பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

இஸ்லாத்தில் நோன்பு பெருநாள் தொழுகை பற்றி அறிந்து கொள்ளுவோம்


இஸ்லாத்தில் நோன்பு பெருநாள் தொழுகை பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞
பெருநாள் என்று மகிழ்ச்சியாக இருந்தாலும் நன்மைகளை வாரி வழங்கிய புனித மிக்க ரமலான் மாதம் நம்மை விட்டு கடந்து சென்று விட்டது என்பதை நினைக்கும் பொழுது வருத்தமாகவும் உள்ளது!
• ஆரம்ப காலத்தில் மக்கள் அறியாமை காலத்தில் இருந்த பண்டிகைகளை கொண்டாடி கொண்டு இருந்தார்கள்! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் இதை விட சிறந்த இரண்டு நாட்களை கொடுத்து உள்ளான் என்று தியாக பெருநாள் மற்றும் நோன்பு பெருநாள் பற்றி கூறினார்கள்!
(நூல் : சுனன் அபூதாவுத் : 1039)
• நோன்பு பெருநாள் தொழுகை பொறுத்த வரை முஸ்லீம் ஆன ஆண் பெண் அனைவரின் மீதும் கடமை ஆகும்!
• ஷவ்வால் முதல் நாள் ஈத் உடைய தினத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது ஆகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 951)
• பெருநாள் செல்லுவதற்கு முன் நல்ல முறையில் குளித்து விட்டு நம்மிடம் உள்ள சிறந்த ஆடைகளை அணித்து கொள்ள வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 948)
• கட்டாயமாக ஸதகதுல் ஃபித்ரை பெருநாள் தொழுகைக்கு முன் கொடுத்து விட வேண்டும்! தொழுகை பின்னால் கொடுத்தால் அது தர்மம் ஆகி விடும்! ஸதகதுல் ஃபித்ர் நிறைவேறாது!
(நூல் : சுனன் அபூதாவூத் : 1609)
• தொழுகைக்கு செல்லும் முன் உணவு உண்ண வேண்டும் அல்லது சில பேரித்தம் பழமாவது உண்ண வேண்டும்! இது சுன்னாஹ் ஆகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 953)
• பெருநாள் தொழுகை செல்லும் போது ஒரு பாதை! தொழுகை முடித்து திரும்பவும் போது ஒரு பாதையில் வர வேண்டும்! இதுவும் சுன்னாஹ் ஆகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 986)
• நோன்பு பெருநாள் மற்றும் தியாக பெருநாள் ஆகிய இரு பெருநாளிலும் நோன்பு வைப்பது ஹராம் ஆகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1864)
(சில ஊர்களில் பெருநாள் அன்று ஸஹர் செய்து நோன்பு வைத்து விட்டு பின்பு சூரியன் உதயம் ஆன உடன் நோன்பு திறக்கிறார்கள் ஆனால் இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது)
💟 பெருநாள் தொழுகையின் நேரம் :
• சூரியன் உதயம் ஆகி 10 அல்லது 15 நிமிடம் பின்பு இருந்து நாம் பெருநாள் தொழுகை தொழ ஆரம்பம் செய்யலாம்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1512)
💟 முஸல்லா எனும் திடலில் தொழுவது :
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) 'முஸல்லா' என்ற (ஈத்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 956)
• பள்ளிகளில் பெருநாள் தொழுவது நபி (ஸல்) அவர்கள் வழிமுறைக்கு மாற்றமானது ஆகும்! பொதுவான ஒரு திடலில் அனைத்து முஸ்லீம்களும் சேர்த்து தொழ வேண்டும்!
💟 பெருநாள் தொழுகை சுன்னத் (அ) வாஜிபா :
• பெருநாள் தொழுகை வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும்! நபி (ஸல்) அவர்கள் ஹைலு பெண்களை கூட தொழும் இடத்திற்கு வர சொல்லி உள்ளார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 981)
💟 பெருநாள் தொழுகையில் இவைகள் கிடையாது :
1) பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத், பின் சுன்னத் கிடையாது!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 964)
2) பெருநாள் தொழுகைக்கு பாங்கு - இகாமத் கிடையாது!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 960)
💟 பெருநாள் தொழுகை முறை :
• பெருநாள் தொழுகை நாம் வழமையாக தொழுவது போன்று தான் தொழ வேண்டும் ஆனால் தக்பீர் மட்டும் சற்று மாறுபடும்!
• பெருநாள் தொழுகை முறை ஆண் பெண் அனைவருக்கும் ஒரே தொழுகை முறை தான் இதில் வேறுபாடு எதுவும் கிடையாது!
• பெருநாள் தொழுகை மொத்தம் இரண்டு ரக்ஆத்கள் தொழ வேண்டும்!
(நூல் : முஸ்னது அஹ்மத் : 257)
• பெருநாள் தொழுகிறேன் என்று உள்ளத்தில் நிய்யத் வைத்தால் போதும் இதற்கு என்று எந்த துஆவும் குறிப்பிட்ட வார்த்தையும் கூறவேண்டியது கிடையாது!
❤️ முதல் ரக்அத் :
1) நாம் உள்ளத்தில் நிய்யத் வைத்து அல்லாஹ் அக்பர் என்று முதலில் தக்பீர் கூறி காது அல்லது தோல் புஜம் வரை கைகளை உயர்த்தி தக்பீர் கட்ட வேண்டும்!
2) தக்பீர் கட்டிய பின்பு ஆரம்ப துஆ ஓத வேண்டும்! பின்பு பிஸ்மில்லாஹ் ஓத வேண்டும்!
3) அதற்கு பின்னர் அல்லாஹு அக்பர் என்று ஏழு தடவை தக்பீர் கூற வேண்டும்!
• தக்பீர் கூறும் பொழுது கைகளை உயர்த்தலாமா? கூடாத என்பதற்கு ஸஹீஹான எந்த ஆதாரமும் கிடையாது! பெரும்பாலன மார்க்க அறிஞர்கள் உயர்த்தாமல் இருப்பது நல்லது என்று கூறி உள்ளார்கள்!
4) இமாம் 7 முறை தக்பீர் கூறினாலும் நாம் மெதுவாக 7 முறை தக்பீர் கூற வேண்டும்!
5) அதற்கு பின்பு சூராத்துல் ஃபாத்திஹா மற்றும் துணை சூரா ஓத வேண்டும்! (இமாம் ஓதினால் பின்னால் நின்று தொழ கூடியவர்கள் அதை கேட்க வேண்டும்! ஓத கூடாது)
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 680)
6) அதற்கு பின்பு நாம் வழமையாக தொழுவது போன்று ருகூவு செய்ய வேண்டும்! ருக்உ செல்லும் போது எழும் போதும் கைகளை காது அல்லது தோல் புஜம் வரை உயர்த்த வேண்டும்!
7) ருக்உவில் இருந்து எழுந்து இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்!
😎 பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டாம் ரக்அத்திற்கு எழ வேண்டும்! ஸஜ்தாவில் இருந்து நிலைக்கு எழும் போது கைகளை காது அல்லது தோல் புஜம் வரை உயர்த்த வேண்டும்!
(நூல் : சுனன் திர்மிதி : 492 | சுனன் அபூதாவுத் : 1149)
❤️ இரண்டாம் ரக்அத் :
9) முதல் ரக்ஆத்தில் ஸஜ்தாவில் இருந்து எழுந்து அல்லாஹ் அக்பர் என்று கூறி கைகளை காது அல்லது தோல் புஜம் வரை உயர்த்தி பின்பு தக்பீர் கட்ட வேண்டும் பின்பு,
10) மீண்டும் 5 தடவை அல்லாஹ் அக்பர் என்று தக்பீர் கூற வேண்டும்!
• தக்பீர் கூறும் பொழுது கைகளை உயர்த்தலாமா? கூடாத என்பதற்கு ஸஹீஹான எந்த ஆதாரமும் கிடையாது! பெரும்பாலன மார்க்க அறிஞர்கள் உயர்த்தாமல் இருப்பது நல்லது என்று கூறி உள்ளார்கள்!
11) இமாம் 5 முறை தக்பீர் கூறினாலும் நாம் மெதுவாக 5 முறை தக்பீர் கூற வேண்டும்!
12) தக்பீர் கூறிய பின்பு மீண்டும் பிஸ்மில்லாஹ் கூறி சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் துணை சூரா ஓத வேண்டும்!
13) பின்பு நாம் வழமையாக தொழுவது போன்று ருக்உ! இரண்டு ஸஜ்தாக்கள் செய்து கடைசி அமர்வு (தவ்ரூக் முறையில்) அமர்ந்து இரண்டு ஸலாம் கூறி தொழுகையை முடிக்க வேண்டும்!
(நூல் : இப்னுமாஜா : 1268 | திர்மிதி : 492 | முஅத்தா : 09)
• இது தான் நபி (ஸல்) அவர்கள் தொழ முறையாகும்! ஆனால் இன்று பெரும்பாலான இடங்களில் இந்த சுன்னாஹ்வை விட்டு விட்டு ஷாபிஈ முறை ஹனபி முறை பெருநாள் தொழுகையை வெவ்வேறு முறையில் தொழுகிறார்கள்! நவதுபில்லாஹ்!
• ஆனால் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் முதல் மரணம் அடைந்த காலம் வரை இவ்வாறு வெவ்வேறு தொழுகை முறை யாருக்கும் கற்று தரவில்லை! முஸ்லீம் அனைவருக்கும் பொதுவாக ஒரே தொழுகை முறை தான் நபி (ஸல்) அவர்கள் கற்று கொடுத்து உள்ளார்கள்!
💟 பெருநாள் தொழுகையில் ஓத வேண்டிய சூராக்கள் :
• இந்த சூராக்களை பெருநாள் தொழுகையில் ஓதுவது சுன்னாஹ்வாகும்! கட்டாயம் கிடையாது! இவை நமக்கு மனனம் இல்லை என்றால் நமக்கு மனனம் உள்ள சூராக்களை ஓதி தொழுகலாம்!
1) நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்ஆத்தில் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (என்ற 87 வது அத்தியாயத்தையும்)
• இரண்டாம் ரக்ஆத்தில் ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (என்ற 88 வது அத்தியாயத்தையும்) ஓதுவார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 1592)
2) நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்ஆத்தில் சூரத்துல் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும்!
• இரண்டாம் ரக்ஆத்தில் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி (ஸல்) ஓதி தொழுது உள்ளார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 1617)
💟 பெருநாள் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளுதல் :
உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 971)
💟 பெருநாள் தொழுகை தனியாக தொழுகலாமா?
• பெருநாள் தொழுகை தனியாக தொழ கூடாது ஜமாத் உடன் தான் தொழ வேண்டும்!
• ஆனால் நிர்பந்த சூழ்நிலை உடல் நிலை முடியவில்லை! என்றால் அவர் வீட்டில் தொழுகலாம்! வீட்டில் தொழும் போது குத்பா அவசியமில்லை! மற்றப்படி மேலே உள்ள முறையில் இரண்டு ரக்ஆத் தொழுது கொள்ள வேண்டும்!
(பஃத்வா : அல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) : அல் ஷர் அல் மும்தி : 5/156)
💟 பெருநாள் தொழுகை தவறி விட்டால்?
• நிர்பந்த சூழ்நிலை ஒருவருக்கு பெருநாள் தொழுகை தவறி விட்டது! அல்லது வரும் வழியிக் ஏதேனும் தடங்களால் தொழுகை தவறி விட்டது என்றால் அவருக்கு இரண்டு வழிமுறை உள்ளது!
1) குத்பா இல்லாமல் தனியாக இரண்டு ரக்ஆத் தொழுது கொள்ள வேண்டும் மேலே கூறிய முறையில்! அல்லது,
2) நம்மை போன்று பெருநாள் தொழுகை தவறி நபர்கள் இருந்தால், அவர்களை அழைத்து ஜமாத் ஆக இரண்டு ரக்ஆத் தொழுது கொள்ள வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : பாடம் : 25)
💟 பெண்கள் மட்டும் இமாமத் செய்து பெருநாள் தொழுகை தொழுது கொள்ளலாமா :
• நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் தபா தாபியின்கள் காலம் வரை ஆண்களுக்கு பின்னால் நின்று தான் பெண்கள் தொழ வேண்டும்! ஆனால் அல்லாஹ் பாதுகாக்கனும் சில ஊர்களில் சரியான அகீதா விளக்கம் இல்லாத காரணத்தினால் இவ்வாறு எந்த ஏற்பாடும் செய்வது கிடையாது!
• இவ்வாறு இருக்கும் ஊரில் பெண்கள் ஜமாத் ஆக எவ்வாறு தொழுவது என்றால் :
1) நாம் வசிக்கும் ஊரில் திடலில் தொழுகை நடத்துகிறார்கள் அங்கு சென்று பெண்கள் தொழ முடியும் என்றால் அங்கு தான் சென்று தொழ வேண்டும்!
