அல்லாஹ்வின் அல் ஜவ்வாது என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் முஃதீ பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அல் ஜவ்வாது பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல் ஜவ்வாது என்றால் சிறந்தவன், கொடை வள்ளல், தாராளமாக கொடுக்க கூடியவன் என பல்வேறு அர்த்தங்கள் இந்த பெயருக்கு உண்டு!
• அல் ஜவ்வாது என்கிற இந்த பெயர் பல ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளது! ஹதீஸ் குத்ஸீயில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ் கூறுகிறான். என் அடியார்களே! நான் யாருக்கெல்லாம் நேர்வழிகாட்டினேனோ அவர்களைத் தவிர நீங்கள் அனைவரும் வழிகெட்டவர்களே! ஏனெனில், நான் ஜவ்வாது - பெருங்கொடையாளன், கண்ணிய மிக்கவன். நான் விரும்புவதைச் செய்யக்கூடியவன். எனது கொடையும் வாக்குதான். எனது தண்டனையும் வாக்குதான். நான் ஏதேனும் ஒன்றைப் படைக்க நாடினால் 'ஆகு' என்றுதான் கூறுவேன். அது ஆகிவிடும்!
(நூல் : சுனன் திர்மிதீ : 2495)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களுடைய இறைவன் சங்கையானவன்! அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான்!
அறிவிப்பாளர் : ஸல்மான் (ரழி)
(நூல் : சுனன் இப்னு மாஜா : 3911)
• அல்லாஹ் அல் ஜவ்வாது, இந்த உலகில் விரும்பியவர்களுக்கும், விரும்பாதவர்களுக்கும் அவன் கொடுத்து கொண்டே இருக்கின்றான் ஏன் என்றால் அவன் கொடை வள்ளல்.
• அல்லாஹ் கொடை வள்ளலாக இருப்பது போல் தன்னுடைய அடியார்களும் இவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகிறான் இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கொடை வள்ளலாக இருந்தார்கள்!
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6)
இமாம் இப்னு கய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
தன் அடியார்கள் தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும், தன்னிடமே கேட்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான். ஏனெனில், அவனே உண்மையான பெருங்கொடையாளி. கேட்பவர்களுக்கு அவன் தாராளமாக வழங்குகிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவர்மீது அவன் கோபம் கொள்வான்.
அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரழி)
(நூல் : சுனன் திர்மிதீ : 3373)
• எனவே, அல்லாஹ் அல் ஜவ்வாது என்று நாம் அறிகின்ற போது, நம்மிடமும் பிறருக்கு கொடுக்கின்ற உணர்வு வரவேண்டும்.
• அல்லாஹ்வின் அழகிய பெயர்களை பற்றி நாம் அறிந்து அதற்கேற்ப நம்முடைய வாழ்வை அமைத்து கொள்ள அல்லாஹ் நமக்கு உதவி புரிவானாக ஆமீன்.
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான துல் ஜலால் வல் இக்ராம் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment