அல்லாஹ்வின் அஸ் ஸய்யித் - السيد என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அஸ் ஸித்தீர் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அஸ் ஸய்யித் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்களை ஒவ்வொன்றாக பொருள் உணர்ந்து நாம் பார்த்து வருகிறோம், அந்த தொடரில் அல்லாஹ்வுடைய மற்றொரு பெயர் தான் அஸ் ஸய்யித்.
• அஸ் ஸய்யித் - السيد என்றால் எஜமானன், அரசன், கண்ணியமானவன், தலைவன், சிறந்தவன், சங்கைக்குரியவன் என்பது பொருளாகும்.
• இந்தப் பெயர் அல்குர்ஆனில் குறிப்பிடப்படாவிட்டாலும், ஹதீஸ்களில் வந்திருக்கிறது.
அப்துல்லாஹ் இப்னு ஷிக்ஹீர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
பனூ ஆமிர் குழுவோடு நான் நபியவர்களைப் பார்க்கச் சென்றேன். நாங்கள் கூறினோம், 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தாம் எங்களின் தலைவர் என்று. அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வே தலைவனாவான்' என்று கூறினார்கள். நாங்கள் கூறினோம். நீங்கள் எங்களில் சிறந்தவர், மிகவும் கண்ணியமானவர் என்று. அதற்கு நபியவர்கள், 'இவ்வாறு சொல்லுங்கள் அல்லது சில வார்த்தைகளைச் சொல்லுங்கள். ஆனால் ஷைத்தான் உங்களில் ஊடுருவி விட வேண்டாம்' என்று கூறினார்கள்.
(நூல் : சுனன் அபூதாவூத் : 4808 | ஸஹீஹ் ஜாமிஃ : 3700)
• இந்த ஹதீஸில் சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களை அஸ் ஸய்யித் என்று சொன்ன போது, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் தான் அஸ் ஸய்யித் என்று சொல்லி அல்லாஹ்வுடைய ஒரு பெயராக இந்தப் பெயரை அறிமுகப்படுத்தினார்கள்.
• அகராதிகளில் ஸய்யித் என்ற அரபுச் சொல்லுக்குரிய கருத்து எஜமானன், அரசன், கண்ணியமானவன், தலைவன், சிறந்தவன், சங்கைக்குரியவன் என பல அர்த்தங்கள் அதற்கு கொடுக்கப்படுகிறது.
• ஒரு கூட்டத்திலோ அல்லது ஒரு விஷயத்திலோ ஸய்யித் என்று சொன்னால் மிக சிறந்தவர், மிக உயர்ந்தவர் என்பது அரபு மொழி ரீதியான அர்த்தமாக இருக்கிறது.
• அல்லாஹ் ஸய்யித் என்றால், நாம் மேலே குறிப்பிட்ட அத்தனை கருத்துக்களையும் அல்லாஹ்வுடைய அஸ் ஸய்யித் என்ற திருநாமம் உள்ளடக்குவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
• எனவே, உண்மையிலேயே எஜமானனாக, அரசனாக, தலைவனாக, கண்ணியமிக்கவனாக, சிறந்தவனாக, உயர்ந்தவனாக இருப்பவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதை இந்த ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு சொல்கிறார்கள்.
• நபி (ஸல்) அவர்கள் ஷிர்க்கினுடைய வாசல்களை மூடுவதிலே எவ்வளவு அக்கறையோடு இருந்தார்கள் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
• மக்கள் அவர்களை பார்த்து நீங்கள் தான் எங்களுடைய ஸய்யித் என்று சொன்ன போது, அல்லாஹ்வுடைய தூதர் அதை ஏற்று அதன் மூலம் மகிழ்ச்சி அடைய விரும்பவில்லை, மாறாக அந்த இடத்திலும் ஒரு இணை வைத்தல் வந்துவிடக் கூடாது என்பதிலே கவனமாக இருந்து தான் அல்லாஹ்தான் ஸய்யித் என்பதை அறிமுகப்படுத்தினார்கள்.
• வேறொரு அறிவிப்பில், அவ்வாறு அவர்கள் கூறியபோது, நபி ﷺ அவர்கள் கூறினார்கள், நீங்கள் என்னைப் பற்றி சொல்வதாக இருந்தால் அப்துல்லாஹ்(அல்லாஹ்வுடைய அடியான்), ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வுடைய தூதர்) இன்று சொல்லுங்கள், ஷைத்தானுக்கு நீங்கள் வழி விட்டு விடாதீர்கள் என்று கூறினார்கள்.
• மற்றொரு ஹதீஸில், நபி அவர்கள் கூறினார்கள், “கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை அளவுகடந்து புகழ்ந்தது போல, என்னை நீங்கள் அளவுகடந்து புகழ வேண்டாம், அல்லாஹ்வுடைய அடியான், அல்லாஹ்வுடைய தூதர் என்று என்னை சொல்லுங்கள்” என்றார்கள்.
• இவ்வாறு அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்கள் தவ்ஹீதினுடைய வாசலை மிக கவனமாக பேணிப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்,
• இணைவைத்தல் எந்த வழிகளிலும் உள்ளே நுழைந்து விடாமல் அவர்கள் தடுத்து இருக்கிறார்கள்.
• இந்தப் பிரபஞ்சத்தை நிர்வகிப்பதில், இயக்குவதில் அவனுக்கு இணையாக யாரும் இல்லை. அவன் மட்டுமே கட்டுப்படுவதற்கும் கீழ்ப்படிவதற்கும் உரிய தலைவன். அவன் பாட்டு மேவணக்கத்திற் குரிய தலைவன். அவனுக்கு இணையாக யாரும் இல்லை.
قُلْ أَغَيْرَ اللَّهِ أَبْغِي رَبًّا وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ
அல்லாஹ்வைத் தவிர்த்து மற்றவர்களை நான் இறைவனாக ஏற்றுக்கொள்வேனா? அவனே ஒவ்வொரு பொருட்களின் இறைவனாவான்.
(அல்குர்ஆன் : 6 : 164)
• அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை வணங்குவது முழுக்கமுழுக்க வழிக்கேடு என்பதற்கான மிகத் தெளிவான சான்று இது.
• யார் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டாரோ அல்லது தமக்குப் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களால் முடியும் என்று எண்ணுகிறாரோ அல்லது தமது தேவைகளை நிறைவேற்றித் தரும்படி துன்பங்களைப் போக்கும்படி அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் முறையிடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கிவிட்டார்.
• சிலர், அடக்கத்தலங்களில் அடங்கிருப்போர் தங்களுக்கு நன்மையோ தீமையோ அளிப்பார்கள் என்று எண்ணுகிறார்கள். இது முழுக்கமுழுக்க ஏகத்துவத்திற்கு எதிரானது.
• ஆதமுடைய மக்களில் அவர்கள் தாம் தலைவர், சிறந்தவர். ஆயினும், தம்மைப் புகழ்ந்து கூறப்படும் வார்த்தை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடுமோ என்று பயந்தார்கள். எனவேதான் தம் சமூகத்தாருக்கு இவ்வாறு அறிவுறுத்தினார்கள். ஷிர்க் ஊடுருவுவதற்கான வாயில்கள் அனைத்தையும் அடைத்தார்கள்.
• உண்மையிலேயே, அஸ் ஸய்யித் அல்லாஹ் மட்டும் தான் என்பதை நாம் புரிந்து, அதற்கேற்ப செயல்பட அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்.
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அர் ரஃபீக் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 


No comments:
Post a Comment