மறுமை நாளில் நபி (ஸல்) அவர்களுடன் இருக்க அழகிய 7 நல்அமல்கள் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3250)
• சொர்க்கத்தில் ஒரு சிறிய இடம் கிடைப்பதே இவ்வளவு சிறப்பு மிக்க ஒன்றாகும்! ஒரு மனிதன் கேள்வி கணக்கு எல்லாம் முடிந்து சொர்க்கம் சென்று விட்டால் அவரை விட பாக்கியசாலி யாரும் இருக்க மாட்டார்கள்!
• சொர்க்கம் செல்வது பெரிய பாக்கியம் என்றால் நபி (ஸல்) அவர்களுடன் சொர்க்கத்தில் இருப்பது எவ்வளவு மிகப்பெரிய பாக்கியமாகும்! சுபஹானல்லாஹ்!!!!
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்!
(அல்குர்ஆன் : 4 : 69)
• நபி (ஸல்) அவர்களுடன் சொர்க்கத்தில் இருக்க நாம் மட்டும் அல்ல ஸஹாபாக்களும் ஆசையுடன் கூறியுள்ளார்கள் எனவே தான் இதற்கு என்று சில நல்அமல்களை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கூறியுள்ளார்கள்! இன்ஷாஅல்லாஹ் அவற்றை பேணி அமல் செய்தால் நமக்கும் இந்த பாக்கியம் கிடைக்கும்!
1) அனாதைக்களுக்கு ஆதரவு அளிப்பது!
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம் என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 5304)
2) அன்றாட வாழ்வில் பேணுப்படும் நற்பண்புகள் :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் எனக்கு விருப்பமானவரும், மறுமையின் சபையில் என்னிடம் நெருக்கத்திற்குரியவரும் யாரெனில் நல்ல பண்புகளைக் கொண்டவரே!
(நூல் : சுனன் திர்மிதீ : 2018)
3) நபி (ஸல்) அவர்களை அதிகம் நேசிப்பது :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது :
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (நன்)மக்களை நேசிக்கிறார்! ஆனால், (செயல்பாட்டிலும் தகுதியிலும்) அவர்களை அவர் எட்டவில்லை! அவர் விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார்! அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மனிதன் யார்மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்" என்று கூறினார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5143)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?" என்று கேட்டார்கள். அம்மனிதர் (தாம் புரிந்துள்ள நற்செயல்கள்) எதையும் பெரிய அளவில் கூறவில்லை! அவர், "நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) இருப்பாய்" என்று சொன்னார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5140)
4) ஸஜ்தா அதிகம் செய்வது :
ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்த போது) இயற்கைக்கடனை நிறைவேற்றி(ய பின் துப்புரவு செய்து) கொள்வதற்கும் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம் (ஏதேனும்) கோருவீராக! என்று என்னிடம் கூறினார்கள். உடனே நான், சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன் என்றேன். அதற்கு வேறு ஏதேனும் (கோருவீராக!) என்றார்கள். நான் (இல்லை) அதுதான் என்றேன். அதற்கு அவர்கள், அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் சஜ்தா செய்து எனக்கு உதவுவீராக! என்று சொன்னார்கள்
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 843)
• பர்ளு தொழுகை, பர்ளு தொழுகையின் முன், பின் சுன்னத் தொழுகைகள், நபில் தொழுகை, வித்ர் தொழுகை, தஹஜ்ஜத் தொழுகை, லூஹா தொழுகை இவ்வாறு தொழுகையில் நாம் அதிகம் தொழ வேண்டும்!
5) நபி (ஸல்) அவர்களுடன் மறுமை நாளில் சொர்க்கத்தில் இருக்க துஆ செய்வது :
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لاَ يَرْتَدُّ، وَنَعِيمًا لاَ يَنْفَدُ، وَمُرَافَقَةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَعْلَى جُنَّةِ الْخُلْدِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க ஈமானன் லா யர்தத்து, வ நயீமன் லா யன்ஃபது வ முராஃபகத முஹம்மதின் ஃபீ அஃலா ஜன்னத்தில் குல்தி
பொருள் : அல்லாஹ்வே! மார்க்கத்தை விட்டுப் பின்வாங்காத நம்பிக்கையையும், தீர்ந்து போகாத பேரின்பத்தையும், நிலையான உயர்ந்த சொர்க்கத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தோழமையையும் உன்னிடம் கேட்கிறேன்!
(நூல் : முஸ்னது அஹ்மது : 4340)
6) நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமாக ஸலவாத்து கூறுவது :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மறுமையில் எனக்கு மிகவும் நெருங்கியவர், என் மீது அதிகம் ஸலவாத்துச் சொன்னவரே!
(நூல் : சுனன் திர்மிதி : 484)
7) பெண் பிள்ளைகளை பேணி வளர்ப்பது :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று கூறி விட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5127)
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment