பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, November 4, 2019

ஹதீஸ் மறுப்பு -7

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (part-7)

குர்ஆன் மற்றும் நபிவழி (சுன்னா) மட்டும்தான் மார்க்கம் என்று சொல்லும் நம்மிடம், "எப்படித் தொழ வேண்டும்" என்று ஒருவர் கேட்டால் புஹாரி, முஸ்லீம் போன்ற ஹதீஸ் நூல்களை ஆதாரம் காட்டி "இப்படித் தொழ வேண்டும்" என்று நாம் கூறிவிடுவோம். 

இந்த ஹதீஸ் நூல்கள் நபி(ஸல்) அவர்கள் இறந்ததற்குப் பிறகு சுமார் 200 ஆண்டுகள் கடந்த பிறகே தொகுக்கப்பட்டன. அப்படியென்றால், அந்த 200 ஆண்டுகளில் எந்த கிரந்தகங்களை ஆதாரம் காட்டினார்கள்? 

இந்த வரலாற்றை நேர்மையுடன் அணுகுவதே நமது பதிவின் நோக்கம். 

*நபி(ஸல்) - இறப்பு* 

அல்லாஹ்விடமிருந்து வஹி மூலம்  குர்ஆனைப் பெற்று அந்த குர்ஆனாகவே வாழ்ந்த நபி(ஸல்) அவர்கள் ஹிஜிரி 
10-ஆம் ஆண்டில் இறக்கிறார்கள். இதோடு வஹியும் நிறைவு பெற்றுவிட்டது. அதுமட்டுமல்லாமல் நபிகளாரின் "சொல்,செயல்,அங்கீகாரம்' ஆகிய சுன்னாவும் நிறைவுற்றுவிட்டது.

குர்ஆனை எழுத அனுமதித்த நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய "சொல்,செயல்,அங்கீகாரம்" ஆகிய சுன்னாவை(ஹதீஸ்) எழுத அனுமதிக்கவில்லை. 

[யமன் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு ஒரு பிரசங்கத்தை எழுதித்தரச் சொன்னார்கள் என்பதையும், அபுஹுரைரா(ரலி) அவர்கள் மற்றொரு நபித்தோழர் சில ஹதீஸ்களை எழுதி வைத்திருந்தார் என்று சொன்னதையும் வைத்து நபிகளாரின் இறுதிக் காலத்தில் ஹதீஸ் எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆயினும் அனைத்து ஹதீஸ்களும் தொகுப்படவில்லை என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை] 

குர்ஆனோடு மற்ற எதுவும் கலந்துவிடக்கூடாது என்பதற்காக ஹதீஸ் எழுத அனுமதிக்கப்படவில்லை என்பதே பொதுவான கருத்தாகும். 

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும்போது முழுக்குர்ஆனும் ஒரு புத்தக வடிவில் தொகுக்கப்படவேயில்லை. எழுத அனுமதிக்கப்பட்ட குர்ஆனே ஒரு புத்தகமாக தொகுக்கப்படாதபோது எழுத அனுமதிக்கப்படாத ஹதீஸைப் பற்றி சொல்லத் தேவையேயில்லை. நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ் முழுவதும் நபித்தோழர்களின் உள்ளத்தில் பசுமரத்து ஆணிபோல் பதிந்திருந்தது. அதனால் ஹதீஸை எழுத வேண்டும் என்ற எந்தத் தேவையுமில்லாமல் இருந்தது. 

குர்ஆனின் சட்டங்களை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தினார்கள் என்பதை அறிந்திருந்த நபித்தோழர்கள் அதன் அடிப்படையில் மார்க்க நடைமுறைகளை நடைமுறைப்படுத்தி வந்தனர். 

நபி(ஸல்) அவர்கள் மரணித்து சுமார் 15 ஆண்டுகள் கடந்த பிறகுதான் குர்ஆன் ஒரு புத்தக வடிவில் தொகுக்கப்பட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டது. குர்ஆன் புத்தக வடிவில் வந்து விட்டாலும்  ஹதீஸ்கள் நபித்தோழர்களின் உள்ளங்களிலேயேதான் இருந்தது. 

*குழப்பம்* 

இஸ்லாமிய ஆட்சி விரிந்தது. குழப்பமும் அதிகரிக்கத் தொடங்கியது. குழப்பத்தின் உச்சகட்டமாக ஸஹாபாக்கள் தங்களுக்குள் இரு பிரிவினராக மாறி அலி(ரலி) அவர்கள் மற்றும் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் எதிரெதிர் தலைமையின்கீழ் சன்டையிட்டுக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டது(ஒட்டகப் போர்). 

ஒருகட்டத்தில், அலி(ரலி) அவர்களின் வழியே வந்த ஹதீஸ்களை மட்டும் வைத்து ஒரு கூட்டம் உருவானது. அதன் அடிப்படையில் மட்டுமே மார்க்கத்தை அமைத்துக் கொண்ட அந்த கூட்டம் அபூபக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருக்கு காபிர் பட்டமும் கொடுத்தது. பதிலுக்கு அந்த கூட்டத்திற்கு காபிர் ஃபத்வா கொடுக்க விரும்பாத நன்மக்கள்,  மக்களிடம் குழப்பம் ஏற்படுத்துவதில் இருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக 
அவர்களை "ஷியா" என்று தனியே பிரித்து அழைத்தனர். இதற்குப் பின்னர்தான் நபி(ஸல்) அவர்களின் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றும் தங்களை "அஹ்லே சுன்னா" என்றும் கூறும் தேவை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. 

"நாங்களும் முஸ்லிம்" என்று  கூறிக்கொள்ளும் அனைவரிடமிருந்தும் தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ளும் தேவை ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. 

குழப்பம் மிகுந்த அந்த காலகட்டத்திலும் ஹதீஸ்கள் தொகுக்கப்படவில்லை. இந்நிலையில், ஹதீஸ்களுள் நபித்தோழர்கள் கொண்டிருந்த தவறான புரிதல்களும் விவாதத்திற்குள்ளானது. [உதாரணமாக, மிஃராஜ் பயணத்தில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை கண்டார்கள் என்ற தவறான புரிதலும் சிலரிடம் இருந்தது]

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் உட்பட சில நபித்தோழர்களும் தங்களுடைய முழு நேரத்தையும் ஹதீஸ்களை மக்களுக்கு அறிவிப்பதற்காகவே ஒதுக்கினர். இதன் மூலம், குர்ஆனும் அதற்கு விளக்கமாக அமைந்த ஹதீஸ்களும் மக்களுக்கு கிடைப்பது எளிதாகியது. ஹதீஸ்களை, அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு பரப்பினர். இவ்வாறு, ஹதீஸ்களை அறிவித்தவர்களை "அறிவிப்பாளர்கள்" என பின்னாளில் வந்தவர்கள் அழைத்தனர். அவர்களை வரிசைப்படுத்தவும் செய்தனர். 

*அறிவிப்பாளர் வரிசை*

** நபி(ஸல்) அவர்களிடமிருந்து மார்க்கத்தை அறிந்து பின்பற்றுபவர்களை "ஸஹாபி" என்றனர். 

** ஸஹாபியிடமிருந்து மார்க்கத்தை அறிந்து அதை பின்தொடர்ந்தவர்களை "தாபி" என்றனர்.

** தாபியிடமிருந்து மார்க்கத்தை அறிந்து அவரை பின்தொடர்ந்தவர்களை "தாபிவுத் தாபியீன்" என்றனர். 

இதற்குப் பிறகு, இந்த  "தாபிவுத் தாபியீன்"  களிடமிருந்து மார்க்கத்தை அறிந்து பின்தொடர்ந்தவர்களை எப்படி அழைத்தனர்? 

இதுதான் கேள்வி. இதற்கு பதில் என்ன?

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

Part -8

https://m.facebook.com/story.php?story_fbid=757176351372169&id=100012394330588

Part -6 

https://m.facebook.com/story.php?story_fbid=756380564785081&id=100012394330588

No comments:

Post a Comment