பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

அல்லாஹ்வின் அல் முஃதீ என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞 ~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா

அல்லாஹ்வின் அல் முஃதீ என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞
~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா : 69
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் - வித்ர் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அல் முஃதீ பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல் முஃதீ என்றால் வழங்குவதில் தனித்துவமானவன் என்பது பொருளாகும். இந்த பெயர் ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவருக்கு அல்லாஹ் நன்மை புரிய நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைத் தருகிறான். அல்லாஹ்வே கொடுப்பவனாவான்; நான் பங்கிடுபவன் ஆவேன். இந்த (என்) சமுதாயத்தினர், அவர்களை எதிர்ப்பவர்களின் மீது ஆதிக்கம் பெற்றவர்களாகவே இருப்பார்கள். இறுதியில், அவர்கள் ஆதிக்கம் பெற்றவர்களாக இருக்கும் நிலையிலேயே இறைகட்டளை (மறுமை நாள்) வந்து விடும்.
அறிவிப்பாளர் : முஆவியா (ரலி)
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3116)
• அல்லாஹ் நமக்கு, தாராளமாகவும், நிரப்பமாகவும் கொடுப்பதால் அவனை நாம் அல் முஃதீ என்று அழைக்கின்றோம்.
• அல்லாஹ்வின் அருட்கொடை இரண்டு வகைப்படும். அவை, 1) பொதுவான அருட்கொடை, 2) குறிப்பான அருட்கொடை.
1) பொதுவான அருட்கொடை :
• பொதுவான அருட்கொடை என்பது, அல்லாஹ் எல்லோருக்கும் கொடுப்பான். இவ்வுலகில் நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் என அனைவருக்கும் அவன் வழங்குகிறான். ஆனால் மறுமைநாளில் அவன் நம்பிக்கை கொண்ட தன் அடியார்களுக்கு மட்டுமே வழங்குவான்.
• அவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது. அவன் ஏதேனும் ஒன்றைச் செய்ய நாடினால் ஆகு என்று தான் கூறுவான். அது ஆகிவிடும்.
• அடியார்கள் அனுபவிக்கும் அருட்கொடைகள் அனைத்தும் அவன் வழங்கியவையே.
قُلْ مَنْ حَرَّمَ زِيْنَةَ اللّٰهِ الَّتِىْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّيِّبٰتِ مِنَ الرِّزْقِ‌ قُلْ هِىَ لِلَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا خَالِصَةً يَّوْمَ الْقِيٰمَةِ‌ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவை என்று) தடுப்பவர் யார்?'' எனக் கேட்டு, ‘‘அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது'' என்று கூறுவீராக. அறியக்கூடிய மக்களுக்கு (நமது) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
(அல்குர்ஆன் : 7:32)
2) குறிப்பான அருட்கொடை :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் தான் நேசிக்க கூடியவர்களுக்கும் நேசிக்காதவர்களுக்கும் இந்த உலக இன்பத்தை வழங்குகின்றான்! ஆனால் தான் நேசிக்க கூடியவர்களுக்கு மட்டுமே நேர்வழியை கொடுக்கின்றான்!
(நூல் : அல்-சில்சிலா அஸ்-ஸஹீஹ் : 2714)
• இந்த ஹதீஸ் மூலம் சில அருட்கொடைகளை அல்லாஹ் எல்லோருக்கும் வழங்காமல் குறிப்பாக சிலருக்கு மட்டும் வழங்குகிறான் என்பதை நாம் அறியலாம்.
• அதே போல், மறுமையிலும் தன்னுடைய நல்லடியார்களுக்கு வாரி வழங்குவதும், எல்லா இன்பங்களையும் கொடுப்பதும் இதில் அடங்கும்.
இமாம் இப்னு கய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
தன் அடியார்கள் தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும், தன்னிடமே கேட்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான். ஏனெனில், அவனே உண்மையான பெருங்கொடையாளி. கேட்பவர்களுக்கு அவன் தாராளமாக வழங்குகிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவர்மீது அவன் கோபம் கொள்வான்.
அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரழி)
(நூல் : சுனன் திர்மிதீ : 3373)
• எனவே உண்மையில் அல்லாஹ்வை கொடையாளன் என்று அறிகின்ற போது அதிகம் அவனிடம் கேட்க வேண்டும். அல்லாஹ் நமக்கு கொடுப்பதற்கு ஒருக்காலமும் கஞ்சம் படுவதில்லை. அல்லாஹ் அள்ளி அள்ளி தரக்கூடியவனாக, கொடுக்ககூடியவனாக இருக்கின்றான்.
• அல்லாஹ்விடம் நாம் கேட்பதால் அவனுடைய கஜானாவில் எந்த ஒன்றும் குறைந்து விடாது. எனவே நாம் நம்பிக்கையுடன் அவனிடம் நிறைய கேட்போம், அதிகம் பிராத்திப்போம் ஏனென்றால் அவன் அல் முஃதியாக உள்ளான்.
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல்-ஜவ்வாது பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment