலட்சியம் செய்வது அல்லது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது பெரும் பாவமாகும்!
• இன்று முஸ்லிம்களில் பலர் அவர்களுக்கு பணம் பதவிகள் கிடைத்து விட்டால் போதும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்ய ஆரம்பித்து விடுவார்கள்! அவர்கள் நினைப்பதெல்லாம். எனக்கு என்ன குறைவு! நான் எதற்கு அல்லாஹ்விற்கு பயப்பட வேண்டும்? என்று கூறுகிறார்கள்!
• அல்லாஹ் நாடினால் ஒரே வினாடியில் அவர்களின் பதவிகளையும், பொருட்களையும் அவர்களிடமிருந்து பிடுங்கி எடுத்துவிட்டு அவர்களையும் அழித்துவிட சக்திபெற்றவன்! என்பதை (அல்குர்ஆன் : 28 : 81) வசனத்தில் வரலாறுகளிலிருந்து படிப்பினையாகப் பெறட்டு அல்லாஹ் நமக்கு கூறியுள்ளான்!
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட (நல்லுபதேசத்)தை அவர்கள் மறந்து விடவே, (அவர்களைச் சோதிக்கும் பொருட்டு) ஒவ்வொரு பொருளின் வாயில்களையும் நாம் அவர்களுக்குத் திறந்து விட்டோம், (அவர்களுக்கு தேவையானவை அனைத்தும் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தன.) முடிவாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு அவர்கள் ஆனந்தமடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நம் வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்து விட்டோம்! அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாகிவிட்டனர்!
(சூரத்துல் : அல் அன்ஆம் : 44)
அல்லாஹ்வின் சூழ்ச்சியை அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய சமூகத்தைத்தவிர (வேறு எவரும்) அல்லாஹ்வின் சூழ்ச்சியை பற்றி அச்சமற்றிருக்கமாட்டார்கள்!
(சூரத்துல் : அல் அஃராஃப் : 99)
(சொல்லுங்கள் நபியே!) அல்லாஹ் எங்களுக்கு விதித்துள்ளதைத் தவிர (வேறொன்றும்) நிச்சயமாக எங்களை அணுகவே அணுகாது!
(சூரத்துல் : அத் தவ்பா : 51)
64) அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல் :
விசுவாசிகளே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்திலிருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப் போக்கிவிட்டு) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான் அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் விசுவாசங் கொண்டவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள். நிராகரிப்பவர்களிடம் கடுமையாக இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிவார்கள் இழிவுபடுத்தும் எவர்களுடைய இழிவிற்கும் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதனை அளிக்கிறான். அல்லாஹ் மிக விசாலமானவனும் (யாவரையும்) நன்கறிந்தோனுமாக இருக்கிறான்!
(சூரத்துல் : அல் மாயிதா : 54)
• அல்லாஹ் ஓர் அடியானை நேசிப்பதாயின் அதைவிடப் பாக்கியம் வேறு எதுவுமே அவனுக்கு கிடையாது! அல்லாஹ் ஓர் அடியானை நேசிப்பதாயிருந்தால் அந்த அடியான் அல்லாஹ்வின் கட்டளைகளைத் தவறாது குறைவு ஏற்படாமல் நிறைவேற்ற வேண்டும். கடமைகளை நிறைவேற்றும் போது மிகவும் பேணுதலாக இருக்க வேண்டும்!
• பிறர் பார்ப்பதற்காக ஒரு செயலும், தனிமையில் வேறொரு செயலுமாக இருக்கக்கூடாது. இவ்வாறே, ஒழுங்காகச் செய்த செயலை பிறர் பார்க்கிறார்களே என்பதற்காக விட்டு விடவும் கூடாது. பிறரின் பழிப்பிற்கும், ஏளனத்திற்கும் அஞ்சாது, எந்நேரமும் அல்லாஹ்விற்காக வாழும் அடியானையே அல்லாஹ் விரும்புகிறான்!
அல்லாஹ் கூறுவதாக இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன்!
(நூல் ஸஹீஹ் புகாரி : 6502)
65) ஜமாத்தை விட்டு தனித்துத் தொழுதல் :
• பர்ளு தொழுகைகளை ஆண்கள் கட்டாயம் பாங்கு சத்தம் கேட்ட பின்பு ஜமாஅத் ஆக பள்ளியில் தான் தொழ வேண்டும்! தொழுகைக்குச் செல்லாமல் ஜமாத்தை அலட்சியம் செய்து பிறகு தனித்துத் தொழுவது பெரும் பாவமாகும்!
• ஜமாத் தொழுகை விட்டு தனித்து தொழ அனுமதி உண்டு பின் வரும் நபர்களுக்கு மட்டும் : 1) எதிரின் பயம் வெளியே சென்றால் உயிர் போய்விடும் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்! அல்லது 2) கடுமையான நோய் 3) அல்லது வெளியே செல்ல முடியாத அளவுக்கு மழை பொழிந்தால் இது நிர்பந்த சூழ்நிலை போன்ற காரணங்களைத் தவிர்த்து, வேறு எக்காரணங்களுக்காகவும் ஜமாஅத் தொழுகையைத் தவற விடுவதற்கு அனுமதி கிடையாது!
• ஜமாத் தொழுகை அலச்சியம் செய்து விட்டு நாம் தனித்து தொழுது கொண்டால் அந்த தொழுகை செல்லுப்படி ஆகாது!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பாங்கு சத்தம் கேட்டும், தக்ககாரணமின்றி ஜமாஅத் தொழுகைக்கு யார் செல்லவில்லையோ அவரது தொழுகை செல்லுபடி ஆகாது! எதிரியின் பயம் அல்லது நோய் போன்ற காரணங்கள் இருந்தால் தவிர!
(நூல் : சுனன் இப்னு மாஜா : 793)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என்னுடைய உயிர் எவனுடைய கரத்திலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! விறகுகளைக் கொண்டு வருமாறு நான் கட்டளையிட்டு அதன் படி விறகுகள் கொண்டு வரப்பட்டுப் பின்னர் தொழுகைக்கு அழைக்குமாறு நான் உத்தரவிட்டு, அதன்படி அழைக்கப்பட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டு, அதன் படி அவர் தொழுகை நடத்திப் பின்னர் தொழுகைக்கு வராமலிருக்கிற ஆண்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டோடு அவர்களை எரிப்பதற்கு நான் நினைத்ததுண்டு!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 644)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகர் என (வெளிப்படையாக) அறியப்பட்டவரையும் நோயாளியையும் தவிர வேறெவரும் (கூட்டுத்) தொழுகையில் கலந்து கொள்ளாமல் இருந்த தில்லை! நோயாளிகூட இரு மனிதர்களுக்கிடையே (தொங்கியவாறு) நடந்துவந்து தொழுகையில் சேர்ந்து விடுவார்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு நேரிய வழிகளைக் கற்பித்தார்கள். தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் பள்ளிவாசலில் தொழுவது அத்தகைய நேர்வழிகளில் ஒன்றாகும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1158)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத்தெருவில் தொழுவதை விடவும் அவர் ஜமாஅத்துடன் தொழுவது இருபதுக்கும் மேற்பட்ட மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1174)
• இன்ஷாஅல்லாஹ் அடுத்த பதிவில் 65 முதல் 70 வரையிலான பெரும் பாவங்களை பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment