அல்லாஹ்வின் அஷ் ஷாஃபீ என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அத் தய்யிபு பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அஷ் ஷாஃபீ பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, அதைக் கொண்டு அல்லாஹ்வை பிரார்த்திக்க வேண்டும் என்று அல்லாஹ் குர்ஆனில் நமக்கு கட்டளையிடுகின்றான்!
அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன! ஆகவே, அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள்! (அவனிடம் துஆ கேளுங்கள்)!
(சூரத்துல் : அஃராஃப் : 180)
• அல்லாஹ்வுடைய பெயர்களை பொருளுணர்ந்து, மனப்பாடம் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உண்டு! அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை! அல்லாஹ் ஒற்றையானவன்! ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6410)
• அல்லாஹ்வுடைய பெயர்களிலே ஹதீஸ்களில் பதிவாகி இருக்கிற பெயர் தான் அஷ் ஷாஃபீ!
• அஷ் ஷாஃபீ - الشافي : என்பதன் பொருள் குணமளிப்பவன், ஆரோக்கியம் அளிப்பவன், சுகப்படுத்துபவன், நோய்களை குணப்படுத்துபவன் என்கிற அர்த்தங்கள் இருக்கின்றன!
• உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஒருவருக்காகப் பாதுகாப்புக் கோரி தம் வலக் கையால் அவரை தடவிக் கொடுத்து,
أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
‘அத்ஹிபில் பஃஸ், ரப்பன்னாஸ்! வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக – ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன் ’
பொருள் : மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குவாயாக! குணப்படுத்துவாயாக! நீயே குணமளிப்பவன்! உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை. நோய் சிறிதும் இல்லாதவாறு குணப்படுத்திடுவாயாக!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 5750)
• நபி (ஸல்) அவர்கள் அஷ் ஷாஃபீ என்கிற பெயரை இதில் குறிப்பிட்டு இருப்பதை நாம் பார்க்கிறோம்!
• ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கக் கூடிய மற்றொரு ஹதீஸில், குடும்பத்தார் மட்டுமில்லாமல் பொதுவாக யார் நோய்வாய் பட்டாலும் இந்த துஆவை ஓதி பாதுகாப்பு தேடுவது சுன்னாஹ் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்!
• உடலில் ஏற்படும் நோய்கள் மட்டும் அல்ல, உள்ளங்களில் ஏற்படும் சந்தேகம், பொறாமை, வெறுப்பு போன்ற நோய்களுக்கும் அவனே நிவாரணம் அளிக்கிறான். அவனைத் தவிர வேறு யாராலும் நிவாரணம் அளிக்க முடியாது!
• அல்லாஹ்வினால் மட்டும் மனரீதியான, உடல்ரீதியான எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிக்க முடியும். அவனே படைப்புகள் அனைத்தையும் படைத்து பராமரிக்கக்கூடியவன். அவன் கைவசமே அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அவன் நாடியதே நடக்கும். அவனது அனுமதியின்றி எதுவும் நிகழ முடியாது.
• இவ்வாறு நம்பிக்கை கொள்வது மருந்துகளை உட்கொண்டு சிகிச்சை செய்வதற்கு முரணானதல்ல. ஏனெனில், அதுவும் இறைவன் ஏற்படுத்திய வழிமுறைகள், காரணக் காரியங்கள். நபியவர்கள் பயனுள்ள மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்துள்ளதாகப் பல அறிவிப்புகளின் மூலம் அறிந்து கொள்கிறோம். இது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பதற்கு முரணான ஒன்றல்ல!
• ஒரு முஸ்லிமை பொருத்தவரை, நோயை குணப்படுத்துகிற ஆற்றல் உடையவன் அல்லாஹ் மட்டும்தான் என்பதை ஈமான் கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது!
• எனவே தான், இப்ராஹீம் (அலை) கூறியதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :
وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ ۙ
மேலும் நான் நோயுற்று விட்டால், அவனே என்னைக் குணப்படுத்துகின்றான்!
(அல்குர்ஆன் : 26 : 80)
• உண்மையிலேயே நோயை குணப்படுத்துபவன் அல்லாஹ் மட்டும்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்! ஆனால், நோய் குணமாவதற்கு தேவையான காரண காரியங்களை மேற்கொள்வது என்பது நம்மீது கடமையாக இருந்து கொண்டிருக்கிறது!
• அதே நேரம் காரணம் காரியத்தின் மூலம் தான் நமக்கு நிவாரணம் கிடைத்தது என்று நம்பிக்கை கொள்வது மிகவும் பிழையான ஒன்றாகும்!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நிச்சயமாக அல்லாஹ் நிவாரணம் இறக்காமல் எந்த நோயையும் இறக்கவில்லை. அதனை அறிந்தவர் அறிந்துகொண்டார். அதனை அறியாதவர் அறியாமலே இருந்து விட்டார்!
(நூல் : முஸ்னது அஹ்மது : 18456)
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்களான அல் ஜமீல் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 


No comments:
Post a Comment