அல்லாஹ்வின் அத் தய்யான் என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் முஹ்ஸின் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அத் தய்யான் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அத் தைய்யான் - الديان : என்றால் கூலி கொடுக்கக் கூடியவன், விசாரிக்ககூடியவன் என்பது பொருளாகும்!
• அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் அல்குர்ஆனிலும், ஹதீஸிலும் வந்திருக்கின்றன! ஹதீஸ்களில் வரக்கூடிய ஒரு அழகிய பெயர் தான் அத் தைய்யான் என்ற பெயராகும்!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மறுமை நாளில் மக்கள் ஒன்றுதிரட்டப் படுவார்கள் - அல்லது அடியார்கள் நிர்வாணிகளாக, செருப்பு அணியாதவர்களாக ஒன்று திரட்டப்படுவார்கள்! அவர்களுடன் எதுவும் இருக்காது! பின்னர் அவர்கள் அழைக்கப் படுவார்கள்! அந்த அழைப்பைத் தூரத்தில் இருப்பவர்கள் கூட அருகில் இருப்பவர்கள் போன்று செவியுறுவார்கள்!
பின்பு அல்லாஹ் கூறுவான் : நானே அரசன், நானே விசாரணை செய்து கூலி வழங்கக்கூடியவன்! நரகவாசிகளில் யாருக்கேனும் சுவனவாசிகளிடமிருந்து ஏதாவது உரிமையைப் பெற வேண்டிருந்தால் அவரிடமிருந்து அதனைப் பெறாத வரை அவர் நரகம் புகமாட்டார்!
சுவனவாசிகளில் யாருக்கேனும் நரகவாசிகளிடமிருந்து ஏதாவது உரிமையைப் பெற வேண்டியிருந்தால் அவரிடமிருந்து அதனைப் பெற்றுவிட்டுதான் அவர் சுவனம் புகுவார்! எந்த அளவுக்கெனில் அது கன்னத்தில் அடிக்கப்பட்ட ஓர் அடியாக இருந்தாலும் சரியே!
(நூல் : முஸ்னது அஹ்மது : 16085)
• இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய இரண்டு பெயர்களை குறிப்பிடுகிறார்கள், மலிக் மற்றும் அத் தைய்யான் என்ற பெயர்கள்!
• அல்லாஹ்வுடைய விசாரணையும், கூலியும் எவ்வாறு அமையும் என்பதை நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் நமக்கு சொல்லிக் காட்டுகிறார்கள்!
• குறிப்பாக, அடுத்தவர்களுக்கு அநீதி இழைப்பது, அடுத்தவர்களுடைய உரிமைகளை நாம் பறிப்பது என்பது மிக ஆபத்தானது! இந்த உலகில் நாம் தப்பித்து கொண்டாலும் மறுமை நாளில் அல்லாஹ் ஒரு போதும் விட மாட்டான்!
• ஒரு சொர்க்கவாசி உலகத்தில் ஒரு ஒரு நரகவாசியை அறைந்து இருந்தால், மறுமை நாளில் அவன் இடத்தில் பழி தீர்க்காமல் இவர் சொர்க்கம் போக முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்!
• இந்த உலகத்தில் நாம் அடுத்தவர்களுடைய உரிமை விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை நமக்கு இங்கே தரப்படுகிறது!
• தன் இறைவன் அத் தய்யான் - கூலி வழங்கக்கூடியவன் என்பதையும் மறுமைநாளில் நிச்சயமாக அவனைச் சந்திக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளும் புத்திசாலி அந்த நாளுக்காகத் தன்னை தயார்படுத்திக்கொள்வான்!
• அவகாசம் அளிக்கப்படும் இவ்வுலகிலேயே சுயபரிசோதனை செய்து தன்னைத் தயார்படுத்தி கொள்பவனே புத்திசாலியாவான்! தன் மன இச்சைப்படிச் செயல்பட்டு விட்டு விதியின் மீது பழிபோடுபவன் இயலாதவனே அன்றி வேறில்லை!
• அல்லாஹ் நீதியான, நேர்மையான முறையில் தீர்ப்பு வழங்கக் கூடியவன், விசாரிக்கக் கூடியவன், இதுதான் அத் தைய்யான் என்ற பெயருடைய அர்த்தமாக இருக்கிறது!
உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள் கூறினார்கள் :
மறுமைநாளில் நீங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பே உங்களை நீங்களே விசாரணை செய்து கொள்ளுங்கள்! உங்களின் செயல்கள் கணக்கிடப்படுவதற்கு முன்பே நீங்கள் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்! அவ்வாறு செய்வது மறுமை நாளில் உங்களின் விசாரணையை எளிதாக்கும்!
(நூல் : அஸ்மா உல் உஸ்னா : 149)
• எனவே, அல்லாஹ்வை அத் தைய்யான் என்று புரியக் கூடிய நாம், அதற்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அல்லாஹ் நம் எல்லோருக்கும் தவ்ஃபீக் செய்வானாக!
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்களான அல் முகத்திம், அல் முஅஹ்ஹர் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 


No comments:
Post a Comment