அல்லாஹ்வின் அல் முஹ்ஸின் என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அந் நூர் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அல் முஹ்ஸின் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• இதுவரை நாம் பார்த்த அல்லாஹ்வுடைய பெயர்கள் அல்குர்ஆனில் நேரடியாக இடம்பெற்றவையாகும்!
• சில பெயர்கள் அல்குர்ஆனில் நேரடியான பெயராக குறிப்பிடப்படாமல் விணை வடிவத்தில் அவை வரும், ஆனால், ஹதீஸ்களில் அந்தப் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கும், அப்படிப்பட்ட ஒரு பெயர் தான் இது!
• அல் முஹ்ஸின் - المحسن என்பதன் பொருள்! உபகாரம் செய்பவன், சிறந்த அழகிய முறையில் ஒரு காரியத்தை செய்யக்கூடியவன் என்பதாகும்!
• அல்முஹ்ஸின் என்ற பெயரின் விணை வடிவம் அல்குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது!
அல்லாஹ் உனக்கு நன்மை செய்தவாறே நீயும் அவனுடைய அடியார்களுக்கு நன்மை செய்!
(சூரத்துல் : அல் கஸஸ் : 77)
என் இறைவன் என்னைச் சிறையிலிருந்து வெளியேற்றிய போதும் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையே ஷைத்தான் குறுக்கிட்ட பின்னரும் உங்களைக் கிராமத்திலிருந்து இங்கு கொண்டு வந்த போதும் அல்லாஹ் என்மீது உபகாரம் புரிந்துள்ளான்!
(சூரத்துல் : யூஸுஃப் : 100)
• இது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று என்பதை நாம் ஹதீஸ்களில் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் தீர்ப்புக் கூறினால் நியாயமாகத் தீர்ப்பு கூறுங்கள்! நீங்கள் பிராணிகளை அறுத்தால் நல்ல முறையில் அறுத்து விடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் சிறந்த முறையில் செயலாற்றக்கூடியவன்! அவன் சிறந்த முறையில் செயலாற்ற கூடியவர்களை நேசிக்கிறான்!
(நூல் : ஸஹீஹ் ஜாமிஃ : 494)
• அல் முஹ்ஸின் என்றால் உபகாரம் செய்பவன், சிறந்த முறையில், அழகிய முறையில் ஒரு காரியத்தை செய்யக்கூடியவன் மேலும் அவனது அருட்கொடையையும் வள்ளல் தன்மையையும் குறிக்கிறது!எந்தவொன்றும் அவனது அருட்கொடையை விட்டும் நீங்கியதாக இல்லை! அல்லாஹ் கூறுகிறான் :
அவன் ஒவ்வொரு பொருளையும் மிகச் சிறந்த முறையில் படைத்தான். மனிதனை களிமண்ணிலிருந்து படைக்கத் தொடங்கினான்!
(சூரத்துல் : அஸ் ஸஜ்தா : 07)
• அவனது அருட்கொடைகளில் மிகப் பெரியது இந்த மார்க்கத்தைப் பின்பற்றும் பாக்கியத்தையும் அவனுக்குக் கட்டுப்பட்டு சத்தியத்தில் நிலைத்திருக்கக்கூடிய பாக்கியத்தையும் அளித்தமையே ஆகும்! அத்தோடு மட்டுமல்லாமல் அதன் காரணமாக மறுமைநாளில் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்கிறான். அவனைக் காணும் பாக்கியத்தையும் நமக்கு அளிக்கிறான்!!!
• அல்லாஹ், ஒவ்வொரு காரியத்தையும் மிக அழகிய முறையில், சிறந்த முறையில் செய்யக்கூடியவன்!
• அதேபோன்று, தன்னுடைய அடியார்களுக்கு அவன் நிறைய உபகாரங்களை செய்யக் கூடியவன் என்பது இந்த பெயருடைய அர்த்தமாக இருக்கிறது!
• அவனது நெருக்கத்தைப் பெறுவதற்காக அவனது பெயர்களின் தேட்டப்படி செயல்படக்கூடிய தன் அடியார்களை அவன் நேசிக்கிறான்! அவன் கொடையாளி! கொடையளிப்பவர்களை நேசிக்கிறான்! அவன் கிருபை செய்யக்கூடியவன்! கிருபை செய்யக்கூடியவர்களை நேசிக்கிறான்!
நன்மை செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்யக் கூடியவர்களை நேசிக்கக்கூடியவன்!
(சூரத்துல் : அல் பகரா : 195)
• அடியார்களுக்குச் செய்யக்கூடிய நன்மைகளில் சில : தாய்தந்தையருடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுதல், உறவுகளைப் பேணுதல், கடமைகளை நிறைவேற்றுதல், தேவையுடையோருக்கு உதவி செய்தல், மக்களுக்குத் தீங்கு தரக்கூடியவற்றை அகற்றுதல், அவர்களிடம் நன்மையான விசயங்களைக் கொண்டு சேர்ப்பதற்கு முயற்சி செய்தல். இத்தகைய மக்களுக்குப் பெரும் கூலி வழங்குவதாக அல்லாஹ் பல வசனங்களில் வாக்களித்துள்ளான்!
அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலக நன்மையையும் மறுவுலக நன்மையையும் வழங்கினான்! அல்லாஹ் நன்மை செய்யக்கூடியவர்களை நேசிக்கக்கூடியவன்!
(சூரத்துல் : ஆல இம்ரான் : 148)
• உண்மையிலேயே அல் முஹ்ஸின் பெயரை நாம் படிக்கிறபோது, நம்மிடத்திலே இஹ்ஸான் என்ற பண்பை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். என்ற உணர்வு நமக்கு வர வேண்டும்!
• எந்த ஒரு காரியத்தைச் செய்கிற போதும் அதை சீராக, சிறப்பாக, அழகாக செய்வது என்பது இஹ்ஸான் ஆகும்!
• அதே நேரத்தில், இபாதத்தில் இஹ்ஸான் என்றால் அல்லாஹ்வை பார்ப்பது போன்று நாம் வணங்குவது, அல்லாஹ்வை நாம் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான்! இந்த உணர்வை மனதில் வரவழைத்து அல்லாஹ்வை வணங்குவது இஹ்ஸான் என்ற நிலை ஆகும்!
• எனவே, அல்லாஹ் அல் முஹ்ஸின் என்று நாம் அறிகிற போது இந்த நிலையை நம்மிடத்தில் உருவாக்கிக் கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும், அல்லாஹ் அதற்கு நம் எல்லோருக்கும் தவ்ஃபீக் செய்வானாக!!!
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அத் தய்யான் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment