அல்லாஹ்வின் அல் முஃமின் - المؤمن | அஸ் ஸாதிக் - الصادق என்ற அழகிய பெயர்கள் பற்றி அறிந்து கொள்வோம் 
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் முதகப்பிர் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயர்களான அல் முஃமின் மற்றும் அஸ் ஸாதிக் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல் முஃமின் என்றால் உண்மைப்படுத்துபவன் என்பது பொருளாகும்! இந்த பெயர் அல்குர்ஆனில் ஒரேயொரு வசனத்தில் மட்டும் இடம்பெற்றுள்ளது!
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை! அவனே பேரரசன்! மிகப்பரிசுத்தமானவன்! சாந்தியளிப்பவன்! தஞ்சமளிப்பவன்! பாதுகாப்பவன்! (யாவரையும்) மிகைப்பவன்! அடக்கியாள்பவன்! பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்!
(சூரத்துல் : அல் ஹஷ்ர் : 23)
• அஸ் ஸாதிக் என்றால் உண்மையாளன் என்பது பொருளாகும்! இந்த பெயர் அல்குர்ஆனில் ஒரேயொரு வசனத்தில் மட்டும் இடம்பெற்றுள்ளது!
நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் ஹராமாக்கி இருந்தோம்! ஆடு, மாடு ஆகியவற்றில் - அவற்றின் முதுகுகளிலோ அல்லது வயிறுகளிலோ அல்லது எலும்புகளுடன் கலந்தோ இருக்கும் கொழுப்பைத் தவிர மற்ற அவற்றின் கொழுப்பையும் ஹராமாக்கினோம் - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களுக்கு இதனை நாம் கூலியாக கொடுத்தோம் - நிச்சயமாக நாம் உண்மையே கூறுகிறோம்!
(சூரத்துல் : அல் அன்ஆம் : 146)
• இந்த இரண்டு பெயர்களும் அல்குர்ஆனில் ஒரு இடத்தில் மட்டுமே இடம்பெற்றிருப்பது இதற்குரிய முக்கியமான அம்சமாகும்!
• இந்த இரண்டு பெயர்களும் நெருக்கமான அர்த்தங்களை கொண்டதனால், இவை இரண்டையும் ஒன்றாக இந்த பதிவில் நாம் பார்க்கிறோம்!
• இந்த பெயர் மகத்தான பொருளில் பயன்படுத்தப்படுகிறது! அவன் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதற்கு அவன் அளிக்கும் சாட்சியே இந்தப் பெயருக்கான ஆதாரமாகும்!
தாபியீன் முஜாஹிது இப்னு ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
• அல் முஃமின் என்றால் தான் ஒருவனே வணக்கத்திற்குரியன் என்று சாட்சி கூறுபவன் என்று பொருள்! அவற்றுள் அல் முஸத்திக் என்பதும் ஒன்றாகும்!
• அல் முஸத்திக் என்றால் தன் தூதர்களுக்கு ஆதாரங்களையும் சான்றுகளையும் அளித்து அவர்களை உண்மைப் படுத்தக்கூடியவன்!
• அல் முஃமின் என்று சொன்னால் அரபுமொழியில், உண்மை படுத்துதல், உறுதிப்படுத்துதல், அபயமளித்தல் என்ற அர்த்தத்தை தரக்கூடிய பெயராக இருக்கிறது!
• இஸ்லாமிய ரீதியாக அல்லாஹ்வுக்கு நாம் இந்த பெயரை கொடுக்கும் பொழுது, பல அர்த்தங்கள் காணப்படுகின்றன அவைகள் ;
1) அல்லாஹ் மனிதர்களை அநீதியிலிருந்து பாதுகாக்கக் கூடியவன்! அல்லாஹ் எல்லா மனிதர்கள் விஷயத்திலும் நீதியானவன், அவன் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான் என்ற அர்த்தத்தைத் தருகிறது!
2) அல்லாஹ்வை ஈமான் கொண்ட மக்களை தண்டனையிலிருந்து பாதுகாக்கக் கூடியவன், என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது!
3) அதேபோல், தண்டனைக்கு உட்பட தேவையில்லாதவர்களை தண்டனையிலிருந்து பாதுகாப்பவன், என்ற அர்த்தத்தையும் தருகிறது!
கதாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அல் முஃமின் என்று சொன்னால், அல்லாஹ் உண்மையான கடவுள், அவன் தான் உண்மையில் வணங்கி வழிப்பட தகுதியானவன் என்பதை உறுதிப்படுத்த கூடியவன் என்பது அதனுடைய அர்த்தமாக இருக்கிறது!
• அல்லாஹ் அவனுடைய அடியார்களுக்கு வாக்களித்த வாக்குறுதிகளை இம்மையிலும், மறுமையிலும் உண்மைப்படுத்தி, உறுதிப்படுத்த கூடியவன்’ என்பதும் இதற்குரிய அர்த்தமாக இருக்கிறது என்று இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் அவருடைய தப்ஸீரில் குறிப்பிடுகிறார்கள்!
நிச்சயமாக எவர்கள் : எங்கள் இறைவன் அல்லாஹ் தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, நீங்கள் பயப்படாதீர்கள்! கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள் (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்!
(சூரத்துல் : ஹாமீம் ஸஜ்தா : 30)
• அவன் தன் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தன்னை அஞ்சக் கூடியவர்கள், தன் நேசர்கள் ஆகியோருக்குத் தன் வேதனையிலிருந்து பாதுகாவல் அளிக்கிறான்!
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்!மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்!
(சூரத்துல் : குறைஷின் : 04)
• மேலே உள்ள வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள் : அல்-முஃமின் என்றால் அநியாயம் புரியாமல் தன் படைப்புகளுக்குப் பாதுகாவல் அளித்துள்ளான் என்பது பொருளாகும்!
• அஸ் ஸாதிக் என்றால் அல்லாஹ் உண்மையாளன், உண்மை படுத்தக்கூடியவன் என்பது அர்த்தமாகும்! எனவே அவனுடைய அடியார்களின் எண்ணங்களை எல்லாம் அல்லாஹ் உறுதிப்படுத்துவான், உண்மைப் படுத்துவான்!
• இன்னும், தான் வழங்கும் வாக்குறுதிகளில், அளிக்கும் எச்சரிக்கைகளில், செய்திகளில் அவன் உண்மையானவன்! அவன் தன்னுடைய அடியார்களுக்கு அளித்த வாக்குறுதியை உண்மைப்படுத்திக்காட்டினான்!
அதற்கு (சுவர்க்கவாசிகள்) : அல்ஹம்து லில்லாஹ்! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான்! என்று கூறுவார்கள்! எனவே நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது!
(சூரத்துல் : அல் ஜுமர் : 74)
• அல்லாஹ் ஒருபோதும் தான் அளித்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட மாட்டான்! இந்தப் பெயரின் மீது கொண்ட நம்பிக்கையின் அடையாளம், நற்செயல்புரிபவன் அல்லாஹ் அநீதி இழைத்து விடுவான் என்றோ தனக்கு வழங்க வேண்டிய கூலியை வழங்காமல் இருந்து விடுவான் என்றோ அஞ்சமாட்டான்!
• ஏனெனில் அல்லாஹ் நற்செயல் புரிபவர்களுக்கான கூலியை பரிபூரணமாக வழங்குவதாக வாக்களிக்கிறான்!
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்! அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்!
(சூரத்துல் : அல் ஜில்ஜால் : 7,8)
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன்! அவன் என்னை நினைவு கூரும் போது நான் அவனுடன் இருப்பேன்! அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 7405)
1) ஒரு அடியான் அல்லாஹ்வை பற்றி வைக்கக்கூடிய நல்லெண்ணத்தை அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்!
2) அல்லாஹ் அவனுடைய அவ்லியாக்களையும், ரசூல்மார்களையும் அற்புதங்களைக் கொண்டு உண்மைப் படுத்துவான்!
3) இந்த இரண்டு பெயர்களும் அல்லாஹ்வைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தை நம்முடைய உள்ளங்களிலே ஏற்படுத்துகிறது!
4) நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி, என்பது அல்லாஹ்வினால் உத்தரவாதப்படுத்த பட்ட ஒன்று என்ற எண்ணமும் நமக்கு ஏற்படுகிறது!
• அல்லாஹ்வை பற்றி நாம் சரியாக புரிகின்ற போது நிச்சயமாக நாம் இந்த உலகத்தில் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்பீக் (உதவிபுரிவானாக) செய்வானாக! ஆமீன்!
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அந் நூர் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment