அல்லாஹ்வின் அல் காபிழ் - القابض மற்றும் அல் பாஸித் - الباسط என்ற அழகிய பெயர்கள் பற்றி அறிந்து கொள்வோம் 
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல்ஜமீல் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயர்களான அல் காபிழ், அல் பாஸித் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
1) அல் காபிழ் - القابض : நெருக்கடியாக்குகிறவன், பிடிப்பவன், கைப்பற்றுபவன்.
2) அல் பாஸித் - الباسط : விசாலமாய் வழங்குபவன், விரிப்பவன்.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது. மக்கள். 'அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் விலையை நிர்ணயிக்கலாமே!" என்றார்கள்! அதற்கு நபி ﷺ அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் தான் :
1) அல் ஃகாலிக் - படைப்பவனாகவும்,
2) அல்காபிழ் - பிடிப்பவனாகவும்,
3) அல்பாஸித் - விரிப்பவனாகவும்,
4) அர்ராஸிக் - உணவளிப்பவனாகவும்.
5) அல்முஸஃஇர் - விலைகளை நிர்ணயிப்பவனாகவும்! இருக்கிறான் என்று சொல்லி விட்டு,
நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் போது யாருக்கும் இரத்தம், பொருளாதார விஷயத்தில் அநீதி இழைக்காத நிலையில் நான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் என்று கூறினார்கள்.
(நூல் : ஸஹீஹ் ஜாமிஃ : 1846)
• அல்லாஹ் அல்காபிழ்ض , அல்பாஸித் என்று சொல்கிறபோது பல்வேறு விஷயங்கள் அதற்குள்ளே அடங்கும்! அவைகள்,
1) அல்லாஹ் தான் நாடியவருக்கு ரிஸ்க்கை தாராளமாக கொடுக்கிறான் ஏனென்றால் அவன் அல்பாஸித்!
2) அவன் நாடியவருக்கு ரிஸ்க்கை கொடுக்காமல் பிடித்துக் கொள்கிறான் ஏனென்றால் அவன் அல்காபிழ்ض!
3) கல்வியை தாராளமாக கொடுக்கிறான். இப்படி பல்வேறு அர்த்தங்கள் காபிழ்ض, பாஸித் என்ற பெயர்களுக்கு இருக்கின்றன!
• அடியானின் நிலைமைக்கு ஏற்ப அல்லாஹ் தன் ஹிக்மத்தின் அடிப்படையில் செய்கிறான்.
1) செல்வந்தர்கள் கொடுக்கும் சதகாக்களை எடுத்துக்கொள்கிறான், அதன் மூலம் ஏழைகளுக்கு ரிஸ்கை அள்ளி வழங்குகிறான்!
2) அதேபோல் உடல்களிலிருந்து உயிர்களை கைப்பற்றுகிறான், பிறக்கிற மனிதனுக்கு உயிர்களை கொடுக்கிறான்!
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்!
(அல்குர்ஆன் : 6 : 125)
• யாருக்கு அல்லாஹ் நேர்வழி கொடுக்க நாடுகிறானோ அவர்களுடைய உள்ளத்தை இஸ்லாத்தின் பக்கம் விரிவாக்கி வைக்கிறான்!
• யாரை வழி கெடுக்க நாடுகிறானோ அவர்களுடைய உள்ளத்தை நெருக்கடியானதாக ஆக்குகிறான்!
அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை! இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்! மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்!
(அல்குர்ஆன் : 39 : 67)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் வானங்களையும் பூமிகளையும் தன்னுடைய இரு கரங்களிலும் எடுத்துக்கொண்டு, “நானே அல்லாஹ். நானே அரசன்” என்று கூறுவான் என்றார்கள். இதைக் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தம் விரல்களை மடக்கிவிட்டு, பிறகு அவற்றை விரித்தார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5377)
• அல்லாஹ் தன் கரங்களால் விரல்களால் பிடிக்கிறான் அதனுடைய வடிவமோ, அமைப்பு நமக்குத் தெரியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!
• அல்லாஹ் அல்பாஸித் எனவே அவன் தன் கைகளை விரித்து கொள்கிறான். பகலில் பாவம் செய்தவர்கள் மன்னிப்பு கேட்பதற்காக இரவில் கைகளை
விரிக்கிறான்!
• இதுபோல் ஒவ்வொரு இரவும் தன்னிடம் பிரார்த்தனை கேட்பவருக்கு கைகளை விரிக்கிறான். என்று நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும்போது, கீழ் வானிற்கு இறங்கிவந்து, "நானே அரசன்;நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்"என்று கூறுகிறான். வைகறை (ஃபஜ்ர்) நேரம் புலரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1387)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்; இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் கையை நீட்டுகிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (யுக முடிவு நாள்)வரை (ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்துகொண்டிருக்கிறான்)
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5324)
• அல்லாஹ் தான் நாடியோருக்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான். தான் நாடிய அடியார்களுக்கு அதனைச் சுருக்கியும் விடுகிறான்!
• வாழ்வாதாரம் அதிகமாக வழங்கப்படுவது பாக்கியத்தின், இறைநேசத்தின் அடையாளமும் அல்ல, அது குறைவாக வழங்கப்படுவது துர்பாக்கியத்தின் அடையாளமும் அல்ல!
அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.
(அல்குர்ஆன் : 13 : 26)
• இந்த பெயர்களை சரியாக புரியும் போது, அல்லாஹு தஆலா தான் பிடிப்பவன், தாராளமாக கொடுப்பவன் என்று உணரும் போது நிச்சயமாக நம் உள்ளங்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பும்!
• அவனுடைய பிடியிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற பயம் வரும். அவனது அன்பை கருணையை ரிஸ்க்கை பெற வேண்டும் என்ற ஆசை வரும்.
• அல்லாஹ்வே, உன் அருளை, கருணையை, வாழ்வாதாரத்தை எங்களுக்குத் தாராளமாக வழங்குவாயாக ஆமீன்!
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல்-மன்னான் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 


No comments:
Post a Comment