பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

அல்லாஹ்வின் அர் - ரஃபீக் - السيد என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம்


அல்லாஹ்வின் அர் - ரஃபீக் - السيد என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞
~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா : 67
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அஸ் ஸித்தீர் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அர் - ரஃபீக் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அர் ரஃபீக் என்றால் மென்மையானவன், நளினமானவன் என்பது பொருளாகும்.
• இந்த பெயர் ஹதீஸ்களில் காணப்படுகிறது.
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன்! அவன் மென்மையை விரும்புகிறான்! கடினத்தின் மூலம் அவன் வழங்காததை மென்மையின் மூலம் வழங்கிவிடுகிறான்!
(நூல் : சுனன் அபூதாவூத் : 4807)
• இந்த நபிமொழியிலிருந்து அல்லாஹ்வுக்கு ரஃபீக் - மென்மையானவன் என்ற பெயரும் உண்டு என்பது தெளிவாகிறது. அது அவனுக்கு மட்டுமே உரிய பரிபூரணமான தன்மையாகும்.
• அர் - ரிஃப்க் என்றால் இலகுவை ஏற்படுத்துதல், மென்மையாக நடத்தல், அவகாசம் அளித்தல் என்று பொருள். இதற்கு எதிர்மறையாகவே அல் உன்ஃப் - கடினத்தைப் பிரயோகித்தல் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
• அவன் அளிக்கும் கட்டளைகளில், அமைத்த விதிகளில் வழங்கும் சட்டங்களில் மென்மையானவனாக இருக்கின்றான். அவன் பின்பற்றுவதற்கு இலகுவான சட்டங்களை அடியார்களின்மீது விதியாக்கியுள்ளான்.
• அவன் படைப்புகள் அனைத்தையும் 'ஆகு' என்று கூறி ஒரே தடவையில் படைப்பதற்கு ஆற்றல் பெற்றிருந்தும் அவனது மென்மை மற்றும் நாட்டத்திற்கேற்ப படிப்படியாகத்தான் அவர்களைப் படைத்தான்.
• அடியார்களால் பின்பற்ற முடியாத கடினமான சட்டங்களை அவன் அவர்கள்மீது கடமையாக்கவில்லை. அவர்கள் பின்பற்றத் தகுந்த, இலகுவான சட்டங்களையே அவர்கள் மீது அவன் விதியாக்கியுள்ளான். அவன் அவர்களின் பாவங்களுக்காக அவர்களை உடனுக்குடன் தண்டிப்பதில்லை. மாறாக, அவர்கள் பாவமன்னிப்புக் கோரும் பொருட்டு, நேர்வழியடையும் பொருட்டு குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறான்.
• அவனது மார்க்கம் முழுக்கமுழுக்க இலகுவும் மென்மையும் கருணையுமாகும். அவன் கடினத்தால் அளிக்க முடியாததை மென்மையினால் அளித்து விடுகிறான். எந்த விசயத்தில் மென்மை கலக்குமோ அது அழகாகிவிடும்.
• எனவே, ஒவ்வொரு முஸ்லிமும் தம் விவகாரங்களில் மென்மையான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். அவசரப்பட்டு கடினத்தைப் பிரயோகித்துவிடக் கூடாது. நிச்சயமாக அவசரம் ஷைத்தானிடமிருந்து வரக்கூடிய ஒன்றாகும்.
இமாம் இப்னுல் கைய்யும் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் :
மனிதர்களுடன் மென்மையாக நடந்து கொள்வதையும் அவர்களுக்கு நல்லதையே விரும்புவதையும் விட உள்ளத்திற்கு பயனளிக்கக்கூடிய வேறு எதுவும் கிடையாது.
மற்றவருடன் மென்மையான அணுகு முறையை கடைபிடிக்கும் போது, அவன் நெருக்கமற்ற ஒருவனாக இருந்தால் அவனது அன்பையும் நேசத்தையும் சம்பாதித்துக் கொள்வாய்; அவன் நண்பனாக, நேசனாக இருந்தால் நட்பும், நேசமும் தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்துவிடுவாய்!
அவன் உன்னை வெறுக்கின்ற ஒரு எதிரியாக இருந்தால் உனது மென்மையின் காரணமாக அவனது நெருப்பை அணைத்து, அவனது கெடுதியை விட்டும் உன்னைப் பாதுகாத்துக் கொள்வாய்.
எவர் மனிதர்களின் செயல்களை நல்லெண்ணத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறாரோ அவரது எண்ணம் ஈடேற்றம் அடைந்துவிடும்; அவரது நெஞ்சம் விரிவடையும்; அவரது உள்ளம் ஆரோக்கியமடையும்! அல்லாஹ் அவரை கெடுதிகளிலிருந்தும் வெறுக்கத்தக்க விடயங்களில் இருந்தும் பாதுகாத்து விடுவான்.
(நூல் : مدارج السالكين)
• மென்மையும் நிதானமும் சிறப்பையும் ரஹ்மானின் பிரியத்தையும் பெற்றுத் தரும். ஏனெனில், அவன் மென்மையை விரும்புகிறான்.
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன்! அவன் மென்மையை விரும்புகிறான்! கடினத்தின் மூலம் அவன் வழங்காததை மென்மையின் மூலம் வழங்கிவிடுகிறான்!
(நூல் : சுனன் அபூதாவூத் : 4807)
• ஆகவே, அல்லாஹ் மென்மையானவன், நம்மிடம் இந்த நற்குணம் வரவேண்டும்!
நாமும் நம்முடைய எல்லா செயல்களிலும் மென்மையையே கடைப்பிடிக்க வேண்டும்.
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் மக்களிடம் நெருக்கமாகவும், மென்மையாகவும், எளிமையாகவும் நடப்பாரோ அவருக்கு நரகம் தடை செய்யப்பட்டு விட்டது.
(நூல் : சுனன் திர்மிதி : 2488)
• பெற்றோர் குழந்தைகளிடமும், குழந்தைகள் பெற்றோர்களிடமும், பெரியவர் சிறியவரிடமும் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். கணவன் மனைவியிடம், ஆசிரியர் மாணவ-மாணவிகளிடம் மென்மையை கையாள வேண்டும். மேலும் பொதுமக்களிடமும், அனைத்துவிதமான உயிரினங்களிடமும் மென்மையான அணுகுமுறையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் வித்ர் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment