ஷஅபான் மாத சுன்னத்தான நோன்புகளும் – தவிர்க்க வேண்டிய பித்அத்துகளும்
இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிகமாக சுன்னத்தான நோன்புகளை நோற்றுள்ளார்கள்.
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்; (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
நூல் : புகாரி (1967)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில நாட்களைத் தவிர்த்து) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள்.
உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்! என்றும் நபி (ஸல்) கூறுவார்கள்.
(கூடுதலாக தொழும் வணக்கங்களில்) குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.
(புகாரி: 1970)
முழுமையாக நோன்பு நோற்பதற்கு கடமையாக்கப்பட்ட மாதம் இரமலான் மாதம் மட்டும்தான். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்கவில்லை. எனினும் மற்றமாதங்களை விட அதிகமாக இந்த மாதத்தில் அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்.
வழமையாக நோன்பு நோற்கும் வழமை உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் ஷஅபான் இறுதியில் நோன்பு நோற்பது கூடாது
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது; அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாளில் நோன்பு நோற்கலாம்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : புகாரி (1914)
திங்கள், வியாழன் நோன்பு , மாதம் மூன்று நோன்புகள் போன்ற வழமையான நோன்புகளை நோற்பவர்கள் ஷஅபான் இறுதியில் நோற்றுக் கொள்ளலாம்.
ஒரு நபித்தோழர் ஷஅபான் இறுதியில் (அதாவது பிறை 29, 30 போன்ற நாட்களில்) நோன்பு நோற்றால் பாவமாகிவிடுமோ என்ற எண்ணத்தில் தாம் வழமையாக நோற்கும் நோன்பை விட்டுவிட்டார். அவரிடம் அதைப் பற்றி விசாரித்த நபி (ஸல்) அவர்கள் வழமையாக நோற்கும் நோன்பை அவ்வாறு விட வேண்டியதில்லை என்பதை விளக்கும் வகையிலும், வழமையாக நோற்கும் நோன்பை விட்டால் அதை வேறுநாட்களில் நோற்கலாம் என்பதை தெளிவுபடுத்தும் வகையிலும் “நீர் இரமலான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக” என்று கூறினார்கள்.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், “இல்லை’ என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள்.
.
நூல் : முஸ்லிம் (2155)
ஷஅபான் 15 ம் நாள் மட்டும் குறிப்பாக நோன்பு நோற்பது பித்அத் ஆகும். இது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானவையாகும். இறைத்தூதர் செய்தார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத எந்த ஒரு செயலையும் வணக்கமாகச் செய்வது கூடாது. அவ்வாறு செய்தால் அது வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்.
ஷஅபான் 15 ஆம் இரவிற்கென்று எந்த ஒரு சிறப்பும் கிடையாது. மற்ற நாட்களின் இரவுகளைப் போன்றுதான் ஷஅபான் 15 ஆம் இரவும் ஆகும். ஷஅபான் 15 ஆம் இரவைச் சிறப்பித்து வரும் செய்திகள் பலவீனமானவையாகும்.
ஷஅபான் 15 ஆம் இரவு மட்டும் சிறப்பாக இரவுத் தொழுகையை நிறைவேற்றுவது பித்அத் ஆகும். மற்ற இரவுகளில் இரவுத் தொழுகையை நிறைவேற்றும் வழமையுடையோர் இந்த இரவிலும் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் மற்ற இரவுகளில் தொழும் வழமை இல்லாதவர்கள் இந்த இரவை மட்டும் சிறப்பித்து தொழுவது கூடாது. இது தொடர்பாக முன்வைக்கப்படும் ஆதாரங்கள் பலவீனமானவையாகும்.
ஷஅபான் 15 ஆம் இரவில்தான் அந்த வருடம் நடைபெற வேண்டிய காரியங்கள் (விதி) நிர்ணயம் செய்யப்படுகிறது என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரான நம்பிக்கையாகும்.
லைலத்துல் கத்ர் இரவில்தான் நடைபெற வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அல்லாஹ் கூறுகிறான் :
இ(வ் வேதத்)தை மதிப்புமிக்க இரவில் இறக்கினோம். மதிப்புமிக்க இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது? மதிப்புமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும். அதில் வானவர்களும், (ஜிப்ரீல் எனும்) ரூஹூம் தமது இறைவனின் ஆணைப்படி ஒவ்வொரு செயல்திட்டத்துடன் இறங்குகின்றனர். அமைதி (நிறைந்த இரவு). அது, அதிகாலை உதயமாகும்வரை இருக்கும்.
(அல்குர்ஆன் அத்தியாயம் 97)
லைலத்துல் கத்ர் இரவு இரமலான் மாதத்தில்தான் உள்ளது.
எனவே ஷஅபான் 15 ஆம் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டதாக நம்புவதும், ஷஅபான் பதினைந்தாம் இரவில் நடைபெறவேண்டிய காரியங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது என்ற நம்பிக்கையும் குர்ஆனுக்கு முரணான தவறான நம்பிக்கையாகும்.
மரணித்தவர்களுக்காக ஒன்றும். இரண விஸ்தீரணத்துக்காக ஒன்றும், ஆயுள் நீடிப்பதற்காக ஒன்றும் என ஷஅபான் பதினைந்தாம் இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவது என்பது எந்த ஒரு அடிப்படையுமின்றி உருவாக்கப்பட்ட பித்அத் ஆகும். இவ்வாறு செய்வது கூடாது. இதற்கு குர்ஆன், சுன்னாவில் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.
ஷஅபான் 15 ஆம் இரவில் பிரத்யோகமாக கப்ரு ஸியாரத் செய்வதும். அந்த இரவில் பிரத்யோகமாக மரணித்தவர்களுக்குப் பிரார்த்திப்பதும் பித்அத் ஆகும். ஷஅபான் 15 ஆம் இரவில் கப்ரு ஸியாரத் செய்வது சிறப்பானது என்பதற்கு நபிமொழிகளில் எந்த ஒரு சான்றும் கிடையாது.
சில ஊர்களில் பராஅத் ரொட்டி (வலாத் ரொட்டி) என்ற பெயரில் ரொட்டியைச் சுட்டு ஃபாத்திஹா ஒதி அதை விளம்புகின்றனர். இதுவும் குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் இல்லாத வழிகெட்ட பித்அத் ஆகும்.
ஷஅபான் பதினைந்தாம் இரவிற்கு “பராஅத் இரவு” (லைலத்துல் பராஆ) என்ற பெயர் குர்ஆன் சுன்னாவில் கூறப்படவில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் தமது வாழ்நாளில் “லைலத்துல் பராஆ” என்ற வார்த்தையை உச்சரித்தார்கள் என்பதற்குக் கூட எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.
-- Abdun Nasir M.I.Sc.,
No comments:
Post a Comment