2) அல்லது பெண்கள் தொழ வேறு இடம் ஏற்படுத்தி உள்ளார்கள் என்றால் அங்கு தான் கட்டாயம் சென்று பெண்கள் தொழ வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 324)
• ஆனால் இந்த வசதி எதுவும் நாம் வசிக்கும் பகுதியில் இல்லை என்றால் மட்டுமே பெண் பெண்களுக்கு இமாமத் செய்து பெருநாள் தொழுகை நடத்த வேண்டும்!
• பெருநாள் தொழுகை முறை ஒன்று தான் மேலே கூறிய முறையில் தொழ வேண்டும்! ஆண்களை போன்று பெண்கள் குத்துபஃ செய்ய வேண்டியது கிடையாது தொழுகை நடத்தினால் மட்டும் போதும்!
• ஹைலு அல்லது நிபாஸ் உள்ள பெண்கள் கூட தொழுகை நடத்தும் இடங்களுக்கு செல்ல வேண்டும் தொழுகை நடத்தும் இடத்தை விட்டு சற்று தள்ளி இருக்க வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 974)
• மேலே கூறிய இரண்டு வசதியும் இருந்தும் ஒரு பெண் வீட்டில் தொழுவது கூடாது!
இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
பெண்கள் வீட்டில் ஜமாத் ஆக பெருநாள் தொழுகை தொழ கூடாது ஏன் என்றால் இதற்கு அல்குர்ஆன் அல்லது ஸஹீஹான ஹதீஸ்களோ அல்லது ஸஹாபாக்கள் வாழ்விலோ எந்த வித செய்தியும் கிடையாது! பெண்கள் வீட்டில் ஜமாத் ஆக பெருநாள் தொழுவது பொறுத்த வரை இது பித்ஆத் ஆகும்!
(ஃபதாவா நூர் அலா அத் - தர்ப் : 189 / 😎
💟 பெருநாள் (குத்பாஃ) எனும் மார்க்க உரை :
• பெருநாள் தொழுகை முடிந்ததும் மக்களுக்கு இமாம் மார்க்க உரையாற்ற வேண்டும்! சுன்னாஹ் ஆகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 963)
• பெருநாளில் நாம் முதலில் தொழ வேண்டும் அதன் பின்பு தான் உரை நிகழ்த்த வேண்டும்! ஆனால் அல்லாஹ் பாதுகாக்கணும் இதற்கு அப்படியே மாற்றமாக நிறைய ஊர்களில் செய்கிறார்கள்!
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள் :
நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகை நடத்துபவர்களாக அவர்கள் இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 979)
💟 துஆ செய்ய வேண்டும் :
• பெருநாள் தொழுகையும், உரையும் முடிந்ததும் நாம் உடனே கலைந்து விடாமல் ஆண்களும் சரி மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களும் அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து துஆ செய்ய வேண்டும்!
• பெருநாளைக்கு என்று ஒரு பரக்கத்தும், புனிதமும் உள்ளது அதனால் நாம் இந்த நேரத்தில் உடனே எழுந்து சென்று விடாமல் அமர்ந்து துஆ செய்ய வேண்டும்! (குறிப்பிட்ட துஆ எதுவும் கிடையாது பொதுவாக நாம் துஆ செய்து கொள்ளலாம்)
(நூல் : ஸஹீஹ் புகாரி : 971)
💟 ஜும்ஆவும் பெருநாளும் :
• ஒரே நாளில் ஜும்ஆவும், பெருநாளும் வந்து விட்டால் நாம் விரும்பினால் பெருநாள் தொழுகையையும், ஜும்ஆத் தொழுகையையும் தொழுது கொள்ளலாம்! அல்லது விரும்பினால் ஈத் தொழுகையை தொழுது விட்டு ஜும்ஆத் தொழுகையை விட்டு விடலாம்!
• இந்த நாளில் பெருநாள் தொழுகை அல்லது ஜூம்ஆ தொழுகை ஏதேனும் ஒன்றை ஜமாத் உடன் தொழுது கொண்டாலே நம்மிது உள்ள கடமை நீக்கி விடும்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்துள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜும்ஆத் தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜும்ஆத் தொழுகையை நடத்துவோம்!
(நூல் : சுனன் அபூதாவூத் : 1073)
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment