பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

அல்லாஹ்வின் அல் வாரிஸ் - الوارث என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம்


அல்லாஹ்வின் அல் வாரிஸ் - الوارث என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞
~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா : 52
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்களான அல் காஹிர் மற்றும் அல் கஹ்ஹார் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயர்களான அல் வாரிஸ் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல்லாஹ்வை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதை, அல்லாஹ் குர்ஆனில் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்!
• அல்லாஹ்வுடைய கட்டளைக்கு,
கட்டுப்பட்டு நம்மை படைத்து, நமக்கு உணவளித்துக் கொண்டிருக்க கூடிய, இந்த உலகில் நாம் வாழ அனைத்து வசதிகளும் செய்து தந்திருக்கக் கூடிய அல்லாஹ்வை பற்றி நாம் அறிய வேண்டும், என்ற ஆவலோடு அவனுடைய அஸ்மாவுல் ஹுஸ்னா என்ற அழகிய பார்த்துக்கொண்டு வருகிறோம்!
• அல் வாரிஸ் என்றால் நிலையாக இருப்பவன் என்பது பொருள் இந்த பெயர் அல்குர்ஆனில் 3 இடங்களில் இடம்பெற்றுள்ளது! அந்த 3 இடங்களிலும் பன்மையாக இந்த பெயர் வந்திருக்கிறது!
(இவர்களைப் போன்று) தன் வாழ்க்கைத் தரத்தால் கொழுத்துத் திமிர் பிடித்த எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கின்றோம். இதோ! (பாருங்கள்.) இவை யாவும் அவர்கள் வசித்திருந்த இடங்கள்தாம். (எனினும், அங்கே மூலை முடுக்குகளில் உள்ள) சொற்ப சிலரைத் தவிர நாம்தான் அதற்கு வாரிசுகளாக இருக்கிறோம்!
(சூரத்துல் : அல் கஸஸ் : 58)
• அல் வாரிஸ் என்பதற்கு நேரடியான அர்த்தம் ஒருவர் போனால் அவருக்கு அடுத்ததாக வருபவர் வாரிசு என்று சொல்லப்படும்!
• தமிழில் வாரிசு என்றால் “அனந்தரக்காரர்” என்று சொல்லுவோம்! தந்தை மரணித்தால் மகன் வாரிசு! இதைத்தான் அரபுமொழியில் வாரிசு என்று வரும்!
• ஆனால் அல்லாஹ் தன்னை வாரிசு என்று குறிப்பிடுவது, நிலைத்திருப்பவன் என்கிற அர்த்தத்தில்! இந்த உலகில் அனைத்தும் அழிந்துவிடும் ஆனால் அல்லாஹ் மட்டுமே நிலைத்திருப்பவன்!
(உங்களுக்கு) நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கின்றோம்! நாமே (உங்களை) மரணிக்கச் செய்வோம்! அனைத்திற்கும் நாமே வாரிசுகள்! (சொந்தக்காரர்கள்)!
(சூரத்துல் : அல் ஹிஜ்ர் : 23)
• அல் வாரிஸ் என்றால் படைப்புகள் அனைத்தும் அழிந்த பிறகும் நிலைத்திருக்கக்கூடியவன் என்று பொருள்! அல்லாஹ்வை தவிர அனைத்தும் அழியக்கூடியவையே! அவன் நித்திய ஜீவன்! அவனுக்கு மரணம் என்பதே இல்லை! அவன் பக்கமே அனைத்தும் திரும்புகின்றன!
நிச்சயமாக நாம் தான் பூமிக்கும், அதிலுள்ளவைகளுக்கும் அனந்தரம் கொள்வோம்! அவர்கள் (அனைவரும்) நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்!
(சூரத்துல் : மர்யம் : 40)
• எனவே அல்லாஹு தஆலா வாரிஸ் என்று சொல்கிறபோது அவன் நிலையாக இருக்கக்கூடியவன்! மற்ற அனைவரும் தங்களிடமுள்ள அனைத்தையும் விட்டு விட்டு மரணமடைந்து விடுவார்கள் அல்லாஹ் ஒருவனே அவர்களுக்கும் அவர்கள் விட்டுச் சென்ற அனைத்திற்கும் உரிமையாளன் ஆவான்!
• இந்தப் பெயர் இந்த உலகில் அல்லாஹ்வைத் தவிர வணங்கப் படுகின்ற அத்தனையும் அழிந்துவிடும் என்று எச்சரிக்கிறது!
• அல்லாஹ்வே அனைத்திற்கும் உரிமையாளனாவான் அவர்கள் அனைவரும் அவனிடமே கொண்டுவரப்படுவார்கள் அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் கூலி வழங்குவான்!
❤️ நபி (ஸல்) அவர்கள் மரணித்த போது, ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தியை ஜீரணிக்க முடியாமல் இருந்த போது அபூபக்கர் சித்திக் (ரலி ) அவர்கள் உறுதியுடன் ஒரு உரை நிகழ்த்தினார்கள் :
முஹம்மத்(ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும்! அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்' அல்லாஹ் (என்றும்) உயிர் வாழ்பவன்; அவன் இறக்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்' என்று கூறினார்கள். மேலும், 'நபியே! நீங்களும் இறப்பவர் தாம்; அவர்களும் இறப்பவர்களே' என்னும் (திருக்குர்ஆன் 39:30) இறை வசனத்தை ஓதினார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3668)
• அல்லாஹுதஆலா நிலையாக இருக்கக் கூடியவன் , மரணிக்க மாட்டான் , அழியாதவன் என்பதுதான் வாரிசின் அர்த்தமாகும்!
• இந்த உலகில் உள்ள நம்முடைய பொருளாதாரங்கள் பிள்ளைகள் அனைத்தும் அழிந்துவிடும்! எனவே அழிந்து போகக்கூடிய சொத்துக்களை அல்லாஹ்வுக்காக செலவு செய்யக்கூடியவர்களாக மாறுங்கள் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் :
உங்களுக்கென்ன! அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் செலவு செய்ய வேண்டாமா? வானங்கள், பூமியிலுள்ளவைகளின் உரிமை அல்லாஹ்வுக்குரியதுதானே!
(சூரத்துல் : அல் ஹதீத் : 10)
உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் இறுதியாகச் செய்த குத்பாவில் (சொற்பொழிவில்) அல்லாஹ்வைப் புகழ்ந்த பிறகு கூறினார்கள் :
நிச்சயமாக நீங்கள் நோக்கமின்றி வீணாகப் படைக்கப்படவில்லை! நீங்கள் ஒருபோதும் வீணாக விட்டுவிடப்பட மாட்டீர்கள்! நிச்சயமாக நீங்கள் திரும்ப வேண்டும். உங்களிடையே தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ் இறங்கி வருவான்! அல்லாஹ்வின் அருளிலிருந்து வெளியேறியவர் நஷ்டமடைந்து விட்டார்!
வானங்கள் மற்றும் பூமியின் அளவு பரப்பளவுள்ள சுவனத்தை விட்டும் தூரமாகிவிட்டார்! இந்த நாளைக் குறித்து அஞ்சியவரே பாதுகாப்புப் பெறுவார் என்பதை நீங்கள் அறியவில்லையா?
அவர் அழியக்கூடியதை விற்று நிலையானதைப் பெற்றுவிட்டார் குறைவானதைக் கொடுத்து நிறைவானதைப் பெற்றுவிட்டார் பயத்திற்குப் பதிலாக அமைதியைப் பெற்று விட்டார். நீங்கள் அழியக்கூடியவர்கள் என்பதை அறியவில்லையா? உங்களுக்குப் பின்னர் அடுத்து வரக்கூடியவர்கள் அழிக்கப்படுவார்கள் நீங்கள் அனைவரும் நிலையானவளின் பக்கம் கொண்டு செல்லப்படுவீர்கள்!
பின்னர் ஒவ்வொரு நாளும் நீங்கள் காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வின் பக்கம் கொண்டு செல்லப்படுவீர்கள். அவள் விதித்த தவணை முடிந்து விட்டால் நீங்கள் பூமியின் ஏதேனும் ஒரு பகுதியில் மறைந்து விடுவீர்கள்! அது நீங்கள் படுத்துக்கொள்வதற்கு உகந்த இடமாக இருக்காது!
பிரியமானவர்களை விட்டுவிட்டு மண்ணோடு சேர்ந்துவிடுவீர்கள். விசாரணையை எதிர்கொள்வீர்கள். நீங்கள் விட்டுச் சென்றவற்றைவிட்டும் தேவையற்றுவிடுவீர்கள் நீங்கள் முற்படுத்திய செயல்களின்பால் தேவையுடையவர்களாகி விடுவீர்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! உங்களின் தவணை நிறைவடைவதற்கு முன்பே நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் பின்னர் அவர் தம் மேலாடையை தம் முகத்தின்மீது வைத்தார்! அவரும் அழுதார்! அவரைச் சுற்றியிருந்தவர்களும் அழுதார்கள்!
(நூல் : அஸ்மா உல் ஹுஸ்னா : 132)
• அல்லாஹ் என்றும் நிலைத்திருக்கக் கூடியவன். மற்றவை அனைத்தும் அழியக் கூடியவை என்பதை புரிந்து; நம்முடைய நிலையை மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு தவ்ஃபீக் செய்ய வேண்டும்!
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் முதகப்பிர் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment