பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

ஸஹாபி அபுதர் அல் கிஃபாரி (ரழி)

உலகப்பற்றற்றவர், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நேசித்த ஸஹாபி அபுதர் அல் கிஃபாரி (ரழி)

• ஜுன்துப் இப்னு அல் ஜூன்தா என்பது இவர் பெயராகும். அபுதர் அல் கிப்பாரி (ரழி) என்பது இவரின் புனைப்பெயர். இவர் அல் கிஃபாரி குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இஸ்லாத்தை ஆரம்ப காலத்தில் ஏற்ற சிலரில் இவரும் ஒருவர்.

• மக்காவிலிருந்து சிரியா செல்லும் வழியில் வாழ்ந்தவர்கள் தான் கிஃபாரி இனத்தினர். முதலில் வணிகம் செய்த இந்த இனத்தினர் பின்னர் வணிகக் குழுக்களை இரவில் வழிமறித்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டனர். 

• இவரின் ஊரிலும் சிலை வழிபாடு கொள்கை தான் இருந்தது. ஆனாலும் இதில் நம்பிக்கையும் ஆர்வமும் இல்லாமல் தான் இருந்தார்கள் அபுதர் (ரழி). இருந்தாலும் அல்லாஹ் ஒருவன் உள்ளான் அவனை வணங்க வேண்டும் என்று இரவிலும், சூரியன் உதயம் நேரத்திலும் இவர் தொழுது வந்தார்கள். நபி (ஸல்) அவர்களை சந்திக்க மூன்று வருடங்கள் முன்பு இது நடந்தது.

• இவருடைய சகோதரன் உனைஸ் (ரழி) அவர்கள் மக்காவிற்கு ஒரு வேலையாக சென்று விட்டு, தாமதமாக திரும்பி வந்தார். அவரிடம் உன்னுடைய தாமதத்திற்கு காரணம் என்ன என்று அபுதர் (ரழி) அவர்கள் கேட்க, மக்காவில் நபி ஒருவர் வந்து உள்ளார். அவரை அந்த ஊர் மக்கள் சூனியக்காரர், பைத்தியகாரர், கவிஞர் என்று பலவாறு கூறுகிறார்கள் ஆனால் உண்மையாக அவர் உண்மையாளர் மக்கள் தான் பொய்யர் என்று கூறினார்கள்.

• இதன் பின்பு தோலினால் ஆன (தண்ணீர்ப்) பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவிற்கு சென்றார். இஸ்லாம் பற்றி விசாரிக்க ஆரம்பம் செய்தால் பிரச்சனை ஏற்படும் என்று தான் யார் எதுக்கு ஊருக்கு வந்து உள்ளோம் என்று எதுவும் வெளியே காட்டி கொள்ளாமல் இருந்தார்கள்.

• கொண்டு வந்த உணவும் தீர்ந்து போக ஸம்ஸம் தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தார். இவ்வாறு ஒரு மாத காலம் இவர் மக்காவில் இருந்தார்கள். இவர் ஸம்ஸம் தண்ணீரை குடித்ததால் இவருக்கு பசி ஏற்படவில்லை, மாறாக வயிற்றில் மடிப்புகளே ஏற்பட்டன.

• ஒரு நாள் அலி (ரழி) அவர்கள் இவரை கடந்து செல்ல, இவரை பார்த்த போது ஊருக்கு புதிய நபராக உள்ளது என்று பேச தொடங்கினார்கள். அபூதர் (ரழி) அவர்கள் தன்னை பற்றியும் தன்னுடைய நோக்கம் பற்றி எதுவும் கூறாமல் இருந்தார்கள் பின்பு அலி (ரழி) அவர்கள் தன்னுடைய வீட்டில் தங்கி கொள்ளுங்கள் என்று கூறினார்கள், அன்றைய நாள் அவரின் வீட்டிலயே கழிந்தது.

• மறுநாளும் அபூதர் (ரழி) அவர்கள் காபாவின் அருகிலேயே இருந்து நபி (ஸல்) அவர்களை பற்றி விசாரிக்க இருந்தார்கள் ஆனாலும் யாரும் அவருக்கு உரிய தகவல் கூறவில்லை, அன்றைய நாளும் அலி (ரழி) அவர்கள் இவரை கடந்து செல்ல, நீங்கள் தேடி வந்த நபரை இன்னும் பார்க்கவில்லை என்று கேட்டு விட்டு அவரை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

• அலி (ரழி) அவர்கள் விவரம் கேட்ட பின்பு நேரடியாக நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து சென்றார்கள். நபி (ஸல்) அவர்களும் இஸ்லாத்தை எடுத்து சொல்ல இவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

• மக்காவில் இஸ்லாம் மேலோங்கி விட்ட செய்தி கேட்ட பின்பு உங்கள் ஊரில் இருந்து வாருங்கள் அது வரை உங்கள் ஊரிலயே இருங்கள். யாரிடமும் நீங்கள் இஸ்லாம் ஏற்றதை கூறவேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

• ஆனால் அபூதர் (ரழி) அவர்கள் உண்மை மார்க்கம் என்று தெரிந்த பின்பும் ஏன் இதை மறைக்க வேண்டும் என்று கூறி காபாவிற்கு என்று உரக்க இஸ்லாத்தை ஏற்றதாக கூறினார்கள். அவ்வளவு தான் நாலபுறத்திலும் மக்கள் வந்து கடுமையாக இவரை அடித்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் இவரை அடையாளம் புரிந்துகொண்டு அபுதர் (ரழி) அவர்கள் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். 

• பின்பு அப்பாஸ் (ரழி) அவர்கள் மக்காவாசிகளை நோக்கி, இவர் கிஃபாரி குலத்தை சார்ந்தவர், உங்கள் வியாபாரம் பொருட்கள் எல்லாம் இவர்கள் ஊரை கடந்து தான் செல்ல வேண்டும் இவர்கள் பதிலுக்கு தாக்கினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கூற அனைவரும் இவரை விட்டு விலகி விட்டார்கள்.

• இதே போன்று இரண்டு மூன்று நாட்கள் நடந்தது, அப்போது அப்பாஸ் (ரழி) அவர்கள் தான் அவரை காப்பாற்றினார்கள்.

• இதற்கு அபுதர் (ரழி) அவரின் ஊருக்கு சென்று முதலில் சகோதரனுக்கும், பின்பு தன்னுடைய தாய்க்கும் இஸ்லாம் பற்றி எடுத்து சொல்ல அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். பின்பு தன்னுடைய குலத்திற்கும் இஸ்லாம் பற்றி கூற முதலில் பாதி மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். மீதி பாதி நபர்கள் நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுகிறோம் என்று கூறி அவ்வாறு ஏற்றார்கள்.

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4878)

• அபுதர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நிறைய மார்க்க சட்டங்களை கேட்டு தெரிந்து வைத்து இருந்தார்கள். இஸ்லாத்தின் முதல் பள்ளி வாசல் எது? இஸ்லாத்தின் சிறந்த நற்செயல்கள் எது? மிஹ்ராஜ் பயணத்தில் அல்லாஹ்வை பார்த்தீர்களா போன்ற நிறைய கேள்விகள் கேட்டு தெரிந்து வைத்து இருந்தார்கள். 

(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 136,291, 903)

• இவர்கள் மட்டும் 281 ஹதீஸ்களை அறிவிப்பு செய்து உள்ளார்கள். அவற்றில் 31 ஹதீஸ்கள் புகாரியிலும், 
முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளன.

• நபி (ஸல்) அவர்களும் அபுதர் (ரழி) அவர்களை அல்லாஹ்விற்காக நேசித்தார்கள் இதை ஒரு இடத்தில் அபுதர் (ரழி) அவர்களை பார்த்து இவ்வாறு குறிப்பிட்டார்கள், எனக்கு நான் விரும்புவதையே உமக்கும் விரும்புகிறேன் என்று.

(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 3730)

• இவரின் மூலமே இவரின் குலமும், அஸ்லம் என்று மற்றொரு குலத்தை சார்ந்த அனைத்து நபர்களும் இஸ்லாத்தை ஏற்றார்கள். நபி (ஸல்) அவர்கள் இவரின் குலத்திற்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினார்கள்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 4928)

• நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் என்னை நால்வரை நேசிக்குமாறு கூறியுள்ளான். காரணம், அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். அவர்களில் ஒருவர் அபூதர் (ரழி).

(நூல் : சுனன் இப்னு மாஜா : 149)

• மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அபூதர்ரை விட மிகவும் உண்மையாளரைப் பூமி தன் முதுகின் மீது சுமந்ததுமில்லை! வானம் பார்த்ததுமில்லை என்று! எந்த ஒரு சூழ்நிலையிலும் உண்மையை கூற இவர் தயங்கியது கிடையாது. அது கலீபாவிற்கு எதிராக இருந்தாலும் சரி.

(நூல் : சுனன் திர்மிதி : 3801)

• என்னைப் பின்பற்றியவர்களில் இவர் ஈஸா இப்னு மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு ஒப்பானவர் என்று நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரழி) அவர்களை குறிப்பிட்டுள்ளார்கள்!

(நூல் : சுனன் திர்மிதி : 3802)

• திண்ணை தோழர்கள் என்று அழைக்கப்படும் அஸ்ஹாபுஸ் ஸுஃபாக்களில் அபுதர் (ரழி) அவர்களும் ஒருவர். உலகப்பற்றற்ற மனிதராக இருந்தார்கள். செல்வம் இல்லாத நிலையிலும், செல்வம் அதிகம் வந்த நிலையிலும்.

• தபூக் போருக்குப் பயணம் புறப்பட்ட பொழுது இவர்களின் ஒட்டகை அலுத்துப் போய் விட்டதால் இவர்கள் சற்றுத் தாமதித்துத் தம் சுமைகளைச் சுமந்து கொண்டு பின்னால் வந்தனர். இவர்களை இன்னார் என்று இலக்குக் கண்டு கொண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அபூதர் மீது அருள் பாலிப்பானாக! அவர் தனியாக வாழ்கிறார். அதே போன்று அவர் தனியாக மரணித்து, தனியாக அடக்கப்படுவார். தனியாகவே மறுமையில் எழுப்பப்படுவார்” என்று கூறினார்கள். 

• நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் முன்பு இவர்களை அழைத்து வரச் செய்து, அபூதர் தம் வாழ்நாள் முழுவதும் இப்பொழுது போன்று இருப்பார். நான் இறந்ததன் பின்னர் வேறு மாதிரியாக ஆகமாட்டார் என்று கூறினார்கள். இவ்வாறு கூற காரணம், இஸ்லாம் பல நாடுகளில் பரவி பல ஆட்சிகளை பெற்று செல்வம் அதிகம் வந்த போது பலரும் அதில் மயங்கி ஆடம்பரமாக வாழ ஆரம்பித்து விட்டார்கள் இவரை தவிர!

• மூன்றாவது கலீபா உஸ்மான் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்தில் பல ஸஹாபாக்கள் செல்வ செழிப்பில்  இருந்தார்கள், எல்லா இடங்களிலும் ஊழல் இருப்பதை பார்த்த இவர்கள் “அவர்களின் பொன்னும், வெள்ளியும் மறுமையில் நரக நெருப்பில் காய்ச்சப் பட்டு அவற்றைக் கொண்டு அவர்களின் முதுகில் சூடிடப்படும். நீங்கள் சேமித்தவை இவை தாம், இவற்றின் பலனை நுகருங்கள் என்று கூறப்படும்” என்னும் திருக்குர்ஆனில் சூரத் தெளபாவிலுள்ள வசனத்தை ஓதிக்காட்டி மக்களை எச்சரிக்கை செய்து கொண்டு இருந்தார்கள். இவரின் இந்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. 

• இதன் பின்பு இவரின் செயலை பற்றி புகார் கலீபாவிடம் போக இவரை அழைத்து பேசி பார்த்தார்கள். இன்னும் சில ஸஹாபாகளும் பேசி பார்த்தார்கள் ஆனால் இவர் தன்னுடைய நிலைப்பாடை மாற்றி கொள்ளவில்லை. மாறாக உங்கள் உலகம் எனக்கு தேவையில்லை என்று கூறி,

• இவர்கள் மதீனாவில் இருக்க விரும்பாது தம் குடும்பத்துடன் மதீனாவுக்கு மூன்று மைல் தொலைவிலுள்ள ரப்ஸா என்னும் இடத்திற்கு சென்று விட்டார்கள். பின்பு அதே இடத்தில் ஹிஜ்ரி 32 யில் மரணமும் அடைந்தார்கள். 

• இவரை அவ்வழியாக சென்ற அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களும் இன்னும் சில ஸஹாபாக்களும் ஜனாஸா தொழுது நல்லடக்கம் செய்தார்கள். இவர்களின் மனைவியையும், மகனையும் மதீனா அழைத்துச் சென்றார்கள்.

• அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னிப்பானாக! சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை இவருக்கு வழங்குவனாக! ரலியல்லாஹு அன்ஹு!

@அல்லாஹ் போதுமானவன் 💞

No comments:

Post a Comment