பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

அல்லாஹ்வின் அல் முஜீப் - المجيب என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம்


அல்லாஹ்வின் அல் முஜீப் - المجيب என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞
~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா : 50
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் கரீபு பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அல் முஜீப் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல் முஜீப் என்றால் பதிலளிக்க கூடியவன் என்பது அர்த்தமாகும்! அல்குர்ஆனில் ஒரேயொரு வசனத்தில் மட்டுமே இந்தப் பெயர் இடம்பெற்றுள்ளது!
நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்! (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்!
(சூரத்துல் : ஹூது : 61)
• அல்லாஹு தஆலா அவனுடைய அடியார்களை பூமியில் படைத்து, அவர்களிடத்தில் ‘ என்னை மட்டும் நீங்கள் வணங்க வேண்டும்! என்னிடத்தில் மட்டுமே நீங்கள் கேட்கவேண்டும்’ என்று நமக்கு கட்டளையிட்டுள்ளான்!
• துஆ கேட்பது என்பது நாம் அடிமை அல்லாஹ் எஜமானன் என்பதை உணர்த்தும் ஒரு இடமாகும்! அதனால் தான் இஸ்லாம் பல இடங்களில் அல்லாஹ்விடம் கேட்க வலியுறுத்தி கூறி உள்ளது!
• ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எங்கள் இறைவன் அருகில் இருக்கின்றானா? அல்லது தூரத்தில் இருக்கின்றானா? அருகிலிருந்தால் மெதுவாகவே அவனிடம் நாங்கள் பிரார்த்திக்க வேண்டும்! தூரத்திலிருந்தால் சப்தமிட்டுப் பிரார்த்திக்க வேண்டும்! நாங்கள் எப்படி அவனை பிராத்திப்பது என்று வினவினார்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்! அப்போது தான் இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான் :
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் : நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்! அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்! என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்! என்று கூறுவீராக!
(சூரத்துல் : அல் பகரா : 186) | (நூல் : தப்ஸீர் இப்னு கஸீர்)
• அடியார்கள் அவனிடம் பிரார்த்திப்பதை அல்லாஹ் விரும்புகிறான், அவர்களுடைய பிராத்தனைகளுக்கு அல்லாஹ் பதிலளிக்கிறான்! எந்த அளவுக்கு என்றால் ;
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களுடைய இறைவன் சங்கையானவன்! அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான்!
(நூல் : சுனன் இப்னு மாஜா : 3911)
• அல்லாஹ் யாருடைய பிரார்த்தனையும் மறுப்பதில்லை, ஆனால், அந்தப் பிரார்த்தனை ஒரு பாவமான காரியத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவைத் துண்டிப்பதையோ வேண்டிப் பிரார்த்திக்காத வரையிலும் அவசரப்படாத வரையிலும் அவரது பிரார்த்தனை ஏற்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5285)
• ஒரு பாவத்தை நாம் அல்லாஹ்விடம் கேட்டால் அது ஹராமாகும், அதை அல்லாஹ் தரமாட்டான்!
• சில நேரங்களில், நாம் செய்த பிரார்த்தனைகளுக்கு உடனே பதில் கிடைக்காமல் போகலாம் அல்லது தாமதம் ஆகலாம் அப்படியான நிலையில் அதனுடைய அர்த்தத்தை நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான்!
அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்!
அப்போது நபித்தோழர்கள் அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே என்றனர்! அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவர்கள் அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன் என்றார்கள்!
(நூல் : முஸ்னத் அஹ்மத் : 10709)
• ஹராமான முறையில் உடல் வளராமல், அதாவது, ஹராமானவைகளை சாப்பிடாமல், குடிக்காமல், உடுத்தாமல், ஹராமான விஷயங்களை அல்லாஹ்விடம் கேட்காமல் நல்லதை மற்றும் அல்லாஹ்விடம் கேட்கும் பொழுது கண்டிப்பாக அல்லாஹ் நமக்கு பதில் தருவான்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மக்களே! அல்லாஹ் தூயவன்! தூய்மையானதையே அவன் ஏற்கின்றான்! ஒருவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார்! அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி என் இறைவா, என் இறைவா என்று பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1844)
• அல்லாஹ் கண்டிப்பாக பதில் தருவான் என்று நாம் நம்பும் போது, அவனிடம் மேலும் மேலும் கேட்க வேண்டும் என்ற ஆசை நம்மிடத்தில் வரும்!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சுபிட்சமும் உயர்வும் உடைய நம் இறைவன் ஒவ்வோர் இரவும் கீழ் வானிற்கு இறங்கி இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரின் பிரார்த்தனையைநான் அங்கிகரிக்கிறேன்! என்னிடம் யாரேனும் கேட்டால் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறிகிறான்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6321)
• எனவே கேட்பவர்கள் இருந்தால் அல்லாஹ் நிச்சயமாக கொடுப்பான்!
• அல்லாஹ்விடத்தில் நாம் அதிகமாக கேட்கும் பொழுது அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்! அல்லாஹ்விடத்தில் எதையும் கேட்காதவர்கள் பெருமைகாரர்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் அடையாளப்படுத்துகிறான் :
உங்கள் இறைவன் கூறுகிறான் : என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்! நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்! எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்!
(சூரத்துல் : அல் முஃமின் : 60)
• அல்லாஹ் பாதுகாக்கணும் இன்று பலர் அல்லாஹ்வின் இந்த அழகிய பண்பை சரியாக அறியாத காரணத்தினால் தான் அல்லாஹ் படைத்த படைப்புகளிடம் துஆ செய்கிறார்கள் அப்போது தான் தங்கள் துஆ ஏற்கப்படும்! என்று ஆனால் இது ஷிர்க் ஆகும் நாம் துஆ அல்லாஹ்விடம் மட்டுமே செய்யவேண்டும்!
• நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் மட்டும் துஆ செய்யவேண்டும் என்று எந்த அளவுக்கு வலியுறுத்தி கூறி உள்ளார்கள் என்பதை கீழே உள்ள ஹதீஸ் நமக்கு விளக்குகிறது :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
செருப்பின் வார் அறுந்தாலும் அல்லாஹ்விடமே கேளுங்கள்!
(நூல் : சுனன் திர்மிதி : 3973)
• அல்லாஹ்விடத்தில் அதிகமாக கேட்காவிட்டால் அவர்கள் மீது அல்லாஹ் கோபப்படுகிறான், என்று நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள் :
நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள் :
யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ, அவர் மீது அல்லாஹ் கோபப்படுகிறான்!
(நூல் : சுனன் திர்மிதி : 3373)
• எனவே, அல்லாஹ், அல் முஜீப், பதில் அளிக்கக் கூடியவன், என்பதை சரியாக புரிந்திருக்கிற ஒரு முஃமின் அல்லாஹ்விடத்தில் நிறைய கேட்பான்,
• அதே நேரத்தில், அல்லாஹ், அல்கரீப், என்று புரிகிற ஒரு மனிதன் சத்தத்தை உயர்த்தாமல் மௌனமாகவும், பக்குவமாகவும் அல்லாஹ்விடத்தில் துஆச் செய்வான், அல்லாஹ் பதிலளிப்பான் என்ற நம்பிக்கையோடு துஆச் செய்வான்!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள்! அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு’ என்று சொல்ல வேண்டாம்! (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6338)
• எனவே, அல்லாஹ், அல் முஜீப் என்று அறிகிற ஒரு மனிதன், அல்லாஹ்விடத்தில் உறுதியாக கேட்பான், அல்லாஹ் தருவான் என்ற நம்பிக்கையோடு கேட்பான், நிச்சயமாக அந்த முஜீப் நம்முடைய பிரார்த்தனைகளுக்கு பதில் அளிப்பான்!
அல்லாஹ் கூறுவதாக இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் (தத்தம் தேவைகளைக்) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன். அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை! கடலில் நுழை(த்து எடு)க்கப்பட்ட ஊசி (தண்ணீரைக்) குறைப்பதைப் போன்றே தவிர (குறைக்காது)!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5033)
• எனவே, அல்லாஹ் பதில் அளிப்பான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் நிறைய துஆச் செய்வோம், அல்லாஹ் அவை அனைத்தையும் நமக்காக கபூல் செய்வானாக!
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்களான அல் காஹிர் மற்றும் அல் கஹ்ஹார் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 💞
No photo description available.
All reactions:
19


 

No comments:

Post a Comment