அல்லாஹ்வின் அல் மன்னான் - الْمَنَّانُ என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்களான அல் காபிழ் மற்றும் அல் பாஸித் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அல் மன்னான் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல் மன்னான் - المنان : என்றால் தாராளமாக வழங்கக்கூடியவன், தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் பெருங்கிருபையாளன் என்பது பொருளாகும்.
• அல் மன்னான் என்கிற பெயர் அல்குர்ஆனில் இதனுடைய வினைச்சொல்லாக இடம் பெற்றுள்ளது! ஹதீஸ்களில் இந்த பெயர் இடம் பெற்றுள்ளது!
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் முன் ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் துஆ செய்வதை கேட்டுக் கொண்டிருந்தார், அவர் செய்த துஆ
اَللّٰهُمَّ إِ نِّيْ أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْـحَمْدَ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيْكَ لَكَ الْمَنَّانُ يَا بَدِيْعَ السَّمٰوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّوْمُ إِنِّـيْ أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ
பொருள் : யா அல்லாஹ் உனக்கே புகழ் அனைத்தும், உன்னை தவிர வணக்கத்திற்குரியவர் எவரும் இல்லை, நீ தான் அல் மன்னான் (அருட்கொடை வழங்குபவன்), வானங்கள் பூமியை தோற்றுவித்தவனே, வல்லமையும் கண்ணியமும் கொண்டவனே, யா ஹய், யா கய்யூம்’ என்று கூறி கேட்கிறேன் என்றார்!
அவரை பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் இஸ்முல் அஃதமை கொண்டு துஆ கேட்டு விட்டார். அல்லாஹ்வின் இஸ்முல் அஃதமை கொண்டு அழைத்தால் பதில் அளிப்பான், கேட்டால் கொடுப்பான்!
(நூல் : சுனன் அபூதாவூத் : 1495 | சுனன் நஸயீ : 1360)
• இந்த ஹதீஸில் பல பெயர்களை அவர் குறிப்பிடுகிறார், அதில் ஒன்றுதான் அல் மன்னான்!
• இந்த பண்பு அல்லாஹ்வுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிற ஒரு வார்த்தையாகும். அவனே யாசிப்பதற்கு முன்னரே தன் அடியார்களுக்கு வழங்கி விடுகிறான்! இதனை நாம் நிதர்சனத்தில் கண்டுகொண்டு தான் இருக்கிறோம்.
• நம்பிக்கையாளன், நிராகரிப்பாளன், நல்லவன், கெட்டவன் என அனைவருக்கும் அவர்கள் கேட்காமலேயே தாராளமாக வழங்கிக்கொண்டுதான் இருக்கிறான்.
• பிரார்த்திப்பவர்களின் பிரார்த்தனைகளை அங்கீகரிக்கிறான். அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கிறான். துன்பத்தில் சிக்கித் தவிப்போரின் துன்பங்களைப் போக்குகிறான், சோதனைகளை நீக்குகிறான்.
• அவனது கிருபையின் அடையாளங்களில் ஒன்று, அவன் தன் அடியார்களுக்கு அமைதியின் இல்லத்தின்பால் வழிகாட்டியுள்ளான். அவர்களுக்கு ஈமானை அலங்கரித்து அவர்களின் உள்ளங்களில் அதனை அழகுபடுத்திக் காட்டியுள்ளான்.
• அவனை நிராகரிப்பதை, அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதை அவர்களுக்கு வெறுப்பாக்கி வைத்துள்ளான். அவர்களை நேர்வழி பெற்றவர்களாக ஆக்கியுள்ளான். அவனது அருட்கொடைகள் எண்ணமுடியாத அளவுக்கு அதிகமானவை!
وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَا
ஆகவே, அல்லாஹ்வுடைய அருட் கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதை உங்களால் எண்ண முடியாது!
(அல்குர்ஆன் : 14:34)
• எண்ண முடியாத அளவுக்கு நிஃமத்துகளை அல்லாஹ் நமக்கு வாரி வழங்கி இருக்கிறான்.
• அல்லாஹ்வின் அவனுடைய அருட்கொடைகளை அறிய விரும்புபவர்கள் திருக்குர்ஆனைச் சிந்தித்துப் பார்க்கட்டும். தன் இறைவனே அருட்கொடையாளன், பெருங்கிருபையாளன் என்பதை அறிந்து கொண்ட அடியான்மீது அவனைப் புகழ்வதும் அவனுக்கு நன்றி செலுத்துவதும் கடமையாகி விடுகிறது.
وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ
என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன் அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ எனக்கு அருள் புரிவாயாக!
(அல்குர்ஆன் : 27:19)
• இவ்வாறு அதிகமான அருட்கொடைகளை வழங்கி உள்ள அல்லாஹ்விற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான் :
وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ وَلَٮِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِىْ لَشَدِيْدٌ
அன்றியும் உங்கள் இரட்சகன் (இதற்காக) நீங்கள் (எனக்கு)நன்றி செலுத்தினால் (என் அருளை) நிச்சயமாக உங்களுக்கு அதிகப்படுத்துவேன், இன்னும், நீங்கள் மாறு செய்தீர்களானால், நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடினமானது” என்று அறிவித்ததையும் (நபியே!) நீர் நினைவு கூர்வீராக!
(அல்குர்ஆன் : 14 : 07)
• எனவே, அல்லாஹ்வுக்கு நன்றி உள்ளவர்களாக நாம் எப்போதும் இருக்க வேண்டும்.
• உண்மையிலேயே வாரி வழங்குபவன், கொடுப்பவன் அல்லாஹ், அவன் கொடுத்ததை சொல்லிக் காட்டலாம்,
• அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் அவன் மனிதனுக்கு கொடுத்த அருட்கொடைகளை சொல்லிக்காட்டுகிறான். ஆனால், மனிதனைப் பொறுத்தவரையில் அடுத்தவர்களுக்கு தான் கொடுத்ததை சொல்லிக் காட்டுவது கூடாது.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்,
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا لَا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوْا وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காக தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லி காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனை) பாழாக்கி விடாதீர்கள். இவனின் உதாரணம், ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கிறது. அதன் மீது மண்படிந்தது. எனினும், ஒரு பெரும் மழை பொழிந்து, அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கி விட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்.) ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததில் இருந்து ஒரு பலனையும் (மறுமையில்) அடையமாட்டார்கள். மேலும், அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் கூட்டத்தை (அவர்களின் தீயச் செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.
(அல்குர்ஆன் : 2:264)
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு அதில் ஒருவர், (செய்த உபகாரத்தை) சொல்லிக்காட்டுபவர்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் :171)
• எனவே, அல்லாஹ் தான் அல் மன்னான், அவன் தருவதை தான் நாம் கொடுக்கிறோம். எனவே, நாம் கொடுத்ததை சொல்லிக் காட்டுகிற அந்த கெட்ட பண்பை நம்மிடமிருந்து அகற்றிவிட வேண்டும், அல்லாஹ்வுக்கு என்றும் நன்றி உள்ளவர்களாக நாம் மாற வேண்டும், அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்.
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் ஹைய்யு பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment