பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

அல்லாஹ்வின் அத் தய்யிபு என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞 ~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா


அல்லாஹ்வின் அத் தய்யிபு என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞
~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா : 59
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்களான அல் முகத்திம், அல் முஅஹ்ஹர் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அத் தய்யிபு பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அத் தய்யிபு - الطيب - என்பதன் பொருள் மிகத் தூய்மையானவன், பரிசுத்தமானவன், சிறந்தவன் என்பதாகும்! இந்த பெயர் ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளது!
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்! என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள் :
தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள்! திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன்!
(அல்குர்ஆன் : 23 : 51)
நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள்! நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள்!
(அல்குர்ஆன் 2 : 172)
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள்! அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார்! அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி "என் இறைவா, என் இறைவா" என்று பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது! அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது! அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது! தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1844)
• இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் தூய்மையானவன், பரிசுத்தமானவன் என்கிற அத்தைய்யிப் என்ற பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள்! அல்லாஹ் அனைத்து குறைகளில் இருந்து தூய்மையானவன், பரிசுத்தமானவன் என்பது இதன் அர்த்தமாகும்!
• அதனால் தான் நாம் அத்தஹிய்யாத்தில்,
தைய்யிபாத் அனைத்தும் அல்லாஹ்விற்கு உரியது என்று சொல்கிறோம்!
• அல்லாஹுத்தஆலா நல்லவற்றை மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக இருக்கிறான்! தூய்மையானவற்றை மட்டுமே அவன் அங்கீகரிக்ககூடியவனாக இருக்கிறான்!
• அல்லாஹ்வின் பெயர்கள், வார்த்தைகள், பண்புகள், செயல்கள் அனைத்துமே தூய்மையானவை சிறப்பானவை! அல்லாஹு தஆலா தைய்யிப் பரிசுத்தமானவன், தூய்மையானவன், சிறந்தவன் என்பதை நாம் அறிகின்ற போது,
• நாம் நம்முடைய அனைத்துக் காரியங்களையும் தூய்மையாக்கி கொள்ள வேண்டும் என்ற உணர்வு நம் உள்ளங்களில் வரும்! நம் உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்! நம் செயல்பாடுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்!
• நம் பொருளாதாரம் தூய்மையானதாக அமைய வேண்டும் என்ற உணர்வை அத்தய்யிப் என்ற பெயர் நம் உள்ளங்களில் ஏற்படுத்தும்! தூய்மை என்பது சொல், செயல், கொள்கை என அனைத்தும் குறிக்கும்!
• அல்லாஹ் தூய்மையான சொற்களை, செயல்களை மட்டுமே ஏற்றுக்கொள்வான் என்பதை சரியான முறையில் அறியும் அடியான்! நற்செயலையே செய்வான்! தூய்மையான வார்த்தையையே பேசுவான்! தூய்மையானவற்றையே சம்பாதிப்பான்! தூய்மையானவற்றையே உண்பான்! தூய்மையானவற்றையே செலவு செய்வான்!
• மகத்துவ மிக்க இந்த மார்க்கம் முழுக்கமுழுக்க தூய்மையானதாகும்! இந்த மார்க்கத்தில் உள்ள கொள்கைகள், சட்டங்கள், ஒழுக்கங்கள் என அத்தனையும் தூய்மையானவை!
• இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள சரியான கொள்கைகளே மனித உள்ளங்களில் அமைதியை ஏற்படுத்துகின்றன! அவற்றைக் கொண்டே அவை தூய்மையடைகின்றன! அவற்றை நம்பியவர் உன்னதமான நோக்கத்தைச் சென்றடைவார்!
• இவ்வுலகில் தூய்மையான இந்த மார்க்கத்தின் கொள்கைகள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றின் மூலமே தூய்மையடைந்த நம்பிக்கையாளன் நிலையான மறுவுலகில் தூய்மையாளர்களின் இருப்பிடத்தில் பிரவேசிப்பான்! தூய்மையாளர்களைத் தவிர வேறு யாரும் அங்கு பிரவேசிக்க முடியாது!
• தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களைக் கண்ணியப்படுத்தும் மறுமை நாளில் மலக்கு இவர்களை நோக்கி கூறுவார்கள் :
எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்! அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்! அதன் காவலர்கள் அவர்களை நோக்கி : உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்! எனவே அதில் பிரவேசியுங்கள்! என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்! (என்று அவர்களிடம் கூறப்படும்)
(அல் குர்ஆன் : 39 : 73)
• யா அல்லாஹ்! எங்கள் செயல்களையும், வார்த்தைகளையும், எண்ணங்களையும், தேடல்களையும் தூய்மையானதாக ஆக்கி வைப்பாயாக ஆமீன்!
• யா அல்லாஹ்! மறுமைநாளில் நீ சுவனத்தில் பிரவேசிக்கச் செய்யும் உன் அடியார்களில் எங்களையும் ஆக்கியருள்வாயாக!
நீங்கள் சுவனத்தில் நுழையுங்கள்! உங்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை! நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்!
(அல்குர்ஆன் : 7 : 49)
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அஷ் ஷாஃபீ பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 💞
No photo description available.
All reactions:
13


 

No comments:

Post a Comment