அல்லாஹ்வின் அல் கரீபு - القَرِيْبٌ என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் ஜப்பார் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அல் கரீபு பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல் கரீப் என்றால் அருகில் உள்ளவன் என்பது அர்த்தமாகும்! இந்த பெயர் அல்குர்ஆனில் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளது!
அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்! இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள்! நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்! (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்!
(சூரத்துல் : அல் ஹூத் : 61)
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் : நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக.
(சூரத்துல் : அல் பகரா : 186)
• அல் கரீப் என்ற சொல்லை இரண்டு வகையாக பிரிக்கலாம் : 1) பொதுவான நெருக்கம், 2) குறிப்பான நெருக்கம்!
• அல்லாஹ் அவனுடைய அறிவால், கண்காணிப்பால் அவனுடைய படைப்பினங்கள் அனைத்திற்கும் நெருக்கமாக இருக்கிறான்!
• அல்லாஹ்வுடைய அறிவிலிருந்து எதுவுமே மறைந்து விட முடியாது!
• யார் என்ன செய்தாலும் அவர்களோடு நெருக்கமாக இருந்து, அல்லாஹ் அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான்!
• அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு கட்டுப்பட்டு, அவன் கூறியவற்றை செய்து, அவன் தடுத்த உள்ளவற்றை விட்டு விலகி, அவனுடைய அடியார்களாக வாழக்கூடிய மக்களுக்கு நெருக்கமாக இருப்பதை குறிக்கும்! அந்த நெருக்கத்தின் இயல்புநிலை என்ன என்பதை யாராலும் கூற முடியாது!
• ஆனால் அதன் அடையாளங்களைக் காண முடியும்! பிரார்த்தனைகள் உடனே அங்கீகரிக்கப்படுவதும், வணக்கசாலிகளுக்கு வழங்கப்படும் கூலியும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும்!
• அல்லாஹ் முஃமின்களுடன் நெருக்கமாக இருக்கிறான், அதனால் தான் நபி ﷺ அவர்களும், அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் போகின்ற நேரத்தில், அவர்கள் சவுர் குகையில் தங்கியிருக்கும் பொழுது, எதிரிகள் அவர்களை சூழ்ந்து கொள்கிறார்கள். அந்த நேரத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் கவலைப்படுகிறார்கள். நபி ﷺ அவர்கள் அபூபக்கர் ரலி அவர்களுக்கு ஆதரவு சொல்லும்போது, “கவலைப்பட வேண்டாம் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்” என்று சொன்னார்கள்!
(சூரத்துல் : அத் தவ்பா : 40)
• நிச்சயமாக முஃமின்களோடு, இறைநேசர்களோடு, தக்வாவோடு வாழக்கூடிய மக்களோடு அல்லாஹ் இருக்கிறான், அவர்களுக்கு நெருக்கமாக அல்லாஹ் இருக்கிறான்!
• அல்லாஹ் நம்மோடு நெருக்கமாக இருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது, நம்முடைய உள்ளத்தில் ஒரு துணிச்சலும், தைரியமும் வரும், எந்த ஒன்றை பற்றிய கவலை மற்றும் பயம் நம்முடைய உள்ளங்களில் இருக்காது!
• அல்லாஹ் நமக்கு நெருக்கமாக இருப்பதனால், அல்லாஹ் நம்மை கைவிட மாட்டான், அல்லாஹ் நமக்கு உதவி செய்வான் என்கிற உணர்வு நமக்குள் வரும்!
• அல்லாஹ் நம்முடன் நெருக்கமாக இருக்கிறான்! அல்லாஹ் கேட்டால் கொடுப்பான்! நம்முடைய தேவைகளை கேட்க வேண்டும் என்கிற உறுதியான உணர்வு நமக்கு வரும்!
மேலும், நிச்சயமாக, நாம் தான் மனிதனைப் படைத்தோம், (நன்மை, தீமை ஆகியவற்றிலிருந்து) அவன் மனம் எதை ஊசலாடச் செய்கிறது (பேசுகிறது) என்பதையும் நாம் நன்கறிவோம், இன்னும், நாம் பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பைவிட அவனுக்கு மிகச்சமீபமாகவே இருக்கின்றோம்!
(சூரத்துல் : அல் ஃகாஃப் : 16)
• அல்லாஹ் நமக்கு மிக நெருக்கமாக இருக்கிறான், எனவே நமக்கு அவன் உதவி செய்வான், நம்முடைய பிரார்த்தனையை அவன் கபூல் செய்வான் என்ற அந்த நம்பிக்கையை தரக்கூடிய பெயர் தான் அல்கரீப்!
• நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்குக் கிடைக்கும் அவனது நெருக்கம் குறித்து ஏராளமான செய்திகளை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கூறி உள்ளார்கள் :
அபூ மூஸா அப்தில்லாஹ் இப்னு கைஸ் அல் அஷ்அரீ (ரலி) அறிவித்தார்கள் :
(நாங்கள் கைபர் பயணத்தில் இருந்த போது) நபி(ஸல்) அவர்கள் ஒரு 'குன்றில்' அல்லது 'மேட்டில்' ஏறலானார்கள். அதன் மீது ஏறியபோது ஒருவர் உரத்த குரலில் 'லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் கோவேறு கழுதையில் இருந்தபடி, '(மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேளாதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை' என்று கூறினார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6409)
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(என்) அடியான் என்னை ஒரு சாண் அளவிற்கு நெருங்கினால் நான் அவனை ஒரு முழம் அளவிற்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் அளவிற்கு நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரண்டு கைகளின் நீள அளவிற்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச் செல்கிறேன்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 7536)
• அல் கரீப் என்ற பெயரை நாம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது, அல்லாஹ் நெருக்கமாக இருக்கிறான் என்பதை நம்மோடு கலந்து நம்மோடு ஒருவனாக ஆகிவிட்டான் என்று இஸ்லாத்தில் தோன்றிய வழிகெட்ட பிரிவுகளில் ஒன்றான சூபியாக்கள் கூறி கொண்டு உள்ளார்கள்!
• அல்லாஹ் அவனுடைய பார்வை, அறிவு, கண்காணிப்பு, உதவி போன்றவற்றால் நமக்கு நெருக்கமாக இருக்கிறான் என்பதுதான் அல் கரீப் என்ற பெயருடைய அர்த்தமாகும்!
• அல்லாஹ்வுடைய நெருக்கத்தை நாம் இன்னும் அதிகமாக கேட்டு, அல்லாஹ்வோடு நெருக்கமாக இருந்து, அவனுடைய அன்பையும், உதவியையும் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யவதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக!
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்களான அல் முஜீபு பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன்

No comments:
Post a Comment