அல்லாஹ்வின் அல் ஹயியு - الحيي என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் மன்னான் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அல்ஹயியு பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல் ஹயியு - الحيي : என்றால் அதிகமாக வெட்கப்படுபவன் என்பது பொருளாகும்!
• இந்தப் பெயர் குர்ஆனில் வினைச்சொல்லாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது! அல்லாஹ் கூறுகிறான் :
إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي أَنْ يَضْرِبَ مَثَلًا مَا بَعُوضَةً فَمَا فَوْقَهَا
கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்பட மாட்டான்!
(அல்குர்ஆன் : 2 : 26)
• இரண்டு நபிமொழிகளில் இந்தப் பெயர் இடம்பெற்றுள்ளது. யஃலா இப்னு உமய்யா கூறுகிறார் :
ஒரு மனிதர் திறந்த வெளியில் கீழாடையில்லாமல் குளித்து கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். ஆகவே, மிம்பரில் ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்த பின் கூறினார்கள் : நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படக்கூடியவன், மறைக்கக் கூடியவன். அவன் வெட்கப்படுவதையும் மறைப்பதையும் விரும்புகிறான். எனவே, உங்களில் ஒருவர் குளிக்கும்போது தன்னை மறைத்துக்கொள்ளட்டும்.
(நூல் : சுனன் அபூதாவூத் : 4014 | ஸஹீஹ் : அல்பானி (ரஹ்))
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களுடைய இறைவன் சங்கையானவன்! அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான்!
(நூல் : சுனன் இப்னு மாஜா : 3911)
• இந்த இரண்டு ஹதீஸ்களிலும் அல் ஹயியு என்ற பெயரை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள்!
• அல்லாஹ் வெட்கப்படுபவன் என்று நாம் சொல்லும்போது, அடியார்கள் வெட்கப்படுவதை போன்று என்று நாம் கருத்து எடுத்து விடக்கூடாது.
• அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் அனைத்துமே அடியார்களிலிருந்து வேறுபட்டதாகும்.
• அல்லாஹ்வுடைய பண்புகளை பொருத்தவரை, அவை அவனுடைய கண்ணியத்திற்கும், மகத்துவத்திற்கும் ஏற்றவாறு இருக்கும், எனவேதான் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான் :
هَلْ تَعْلَمُ لَهٗ سَمِيًّا
அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும் நீர் அறிவீரா? (இல்லையே).
(அல்குர்ஆன் : 19 : 65)
• அல்லாஹ் வெட்கப்படுபவன் என்று சொல்லும் போது, அல்லாஹ்வுடைய அந்தஸ்திற்க்கும், கண்ணியத்திற்கும் அவன் விரும்பக்கூடிய அமைப்பில் வெட்கப்படுவான்.
• அவனது வெட்கம் அவனது படைப்புகளின் வெட்கத்தைப் போன்று அல்ல. இதைப் போன்றே நாம் மற்ற பண்புகளையும் அணுக வேண்டும். அவனுக்கு அறிவு உள்ளது. ஆனால் அது நம்முடைய அறிவைப் போன்று அல்ல. அவனுக்குப் பார்க்கும் திறனும் கேட்கும் திறனும் உள்ளது. ஆனால் அது நம்முடைய பார்க்கும் திறனையோ கேட்கும் திறனையோ போன்று அல்ல. அவனுக்கு விருப்பம் என்கிற பண்பும் உள்ளது. ஆனால் அது நம்முடைய விருப்பத்தைப் போன்று அல்ல. அதே போன்றுதான் அவனது வெட்கம் நம்முடைய வெட்கத்தைப் போன்று அல்ல.
• அல்லாஹ்வுக்கு இருக்கிற வெட்கம் என்ற பண்பினுடைய பிரதிபலிப்பாக, மனிதர்கள் தங்கள் இடத்திலேயே வெட்கப்படுவது என்ற பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
• எனவே தான், நபி (ஸல்) அவர்கள் வெட்கப்படுவதை மிக சிறந்த ஒரு பண்பாக அடையாளப்படுத்தினார்கள்!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒவ்வொரு மார்க்கத்திலும் ஒரு சிறந்த நற்குணம் உண்டு. இஸ்லாத்தின் சிறந்த குணம் வெட்கம் ஆகும்!
(நூல் : சுனன் இப்னு மாஜா : 4182)
• மேலும் வெட்கம் நன்மையை பெற்று தரும் என்றும், வெட்கம் இல்லை என்றால் மனம் விரும்பியதை செய்து கொள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கண்டித்து உள்ளார்கள்!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
வெட்கம் நல்லதைத் தவிர வேறெதையும் கொண்டு வராது.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6117)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3483)
• அல்லாஹ்வுக்கு முன்னால் நாம் பாவங்கள் செய்வதற்கு வெட்கப்பட வேண்டும்.
• மனிதர்களுக்கு முன் பாவம் செய்வதற்கு வெட்கப் படுவதற்கு முன்பாக, அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், அவனுக்கு முன்னால் நான் இந்த அசிங்கத்தை செய்யலாமா என்ற வெட்கம் நமக்கு வரவேண்டும்.
• பொதுவாக வெட்கம் என்ற நல்ல பண்பு நம்மிடத்தில் வர வேண்டும், ஆனால், கல்வி கற்கிற விஷயத்தில் நாம் வெட்கப்பட கூடாது.
• இன்றைய காலத்தில் பார்க்கலாம், வெட்கம் என்றாலே பெண்ணுக்குரிய ஒன்றாக ஆகி விட்டது. ஒரு ஆண் வெட்கப்பட்டால் கூட ஏன் பெண்ணை போன்று வெட்கப்படுகிறாய் என்று கேட்பார்கள் ஆனால் இது மிகவும் பிழையான ஒன்றாகும்!
• வெட்கம் என்பது ஆண், பெண் இருப்பாலருக்கும் உரிய ஒன்றாகும்! வெட்கம் ஈமானின் ஒரு அங்கம் ஆகும்! கண்டிப்பாக வெட்கம் என்ற ஒரு குணம் நம்மிடம் இருக்க வேண்டும்!
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;) விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 24)
• எனவே, அல்லாஹ் வெட்கப்படுபவன், அவன் வெட்கப்படுகிறவர்களை விரும்புகிறான், வெட்கத்தை விரும்புகிறான், நாமும் வெட்கப்பட்டு, வெட்கத்தை ஒரு நல்ல பண்பாக கொண்டு வாழ முயற்சி செய்ய வேண்டும், அல்லாஹ் அதற்கு நம் எல்லோருக்கும் தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்.
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அஸ் ஸத்தீர் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment