💞 அல்லாஹ்வின் துல் ஜலாலில் வல் இக்ராம் என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞
~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா : 71
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் ஜவ்வாது பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான துல் ஜலால் வல் இக்ராம் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• துல் ஜலாலில் வல் இக்ராம் என்றால், கண்ணியமும் மகிமையும் மிக்கவன் என்பது பொருளாகும்.
• இந்தப் பெயர் அர் ரஹ்மான் என்ற சூராவில் இடம்பெற்றுள்ளது.
كُلُّ مَنْ عَلَيْهَا فَان وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَام
(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே - மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
(அல்குர்ஆன் : 55:26,27)
تَبٰـرَكَ اسْمُ رَبِّكَ ذِى الْجَـلٰلِ وَالْاِكْرَامِ
(நபியே!) மிக்க சிறப்பும், கண்ணியமும் உள்ள உமது இறைவனின் திருப்பெயர் மிக பாக்கியமுடையது.
(அல்குர்ஆன் : 55:78)
• ஹதீஸ்களில் இந்தப் பெயரைக் கொண்டு பிரார்த்திக்குமாறு ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யா தல்ஜலாலில் வல் இஹ்ராம் என்ற பெயரைக்கொண்டு அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்.
(நூல் : ஸஹீஹ் ஜாமிஃ : 1250)
ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மூன்று முறை
அஸ்தஃக் ஃபிருல்லாஹ் (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) கோரிவிட்டு, "அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம், வ மின்கஸ் ஸலாம். தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம்" (இறைவா, நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. வலிமையும் மேன்மையும் உடையவனே! நீ சுபிட்சமிக்கவன்) என்று கூறுவார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1037)
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் முன் : ‘யா அல்லாஹ் உனக்கே புகழ் அனைத்தும், உன்னை தவிர வணக்கத்திற்குரியவர் எவரும் இல்லை, நீ தான் அல்மன்னான் (அருட்கொடை வழங்குபவன்), வானங்கள் பூமியை தோற்றுவித்தவனே, நீ தான் துல் ஜலாலில் வல் இக்ராம் (வல்லமையும் கண்ணியமும் கொண்டவனே), யா ஹய், யா கய்யூம்’ என்று கூறி கேட்கிறேன் என்றார்!
அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவர் அல்லாஹ்வின் இஸ்முல் அஃதமை கொண்டு துஆ கேட்டு விட்டார். அல்லாஹ்வின் இஸ்முல் அஃதமை கொண்டு அழைத்தால் பதில் அளிப்பான், கேட்டால் கொடுப்பான் என்று கூறினார்கள்!
(நூல் : சுனன் அபூதாவூத் : 1495 | சுனன் நஸயீ : 1360)
• இது அவன்பால் இணைக்கப்படும் பெயர்களுள் ஒன்று. கல்வியாளர்களில் சிலர் இதனை அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்றாகக் கணக்கிட்டுள்ளார்கள்.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வுடன் சில பெயர்கள் இணைக்கப்பட்டு உள்ளன. உதாரணமாக, அர்ஹமுற்றாஹிமீன், கைருல் காஃபிரீன், ரப்புல் ஆலமீன், மாலிக்கி யவ்மித்தீன், அஹ்ஸனுல் காலிகீன், ஜாமிவுந் நாஸி லி யம்மின் லா ரைப ஃபீஹி, முகல்லிபல் குலூப் இவை போன்ற பெயர்கள் அவன்பால் இணைத்துக் கூறப்படுகின்றன.
இதே வரிசையில் துல் ஜலால் வல் இக்ராம் (அவன் கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும்) உரியவனாக இருப்பதால் இந்தப் பண்பைக் கொண்டு அழைப்பது கடமையாகி விட்டது.
உதாரணமாக, அவன் வணக்கத்திற்குரியவனாக இருப்பதால் 'இலாஹ்' என்று அழைக்கப்படுவதை போல. அவன் தன்னை புகழ்ந்து கூறியது போன்று அடியார்கள் அவனைப் புகழ முடியாது.
• உண்மையிலேயே அல்லாஹ் தான் கண்ணியமிக்கவன்! அல்குர்ஆன் முழுவதும் இதை நாம் காணலாம்! அல்லாஹ்வின் ஒவ்வொரு பெயரும் அல்லாஹ் தான் கண்ணியமானவன் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
• எனவே நாம் அல்லாஹ்வின் கண்ணியத்தையும், மகத்துவத்தையும் மதித்து அவனை வணங்க கூடிய நல்லடியார்களாக மாற வேண்டும்! அல்லாஹ் நம் அனைவருக்கும் இதற்கு உதவி புரிவானாக ஆமீன்.
• எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அல்லாஹ்வின் உதவினால் அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் இடம்பெற்று இருந்த அல்லாஹ்வின் அழகிய 103 பெயர்கள் அனைத்தையும் பதிவு செய்து விட்டோம் அல்ஹம்துலில்லாஹ். அவனே இந்தப் பணியை எங்களுக்கு இலகுபடுத்தித் தந்தான்.
• இன்ஷாஅல்லாஹ் விரைவில் இந்த பெயர்கள் அனைத்தையும் pdf ஆக தயார் செய்து post செய்கிறோம்.
@அல்லாஹ் போதுமானவன் 💞
No comments:
Post a Comment