பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

அல்லாஹ்வின் அந் நூர் - என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம்


அல்லாஹ்வின் அந் நூர் - என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞
~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா : 55
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்களான அல் முஃமின் மற்றும் அஸ் ஸாதிக் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அந் நூர் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அந் நூர் என்றால் ஒளியானவன் என்பது பொருள்! இந்த பெயர் அல்குர்ஆனில் கீழே உள்ள வசனத்தில் இடம்பெற்றுள்ளது!
அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் பிரகாசமாக இருக்கிறான். அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கின்ற ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கிறது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய (பிரகாசிக்கின்ற) ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக் கொண்டு) இருக்கிறது. (அதில்) பாக்கியம் பெற்ற ‘ஜைத்தூன்' மரத்தின் எண்ணெய் எரிக்கப்படுகிறது. அது கீழ்நாட்டில் உள்ளதுமல்ல; மேல்நாட்டில் உள்ளதுமல்ல. அந்த எண்ணெயை நெருப்புத் தொடாவிடினும் அது பிரகாசிக்கவே செய்கிறது. (அதுவும்) பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக (பிரகாசிக்கிறது). அல்லாஹ், தான் நாடியவர்களைத் தன் பிரகாசத்தின் பக்கம் செலுத்துகிறான். மனிதர்களுக்கு அல்லாஹ் (தன் தன்மையை அறிவிக்கும் பொருட்டு) இத்தகைய உதாரணங்களைக் கூறுகிறான்! அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன்!
(சூரத்துல் : அந் நூர் : 35)
ஷெய்க் அப்துற்றஹ்மான் ஸஅதீ அவர்கள் கூறுகிறார்கள் :
அந் நூர் பெயரை இரண்டு வகையாக உள்ளது!
1) ஒன்று, பார்த்து உணரக்கூடிய ஒளியாகும்! அது எப்படிப்பட்டதென்றால் அவனது முகத்திலிருந்து திரை அகற்றப்பட்டால் அவன் முகத்தின் ஒளி அவன் பார்க்கும் படைப்புகள் அனைத்தையும் அழித்து விடும்!
• இதனை நபி (ஸல்) அவர்கள் தவிர அதன் மகத்தான பொருளை வார்த்தைகளால் விளக்க முடியாது! ஏனெனில், படைப்புகளில் யாரும் அதற்கு முன்னால் நிற்பதற்கு சக்தி பெறமாட்டார்கள்!
• விண்ணுலகில் உள்ள ஒளிகள் அனைத்தும் அவனது ஒளியின் வெளிப்பாடே. மாறாக, வானங்கள் மற்றும் பூமி அளவு பரப்பளவுடைய அருட்கொடைகள் நிறைந்த சுவனத்தின் ஒளியும் அவனது ஒளியின் வெளிப்பாடேயாகும்!
• சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் அர்ஷ் , குர்ஸீ மற்றும் சுவனங்களின் ஒளியும் அவனது ஒளியின் வெளிப் பாடேயாகும்!
2) இரண்டாவது வகை : ஆன்மிக ஒளியாகும்! இது அவனது தூதர்கள், நேசர்கள் மற்றும் அவனது வானவர்களின் உள்ளங்களைப் பிரகாசிக்கச் செய்யக்கூடியதாகும்! அவனை, அவனது பண்புகளை அறிந்த அவனது அடியார்களின் உள்ளங்களில் அவர்கள் அவனை அறிந்ததற்கேற்ப ஒளி ஏற்படுகிறது! ஏனெனில், படைத்தவனைப் பற்றிய அறிவே அறிவுகளில் முதன்மையானது!
• பயனுள்ள கல்வி உள்ளத்தில் பிரகாசத்தை ஏற்படுத்துகிறது எனில் அவற்றில் முதன்மையான, மிகச்சிறந்த கல்வியான இது எப்படி உள்ளங்களில் பிரகாசத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்?
• ஒளி அவனது பண்புகளில், பெயர்களில் ஒன்றாக இருப்பதால் அவனுடைய மார்க்கம், அவனுடைய தூதர், அவனது வாக்கு என ஒவ்வொன்றும் ஒளியாக இருக்கின்றது! நம்பிக்கை கொண்ட அவனுடைய அடியார்களின் உள்ளங்களில் ஒளி பிரகாசிக்கின்றது! இந்த ஒளியே மறுமை நாளில் அவர்களுக்கு முன்னால் இருக்கும்! அல்லாஹ் கூறுகிறான் :
நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்! உங்கள் இறைவனோ அதை உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, (மன்னித்து) சொர்க்கங்களிலும் உங்களைப் புகுத்திவிடுவான்! அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும். (தன்) நபியையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். அந்நாளில், இவர்களுடைய பிரகாசம் இவர்களுக்கு முன்னும், இவர்களுடைய வலது பக்கத்திலும் ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கும்! இவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பிரகாசத்தை (அணையாது) நீ பரிபூரணமாக்கிவை. எங்கள் குற்றங்களையும் நீ மன்னித்து அருள்புரி. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்!
(சூரத்துல் : அத் தஹ்ரீம் : 08)
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் முஹ்ஸின் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment