பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, July 7, 2026

பார்வையைப் பாதுகாப்போம்"


"பார்வையைப் பாதுகாப்போம்"

இன்றைய பொழுதுபோக்கு உலகில் திரைப்படங்கள் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. 

ஆனால் பெரும்பாலான திரைப்படங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான கவர்ச்சியையும், உடல் அழகையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

 குறிப்பாக, அழகுபடுத்தப்பட்ட அந்நியப் பெண்களின் தோற்றங்களும் காட்சிகளும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து காட்டப்படுகின்றன.

ஒரு முஸ்லிம் இத்தகைய காட்சிகளைப் பார்ப்பது மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள, பார்வையைப் பற்றிய இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் முதலில் வழங்கும் கட்டளை பார்வையைக் கட்டுப்படுத்துவது பற்றியதாகும்.

✍️✍️ இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும். இதுவே அவர்களுக்குத் தூய்மையானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 24 : 30)

✍️✍️ இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்! அவர்கள், (சாதாரணமாக) வெளியில் தெரிவதைத் தவிர தமது அலங்காரத்தில் வேறு எதையும் வெளிப்படுத்த வேண்டாம். தமது தலைமுக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின்மீது போட்டுக் கொள்ளட்டும்.

(அல்குர்ஆன் 24 : 31)

இந்த இரண்டு வசனங்களும் கற்பைப் பாதுகாப்பதற்கான முதல் படியாக பார்வையைக் கட்டுப்படுத்துவதை முன்வைக்கின்றன. 

கற்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற இலக்கை அடைய, அதற்கு வழிவகுக்கும் பார்வைகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இவ்வசனங்களின் தெளிவான போதனையாகும்.

நபியவர்கள் (ஸல்) அவர்கள் பொதுவழிகளில் அமர்ந்திருப்பவர்களுக்குக் கூட பார்வையைத் தாழ்த்துவது ஒரு கடமையாகும் என்று போதித்துள்ளார்கள்.

✍️✍️ “நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் உரையாடுகின்ற எங்கள் அவை” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் அந்த அவைக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “பாதையின் உரிமை என்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), 
நூல்கள்: புகாரி(2465), முஸ்லிம்(4305)

பொதுவழிகளில் இயல்பாக மக்களைக் காணும் சூழ்நிலையில்கூட பார்வையைக் கட்டுப்படுத்துமாறு கட்டளையிடப்பட்டிருக்கும்போது, திரையில் தொடர்ந்து அந்நியப் பெண்களின் உருவங்களை ரசித்து பார்ப்பது இந்தக் கட்டளையின் நோக்கத்திற்கு எதிரானதாகும்.

சில நேரங்களில் எதிர்பாராத விதமாக பார்வை விழுந்துவிடலாம். அதற்கும் நபியவர்கள் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

✍️✍️ நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இயல்பாக (அந்நியப் பெண்மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக் கொள்ள வேண்டுமென எனக்கு ஆணையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி), 
நூல்கள்: முஸ்லிம் (4363), திர்மிதீ (2700), அபூதாவுத் (1836), அஹ்மத் (18369)

எதிர்பாராமல் ஒரு முறை பார்வை விழுந்தாலும் அதைத் தொடராமல் உடனடியாகத் திருப்பிக் கொள்ள வேண்டும் என்பதே நபிவழியாக இருக்கும்போது, திரைப்படங்களில் திட்டமிட்டு பல நிமிடங்கள் அல்லது பல மணி நேரங்கள் அந்நியப் பெண்களைப் பார்ப்பது இந்த வழிகாட்டுதலுக்கு முற்றிலும் முரணானதாகும்.

அடுத்தவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் அளவுக்கு இஸ்லாம் பார்வை விஷயத்தில் கடுமையான ஒழுங்குகளை வகுத்துள்ளது.

✍️✍️ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டிற்குள் எட்டிப் பார்க்கும் போது, அவர் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை''

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),
 நூல்: புகாரி 6902

✍️✍️ ஸஹ்ல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறையின் கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது. அதனால் தமது தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்த போது "என்னை நீ பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதினாலேயே "அனுமதி கேட்க வேண்டும்'' என்பது சட்டமாக்கப்பட்டது'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 6901

இந்த ஹதீஸ்கள் பார்வை என்பது சாதாரண விஷயமல்ல என்பதையும், அது ஒழுக்கத்தைப் பாதுகாப்பதோடு நேரடியாக தொடர்புடையது என்பதையும் உணர்த்துகின்றன.

மேலும், ஒரு இளைஞனும் ஒரு இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்ப்பதால் ஏற்படக்கூடிய சோதனையை நபியவர்கள் (ﷺ) நேரடியாகக் கவனத்தில் கொண்டுள்ளனர்.

✍️. கஸ்அம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் நபி (ﷺ) அவர்களிடம் ஒரு மார்க்கத் தீர்ப்பைக் கேட்டு வந்தார். அப்பெண் "என் தந்தை மிகவும் வயோதிகரானவர். அல்லாஹ் விதித்த ஹஜ் கடமை அவரை அடைந்துள்ளது. ஆனால் அவரால் ஹஜ் செய்ய இயலாது. அவருக்குப் பதிலாக நான் ஹஜ் செய்தால் அது அவருக்குப் போதுமானதா?" அதற்கு நபியவர்கள் "உன் தந்தைக்காக நீ ஹஜ் செய்." என்று கூறினார்கள். அப்போது நபியவர்களின் பின்னால் அமர்ந்திருந்த ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் கழுத்தை நபி (ﷺ) அவர்கள் திருப்பிவிட்டார்கள். இதைக் கண்ட அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தந்தையின் சகோதரரின் மகனின் (ஃபழ்லின்) கழுத்தைத் ஏன் திருப்பினீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ﷺ) அவர்கள் "ஒரு இளைஞனையும் ஒரு இளம்பெண்ணையும் நான் கண்டேன். அவர்கள் இருவரின் மீது ஷைத்தானின் சோதனை ஏற்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்." என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதி (885), அஹ்மத் (562)

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், அந்தப் பெண் ஒரு மார்க்கக் கேள்வியைக் கேட்க வந்திருந்தார். அதாவது முற்றிலும் அனுமதிக்கப்பட்ட மற்றும் நன்மையான ஒரு சூழ்நிலை. இருந்தபோதும், ஒரு இளைஞனும் ஒரு இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது ஷைத்தானின் சோதனைக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சத்தில் நபியவர்கள் (ﷺ) உடனடியாகத் தலையிட்டு பார்வையை மாற்றினார்கள்.

எனவே, அந்நிய ஆண்களும் பெண்களும் கவர்ச்சிகரமாகக் காட்டப்படும் திரைப்படங்களை ரசித்து பார்ப்பது, குர்ஆன் வலியுறுத்தும் பார்வைத் தாழ்த்தல் என்ற கட்டளைக்கும், நபிவழி போதனைகளின் நோக்கத்திற்கும் முரணானதாகும்.

 பார்வையைப் பாதுகாப்பது கற்பைப் பாதுகாப்பதற்கான வாசலாகவும், இதயத்தின் தூய்மையைப் பாதுகாப்பதற்கான முக்கிய வழியாகவும் இஸ்லாம் கற்பிக்கிறது. 

அதனால் ஒரு முஸ்லிம் தனது கண்களையும், இதயத்தையும், சிந்தனைகளையும் பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய காட்சிகளிலிருந்து விலகி இருப்பதே இறையச்சத்தின் அடையாளமாகும்.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான்.
 கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும்.

 நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். 
மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

நூல் : புகாரி (6612)

- Abdun Nasir M.I.Sc.,

Monday, July 6, 2026

மனித ஆசைக்கு முடிவு எங்கே?

மனித ஆசைக்கு முடிவு எங்கே?

கிடைத்தவற்றில் திருப்தி அடைவதை விட, கிடைக்காதவற்றை அடைய வேண்டும் என்ற ஆசை  மனிதனை தொடர்ந்து ஓட வைக்கிறது.

✍️✍️நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

"ஆதமின் மகனுக்கு ஒரு பள்ளத்தாக்கு அளவு தங்கம் இருந்தாலும், அவன் இன்னொரு பள்ளத்தாக்கு (தங்கம்) தனக்கு வேண்டும் என்று விரும்புவான். அவனுடைய வாயை மண்ணைத் தவிர வேறு எதுவும் நிரப்பாது. மேலும் தவ்பா செய்பவரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்." 

(ஸஹீஹ் புகாரி 6439)

மனிதன் செல்வத்தைத் தேடுகிறான்…

பதவியைத் தேடுகிறான்…

 புகழைத் தேடுகிறான்…

 உலக இன்பங்களைத் தேடுகிறான்…

ஆனால் ஆசைக்கு ஒரு எல்லை வைக்கவில்லை என்றால், அவன் கையில் எவ்வளவு இருந்தாலும் அவன் மனம் ஏழையாகவே இருக்கும்.

உண்மையான செல்வம் பொருட்களின் அதிகரிப்பு அல்ல; மனதின் திருப்தியே ஆகும்.

✍️✍️நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்
 (ஸஹீஹ் புகாரி 6446,)

இந்த உலகில் நாம் சேர்ப்பது அனைத்தும் ஒருநாள் நம்மை விட்டு பிரியும். 
ஆனால் அல்லாஹ்விடம் நாம் அனுப்பி வைக்கும் நற்காரியங்களே நிரந்தரமாக இருக்கும்.
எனவே…
கிடைக்காத ஒன்றுக்காக ஏங்குவதற்கு முன், அல்லாஹ் கொடுத்திருக்கும் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்.
ஏனெனில்…
ஆசைக்கு முடிவு இல்லை; ஆனால் வாழ்க்கைக்கு முடிவு உண்டு. உலகம் தற்காலிகமே!மறுமையே நிலையானது.
மறுமைக்கு முடற்சிப்போம்🤲
- Abdun Nasir M.I.Sc.,

Sunday, July 5, 2026

அல்லாஹ்வின் கருணையை

ஒரு தாய் தனது குழந்தையை எவ்வளவு நேசிப்பாள்?

அந்த அன்பை விட பல மடங்கு அதிகமாக
அல்லாஹ் தனது அடியார்களை நேசிக்கிறான். 🤍

நாம் எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும்,
உண்மையாக அவனை நோக்கித் திரும்பினால்,
அவனுடைய கருணையின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.

🤲 அல்லாஹ்வின் கருணையை ஒருபோதும் இழந்து விடாதீர்கள்.

💭 "அடியார்களின் மீது அல்லாஹ்வின் அன்பும் கருணையும் எல்லையற்றது."
#Allah #MercyOfAllah #IslamicReminder #Hadith #Islam #TamilIslamicPost #DeenReminder #IslamicQuotes #Muslim #Bukhari #IslamicStatus #Reminder #Forgiveness #HopeInAllah #HasbiHorizon

மனிதனின் கண்ணீரைத் துடைப்பது, ஒரு துயரத்தை நீக்குவது.....


🌿 ஒரு மனிதனின் கண்ணீரைத் துடைப்பது, ஒரு துயரத்தை நீக்குவது, ஒரு சிரமத்தில் உதவுவது — இவை அனைத்தும் அல்லாஹ்விடம் மிகப் பெரிய நற்செயல்களாகும்.

இன்று யாரோ ஒருவர் உங்கள் உதவிக்காக காத்திருக்கலாம். ஒரு நல்ல வார்த்தை, ஒரு துஆ, ஒரு சிறிய உதவி கூட அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

நாம் பிறரின் துன்பங்களை இலகுவாக்க முயற்சித்தால், நமது துன்பங்களை அல்லாஹ் இலகுவாக்குவான்.

🤲 யா அல்லாஹ்! துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் மனதையும், பிறருக்கு நன்மை செய்யும் குணத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக. எங்கள் உலக மற்றும் மறுமைத் துன்பங்களை நீக்குவாயாக.

آمين 🤍
#IslamicReminder #Hadith #IslamicQuotes #MuslimUmmah #Deen #Islam #Sunnah #Allah #Reminder #HelpingOthers #Sadaqah #TamilIslamicPost #HasbiHorizon #Jannah #Faith

அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதை.....


அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான்
என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு தண்டனையை தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் அந்த மறுமை நாளுக்காகத்தான்.

[#அல்குர்ஆன் 14:42]

#நபி_ﷺ அவர்கள் கூறினார்கள்:  

" அநீதி இழைக்கப்பட்டால், அநீதி இழைக்கப்பட்டவரின் #துஆவுக்கும் #அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத்
திரையும் இல்லை." 

[புகாரி 2448]

கர்வமல்ல, தாழ்மையே.

- நாம் நடக்கும் இந்த பூமி நமக்குச் சொந்தமல்ல; அல்லாஹ் தற்காலிகமாக வழங்கிய அமானிதம். 

- இன்று *செல்வம், பதவி, அழகு, அறிவு* என்று எதைப் பெற்றிருந்தாலும், ஒரு கணத்தில் அனைத்தையும் இழக்க நேரிடலாம். ஆகவே மனிதனை உயர்த்துவது கர்வமல்ல, தாழ்மையே.

- கர்வம் மனிதனை இறைவனிடமிருந்தும், மக்களிடமிருந்தும் தூரப்படுத்துகிறது. 

- ஆனால் தாழ்மை அல்லாஹ்வின் நேசத்தையும், மக்களின் மரியாதையையும் பெற்றுத் தருகிறது. நம் ஒவ்வொரு அடியும் பணிவோடும், நன்றியோடும், இறையச்சத்தோடும் அமையட்டும்.

“*தாழ்மையாக வாழ்பவனை அல்லாஹ் உயர்த்துவான்; கர்வம் கொண்டவனை அவனே தாழ்த்துவான்*"

வெட்கம்


🌻திருமணங்களில் மலர வேண்டிய வெட்கம் 🌻

மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மத்யன் நாட்டில் ஒரு நல்ல மனிதரின் இரண்டு மகள்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். 

திருமணம் செய்வதற்காக அவரிடம் எட்டு ஆண்டுகள் பணியாற்ற ஒப்புக்கொண்டார்கள்; பத்து ஆண்டுகள் நிறைவு செய்தால் அது அவர்களின் விருப்பம் என்று உடன்படிக்கை செய்தார்கள். 

திருமண உடன்படிக்கையின் ஒருபகுதியாக பத்தாண்டுகள் பணிசெய்வதற்கு மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் முன்வரும் அளவிற்கு அப்பெண்ணிடம் அப்படி என்னதான் இருந்தது?

இதுதான் நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி.

மத்யன் நகர முதியவரின் இரு மகள்களைப் பற்றியும் அவர்களிடம்  இருந்த சிறப்புகளை குர்ஆன் நேரடியாக விரிவாகப் பட்டியலிடவில்லை. 

ஆனால் இறைவசனங்களைப் படித்தால் அவ்விரு இளம் பெண்களிடமும் இருந்த  உயர்ந்த குணத்தை நாம் அறிந்து கொள்ளலாம். 

இரு சகோதரிகளில் ஒருவர் மூஸா எனும் அழகிய வாலிபனிடம் பேசவந்த அப்பொழுதை அல்குர்ஆன் பின்வருமாறு வர்ணிக்கிறது. 

✍️“அவ்விருவரில் ஒரு பெண் அவரிடம் வெட்கத்துடன் நடந்து வந்து கூறினாள்.....“

 (அல்குர்ஆன் 28:25)

கவனித்துப் பாருங்கள்!
இறைவன் அவளுடைய அழகையோ, செல்வத்தையோ, உடலமைப்பையோ குறிப்பிடவில்லை. மாறாக அவளுடைய வெட்கத்தையே குறிப்பிடுகிறான். 

ஒரு பெண்ணின் உயர்ந்த ஆபரணம் என்ன என்பதை இந்த ஒரு வசனமே நமக்கு உணர்த்துகிறது.

மற்றொரு சகோதரி தனது தந்தையிடம் மூஸா (அலை) அவர்களைப் பற்றி இவ்வாறு கூறினாள்: 

✍️✍️“என் தந்தையே! இவரைப் பணியமர்த்திக் கொள்வீராக! நீர் பணியமர்த்துபவரில் சிறந்தவர் யாரெனில் வலிமையானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருப்பவர்தான்” 

 (அல்குர்ஆன் 28:26)

இது மூஸா (அலை) அவர்களின் பண்பை குறிப்பிட்டாலும், 

ஒரே ஒரு நிகழ்வில் மூஸா (அலை) அவர்களின் வலிமையையும் நம்பகத்தன்மையையும் புரிந்து கொள்ளும் மதிநுட்பம் அந்தப் பெண்ணிடம் இருந்தது. மேலும் நற்பண்புகளை மதிக்கும் குடும்பச் சூழலில் அவள் வளர்க்கப்பட்டிருந்தாள் என்பதையும் இந்த வசனம் உணர்த்துகிறது.

ஒருத்தியிடம் வெட்கம் இருந்தது.

மற்றொருத்தியிடம் நற்பண்பை அறியும் மதிநுட்பம் இருந்தது.

மூஸா (அலை) அவர்கள் வெட்கம் என்ற உயர் பண்பிற்காக, அல்லது ஒரு நிகழ்விலேயே தன்னை மதிப்பீடு செய்தவள் தன்னுடைய வாழ்வின் எல்லா நிலையிலும் தன் எண்ணமறிந்து நடந்து கொள்வாள் என்ற மதிநுட்பத்திற்காக இருவரில் ஒருவரை திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கலாம். 

(இது இறைவசனங்களிலிருந்து அறிஞர்கள் எடுத்துரைப்பது. அல்லாஹ்வே நன்கறிந்தவன்.)

 எந்தப் பண்பை எடுத்துக் கொண்டாலும் இரண்டுமே உயர்ந்த பண்புகள்தான். 

 ஒரு வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் செல்வம், அழகு, அந்தஸ்து போன்றவற்றை விட மார்க்கப்பற்று, நற்பண்பு, வெட்கம், நம்பகத்தன்மை, மதிநுட்பம், போன்ற குணங்களே முதன்மை பெற வேண்டும் என்பதை மூஸா (அலை) அவர்களின் வரலாறு,  நமக்கு உணர்த்துகிறது.

ஒரு நல்ல குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் வெளிப்புற அழகோ அலங்காரமோ அல்ல; மாறாக வெட்கம், நம்பகத்தன்மை, நல்லொழுக்கம், மதிநுட்பம் போன்ற உயர்ந்த பண்புகள்தான். 

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது அழகு மட்டும் அல்ல; பொறுப்பேற்கும் திறன், நம்பகத் தன்மை , குணநலன்கள் ஆகியவை கவனிக்கப்பட வேண்டும் என்பதையும் மூஸா (அலை) அவர்களின் திருமண நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது. 

ஆனால் இன்று நமது திருமண நிகழ்வுகள் எந்தத் திசையில் பயணிக்கின்றன?

நபிமார்களின் வரலாற்றில் வெட்கம் உயர்வாகப் போற்றப்பட்ட நிலையில்,

 இன்றைய நமது இஸ்லாமிய சமூகத்தில் அலங்கரிக்கப்பட்ட மணமகளை பொதுமக்களின் பார்வைக்கு முன்னிறுத்துவதும்,  

மாப்பிள்ளை தனது பைக்கின் பின்னால் பெண்ணை வைத்து பவனி வர
 மாப்பிள்ளைத் தோழர்கள் ஊர்வலமாகப் பின்தொடர்வதும்,

 புகைப்படங்களையும் காணொளிகளையும் பரவலாகப் பகிர்வதும் இஸ்லாமியர்களின் திருமணங்களில் சாதாரணமாகிவிட்டன.

அல்லாஹ் கூறுகிறான் : 
 ✍️✍️ “உங்கள் வீடுகளில் தங்கியிருங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் அலங்காரத்தை வெளிக்காட்டியது போல் வெளிக்காட்டித் திரியாதீர்கள்!“

(அல்குர்ஆன் 33 : 33)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் : 

 ✍️✍️ “இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும். இதுவே அவர்களுக்குத் தூய்மையானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.“

(அல்குர்ஆன் 24 : 30)

இஸ்லாம் வலியுறுத்தும் வெட்கம், மறைவு, கண்ணியம் ஆகிய பண்புகளுடன் இந்த ஊர்வல நிகழ்வு எவ்வாறு பொருந்துகிறது? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

மார்க்க முரண் காரியங்களை செய்வதற்கு வெட்கப்படுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும். 

✍️ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். வெட்கமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையே.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),
 நூல் : புகாரி (9)

✍️✍️ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீ வெட்கப்படவில்லை யென்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள் ."

அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் (ரலி), நூல் : புகாரி (3484)

இன்று திருமண ஏற்பாடுகளில் நாம் முதலில் விசாரிப்பது என்ன?

அழகையா?
வருமானத்தையா?

அல்லது வெட்கம், இறையச்சம், நற்பண்பு ஆகியவற்றையா?

மூஸா (அலை) அவர்களின் வரலாறு, ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பது வெளிப்புற அலங்காரம் அல்ல; உயர்ந்த குணநலன்கள்தான் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
அழகு காலத்தால் மாறலாம்.
செல்வம் வரலாம், போகலாம்.
ஆனால் வெட்கம், நற்பண்பு, இறையச்சம் ஆகியவை நிலையான செல்வங்களாகும்.

- Abdun Nasir M.I.Sc.,

விரல் ரேகைகள் (Fingerprints)

உங்கள் விரல் நுனிகள்… அல்லாஹ்வின் வல்லமையின் ஓர் அத்தாட்சி

உங்கள் விரல் ரேகைகள் (Fingerprints) இந்த உலகில் வேறு யாருடையதையும் ஒத்ததல்ல.

உங்கள் பெற்றோருடையதும் அல்ல...

உங்கள் பிள்ளைகளுடையதும் அல்ல...

இதுவரை வாழ்ந்த எந்த மனிதருடையதும் அல்ல.

ஒவ்வொரு மனிதனுக்கும், அல்லாஹ் தனித்துவமான விரல் ரேகையை வழங்கியிருக்கிறான்.

இன்று, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை அடையாளம் காண விரல் ரேகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன்பே, உயிர்த்தெழுதல் பற்றி பேசும்போது, அல்லாஹ் குர்ஆனில் ஒரு வியப்பூட்டும் உண்மையைக் கூறினான்:

«﴿بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ﴾»

«"ஆம்! அவனுடைய விரல் நுனிகளைக்கூட முன்புபோல் துல்லியமாக அமைக்க நாம் வல்லவர்களாக இருக்கிறோம்."
(ஸூரத்துல் கியாமா 75:4)»

இது, அல்லாஹ்வின் எல்லையற்ற ஆற்றலையும் முழுமையான அறிவையும் நினைவூட்டுகிறது.

உங்களை இவ்வளவு நுணுக்கமாகப் படைத்தவன், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் நன்கு அறிந்திருக்கிறான்.

எனவே, உங்களுடைய எந்தக் கண்ணீரும், எந்தத் துஆவும், எந்த நற்செயலும் அல்லாஹ்விடம் மறைந்ததல்ல.

ஸுப்ஹானல்லாஹ்!

அல்-ஹாகிம் அந்-நைஸாபூரி


ஹதீஸ் கலை வரலாற்றில் 'அல்-ஹாகிம் அந்-நைஸாபூரி' என்று சொன்னவுடன், உலகப் புகழ்பெற்ற 'அல்-முஸ்தத்ரக்' நூலை எழுதிய அபூ அப்துல்லாஹ் அல்-ஹாகிம் (ரஹ்) தான் பலருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவார். ஆனால், அவருக்கே உஸ்தாதாக இருந்து, ஹதீஸ் கலையில் ஒரு மாபெரும் அறிவுச் சாம்ராஜ்ஜியத்தை நிர்வகித்த மற்றொரு 'ஹாகிம்' இருக்கிறார்.

அவர்தான் அபூ அஹ்மத் அல்-ஹாகிம் அந்-நைஸாபூரி! ஹதீஸ் துறை அறிஞர்கள் அவரைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, மரியாதையுடன் 'அல்-ஹாகிம் அல்-கபீர்' (பெரிய ஹாகிம்) என்று அழைப்பார்கள்.

முஹம்மத் இப்னு முஹம்மத் இப்னு அஹ்மத் என்ற இயற்பெயர் கொண்ட இந்த மாமேதையின் வியக்க வைக்கும் ஹதீஸ் கலைப் பயணத்தையும், அவரது அசாத்தியமான அறிவுத் திறனையும் பார்ப்போம்.

ஹிஜ்ரி 285-ஆம் ஆண்டு, அன்றைய இஸ்லாமிய அறிவுலகின் தலைநகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்த குராசான் மாகாணத்தின் ' நைஸாபூர் நகரில் இவர் பிறந்தார். இளமைப் பருவத்திலேயே கல்வியின் மீது தீராத தாகம் கொண்ட இவர், ஹதீஸ்களைத் தேடி பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

ஈராக், ஹிஜாஸ் (மக்கா, மதீனா), குராசான், மாவர அந்-நஹ்ர் என இஸ்லாமிய உலகின் மூலைமுடுக்கெல்லாம் பயணித்து, அக்காலத்தில் வாழ்ந்த பல நூறு முஹத்திஸ்களைச் சந்தித்து, லட்சக்கணக்கான ஹதீஸ்களைக் கேட்டறிந்து நெட்டுருவாக்கினார்.

அபூ அஹ்மத் அல்-ஹாகிம் அவர்கள் வெறும் ஹதீஸ்களை மனனம் செய்து ஒப்புவிக்கும் 'ஹாஃபிழ்' மட்டுமல்ல; அவர் ஹதீஸ் கலையின் அறுவை சிகிச்சை நிபுணரைப் போன்றவர்.

ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் பார்ப்பதற்கு மிகச் சரியானது போலத் தோன்றும். ஆனால், அதனுள் மிக நுண்ணிய வரலாற்று முரண்பாடோ அல்லது அறிவிப்பாளர் பிழையோ மறைந்திருக்கும். அதைக் கண்டுபிடிக்கும் 'இலல்' கலையில் இவர் ஒரு மாபெரும் சிகரமாகத் திகழ்ந்தார்.

நைஸாபூர் நகரில் இவர் ஹதீஸ் விரிவுரை நடத்த அமர்ந்தால், பல திசைகளிலிருந்தும் மாணவர்கள் திரள்வார்கள். 'அல்-முஸ்தத்ரக்' நூலை எழுதிய புகழ்பெற்ற அபூ அப்துல்லாஹ் அல்-ஹாகிம் இவருடைய முதன்மை மாணவராவார்!

இவரது நூற்களில் முத்தாய்ப்பாகத் திகழ்வது, ஹதீஸ் கலைக்கு இவர் வழங்கிய மாபெரும் பொக்கிஷமான "அல்-அஸாமி வல்-குனா" (الأسامي والكنى - பெயர்களும் சிறப்புப் பெயர்களும்) என்ற பிரம்மாண்டமான நூலாகும். இந்த நூல் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா?

ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பல நேரங்களில் தங்களது இயற்பெயரால் (உதாரணமாக: முஹம்மத், அலி) அழைக்கப்படுவார்கள். சில நேரங்களில் தங்களது குன்யா எனப்படும் சிறப்புப் பெயரால் (உதாரணமாக: அபூ அப்துல்லாஹ், அபூ அலி) அழைக்கப்படுவார்கள். இதனால் ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரில் பெரும் குழப்பம் ஏற்படும். "இங்கே சொல்லப்படும் அபூ அலி யார்? அவர் நம்பகமானவரா அல்லது பலவீனமானவரா?" என்று முஹத்திஸ்கள் குழம்புவார்கள்.

இந்தக் குழப்பத்தை நிரந்தரமாகத் தீர்ப்பதற்காகவே, எந்தெந்த அறிவிப்பாளர்களுக்கு என்னென்ன பெயர்கள், என்னென்ன குன்யாக்கள் உள்ளன என்பதை மிகத் துல்லியமாக ஆய்வு செய்து பல பாகங்களாக இந்த நூலை அவர் எழுதினார். இன்றும் ஹதீஸ் அறிவிப்பாளர்களைக் கண்டறியும் ஆய்வாளர்களுக்கு இந்த நூல் ஒரு அத்தியாவசியக் கையேடாகும்.

இவரது மற்ற நூல்களில் "அவாலீ மாலிக் பின் அனஸ்" குறிப்பிடத்தக்கது. இதில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட 236 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஸஹீஹ் மற்றும் பலவீனமான ஹதீஸ்கள் இரண்டும் உள்ளன.

அதேபோல்,

"ஷிஆர் அஸ்ஹாபுல் ஹதீஸ்" என்ற நூலில் 78 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இதிலும் ஸஹீஹ் மற்றும் பலவீனமான ஹதீஸ்கள் இரண்டும் காணப்படுகின்றன.

ஒரு ஹதீஸ் அறிவிப்பாளர் நேர்மையானவரா அல்லது பலவீனமானவரா, நினைவாற்றல் குறைந்தவரா என்பதை எடைபோடுவதில் அபூ அஹ்மத் அல்-ஹாகிம் ஒரு 'தராசு' போலச் செயல்பட்டார்.

அவர் அறிவிப்பாளர்களை மதிப்பிடும்போது, எந்தவிதப் பாரபட்சமும் காட்டமாட்டார். ஒருவரின் தனிப்பட்ட பக்திக்கும், ஹதீஸை மனனம் செய்யும் திறனுக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் மிகத் துல்லியமாகப் பிரித்துப் பார்த்தார். "இவர் மிகவும் நல்ல மனிதர், இரவு முழுவதும் தொழுபவர், ஆனால் ஹதீஸ்களை மனனம் செய்வதில் அவருக்குக் கோளாறு உள்ளது, எனவே அவர் பலவீனமானவர்" என்று மிகத் தைரியமாகத் தீர்ப்பளிப்பார்.

அவரது மதிப்பீட்டு வார்த்தைகள் பிற்கால அறிஞர்களான இமாம் தஹபீ, இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி போன்றோரால் தங்களின் நூல்களில் இறுதித் தீர்ப்பாக எடுத்தாளப்பட்டன. அந்தளவுக்கு அவருடைய 'ஜர்ஹ் வத்-தஃதீல்' நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருந்தது.

இவரது அசாத்தியமான அறிவுத்திறனைப் பற்றி இவரது சமகால மற்றும் பிற்கால அறிஞர்கள் பிரமித்துப் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர்:

அபூ அப்துல்லாஹ் அல்-ஹாகிம் (இவரது மாணவர்): "எனது ஆசிரியர் 'பெரிய ஹாகிம்' அவர்கள் தனது காலத்தில் ஹதீஸ் கலையின் இணையற்ற இமாமாகத் திகழ்ந்தார். அறிவிப்பாளர்களை அறிவதிலும், ஹதீஸ்களைப் பகுப்பாய்வு செய்வதிலும் அவரை மிஞ்சிய ஒருவரை குராசான் மாகாணம் கண்டதில்லை."

இமாம் தஹபீ (வரலாற்று ஆசிரியர்): தனது 'ஸியர் அஃலாம் அன்-நுபலா' எனும் வரலாற்றுப் பேரேட்டில் இவரைப் பற்றிப் பதிவு செய்யும்போது, "அல்-இமாம், அல்-ஹாஃபிழ், அல்-அல்லாமா (மாபெரும் இமாம், ஹதீஸ் மனனத்தின் சிகரம், மாபெரும் அறிஞர்)" என்று பட்டங்களை அடுக்கிச் சிறப்பிக்கிறார். மேலும், "ஹதீஸ்களில் உள்ள குறைகளைக் கண்டுபிடிப்பதிலும், அறிவிப்பாளர்களின் பெயர்களை அறிவதிலும் அவர் ஒரு கடலாக இருந்தார்" என்று புகழாரம் சூட்டுகிறார்.

அபூ பக்ர் அல்-கத்தீப் அல்-பக்தாதி: "அபூ அஹ்மத் அல்-ஹாகிம் அவர்கள் ஹதீஸ் கலையின் மூத்த அறிஞர்களில் ஒருவராவார். அவரது நூல்கள் ஹதீஸ் துறையின் அடிப்படைகளை வலுப்படுத்தின" என்று குறிப்பிடுகிறார்.

தனது வாழ்நாள் முழுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும், அதில் கலப்படங்கள் நுழைந்துவிடாமல் தடுப்பதற்காகவும் அர்ப்பணித்த இந்த 'பெரிய ஹாகிம்' அவர்கள், ஹிஜ்ரி 378-ஆம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில் நைஸாபூரில் காலமானார்.

வரலாற்றில் சில ஆசிரியர்கள் தங்களின் புகழ்பெற்ற மாணவர்களால் அறியப்படுவார்கள். ஆனால், அபூ அஹ்மத் அல்-ஹாகிம் அவர்கள், ஒரு புகழ்பெற்ற மாணவனை உருவாக்கியதோடு மட்டுமின்றி, ஹதீஸ் கலையின் ஆணிவேரைக் காத்த ஒரு மாபெரும் அறிவுப் பேரரசராக இஸ்லாமிய வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கிறார்!

- Abdullah Ibnu Naseer

Tuesday, April 21, 2026

அப்துல்லாஹ் பின் அப்பாஸ்


💞 அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு வாழ்கை வரலாறு சுருக்கம் 💞

• அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் மற்றும் உம்முல் ஃபள்ல் லுபாபா என்பவர்களுக்கு மகனாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மக்காவில் பிறந்தார்கள். இவர் நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். மேலும், உம்மு ஃபஸல் பின்த் லுபாபா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய மனைவியான மைமூனா (ரழி) அவர்களின் சகோதரியாவார்.

• அப்துல்லாஹ் (ரழி) அவர்களின் மனைவியின் பெயர் ஜுஹ்ரா பின்த் அலி. இவருக்கு அலி, அப்பாஸ், முஹம்மது, ஃபள்ல், அப்துல்லாஹ் எனும் மகன்களும், அஸ்மா எனும் மகளும் இருந்தனர்.

• ஆரம்ப காலத்தில் மக்கா காஃபிர்கள், மக்காவில் இருந்த முஸ்லீம்களை அனைவரும் ஒரு பள்ளதாக்கில் ஒதுக்கி வைத்தார்கள். அவர்களுக்கு உணவு, பொருளாதாரம், வியாபாரம் எதுவும் செய்ய கூடாது என்று கட்டளையிட்டார்கள். அந்த சமயத்தில் தான் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் பிறந்தார்கள். 

• இவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தான் பெயர் வைத்தார்கள் மேலும் தன்னுடைய உமிழ் நீரிலிருந்து ஒரு சிறிதை எடுத்து கை குழந்தையாக இருந்த அப்துல்லாஹ் (ரழி) அவர்களின் நாவில் தடவினார்கள். இவரை தவிர வேறு யாருக்கும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்தது கிடையாது என்று இமாம் முஜாஹித் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

• ஹிஜ்ரத்திற்கு பின்பு, அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரழி) மற்றும் உம்முல் ஃபள்ல் லுபாபா (ரழி) ஆகியோர் குடும்பத்துடன் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அப்துல்லாஹ் (ரழி) எப்போதும் நபி (ஸல்) அவர்களுடன் அதிகம் நேரம் செலவழிப்பார்கள். மேலும் சிற்றன்னை மைமுனா (ரழி) அவர்கள் வீட்டில் அதிகம் தங்கி இருந்து இஸ்லாம் பற்றி கற்றுக்கொள்வார்கள்.

• நபி (ஸல்) அவர்கள் இரவுப் பொழுதுகளில் செய்கின்ற திக்ரு, அத்கார், துஆக்கள், பிரார்த்தனைகள் போன்றவற்றை செவிமடுப்பார்கள். இமாமிற்குப் பின்னால் நின்று எப்படி தொழ வேண்டும்? எங்கு நிற்க வேண்டும்? போன்ற சிறுசிறு விஷயங்களை எல்லாம் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து நேரடியாக கற்றார்கள்.

• நபி (ஸல்) அவர்களுடன் இரவு நேரத்தை கழிப்பார்கள் இதனால் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள், என்ன திக்ர்கள் ஓதுவார்கள், என்று நன்கு கவனித்து அதை அறிந்து வைத்திருந்தார்கள்.

• நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்வார்கள். இவ்வாறு ஒரு முறை இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் சுய தேவை பூர்த்தி செய்து விட்டு வரும் பொழுது அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் தண்ணீர் எடுத்து வைத்திருந்தார்கள். இதனை கண்ட நபி (ஸல்) அவர்கள், அவருக்கு கீழ் கண்டவாறு துஆ செய்தார்கள்.
 
இறைவா! இவருக்கு மார்க்கத்தில் நல்ல ஞானத்தைக் கொடுப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள்! மற்றொரு இடத்தில் இவருக்கு அல்குர்ஆன் ஞானத்தை வழங்குவாயாக என்று பிராத்தனை செய்தார்கள்.

(நூல் : ஸஹீஹ் புகாரி : 75, 143)

• நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாகவே இவர்கள் பிற்காலத்தில் சிறந்த அறிஞர் ஆகவும், அல்குர்ஆன் விரிவுரையாளராகவும் விளங்கினார்கள்!

• ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை சந்திக்க, அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள் அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸஹாபியுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். இதனால் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் திரும்பி வந்து விட்டார்கள். பின்னர் வந்து நபி (ஸல்) அவர்களை சந்தித்து வந்த போன செய்தி சொல்ல, நீங்கள் என்னுடன் பேசிககொண்டிருந்த ஸஹாபியை கண்ணால் கண்டிர்களா என்று கேட்க அவர் ஆம் என்றார்.

• அப்போது தான் நபி (ஸல்) அவர்கள், வந்த நபர் ஜிப்ரயில் (அலை) ஆவார். மேலும் அல்லாஹ் உங்களுக்கு மார்க்க கல்வி ஞானத்தை வழங்குவான் என்ற நற்செய்தியை கூறினார்கள்.

(நூல் : அல் முஸ்தத்ரக் ஹாகிம்)

• இதற்கு ஏற்றால் போல், அப்துல்லாஹ் (ரழி) அவர்களும் நபிமொழிகளை யார் யார் எல்லாம் அறிந்து வைத்துள்ளார்கள் என்று விசாரித்து அவர்களிடம் சென்று அதை கற்றுக்கொள்வார்கள்! சில சமயங்களில் ஒரே ஒரு விஷயம் குறித்து முப்பதிற்கும் மேற்பட்ட ஸஹாபாக்களிடம் விசாரித்து அறிவைப் பெறுவார்கள். இதன் காரணமாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுடைய அறிவுக்கூர்மை மிக நுட்பகமாக இருந்தது.

• இதன் விளைவாக முஃபஸ்ஸிருல் குர்ஆன்- குர்ஆன் விரிவுரை யாளராகவும், தர்ஜுமானுல் குர்ஆன்- குர்ஆனின் உரையாசிரியராகவும், ஹப்ருல் உம்மா: இவர் இந்த உம்மத்தின் பெரும் அறிஞராகவும் மாறினார்கள்.

• மார்க்க கல்வியை கற்க எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அதே சமயம் போர்களிலும் பங்கேற்றார்கள்! மக்கா வெற்றியின் போது சிறுவனாக இருந்தாலும் தனது தந்தையுடன் இணைந்து இஸ்லாமியப் படையில் பங்கேற்றார். ஹுனைன் போரில் முஸ்லிம்கள் இக்கட்டான நிலையைச் சந்தித்த போது, நபியவர்களுடன் உறுதியாக நின்ற வீரர்களில் இவரும் ஒருவர்.

•  ஆப்பிரிக்க வெற்றிகள்: உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் வட ஆப்பிரிக்காவின் சுபைதுலா போரில் கலந்துகொண்டார். மேலும் பாரசீகத்தின் தபரிஸ்தான் மற்றும் குர்ஜான் வெற்றிகளிலும் பங்கேற்றார்.

• அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கல்வியை கற்று கொள்ளவே தங்கள் வாழ்வில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார்கள் இதனாலயே சிரியா , எகிப்த், இராக் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து நபிமொழிகளை ஆய்ந்தறியும் கலையைக்கற்றார்கள். குர்ஆனை எப்படி அணுக வேண்டும் குர்ஆனுக்கு எப்படி உரை எழுத வேண்டும் போன்றவற்றை எல்லாம் நன்கு கற்றுக் கொண்டார்கள்.

• உமர் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்திலும், அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் சிறிய வயதினராக இருந்தாலும் அவரை எப்போதும் தம்முடன் சபையில் வைத்து கொள்வார்கள். மேலும் கருத்து வேறுபாடு உள்ளவற்றை அல்லது மார்க்க ஆலோசனைகளை அவர்களிடம் கேட்டுக்கொள்வார்கள். காரணம் பல மூத்த ஸஹாபாக்கள், தாபியின்கள் அறியாத விஷயங்களை பற்றி எல்லாம் இவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்.

• உஸ்மான் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்திலும் ஆலோசனை சபையில் அப்துல்லாஹ் (ரழி) அவர்களை உடன் வைத்திருப்பார்கள்! 

• அலி (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில், அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் பஸாரா நகரத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள். ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நீதிபதியாகவும் அந்தப் பகுதியை வழிநடத்தினார்கள்.  ஆளுநராக இருந்த போதும் மஸ்ஜித்களில் அமர்ந்து மக்களுக்குக் கல்வி போதிப்பதை நிறுத்தவில்லை. பஸாரா வாசிகள் இவரிடம் குர்ஆன், ஹதீஸ் மற்றும் இலக்கியங்களைக் கற்க அலைகடலெனத் திரண்டனர்.

• பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதிலும், பைத்துல் மால் (பொது நிதி) விவகாரங்களிலும் மிகவும் பேணுதலாக இருந்தார். ஏழை எளியவர்களுக்கு அரசு நிதியிலிருந்து உரிய உதவிகள் சென்றடைவதை உறுதி செய்தார்.

• அப்துல்லாஹ் (ரழி) இவர்களின் அறிவுரை, ஆலோசனை கேட்க பல மூத்த ஸஹாபாக்கள் வருவார்கள். இவர்கள் விளக்கமும் எளிய மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தது. எல்லோரிடமும் சகஜமாக பழகினார்கள் இதனாலயே இவரை பற்றி அறிந்து பல நாடுகளில் இருந்தும் வந்து இவரிடம் கல்வி பயின்றார்கள்.

• அல்குர்ஆன் வசனங்களை பற்றி எந்த அளவிற்கு இவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்றால், அல்குர்ஆனில் உள்ள ஒவ்வொரு வசனமும் எங்கு, யாருக்காக இறக்கப்பட்டது? இந்த வசனத்தின் பொருள் என்ன? என்பதை பற்றி மிக நன்காவே அறிந்து வைத்திருந்தார்கள்!

• அல்குர்ஆன் விரிவுரையாளராகவும் மட்டும் இல்லாமல் ஹதீஸ்களை பற்றியும் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். இவர்கள் மட்டும் சுமார் 1600 ஹதீஸ்களை அறிவித்து உள்ளார்கள் இதில் சில ஹதீஸ்களை நபி (ஸல்) அவர்களிடமே நேரடியாக கேட்டு அறிவித்துள்ளார்கள்.

• கடைசி காலத்தில் இவர்களின் கண்ணில் ஒரு நோய் ஏற்பட்டது. அதற்கு ஏதேனும் மருத்துவம் செய்தால் குணமாக வாய்ப்பு உள்ளது என்று வைத்தியர் கூறினார்கள். ஆனால் தொழுகையின் போது ஸஜ்தாவை நேரடியாக செய்யாமல் ஏதேனும் இடையில் தடுப்பு வைத்து செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள். இதை கேட்ட அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் இந்த சிகிச்சைக்கு மறுத்து விட்டார்கள்.

(நூல் : தப்ரானி)

• நீண்ட காலம் வாழ்ந்த அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் தங்கள் 72 வது வயதில் மரணித்தார்கள்! இவர்களின் மரண செய்தியை பல மூத்த ஸஹாபாக்கள் இன்று நம்மை விட்டு மிக சிறந்த கல்வியாளர் மரணித்து விட்டார்கள் என்று கவலையுடன் தெரிவித்தார்கள்!

• அறிவு என்பது வயது சார்ந்தது அல்ல, அது அல்லாஹ்வின் அருளாலும் தேடுதலாலும் கிடைப்பது என்பதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

@அல்லாஹ் போதுமானவன் 💞


Thursday, March 26, 2026

மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லாபாபீன் ஜமாஅத்தின்....


*மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லாபாபீன் ஜமாஅத்தின்* 

*திருமணச் சட்டங்கள் மற்றும் விதிகள் - 2026*

*குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில்,* மிகக் குறைந்த செலவில் நடைபெறும் திருமணமே அதிக பரக்கத் (அருள்) நிறைந்தது. தேவையற்ற சடங்குகள் மற்றும் வீண் செலவுகளைத் தவிர்த்து, சுன்னத்தான முறையில் திருமணங்களை நடத்த வேண்டும். ஜமாஅத்தின் நிர்வாகக் குழு 28 டிசம்பர் 2025 அன்று கூடி, ஏற்கனவே 2002-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளை சில மாற்றங்களுடன் 21.03.2026 முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

விதிமுறைகள்:
*1.நிச்சயதார்த்தம்:* மார்க்க ரீதியாக இது ஒரு வாக்குறுதி மட்டுமே. எனவே, மணமகன் மற்றும் மணமகள் தரப்பில் நெருங்கிய 50 நபர்களுக்கு மிகாமல், பெண்ணின் வீட்டு மஹல்லா பள்ளியிலோ அல்லது பெண் வீட்டிலோ ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையில் எளிமையாகத் திருமணத் தேதியை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

*2.ஷுக்ரானா விருந்து:* இதற்கு அழைப்பு விடுக்கக் கூடாது.

*3.திருமண மண்டபம்:* ஷுக்ரானா விருந்தை திருமண மண்டபத்தில் நடத்தக்கூடாது.

*4.பெண் வீட்டார் மீது சுமை:* ஷுக்ரானா விருந்து என்ற பெயரில் பெண் வீட்டார் மீது எந்தச் செலவையும் திணிக்கக்கூடாது.

*5.நண்பர்களுக்கு விருந்து:* திருமணத்திற்குப் பிறகு மணமகன் தன் நண்பர்களுக்கோ அல்லது மணமகள் தன் தோழிகளுக்கோ விருந்து அளிக்கக்கூடாது.

*6.ஹல்தி (மஞ்சள்) சடங்கு:* நிகாஹ்விற்கு முன் ஹல்தி போன்ற சடங்குகளைச் செய்யக்கூடாது. வெளியூர் விருந்தினர்களுக்கு மட்டும் உணவு வழங்கலாம்.

*7.தேவையற்ற சடங்குகள்:*  சோர் ஹல்தி, கட்டு-கல்தி, மரு (Maru), பெண்ணின் வீட்டிற்குப் பலகாரங்கள் கொண்டு செல்லுதல், ஸலாமி போன்ற சடங்குகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

*8.மஹர்:* மஹர் என்பது பெண்ணின் உரிமை. மணமகன் தன் வசதிக்கேற்ப எளிதாக வழங்கக்கூடிய தொகையை நிர்ணயிக்க வேண்டும். கௌரவத்திற்காக அளவுக்கு அதிகமாகவோ அல்லது பெண்ணின் அந்தஸ்துக்குக் குறைவாகவோ இருக்கக்கூடாது. குறைந்தபட்ச மஹர் 2 கிராம் தங்கம் அல்லது அதன் மதிப்பு.

*9.பூ மாலை:* நிகாஹ் சபையில் மணமகனுக்குப் பூ மாலை அணிவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

*10.புகைப்படம் மற்றும் வீடியோ:* நிகாஹ் சபையில் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது மார்க்க ரீதியாகத் தடுக்கப்பட்டுள்ளது.

*11.எளிமை:* திருமணத்தை மிகக் குறைந்த நபர்களுடன் சுன்னத்தான முறையில் நடத்த வேண்டும்.

*12.விருந்தினர்கள்:* நிகாஹ் அன்று பெண் வீட்டார் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் வெளியூர் விருந்தினர்களுக்கு மட்டும் விருந்து அளிக்கலாம்.

*13.உணவு வகை:* விருந்தில் ஒரு சாதம், ஒரு குழம்பு மற்றும் ஒரு இனிப்பு மட்டுமே இருக்க வேண்டும். இறைச்சியில் ஆடு, மாடு அல்லது கோழி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

*14.பரிசுப் பொருட்கள்:* விருந்தின் போது கிப்ட் பாக்ஸ், கூல் டிரிங்க்ஸ் (Cool Drinks) போன்றவற்றை விநியோகிக்கக் கூடாது.

*15. காலை உணவு:* மணமகன் வீட்டார் வெளியூராக இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பெண் வீட்டில் காலை உணவு ஏற்பாடு செய்யலாம்.

*16.பெண் அழைப்பு (ருக்ஸதி):* பெண்ணை அனுப்பும்போது மணமகன் வீட்டாருக்குத் தேநீர் மற்றும் பிஸ்கட் மூலம் மட்டும் உபசரிக்கலாம்.

*17.அலங்காரங்கள்:* திருமண மண்டபத்தையோ அல்லது வீடுகளையோ தேவையின்றி அதிகப்படியான விளக்குகள், மேடை அலங்காரங்கள் மற்றும் ஆடம்பரமான பந்தல்கள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

18.(பட்டியலில் விடுபட்டுள்ளது)

*19.வெயில் பாதுகாப்பு:* வெயிலில் இருந்து தப்பிக்க சாதாரணப் பந்தல் அமைக்கலாம், ஆனால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கக் கூடாது.

*20.ஆடைகள்:* நிகாஹ்விற்காக மணமகன் மற்றும் மணமகள் தரப்பில் தலா இரண்டு ஜோடி ஆடைகளுக்கு மேல் எடுக்கக் கூடாது.

*21.இதர பொருட்கள்:* மணமகன் வீட்டார் தரப்பிலிருந்து குடை, காலணி (Shoe) போன்றவற்றை அனுப்பக்கூடாது.

*22.தங்கம்:*
 குறிப்பு :- 22வது எண்ணில் இருந்த பிழையான பதிவு சரி செய்யப்பட்டுள்ளது. 

22.தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிக அதிகமாக இருப்பதால், பெரும்பாலான பெண்களின் திருமணத்தை நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. 

"விலைவாசி ஏற்றத்தினால் திருமணங்கள் தடைபடுவது, பெற்றோர்களுக்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடியைத் தருகிறது. இதனால் இளம் பெண்கள் இல்லற வாழ்க்கையில் நுழையும் வாய்ப்பை இழந்து, வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் இருந்து வஞ்சிக்கப்படுகிறார்கள்."
எனவே, வசதியுள்ளவர்கள் கூட ஒரு நெக்லஸ், இரண்டு வளையல்கள், ஒரு ஜோடி கம்மல் மற்றும் ஒரு மோதிரத்திற்கு மேல் நகைகளை அணிவிக்க வேண்டாம். இருப்பினும், மணமகன் வீட்டார் தங்களின் வசதிக்கேற்ப மணப்பெண்ணுக்கு நகைகளை வழங்கலாம்.

*23.விருந்தினர் நகை:* திருமணத்திற்கு வரும் பெண்கள் அதிகப்படியான நகைகளை அணிந்து வருவதைத் தவிர்க்க வேண்டும். இது பெண் வீட்டாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

*24.ஆடை கட்டுப்பாடு:* மணமக்கள் மற்றும் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மார்க்கத்திற்குப் புறம்பான ஆடைகளை அணியக்கூடாது.

*25.வலிமா விருந்து:* மணமகன் தன் வசதிக்கேற்ப வலிமா விருந்து அளிக்க வேண்டும். கௌரவத்திற்காகவும் புகழுக்காகவும் கடன் வாங்கிச் செய்யக்கூடாது.

*26.பெண் வீட்டார் பங்களிப்பு:* வலிமா விருந்திற்காகப் பெண் வீட்டாரிடம் பணம் வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

*27.வலிமா நேரம்:* நிகாஹ் மற்றும் தாம்பத்தியத்திற்குப் பிறகு வலிமா நடத்தப்பட வேண்டும். அதிகபட்சம் 200 கிலோ அரிசி வரை மட்டுமே சமைக்க அனுமதிக்கப்படுகிறது.

*28.பெண் வீட்டிற்குச் செல்லுதல்:* வலிமா அன்று மணமகன் பெண் வீட்டிற்குச் செல்லும்போது நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ அழைத்துச் செல்லக்கூடாது.

*29.சீதனம் (Dowry):* தந்தை தன் மகளுக்குத் தன் வசதிக்கேற்ப வழங்கும் பொருட்கள் அன்பளிப்பாகக் கருதப்படும். ஆனால், மணமகன் வீட்டாரோ அல்லது மணமகனோ நகை, பணம், வாகனம் என எதையும் சீதனமாகக் கேட்பது மார்க்கப்படி ஹராம் (தடுக்கப்பட்டது).

*30.பெண்ணின் சொத்து:* மணமகள் கொண்டு வரும் சீதனப் பொருட்களுக்கு அவரே முழு உரிமையாளர்.

*31.இதர சடங்குகள்:* சில்லா, குல் போஷி, ஈதி விருந்து, கத்னா (சுன்னத்) விருந்து, பெயரிடும் விழா மற்றும் வளைகாப்பு போன்ற சடங்குகளைச் செய்வதும் அதற்கு அழைப்பு விடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

*குறிப்பு: மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லபாபீன் ஜமாஅத் மூலம் திருமணம் செய்ய விரும்புவோர் மேற்கண்ட அனைத்து விதிகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுவோர் மீது ஜமாஅத் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.*

*அமலுக்கு வரும் தேதி: 21.03.2026*

Wednesday, March 25, 2026

பொருந்தா வாதம் அறிதல்


பொருந்தா வாதம் அறிதல்

விவாதம், தர்க்கம் என்றவுடன் ஓர் அமைப்பு மற்றோர் அமைப்புடன் ஒப்பந்தம் செய்து, நாள் குறித்து, மண்டபம் பிடித்து, பெல் அடிக்கும் நடுவர்களை நியமித்து, இருபிரிவாக அமர்ந்து பேசுதல் என்று புரிந்துவிட வேண்டாம். இங்கு அதைப் பற்றி பேசுவது நோக்கமுமல்ல. 

மாறாக நமது அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விவாதங்களில் வைக்கப்படும் கருத்துக்களில் உண்மைகளை கண்டறிவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் பொருந்தா வாதங்கள் பற்றிய அறிவை பெற்றிருப்பது அவசியமாகும். 

உணவு விரும்பிகளின் முன்னிலையில் எந்த உணவு உடலுக்கு ஏற்றது என்ற விவாதம் நடைபெற்றால் ஒரு சிறந்த சமையல்காரர், உணவியல் நிபுணரை வென்றுவிட முடியும். 

சாதரண பெரியவர்கள் முன்னிலையில் நாட்டைக் காப்பது எப்படி என்ற விவாதம் ஒரு இராணுவ அதிகாரிக்கும், பேச்சுத் திறனும், மனப்பாடத் திறனும் கொண்ட ஒரு அரசியல் வாதிக்கும் இடையே நடைபெற்றால் அந்த அரசியல் வாதி இராணுவ வீரரை வென்றுவிடுவார். திறமைமிக்க அந்த அரசியல் வாதியே மக்களை வென்றெடுப்பார்.

ஏனெனில் கேட்போரின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களின் ஆசைகளைத் தொடுவது அறிவை அடிப்படையாகக் கொண்ட வாதங்களை விட அதிக வலிமையானதாக பெரும்பான்மையினரிடம் கருதப்படுகிறது. 

“பீரங்கி வண்டிகள் எங்கள் உடல் மீது ஏறினாலும் பாபர் மசூதி இடத்தில் ஒரு செங்கல் கூட வைப்பதற்கு விடமாட்டோம்” என பாபர் மசூதி இடிப்பு கண்டண ஆர்ப்பாட்டங்களில் பல தலைவர்கள் பேசியதை நான் செவியுற்றுள்ளேன். அதைக் கேட்டதும் நானும் கூடியிருப்போருடன் சேர்ந்து “அல்லாஹு அக்பர்” என்று கூறியுள்ளேன்.. 

ஆனால் வீட்டிற்கு வந்து அந்த தலைவர்கள் பேசியதை மனக்கண் முன் கொண்டு வந்தால் அவை கூடியிருப்போரின் உணர்ச்சிகளை தூண்டுவதற்காக கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் என்பதைத்  தவிர நடைமுறையில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்ற உண்மைதான் விளங்கும். 

உண்மைகள் ஒரு விசயத்தை முறையான ஆதாரங்களுடன் ஆழ்ந்து சிந்திப்பதில்தான் வெளிப்படும். 
இன்றைய உலகில் எங்கு நோக்கினும் முறையற்ற வாதங்கள்தான் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் அறிவு ஜீவிகள் என்று தம்மை கருதிக் கொள்வோரும் அந்த முறையற்ற வாதங்களில் மூழ்கியிருப்பதுதான் உண்மைகள் உணரப்படாமல் போவதற்கும், தவறை உண்மை என பெரும்பான்மையினர் சரிகாண்பதற்கும் அடிப்படையாக விளங்குகிறது. 

“தமிழர்கள் அனைவரும் எனது நண்பர்கள், தமிழ்நாட்டில் எனக்கு யாரும் எதிரியல்ல” என ஒரு அரசியல் தலைவர் நல்லிணக்கம் கருதி பேசினார்.

 அதற்குப் பதிலளித்த மற்றொரு அரசியல் தலைவர் 
“அனைவரும் நண்பர்கள் என்றால் கரூரில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நாற்பது பேர் மரணித்ததற்கு காரணம் நான்தான் என என்மீது ஏன் பழிபோட்டீர்கள்?” எனக் கேட்டார். 

அந்த தலைவரின் ரசிகர்கள் ஆஹோ, ஓஹோ என்றனர். இதில் உள்ள முறையற்ற வாதத்தைக் கூட அவர்கள் அறிய முற்படவில்லை. 

இன்றொரு செய்தி படித்தேன். ஒரு மாணவன் தேர்வுத் தாளில் வினாக்களுக்கு உரிய விடை எழுதாமல் ஆசிரியரின் காலில் தான் விழுந்து கெஞ்சுவதைப் போன்று படம் வரைந்து “ஆசிரியரே! என்னை நம்பித்தான் எனது குடும்பம் உள்ளது. நான் ஒரு ஏழை. எப்படியாவது என்னை பாஸ் ஆக்கி விடுங்கள்!” கோரிக்கை வைத்துள்ளார். 

இதைக் கண்டு அந்த மாணவன் மீது பலரும் தமது பரிதாபங்களை வெளிப்படுத்தி அவரை பாஸ் ஆக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். 

ஒரு ஆசிரியரின் கடமை கல்வி வழங்குவதுதான். ஏழை மாணவனுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது அல்ல. சரியான பதில் எழுதாமல் மதிப் பெண் தருமாறு கேட்பதும், அதற்கு கருணையை நாடுவதும் முறையற்ற வாதமாகும். 

சரியான வாதங்கள் போல் தோன்றும். ஆனால் சிந்தித்தால் அவை தவறான வாதங்கள் என்பது வெளிப்படும். இதுதான் பொருந்தா  வாதம் ஆகும். 

இதன் காரணமாகத்தான் அதிகமான மதரஸாக்களில் “மன்த்திக்” என்ற தலைப்பில் ஒரு தர்க்கவியல் பாடமே கற்பிக்கப்படுகிறது. ஆனால் அதைக் கற்போரில் 90 சதவிகிதம் பேருக்கு அது என்ன வென்றே தெரியாது. 

அதிகமான முஸ்லிம்கள் இணைவைப்புக் காரிங்களில் மூழ்கியிருப்பதற்கும் வழிகெட்ட  ஆலிம்களின் பொருந்தா வாதங்கள் பற்றிய அறியாமையே காரணமாக உள்ளது. 

 தவறான வாதங்களில் சிக்காமல் இருக்கவும், ஒரு கருத்தில் உள்ள தவறைக் கண்டறியவும், அறிவுப் பூர்வமாக உண்மையைக் கண்டறிவதற்கும் பொருந்தா வாதம் எனும் முறையற்ற வாதங்களைப் பற்றி அறிவது மிகவும் அவசியமானதாகும்.

Abdun Nasir M.I.Sc.,

சிந்திக்கத் தெரியாதவர்கள் ???!!!!


தான் மட்டுமே நன்கறிந்தவன்.மற்றவர்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்ற நம்பிக்கையிலும், மற்றவர்களை கேலி கிண்டல் செய்யும் எழுத்து நடையிலும் உங்கள் கருத்துக்களை பதிவிடாதீர்கள். எதுவாக இருந்தாலும் உங்கள் வாதங்களை கண்ணியமாகவும், ஆதாரப் பூர்வமாகவும், மார்க்க வரம்புகளுடன் ஒப்பிட்டும் பதிவிடுங்கள்.

சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது போல் நம் பார்வைக்கு அற்பமானவர்களிடமும் அறிவுசார் ஞானம் இருக்கலாம்.

மூஸாவுக்கு கிடைக்காத கல்வி ஹளிர் அவர்களுக்கு கிடைத்திருந்தது.

பேரீத்தம் மரம் காய்க்க மகரந்தச் சேர்க்கை முக்கியம் என அண்ணலாருக்குத் தெரியாத அறிவு அன்சாரிகளிடம் இருந்தது.

"இறைவா! எனக்கு கல்வியை அதிகமாக்கு!" என இறுதித் தூதரை இறுதி வேதம் பிரார்த்திக்கச் சொல்கிறது. 

ஓருடலின் இரு பாகங்கள் சண்டையிட்டால் பாதிப்பு உடலுக்கே.

ஒரு கட்டிடத்தின் இரு பகுதிகள் பிளவுற்றால் பாதிப்பு கட்டிடத்திற்கே.

சர்க்கரை வியாதி முற்றினால் சிலருக்கு கால்களையே வெட்டி எடுப்பார்கள்.

புற்றுநோய் எல்லை கடந்தாலும் சில நேரங்களில் உடலுறுப்புகள் நீக்கப்படும்.

கருத்தியல் ரீதியாக சகோதரத்துவத்தை பாதிக்கும் நோய்களை முற்றவிடாதீர்கள்.

அறிவுசார் கருத்துக்களில் மற்றவர்களின் கருத்துக்களுக்கும் செவி கொடுங்கள். உண்மையிருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.

உண்மையில் பெருமை என்பது மக்களை மட்டமாகக் கருதுவதும், உண்மையை ஏற்க மறுப்பதும் தான்.

அல்லாஹ் கூறுகிறான்:

அறிவுரை கூறுவீராக! இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை பயனளிக்கும்.

(அல்குர்ஆன் 51:55)


-- Abdun Nasir M.I.Sc.,

Friday, March 20, 2026

ஹதீஸ் கலைச் சிற்பிகள் - நிறைவுப் பகுதி


ஒரு மாபெரும் அறிவுப் பயணம் இனிதே நிறைவுற்றது! அல்ஹம்துலில்லாஹ்! ஹதீஸ் கலைச் சிற்பிகள் - நிறைவுப் பகுதி

இரண்டு மாதங்கள்... 60 ஆளுமைகள்... எண்ணற்ற தூக்கமில்லா இரவுகள்... ஆயிரக்கணக்கான தேடல்கள்... இன்று, 'ஹதீஸ் கலைச் சிற்பிகள்' என்ற இந்த நீண்ட, நெடிய வரலாற்றுப் பயணம் அதன் இலக்கை அடைந்து, நிறைவுப் பகுதியில் வந்து நிற்கிறது. என் நாவில் முதலில் வரும் வார்த்தை, 'அல்ஹம்துலில்லாஹ்'! எல்லாப் புகழும் அந்த அல்லாஹ்வுக்கே!

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தத் தொடரை நான் ஆரம்பிக்கும்போது, இதற்கு இவ்வளவு அதீத வரவேற்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஹதீஸ் கலை என்பது சற்று கடினமான, நுணுக்கமான துறை. அதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. ஆனால், முதல் பதிவிலிருந்தே நீங்கள் கொடுத்த ஆதரவு என்னை பிரமிக்க வைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, பல மதிப்பிற்குரிய ஆலிம் பெருந்தகைகள் இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்து, பாராட்டியது மட்டுமல்லாமல், பல மேலதிகக் குறிப்புகளையும், நுணுக்கமான தகவல்களையும் தந்து உதவினார்கள். சில இடங்களில் இது பிழை என்று அவர்கள் சுட்டிக்காட்டியபோது, அதைத் திருத்திக்கொள்ள நான் ஒருபோதும் தயங்கியதில்லை. 

ஆச்சரியம் என்னவென்றால், அப்படிச் சுட்டிக்காட்டப்பட்ட பிழைகள் பெரும்பாலும் 'எழுத்துப் பிழைகளே' தவிர, 'கருத்துப் பிழைகள்' அல்ல என்பது எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. அவர்களின் அந்த அன்பான வழிகாட்டுதலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தத் தொடரை எழுத எனக்குத் தூண்டுதலாக இருந்த ஒரு சுவாரஸ்யமான கதையை இன்று உங்களுடன் பகிர்கிறேன். 2023-ல், ஹதீஸ் கலையின் மாமேதை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) பற்றி மிக விரிவாக இந்த முகநூலில் எழுதியிருந்தேன். அதே பதிவை, இந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் பகிர்ந்தபோது, என் அன்பு நண்பர்கள் சிலர், "இவரைப் போலவே மற்ற ஹதீஸ் அறிஞர்களின் வரலாற்றையும் தொடராக எழுதுங்களேன்" என்று கேட்டுக்கொண்டனர். அந்த ஒரு சிறு பொறிதான், இன்று 60 அறிஞர்களின் வரலாறாகப் பூத்துக் குலுங்குகிறது!

"60 பேரைப் பற்றி எழுதியது, சந்தோஷம்" என்று சொல்வது எளிது. ஆனால், இதற்கான ஆதாரங்களைத் திரட்ட நான் பட்ட கஷ்டங்கள்... அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது! சில அறிஞர்களைப் பற்றிய தகவல்கள் அரபு மூல நூல்களில் மட்டுமே இருக்கும். அவற்றைத் தேடி, படித்து, மொழிபெயர்த்து, சரிபார்த்து, மீண்டும் என் பாணியில் மாற்றுவதற்குள்... சில நேரங்களில், ஒரு சிறு தகவலுக்காக மணிக்கணக்கில் மொபைலில் தேட வேண்டியிருக்கும். அந்த உழைப்பு, அந்தத் தேடல்... அது ஒரு தனி அனுபவம். இன்று தொடர் முடிந்துவிட்டாலும், அந்தத் தேடலின் நினைவுகள் என் மனதில் பசுமையாக இருக்கும்.

"இதில் ஹதீஸ் கலை ஜாம்பவான்கள் அனைவரையும் எழுதிவிட்டீர்களா?" என்று கேட்டால், "இல்லை" என்பதுதான் என் கறாரான பதில். இன்னும் எத்தனையோ மாமேதைகள் இருக்கிறார்கள். ஆனால், மிக முக்கியமான, தவிர்க்க முடியாத ஜாம்பவான்கள் எவரையும் நான் விட்டுவிடவில்லை. இந்தத் தொடரில் ஒரு ஒழுங்குமுறை (Chronological Order) இருக்கவில்லை என்பதை நீங்களே கவனித்திருக்கலாம். ஒருநாள் மத்திய கால அறிஞரின் வரலாறு வரும், திடீரென்று அடுத்த நாள் ஆரம்ப கால அறிஞரின் வரலாறு வரும், பிறகு மீண்டும் மத்திய காலம், பிறகு ஒரேயடியாகப் பெரிய ஜம்ப் செய்து நவீன கால அறிஞரின் வரலாறு வரும்! ஒரு ஒழுங்கும் இல்லாமல், அன்றைய தினத்திற்கு யாரைப் பற்றி எழுதலாம் என்று யோசனை வரும்போது எழுதினேன், அவ்வளவுதான்!

உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம்... "இமாம் ஷாபி, இமாம் முஜாஹித் போன்ற மாபெரும் இமாம்கள் இந்தத் தொடரில் வரவில்லையே, ஏன்?" என்று.
இன்ஷா அல்லாஹ், என் அடுத்த தொடர் 'முபஸ்ஸிரீன்கள்' (குர்ஆன் விரிவுரையாளர்கள்) மற்றும் 'புகாஹாக்கள்' (சட்டமேதைகள்) பற்றித்தான் இருக்கப் போகிறது. ஆகையால், இந்த ஹதீஸ் அறிஞர்கள் தொடரில் வராதவர்கள் அந்தத் தொடரில் வருவார்கள். கூடவே, இந்தத் தொடரில் வந்த பல இமாம்களும் (உதாரணமாக, இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்) அந்தத் தொடரிலும் வருவார்கள், இன்ஷா அல்லாஹ்!

இந்த புனித நோன்பு மாதத்தை பயன்மிக்கதாக ஆக்க வேண்டும், நம் முன்னோர்களின் வரலாற்றை அறிந்து, அவர்களைப் போல நாமும் இந்த மார்க்கத்திற்குச் சேவையாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகத்தான் இந்தத் தொடர் எழுதப்பட்டது. அதற்குரிய கூலியை வழங்க அல்லாஹ் போதுமானவன்.

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நாடினால், இந்த 60 பதிவுகளையும் ஒரு நூலாகத் தொகுத்து வெளியிட நிய்யத் வைத்திருக்கிறேன். அது நிறைவேற அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக, உங்களின் துஆக்களை வேண்டியவனாக, இந்தத் தொடரை இனிதே நிறைவு செய்கிறேன்.

ஹதீஸ் கலை அறிஞர்கள் வரலாறு தொடர் நிறைவுற்றது.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #HadithScholars #Conclusion #SeriesComplete #Alhamdulillah #IslamicHistory #Legacy #AbdullahIbnuNaseerWriteups

இமாம் ஹம்மாத் இப்னு ஸலமா (ரஹ்)


ஹதீஸ் கலையையும் அரபு இலக்கணத்தையும் இரு கண்களாகப் போற்றிப் பாதுகாத்த பஸ்ரா நகரத்தின் மாபெரும் அறிஞரைத்தான் இன்று (இறுதி தொடராக) நாம் சந்திக்கப் போகிறோம். 

ஹதீஸ்களை அறிவிக்கும்போது அதில் சிறு இலக்கணப் பிழைகூட வந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கறாராக இருந்தவர். அரபு மொழியின் தந்தை என்று போற்றப்படும் 'ஸீபவைஹி' வர்களின் வாழ்வில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இமாம் ஹம்மாத் இப்னு ஸலமா (ரஹ்) அவர்கள்.

முழுப் பெயர்: அபூ ஸலமா ஹம்மாத் இப்னு ஸலமா இப்னு தீனார் அல்-பஸ்ரி.
சிறப்பு: பஸ்ராவின் முஃப்தி, மாபெரும் ஹதீஸ் மற்றும் அரபு இலக்கண மேதை.
காலம்: ஹிஜ்ரி 91-ல் பிறந்து, ஹிஜ்ரி 167-ல் மரணமடைந்தார்.

உலகமே வியக்கும் அரபு இலக்கண மேதையான ஸீபவைஹி, ஆரம்பத்தில் இமாம் ஹம்மாத் (ரஹ்) அவர்களிடம் ஹதீஸ் படிக்கவே வந்தார். ஒருமுறை ஹதீஸை வாசிக்கும்போது ஸீபவைஹி ஒரு வார்த்தையைத் தவறாக (இலக்கணப் பிழையுடன்) உச்சரித்துவிட்டார். ஹம்மாத் (ரஹ்) அவர்கள் உடனடியாக அவரைத் திருத்தினார்கள். இதனால் வெட்கமடைந்த ஸீபவைஹி, "இனிமேல் என் மொழிநடையை யாரும் திருத்த முடியாத அளவுக்கு நான் அரபு இலக்கணத்தைக் கற்றுத் தேறுவேன்" என்று சபதம் செய்து, இலக்கணத் துறையில் இறங்கி, அரபு மொழியின் முடிசூடா மன்னனாக மாறினார். இப்படி ஒரு மாபெரும் இலக்கண மேதையை உலகிற்கு உருவாக்கிய பெருமை இமாம் ஹம்மாத் அவர்களையே சாரும்!

பஸ்ரா நகரில் முதன்முதலில் ஹதீஸ்களை ஒரு முழுமையான நூலாக (ஜாமீஉ / முஸன்னஃப்) தொகுத்த முன்னோடிகளில் இவரும் ஒருவர். அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் முதன்மை மாணவரான ஸாபித் அல்-புனானி (ரஹ்) அவர்களிடம் இவர் கற்ற ஹதீஸ்கள், ஹதீஸ் கலையின் மிகச் சிறந்த பொக்கிஷங்களாகக் கருதப்படுகின்றன. "ஸாபித் அல்-புனானி அவர்களின் ஹதீஸ்களை அறிவிப்பதில் ஹம்மாத் இப்னு ஸலமாவை விடச் சிறந்தவர் யாருமில்லை" என்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்கள் புகழ்ந்துள்ளார்கள்.

அந்தக் காலகட்டத்தில் பஸ்ராவில் 'முஃதஸிலாக்கள்' மற்றும் 'ஜஹ்மியாக்கள்' போன்ற வழிகெட்ட பிரிவினர் மார்க்கத்தில் பல புதிய குழப்பங்களை (பித்அத்களை) உருவாக்கினர். அவர்களுக்கு எதிராக ஒரு இரும்புத் தூண்போல நின்று, நபிகளார் (ஸல்) அவர்களின் தூய்மையான சுன்னாவைப் பாதுகாத்தவர் இமாம் ஹம்மாத். இதனால் வழிகெட்டவர்கள் இவரை மிகக் கடுமையாக எதிர்த்தார்கள், ஆனால் இவர் எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியவில்லை.

இவருடைய மாணவரான அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ இவரைப் பற்றிக் கூறும்போது: "இமாம் ஹம்மாத் இப்னு ஸலமாவிடம் சென்று, 'நாளை நீங்கள் இறந்துவிடுவீர்கள்' என்று யாராவது கூறினால், அதற்காக அவர் தன் வழக்கமான அமல்களை (வணக்கங்களை) விட அதிகமாக எதையும் செய்ய முடியாது. ஏனென்றால், அவருடைய ஒவ்வொரு நொடியும் ஏற்கனவே தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல், ஹதீஸ் கற்பித்தல் என்று முழுமையாக நிரம்பியிருந்தது!" இப்படித் தன் வாழ்நாள் முழுவதையும் தொழுகையிலேயே கழித்த அந்த மாமேதைக்கு, அல்லாஹ் மிகச் சிறந்த ஒரு மரணத்தைக் கொடுத்தான். ஆம், ஹிஜ்ரி 167-ல் அவர் பள்ளியில் தொழுதுகொண்டிருக்கும்போதே, தொழுகையிலேயே அவருடைய உயிர் பிரிந்தது!

ஒரு மனிதன் எந்த காரியத்தில் அதிக ஈடுபாடு காட்டுகிறானோ, அதே நிலையில்தான் அவனுக்கு மரணமும் வரும் என்பதற்கு இமாம் ஹம்மாத் இப்னு ஸலமா (ரஹ்) அவர்களின் மரணமே மிகச் சிறந்த சான்று. அறிவைத் தேடுவது ஒருபுறம் இருந்தாலும், அந்த அறிவைச் செயல்படுத்தும் தக்வாவும் (இறையச்சமும்) இபாதத்தும் (வணக்கமும்) இல்லையென்றால் அந்த அறிவால் எந்தப் பயனும் இல்லை. இன்று நாம் தேடும் அறிவும், நம்முடைய அன்றாடச் செயல்பாடுகளும் நமக்கு எப்படிப்பட்ட மரணத்தைத் தேடித்தரும் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

- Abdullah Ibnu Naseer 

#History #HammadIbnSalamah #HadithScholar #Basra #IslamicHistory #KnowledgeAndPiety

இஸ்லாத்தில் வாழ்த்து சொல்வது!



🎯 இஸ்லாத்தில் வாழ்த்து சொல்வது!

நாம் ஒருவரை ஒருவர் சந்தித்கும் போது முகமன் (ஸலாம்) சொல்கின்றோம் இது அனைவரும் அறிந்தது.  இஸ்லாத்தில் "ஸலாம்" சொல்வது மட்டும் வாழ்த்து இல்லை. இஸ்லாத்தில் வாழ்த்துகள் பன்மையானது.

நபி வழியில் உள்ள வாழ்த்துக்களின் சிறு தொகுப்பை ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்வோம்.

👉 நபி (ஸல்) அவர்களுக்கு சொல்லப்பட்ட "இனிய வாழ்த்துகள்"!

குர்ஆனில் “நிச்சயமாக, நாம் உங்களுக்கு ஒரு வெளிப்படையான வெற்றியை அளித்துள்ளோம்” (48:1) என்ற வசனம் இறங்கியதற்காக நபி (ஸல்) அவர்களிடம் “தங்களுக்கு இனிய வாழ்த்துகள் (‏ قَالَ أَصْحَابُهُ هَنِيئًا مَرِيئًا)" என்று கூறி நபி தோழர்கள் வாழ்த்து தெரிவித்தனர். (புகாரி 4172) 

👉 உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் மேற்கொண்ட போது இப்ராஹீம் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் "உங்கள் வரவு நல்வரவாகட்டும்  (مَرْحَبًا بِكَ مِنِ ابْنٍ وَنَبِيٍّ )  என்று வாழ்த்தினார்கள்.  (பார்க்க புகாரி 3207)

👉 "வாழ்த்துகள்!"

பசியின் காரணமாக நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களும் ஒரு அன்சாரி தோழரின் வீட்டில் உணவு அருந்த சென்றார்கள். அங்கே அவர்களை "வாழ்த்துகள்! வருக" என்று கூறி அந்த அன்சாரி தோழரின் துணைவியார் வரவேற்றார்கள் (பார்க்க முஸ்லீம் 4143)

👉 "வருக! வருக!”

அபூதாலிபின் மகள் உம்மு ஹானீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வீட்டிற்கு வருகை தந்தார்கள், அவர்களை நபி (ஸல்) அவர்கள் "உம்மு ஹானீயே! வருக! வருக! (مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ ‏ )" என்று கூறி வரவேற்றார்கள். (புகாரி 3171)

👉 ஒருவரின் கல்வி அறிவை பார்த்து மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துவது!

அபுல்முன்திர் என்று அழைக்கப்படும் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனின் 2:255 வசனத்தை ஓதி காட்டினார்கள், அதை கேட்டு நபி (ஸல்) அவர்கள் “உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல்முன்திரே!" என்றார்கள். (பார்க்க முஸ்லீம் 1476)

 திருமண வாழ்த்து உட்பட இன்னும் சில வாழ்த்துக்களும் நபி மொழிகளில் உள்ளது. பதிவின் நீளம் கருதி சுருக்கியுள்ளேன்.

🎯 மேற்கண்ட ஹதீஸ்களில் சொல்லப்பட்ட வாசகங்களை "இஸ்லாத்தில் சொல்லப்பட்ட வாழ்த்துகள்" என்று கூறலாம். இது தவிர நல்ல அர்தங்களை தரும் வாசகங்களை பயன்படுத்தியும் வாழ்த்து கூறலாம். ஆனால் அதை "இஸ்லாத்தில் சொல்லப்பட்ட வாழ்த்துகள்" என்று கூற முடியாது, அப்படி கூறினால் அது பித்அத் ஆகும்.

👉 உதாரணத்திற்கு பெருநாள் தினத்தில் ஒருவர் "ஈத் முபாரக்" என்று சொல்கிறார், மகிழ்ச்சியை வெளிப்படுத்த தாமாக விரும்பி அதை சொன்னால் அது பித்அத் இல்லை. 

பெருநாளில் "ஈத் முபாரக்" சொல்ல வேண்டும் என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று சொன்னால் தான் அது பித்அத். 

இஸ்லாத்தில் இருப்பதாக சொல்லாமல் தாமாக விரும்பி செய்யும் மார்க்க விஷயங்களும், உலக விஷயங்களும் பித்அத் இல்லை என்பதை "இஸ்லாத்தின் பார்வையில் பித்அத்!" என்ற தொடரில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன் பார்க்கவும். https://www.facebook.com/siddique.mtech/posts/2116192505248685

✍️ ஆக்கம் : S. சித்தீக் M.Tech

Thursday, March 19, 2026

முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி).


இஸ்லாமிய வரலாற்றில் மாவீரர்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. ஆனால், போர்க்களத்தில் எதிரிகளை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு அசாத்திய வீரமும், அதேசமயம் பதவியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களைத் தட்டிக் கேட்கும் அளவுக்கு நேர்மையும் ஒருங்கே அமைந்த ஒரு மாமனிதர் இருந்தார் என்றால், அவர்தான் முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி).

கம்பீரமான உயரம், கோதுமை நிறம், ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இவரை மதீனாவாசிகள் 'நபிகளாரின் மாவீரன்' என்று பெருமையோடு அழைப்பார்கள்.

இஸ்லாத்தின் ஆரம்பக் காலகட்டத்தில், மதீனாவில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து சதித்திட்டங்களைத் தீட்டி, அண்ணலார் (ஸல்) அவர்களைக் கொலை செய்யத் தூண்டிக்கொண்டிருந்தவன் யூதத் தலைவன் கஅப் இப்னு அஷ்ரஃப். அவனுடைய கோட்டையை நெருங்குவது என்பது மரணத்தோடு விளையாடுவதற்குச் சமம். அப்போது நபிகளார், "இந்தத் துரோகியை வீழ்த்த யார் தயார்?" என்று கேட்டபோது, கூட்டத்திலிருந்து முதல் ஆளாக எழுந்து நின்றார் முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி). எதற்கும் அஞ்சாத தன்னுடைய அபாரமான வீரத்தாலும், ராஜதந்திரத்தாலும் அந்த அச்சுறுத்தலை முற்றிலுமாக முறியடித்து, மதீனாவின் பாதுகாப்பை உறுதி செய்தவர் இவர்தான். தபூக் போரைத் தவிர்த்து, நபிகளார் கலந்துகொண்ட அத்தனை போர்களிலும் தன் வாளை சுழற்றிய மாவீரர் இவர்! மாவீரர் அலி (ரலி) அவர்களுடன் மதீனாவை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்ததால் தபூக் போரில் அவரால் கலந்துக்கொள்ள முடியவில்லை. 

இஸ்லாமிய வரலாற்றில் கலீஃபா உமரின் நம்பிக்கைக்குரிய 'விசாரணை அதிகாரியாக (Inspector General) இவர் இருந்தார். நபிகளாரின் காலத்திற்குப் பிறகு, உமர் (ரலி) அவர்களின் பொற்கால ஆட்சியில் முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்களுக்கு ஒரு மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டது. அதுதான் மாகாண ஆளுநர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு! ஆளுநர்கள் மீது சிறு புகார் வந்தாலும், உமர் (ரலி) அவர்கள் உடனடியாக முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்களைத்தான் அனுப்பி வைப்பார்கள். எகிப்தின் ஆளுநராக இருந்த அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி), கூஃபாவின் ஆளுநராக இருந்த மாவீரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) போன்ற மாபெரும் சஹாபாக்களாகவே இருந்தாலும், உமரின் கட்டளையை ஏற்று அவர்களிடம் நேரில் சென்று துணிச்சலாக விசாரணை நடத்தும் அளவுக்குத் தூய்மையான கரங்களுக்குச் சொந்தக்காரராக அவர் இருந்தார். எந்த ஆளுநரும் இவருடைய வருகையைக் கண்டால் ஒருகணம் நடுங்குவார்கள்; அந்த அளவுக்கு இவருடைய நேர்மை பிரசித்தமானது!

இவருடைய வாழ்வின் உச்சகட்ட தியாகம் என்பது உஸ்மான் (ரலி) அவர்களின் ஷஹாதத்திற்குப் பிறகு அரங்கேறியது. முஸ்லிம்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி, உள்நாட்டுப் போர் வெடித்தது. அலி (ரலி) மற்றும் முஆவியா (ரலி) இருவருக்கும் இடையே போர் மூண்டபோது, பலரும் ஏதாவது ஒரு பக்கம் அணிவகுத்தார்கள்.
ஆனால், முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்கள் தன் வீட்டிலிருந்த வாளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். ஒரு பெரிய பாறையின் மீது அந்த இரும்பு வாளை ஓங்கி அடித்துச் சுக்குநூறாக உடைத்தார். சுற்றி நின்றவர்கள் அதிர்ச்சியோடு பார்த்தனர்.

அப்போது அவர் கூறினார்: "என் அன்புக்குரிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒரு வஸிய்யத் (உபதேசம்) செய்திருந்தார்கள். 'முஹம்மத் இப்னு மஸ்லமாவே! முஸ்லிம்களுக்கு இடையே போர் மூளும் ஒரு காலம் வந்தால், உன்னுடைய வாளைப் பாறையில் அடித்து உடைத்துவிடு. அதற்குப் பதிலாக ஒரு மர வாளைச் செய்துகொண்டு உன் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கொள்' என்றார்கள். 

இதோ, என் நபியின் வார்த்தையை நான் நிறைவேற்றிவிட்டேன்!" ஒரு உண்மையான வீரனுக்குப் போர்க்களத்தில் வாளைச் சுழற்றுவது எவ்வளவு கடினமோ, அதைவிடக் கடினம் தன் சொந்த சகோதரர்களின் ரத்தம் சிந்தப்படக் கூடாது என்பதற்காகக் கையில் மர வாளோடு வீட்டிற்குள் பொறுமையாக முடங்கிக் கிடப்பது. அந்த மாபெரும் ஈமானியப் பொறுமையை அவர் தழுவிக்கொண்டார்.

முஸ்லிம்களுக்கு இடையிலான எந்தக் குழப்பத்திலும் தலையிடாமல், ரத்தம் சிந்தாத ஒரு தூய ஆன்மாவாகத் தன் இறுதி நாட்களைக் கழித்த அந்த மாவீரர், முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஹிஜ்ரி 46-ஆம் ஆண்டு மதீனாவில் மரணமடைந்தார்.

வீரம் என்பது வாளை உயர்த்துவதாக இல்லாமல் ரத்தம் சிந்தக் கூடாது என்பதற்காக, அதை உடைத்து எறிவதிலும் இருக்கிறது என்ற மாபெரும் பாடத்தை உலகிற்குச் சொல்லிக்கொடுத்துவிட்டுச் சென்றது அந்த மர வாள் வீரர் தான். 

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #MuhammadIbnMaslamah #FarisRasulullah #WoodenSword #AbdullahIbnuNaseerWriteups

உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்)


மதீனாவின் மாபெரும் ஏழு சட்டமேதைகளில் (Seven Fuqaha of Medina) ஒருவர். சுவர்க்கத்தின் நற்செய்தி சொல்லப்பட்ட ஒரு மாவீரரின் மகன். முதல் கலீஃபாவின் பேரன். இதையெல்லாம் விட, உலக முஸ்லிம்களின் தாய் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவுப் பொக்கிஷங்களை எந்தச் சேதாரமும் இல்லாமல் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய மாபெரும் தூண் இவர்தான்! இமாம் புகாரியோ, முஸ்லிமோ, அல்லது எந்த ஒரு ஹதீஸ் நூலை நீங்கள் புரட்டினாலும் 'ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்...' என்று தொடங்கும் பெரும்பாலான ஹதீஸ்களுக்குக் கீழே ஒரு பெயர் ஆணிவேராக இருப்பதைக் காணலாம். நபிகளார் (ஸல்) அவர்களின் இல்லற வாழ்வின் சட்டங்களை உம்மாவுக்குக் கடத்திய அந்த மாபெரும் அறிவுப் பாலம் வேறு யாருமல்ல, இமாம் உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்கள்தான்!

முழுப் பெயர்: உர்வா இப்னு ஸுபைர் இப்னுல் அவ்வாம்.
சிறப்புப் பெயர்: மதீனாவின் ஏழு மாபெரும் சட்டமேதைகளில் (Seven Fuqaha of Medina) ஒருவர்.
காலம்: உஸ்மான் (ரலி) அவர்களின் கிலாபத்தில் (ஹிஜ்ரி 23) பிறந்து, அறிஞர்களின் ஆண்டு என அழைக்கப்படும் ஹிஜ்ரி 94-ல் மரணமடைந்தார்.
அறிவுப் பின்னணி: அன்னை ஆயிஷா (ரலி) இவருடைய சொந்தச் சிறிய தாயார் (அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அவர்களின் சகோதரர்).

ஆயிஷா (ரலி) அவர்களின் சொந்தச் சகோதரியின் (அஸ்மா) மகன் என்பதால், நபிகளாரின் இல்லத்திற்குள் தடையின்றிச் செல்லும் வாய்ப்பு உர்வாவுக்குக் கிடைத்தது. இதை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். ஆயிஷா (ரலி) அவர்களின் நிழல் போல உடனிருந்து, மார்க்கச் சட்டங்கள், குர்ஆன் விளக்கங்கள், அரபு இலக்கியம், மருத்துவம் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். உர்வாவுக்கு முன்னால் மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்க அன்றைய காலத்தில் பல ஸஹாபாக்களே தயங்குவார்கள் என்றால் அவருடைய அறிவின் ஆழத்தைப் புரிந்துகொள்ளலாம்.

ஹதீஸ்கள் மற்றும் மார்க்கச் சட்டங்கள் அடங்கிய பல ஏடுகளை அவர் தன் சொந்தக் கைகளால் எழுதி வைத்திருந்தார். ஆனால், மதீனாவில் நடந்த 'ஹர்ரா' (Battle of al-Harrah) போரின் போது ஏற்பட்ட ஒரு கலவரத்தில் அவருடைய அந்தப் புத்தகங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின. அதைப் பற்றி உர்வா (ரஹ்) அவர்கள் பிற்காலத்தில் குறிப்பிடும்போது, "என்னுடைய அந்தப் புத்தகங்கள் எனக்குத் திரும்பக் கிடைக்குமானால், என் குடும்பமும், என் முழுச் செல்வமும் என்னை விட்டுப் பிரிந்தால்கூட நான் கவலைப்பட மாட்டேன்" என்று கண்ணீர் மல்கக் கூறுவார். இதுதான் அறிஞர்கள் கல்வியின் மீது வைத்திருந்த காதல்!

இவர் ஹதீஸ் அறிவிப்பாளராக மட்டும் இருக்கவில்லை. இஸ்லாமிய வரலாற்றை (நபிகளாரின் போர்கள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை - சீரா மற்றும் மகாஸி) முதன்முதலில் ஆதாரப்பூர்வமாகத் தொகுக்கத் தொடங்கிய முதல் மனிதர் இவர்தான். அன்றைய உமைய்யா கலீஃபாக்களான அப்துல் மலிக் இப்னு மர்வான் போன்றவர்கள், பத்ருப் போர் குறித்தோ, வரலாற்று நிகழ்வுகள் குறித்தோ சந்தேகம் வந்தால், உடனடியாக உர்வா அவர்களுக்குக் கடிதம் எழுதி விளக்கங்களைக் கேட்டுப் பெறுவார்கள். அவர் எழுதிய அந்த வரலாற்றுப் பதில்கள்தான் இன்று நாம் படிக்கும் இஸ்லாமிய வரலாற்றின் ஆணிவேர்!

இவர் தன்னிடம் இருந்த அறிவைத் தனக்குள்ளேயே வைத்துக்கொள்ளவில்லை. மஸ்ஜிதுந் நபவியில் இவர் நடத்திய அறிவுச் சபையிலிருந்துதான் இஸ்லாமிய உலகின் மாபெரும் அறிஞர்கள் உருவானார்கள். குறிப்பாக, ஹதீஸ் கலையின் இமயமாகத் திகழ்ந்த இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரி அவர்கள் உர்வாவின் நேரடி மாணவர்தான்.

இன்று பிடிஎஃப் (PDF) வடிவிலும், மொபைல் ஆப்ஸ்களிலும் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை வைத்துக்கொண்டு, அவற்றைப் படிக்க நேரம் இல்லாமல் சாக்குப்போக்குச் சொல்லும் சோம்பேறிச் சமூகம் நாம். ஆனால், எந்த நவீன வசதியும் இல்லாத அந்தக் காலத்தில், தன் புத்தகங்கள் எரிந்து போனதற்காக ஒரு சிறு குழந்தையைப் போலக் கண்ணீர் வடித்த இமாம் உர்வா அவர்களின் கல்வித் தாகம் எங்கே? அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர் பாதுகாத்து வைத்திருக்காவிட்டால், இன்று இஸ்லாமியச் சட்டத்துறையின் சரிபாதி இருண்டு போயிருக்கும்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #UrwahIbnZubayr #HadithScholar #Ayesha #Madina #IslamicHistory #Fiqh #AbdullahIbnuNaseerWriteups

Wednesday, March 18, 2026

இமாம் ஹம்மாம் இப்னு முனப்பிஹ் (ரஹ்)


"ஹதீஸ்கள் எல்லாம் நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்து 200 வருடங்களுக்குப் பிறகுதான் எழுதப்பட்டன; அதனால் அதில் பல இடைச்செருகல்கள் உள்ளன" என்று மேலைநாட்டு ஓரியண்டலிஸ்டுகளும் , மார்க்கத்தை விமர்சிக்கும் சில நவீன அறிவாளிகளும் கூறுவதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இந்த ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பொய்க்கு, தன் ஒரே ஒரு ஏட்டின் மூலம் மரண அடி கொடுத்த ஒரு மாபெரும் தாபியீ அறிஞரைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

இஸ்லாமிய வரலாற்றில், நபிகளார் (ஸல்) அவர்களின் காலத்திற்கு மிக நெருக்கமாக, ஸஹாபாக்கள் வாழும் காலத்திலேயே ஹதீஸ்கள் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன என்பதற்கு இன்று நம்மிடம் இருக்கும் ஆகப்பெரிய, வாழும் சான்று இமாம் ஹம்மாம் இப்னு முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் எழுதிவைத்த ஒரு ஏடு உள்ளது.

முழுப் பெயர்: ஹம்மாம் இப்னு முனப்பிஹ் இப்னு காமில்.
காலம்: தோராயமாக ஹிஜ்ரி 40-களில் பிறந்து, ஹிஜ்ரி 131 (அல்லது 132)-ல் மரணமடைந்தார்.
ஊர்: யமன் தேசத்தின் ஸன்ஆ நகரம்.
பின்னணி: இவர் பாரசீகப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை முனப்பிஹ், இஸ்லாத்தைத் தழுவிய ஒரு மாபெரும் அறிஞர். பிரபலமான வரலாற்று அறிஞர் வஹ்ப் இப்னு முனப்பிஹ் இவருடைய சொந்த சகோதரர் ஆவார்.

ஹம்மாம் அவர்கள் மதீனாவிற்குப் பயணம் செய்து, இஸ்லாத்தில் அதிக ஹதீஸ்களை அறிவித்த மாபெரும் ஸஹாபியான அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மாணவராக இணைந்தார். அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்லச் சொல்ல, ஹம்மாம் அவர்கள் தன் கைகளாலேயே ஒரு ஏட்டில் ஹதீஸ்களை எழுதினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏடுதான் 'ஸஹீஃபா அஸ்-ஸஹீஹா' (The Authentic Script) அல்லது 'ஸஹீஃபா ஹம்மாம் இப்னு முனப்பிஹ்' என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 138 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

ஹதீஸ்கள் எல்லாம் வாய்மொழியாகவே பரவின, 200 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டபோது பல பொய்கள் கலந்துவிட்டன என்று 'கோல்ட்ஸிஹர்' (Ignác Goldziher) போன்ற மேற்கத்திய அறிஞர்கள் விமர்சித்து வந்தனர். ஆனால், 20-ஆம் நூற்றாண்டில் மாபெரும் இஸ்லாமிய அறிஞரான டாக்டர் முஹம்மது ஹமீதுல்லாஹ் அவர்கள் ஜெர்மனியின் பெர்லின் மற்றும் சிரியாவின் டமாஸ்கஸ் நூலகங்களில் பல நூற்றாண்டுகளாகத் தூங்கிக்கொண்டிருந்த 'ஸஹீஃபா ஹம்மாம் இப்னு முனப்பிஹ்' ஏட்டின் கையெழுத்துப் பிரதிகளைக் கண்டுபிடித்தார்!

அதை எடுத்து, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் 'முஸ்னத் அஹ்மத்' நூலோடு ஒப்பிட்டுப் பார்த்தால்... ஆச்சரியம்! 'முஸ்னத் அஹ்மத்'தில் உள்ள அபூஹுரைரா (ரலி) அவர்களின் ஹதீஸ்களும், இந்த 1-ஆம் நூற்றாண்டு ஏட்டில் உள்ள ஹதீஸ்களும் ஒரு எழுத்து, ஒரு புள்ளி கூட மாறாமல் அப்படியே துல்லியமாகப் பொருந்தின! ஹதீஸ் கலையின் நம்பகத்தன்மையை உலகிற்கு நிரூபித்த மாபெரும் தருணம் அது.

இந்த 138 ஹதீஸ்களும் எப்படிப் பாதுகாக்கப்பட்டன தெரியுமா?

அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல ஹம்மாம் இப்னு முனப்பிஹ் எழுதினார்.

ஹம்மாம் அவர்கள் அந்த ஏட்டைத் தன் மாணவரான மஃமர் பின் ராஷித் (இவரை பற்றி பார்த்துவிட்டோம்) அவர்களிடம் ஒப்படைத்தார்.

மஃமர் அவர்கள் அதைத் தன் மாணவரான அப்துர் ரஸ்ஸாக் (இவரை பற்றியும் பார்த்துவிட்டோம்) அவர்களிடம் கொடுத்தார்.

அப்துர் ரஸ்ஸாக் வழியாக அது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (இவரை பற்றியும் பார்த்துவிட்டோம்) அவர்களைச் சென்றடைந்து அவருடைய 'முஸ்னத்' நூலில் அப்படியே பதியப்பட்டது. என்ன ஒரு பிரம்மாண்டமான அறிவுச் சங்கிலி இது!

ஹதீஸ்கள் ஏதோ நேற்றோ இன்றோ கற்பனையாக எழுதப்பட்ட கட்டுக்கதைகள் அல்ல. அவை, ஸஹாபாக்களின் காலத்திலேயே, அவர்களின் நேரடிப் பார்வையில், வியர்வையும் உழைப்பும் சிந்தப்பட்டு காகிதங்களில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷங்கள். அறிவே இல்லாத சில நவீனக் கோமாளிகள் யூடியூபிலும் சமூக வலைத்தளங்களிலும் "ஹதீஸ்கள் எல்லாம் லேட்டா எழுதப்பட்டது" என்று உளறுவதைக் கேட்கும்போது, ஹம்மாம் இப்னு முனப்பிஹ் அவர்களின் இந்த 138 ஹதீஸ்கள் கொண்ட ஏட்டை எடுத்து அவர்கள் முகத்தில் வீச வேண்டும் போலத் தோன்றுகிறது! முஸ்லிம் உம்மாவுக்கு இத்தகைய தூய பொக்கிஷத்தை விட்டுச் சென்ற அந்த யமன் தேசத்து அறிஞருக்கு அல்லாஹ் மாபெரும் கூலியை வழங்குவானாக.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #HammamIbnMunabbih #Sahifah #Yemen #HadithScholar #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

கைஸ் இப்னு ஸஅத் (ரலி)


மதீனாவின் தெருக்களில் ஒரு இளைஞர் நடந்து வருகிறார். அவருடைய உயரம் எவ்வளவு தெரியுமா? ஒரு பெரிய ஒட்டகத்தின் மீது அமர்ந்திருப்பவரின் உயரத்திற்குச் சமமாக அவர் தரையில் நடந்து செல்வார். அந்தப் பிரம்மாண்டமான தோற்றத்திற்குச் சொந்தக்காரர், மதீனாவின் 'கஸ்ரஜ்' கோத்திரத்தின் மாபெரும் தலைவர் ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களின் அருமை மகன் கைஸ் இப்னு ஸஅத் (ரலி) அவர்களே!

தந்தையைப் போலவே வீரத்திலும், கொடைத்திறனிலும் நிகரற்று விளங்கிய கைஸ் (ரலி), இஸ்லாமிய வரலாற்றில் அறிவுக்கூர்மைக்கும் (Intelligence) ஈமானிய உறுதிக்கும் ஒரு மிகச்சிறந்த இலக்கணமாகத் திகழ்கிறார்.

கைஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றவுடன், அவருடைய தந்தை ஸஅத் (ரலி) அவரை அண்ணலார் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "இறைத்தூதரே! இதோ என் மகன், இவன் இன்று முதல் உங்கள் சேவகன்" என்று ஒப்படைத்தார். சுமார் பத்து ஆண்டுகள் அண்ணலார் (ஸல்) அவர்களின் நிழலாகவே கைஸ் (ரலி) வாழ்ந்தார்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறும்போது, "ஒரு தலைவருக்குப் பின்னால் ஒரு போலீஸ் - மெய்க்காவளர் - அதிகாரி பாதுகாப்பிற்கு நிற்பது போல, நபிகளாருக்குப் பின்னால் கைஸ் இப்னு ஸஅத் நிற்பார்" என்று அவருடைய அர்ப்பணிப்பை விவரிக்கிறார். நபிகளாரின் மஜ்லிஸில் இருந்து அவர் கற்ற அந்தப் பாடங்கள்தான் பின்னாளில் அவரை ஒரு மாபெரும் ராஜதந்திரியாக மாற்றியது.

அரபிகளிலேயே மிகச்சிறந்த தந்திரசாலியாகக் கருதப்பட்டவர் கைஸ் (ரலி). எந்த ஒரு சிக்கலான சூழலையும் தன் அறிவால் முறியடிக்கும் வல்லமை அவரிடம் இருந்தது. ஆனால், அந்த அறிவை அவர் ஒருபோதும் தீமைக்காகப் பயன்படுத்தியதில்லை. அவர் அடிக்கடி சொல்வார்:

"இஸ்லாம் என்ற ஒன்று மட்டும் என் வாழ்க்கையில் இல்லையென்றால், அரபிகளிலேயே மிகச்சிறந்த சூழ்ச்சிக்காரனாக நான் இருந்திருப்பேன். ஆனால், இறைவனைக் குறித்த அச்சம் என் அறிவைக் கட்டுப்படுத்துகிறது!"

தனது புத்திக்கூர்மையைத் தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல், சத்தியத்திற்காக மட்டுமே பயன்படுத்திய அந்தப் பண்பு, இன்றைய கால அரசியல்வாதிகளுக்கும் தலைவர்களுக்கும் ஒரு மாபெரும் பாடம்.

கைஸ் (ரலி) அவர்களின் குடும்பம் தலைமுறை தலைமுறையாகக் கொடைத்திறனுக்குப் பெயர் பெற்றது. ஒருமுறை அவருடைய வீட்டில் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது: "கைஸ் இப்னு ஸஅத்திடம் கடன் வாங்கியவர்கள் யாரும் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன!" இதைக் கேள்விப்பட்ட மக்கள் ஓடி வந்து நன்றி சொன்னபோது, கைஸ் (ரலி) சொன்ன பதில் நம்மை வியக்க வைக்கிறது: "மக்கள் என்னிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது, அவர்கள் என்னைச் சந்திக்கத் தயங்குவதற்குக் காரணமாகிவிடும். மக்கள் என்னைச் சந்திக்கத் தயங்குவதை நான் விரும்பவில்லை!" தன்மானத்தையும், சமூக உறவுகளையும் காப்பதற்காகத் தன் செல்வத்தை இப்படித் துச்சமாக மதித்த தியாகி அவர்.

கலீஃபா அலி (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எகிப்து தேசத்தின் ஆளுநராக கைஸ் (ரலி) நியமிக்கப்பட்டார். அங்கே நிலவிய குழப்பங்களை அவர் மிகத் திறமையாகக் கையாண்டார். பின்னர் நடந்த 'ஸிப்பீன்' போரில் அலி (ரலி) அவர்களின் படையின் மிக முக்கியத் தளபதியாக இருந்தார். அலி (ரலி) அவர்களின் மறைவுக்குப் பிறகு, ஹஸன் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் 40,000 வீரர்கள் கொண்ட ஒரு பெரும் படைக்குத் தலைவராக இருந்தார். முஆவியா (ரலி) அவர்களின் படையை எதிர்த்துப் போரிட அவர் முழுத் தகுதியோடு இருந்தார். ஆனால், முஸ்லிம்களுக்கு இடையே ரத்தம் சிந்தக் கூடாது என்பதற்காக ஹஸன் (ரலி) அவர்கள் சமாதான ஒப்பந்தம் செய்தபோது, தன் கையில் இருந்த மாபெரும் அதிகாரத்தை எந்தவிதத் தயக்கமுமின்றி அவர் விட்டுக்கொடுத்தார். அதிகாரம் என்பது தாகத்தைத் தீர்க்கும் தண்ணீர் அல்ல, அது பொறுப்பு என்ற உணர்வு அவரிடம் மேலோங்கி இருந்தது.

தன் வாழ்நாள் முழுவதும் நபிகளாரின் கொள்கைக்காகவும், முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமைக்காகவும் உழைத்த அந்த அறிவுச் சிங்கம், ஹிஜ்ரி 60-ஆம் ஆண்டு மதீனாவில் வபாத்தானார். அவர் இறக்கும்போது அவரிடம் அதிகச் சொத்துக்கள் இல்லை; ஆனால், ஆயிரக்கணக்கான ஏழைகளின் துஆக்களும், ஒரு மாபெரும் வரலாறும் அவரிடம் இருந்தது. புத்திக்கூர்மை என்பதை பிறரை ஏய்ப்பதற்காக பயன்படுத்தாமல் அதை இறைவழியில் பிறருக்கு உதவுவதற்கே பயன்படுத்த வேண்டும் என்பதைத் தன் வாழ்க்கையால் நிரூபித்தவர் கைஸ் இப்னு ஸஅத் (ரலி)!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #QaysIbnSad #AnsarLeader #Generosity #IntelligenceWithTaqwa #AbdullahIbnuNaseerWriteups

Tuesday, March 17, 2026

ஸயீத் இப்னுல் முஸய்யிப் (ரஹ்).


எத்தனையோ மாபெரும் சக்கரவர்த்திகள் உலகத்தை ஆண்டிருக்கலாம், ஆனால் அந்தச் சக்கரவர்த்திகளே இவருடைய சபைக்குச் செல்லும்போது ஒரு சாதாரண மாணவனைப் போலத்தான் தலைகுனிந்து செல்வார்கள். மாபெரும் தாபியீன்களின் தலைவர் (ஸய்யிதுத் தாபியீன்), மதீனாவின் ஏழு மாபெரும் சட்டமேதைகளில் முதன்மையானவர் என்று போற்றப்பட்ட ஒரு இரும்பு மனிதரைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

உலகத்தின் மிகப்பெரிய வல்லரசான உமைய்யா கிலாபத்தின் ஜனாதிபதி, தன் மகனுக்குப் பெண் கேட்டு மதீனாவுக்கு ஒரு தூதரை அனுப்புகிறார். ஆனால், பெண் வீட்டார் அந்தச் சம்பந்தத்தை நிராகரித்துவிட்டு, தன்னிடம் படிக்கும் ஒரு ஏழை மாணவனுக்கு இரண்டு திர்ஹம் மஹரில் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு வரலாற்று அதிசயத்தைச் செய்தவர்தான் இமாம் ஸயீத் இப்னுல் முஸய்யிப் (ரஹ்).

முழுப் பெயர்: ஸயீத் இப்னுல் முஸய்யிப் இப்னு ஹஸ்ன் அல்-மக்ஜூமீ.
பிறப்பு: உமர் (ரலி) அவர்களின் கிலாபத் காலத்தில் (சுமார் ஹிஜ்ரி 15-ல்) பிறந்தார்.
இறப்பு: ஹிஜ்ரி 94-ல் (அறிஞர்களின் ஆண்டு என அழைக்கப்படும் வருடத்தில்) மதீனாவில் மரணமடைந்தார்.
சிறப்புப் பெயர்: தாபியீன்களின் தலைவர், மதீனாவின் சட்டமேதை.

இவருடைய ஹதீஸ் கலைச் சேவை வியக்கத்தக்கது. இஸ்லாத்தில் அதிக ஹதீஸ்களை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்களின் மகளைத்தான் இவர் திருமணம் செய்திருந்தார். இதன் மூலம், தன் மாமனாரிடமிருந்து நேரடியாக எண்ணற்ற ஹதீஸ்களை நெஞ்சில் சுமந்தார். உமர் (ரலி) அவர்கள் வழங்கிய மார்க்கத் தீர்ப்புகள் (ஃபத்வாக்கள்) அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருந்தவர் இவர் மட்டுமே. உமர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களே, தன் தந்தையின் தீர்ப்புகள் குறித்து சந்தேகம் வந்தால் ஸயீத் இப்னுல் முஸய்யிப் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்!

ஹதீஸ் கலையில், ஒரு தாபியீ நேரடியாக நபிகளார் (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறினால் அது 'முர்ஸல்' (விடுபட்ட சங்கிலி) எனப்படும். ஆனால், மாபெரும் சட்டமேதை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், "ஸயீத் இப்னுல் முஸய்யிப் அறிவிக்கும் முர்ஸலான ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை. ஏனென்றால், அவர் மிகக் கடுமையான ஆய்வுக்குப் பிறகே எதையும் அறிவிப்பார்" என்று இவருடைய ஹதீஸ் அறிவுக்குச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வான், தன் மகனும் வருங்கால கலீஃபாவுமான வலீதிற்கு இமாம் ஸயீத் அவர்களின் மகளைப் பெண் கேட்டார். ஆனால், அரண்மனையின் ஆடம்பரமும் அதிகாரப் போதை கலந்த அரசியலும் தன் மகளின் மார்க்கத்தைப் பாழாக்கிவிடும் என அஞ்சிய இமாம், அந்த மாபெரும் பதவியை நிராகரித்தார். மாறாக, தன் சபையில் ஹதீஸ் பயிலும் 'அபூ வதாஆ' என்ற ஏழை மாணவன், வறுமையின் காரணமாகத் தன் மனைவியை இழந்து தனிமையில் வாடுவதை அறிந்தார். உடனே அந்த ஏழை மாணவனுக்கு வெறும் 2 அல்லது 3 திர்ஹம்களை மஹராக நிர்ணயித்துத் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தார். அன்றிரவே தன் மகளை அந்த ஏழை மாணவனின் சிறிய குடிசைக்குத் தானே நேரில் சென்று விட்டுவிட்டு வந்தார்.

கலீஃபாக்களின் தவறான முடிவுகளுக்கு இவர் ஒருபோதும் துணைபோனதில்லை. இருவருக்கு ஒரே நேரத்தில் பைஅத் (பிரமாணம்) செய்யும் தவறான வழக்கத்தை ஆட்சியாளர்கள் கொண்டுவந்தபோது, அதை கடுமையாக எதிர்த்தார். அதற்காக மதீனாவின் ஆளுநரால் கடுமையாகச் சவுக்கால் அடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் சத்தியத்திலிருந்து அவர் ஒரு அணு அளவும் பின்வாங்கவில்லை.

பணத்துக்காகவும், அந்தஸ்துக்காகவும் மார்க்கம் இல்லாதவர்களுக்கெல்லாம் தங்கள் பெண் பிள்ளைகளைத் தாரைவார்க்கும் இன்றைய சமூகம் எங்கே? அகில உலகையும் ஆளும் சக்கரவர்த்தியின் மகனே வந்தாலும், என் மகளின் மார்க்கம்தான் எனக்கு முக்கியம் என்று ஒரு ஏழை ஹதீஸ் மாணவனுக்குத் தன் மகளைக் கட்டிக்கொடுத்த ஸயீத் இப்னுல் முஸய்யிப் எங்கே? உண்மையான ஹதீஸ் கல்வி ஒரு மனிதனை எந்த அதிகாரத்தின் முன்னும் மண்டியிடாத சிங்கமாக மாற்றும் என்பதற்கு இவரே ஆகச்சிறந்த உதாரணம்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #SaidIbnAlMusayyib #Tabiin #Madina #HadithScholar #IslamicHistory #SocialJustice #AbdullahIbnuNaseerWriteups

இமாம் ஃபுழைல் இப்னு இயாள் (ரஹ்)


எத்தனையோ அறிஞர்கள் சிறுவயதிலிருந்தே மார்க்கக் கல்வியில் திளைத்திருப்பார்கள். ஆனால், வாலிபப் பருவத்தில் ஒரு பயங்கரமான வழிப்பறிக் கொள்ளையனாக இருந்து, பின்னர் ஒரு குர்ஆன் வசனத்தைக் கேட்டு மனம் திருந்தி, ஹதீஸ் கலையின் மாபெரும் சிகரமாக மாறிய ஒரு அதிசய மனிதரைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். 

நேற்றைய பதிவில் நாம் பார்த்த இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்களே இவருக்காகத் தன் செல்வத்தைச் செலவழித்தார் என்றால், இவருடைய அந்தஸ்தைப் புரிந்து கொள்ளலாம்!

இருள் சூழ்ந்த ஒரு பாதை எப்படிப் பேரொளியாக மாற முடியும் என்பதற்கு இஸ்லாமிய வரலாற்றில் வாழ்ந்த உதாரணம்தான் இமாம் ஃபுழைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை. அறிஞர்களால் 'ஆபிதுல் ஹரமைன்' (மக்கா, மதீனா ஆகிய இரு புனிதத் தலங்களின் மாபெரும் வணக்கசாலி) என்று போற்றப்பட்டவர் இவர்.

முழுப் பெயர்: ஃபுழைல் இப்னு இயாள் இப்னு மஸ்ஊத் அத்-தமீமீ.
சிறப்புப் பெயர்: அபூ அலி.
காலம்: ஹிஜ்ரி 107-ல் (சமர்கந்த் நகரில்) பிறந்து, ஹிஜ்ரி 187-ல் மக்காவில் மரணமடைந்தார்.
ஆரம்ப வாழ்க்கை: குராசான் பகுதியில் அபீவர்த் மற்றும் ஸரக்ஸ் ஆகிய நகரங்களுக்கு இடையே செல்லும் பயணிகளை அச்சுறுத்தும் ஒரு வழிப்பறிக் கொள்ளையர் கூட்டத்தின் தலைவனாக இருந்தார்!

வாலிப வயதில் ஒரு பெண்ணின் மீது கொண்ட மையலால், ஓர் இரவில் அவளைச் சந்திப்பதற்காக ஒரு வீட்டின் சுவரேறிக் குதித்துக் கொண்டிருந்தார் ஃபுழைல். அப்போது, இரவின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு ஓர் இறை விசுவாசி ஓதிய குர்ஆன் வசனம் ஃபுழைலின் செவிகளில் விழுந்தது:
"நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவைக் கொண்டு அஞ்சும் நேரம் இன்னும் வரவில்லையா?" (அல்குர்ஆன் 57:16).
சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஃபுழைலின் இதயம் அந்த நொடியே உலுக்கப்பட்டது. "என் இறைவா, அந்த நேரம் வந்துவிட்டது! இதோ வந்துவிட்டது!" என்று கதறியவாறே அங்கிருந்து ஓடினார். தன்னிடம் இருந்த ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, தான் திருடிய பொருட்களை உரியவர்களிடமே தேடிக் கண்டுபிடித்துத் திருப்பிக் கொடுத்தார்.

திருந்திய மறுகணமே அவர் தன் வாழ்நாளை இல்மை தேடுவதற்காக அர்ப்பணித்தார். கூஃபா நகருக்குப் புறப்பட்டுச் சென்று அல்-அஃமஷ், மன்சூர் இப்னுல் முஃதமிர், ஹிஷாம் இப்னு ஹஸ்ஸான் போன்ற அன்றைய ஹதீஸ் கலை ஜாம்பவான்களிடம் மண்டியிட்டுப் படித்தார். ஹதீஸ் கலையில் இவர் மிகமிக நம்பகமானவர் (ஸிக்காஹ்) என்று இமாம் இப்னு முயீன் போன்ற விமர்சகர்களால் சான்றளிக்கப்பட்டார். இவருடைய அறிவிப்புகள் இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ஆகியோரின் ஸஹீஹ் நூல்களில் கம்பீரமாக இடம்பெற்றுள்ளன. இவருடைய ஹதீஸ் ஞானம் எத்தகையது என்றால், மாபெரும் அறிஞர்களான இமாம் ஷாஃபிஈ (ரஹ்), இமாம் யஹ்யா இப்னு ஸயீத் அல்-கத்தான், மற்றும் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் ஆகியோர் இவருடைய சபையில் மாணவர்களாக அமர்ந்து ஹதீஸ்களைக் கற்றனர்.

ஹதீஸ்களை அறிவிக்கும்போது ஒரு சிறு தவறு நிகழ்ந்துவிடக் கூடாதே என்ற அச்சத்தில், மிகவும் அவசியப்பட்டால் தவிர ஹதீஸ்களை வாய்மொழியாக அறிவிக்க மாட்டார். எழுத்துப்பூர்வமான ஏடுகளிலிருந்து அறிவிப்பதையே அவர் தனது கொள்கையாக வைத்திருந்தார்.

அன்றைய உலகின் மிகப்பெரிய வல்லரசுத் தலைவரான கலீஃபா ஹாருன் அர்-ரஷீத், மக்காவிற்கு வந்தபோது தனக்கு நற்போதனை செய்வதற்காக இமாம் ஃபுழைல் அவர்களை நாடினார். கலீஃபாவிடம் எந்தப் பயமுமின்றி, "மறுமையில் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் இந்த முழு சமுதாயத்தின் பாவங்களுக்காகவும் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். உமர் இப்னு அப்துல் அஸீஸைப் போல நேர்மையாக இருங்கள்!" என்று மிகக் கடுமையாக எச்சரித்தார். உலகையே ஆண்ட அந்த சக்கரவர்த்தி, ஃபுழைல் அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு மூர்ச்சையாகி விழும் அளவுக்குக் குலுங்கி அழுதார்.

பாவங்களின் உச்சத்தில் இருந்த ஒரு மனிதன், உண்மையாக மனம் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பினால், உலகமே கொண்டாடும் ஒரு மாபெரும் ஹதீஸ் அறிஞராகவும், கலீஃபாக்களுக்கே பாடம் புகட்டும் ஆன்மீக குருவாகவும் மாற முடியும் என்பதற்கு இமாம் ஃபுழைல் இப்னு இயாள் அவர்களின் வாழ்க்கை ஒரு சான்று! கல்வி என்பதை வெறும் மூளையில் சேமிக்கப்படும் தகவல் அல்லாமல் அது இதயத்தைத் தூய்மைப்படுத்தி, கண்களைக் குளமாக்கும் பேரொளி என்பதை அவருடைய வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #FudaylIbnIyad #HadithScholar #Repentance #Tawbah #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Monday, March 16, 2026

இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக்

வரலாற்றின் பக்கங்களில் எத்தனையோ மாபெரும் அறிஞர்களை நாம் பார்த்திருக்கிறோம். சிலர் ஹதீஸ் கலையில் உச்சம் தொட்டிருப்பார்கள்; சிலர் போர்க்களத்தில் வீரத்தின் மறுஉருவமாக இருந்திருப்பார்கள்; சிலர் கோடீஸ்வரர்களாக மாபெரும் கொடையாளிகளாகத் திகழ்ந்திருப்பார்கள்; இன்னும் சிலர் இரவெல்லாம் விழித்து வணங்கும் மாபெரும் வணக்கசாலிகளாக இருந்திருப்பார்கள். ஆனால், இந்த எல்லாப் பண்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு மனிதரை வரலாறு கண்டிருக்கிறது என்றால், அது அவர் மட்டும்தான்! 

அன்றைய இஸ்லாமிய உலகின் மாபெரும் அறிஞர்கள் ஒன்று கூடி அமர்ந்திருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒரு சுவாரஸ்யமான போட்டியை வைத்துக்கொண்டார்கள். அதாவது, "இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் அவர்களிடம் இருக்கும் நற்பண்புகளைப் பட்டியலிடுவோம்" என்பதே அந்தப் போட்டி. அவர்கள் பட்டியலிடத் தொடங்கினார்கள்: "அறிவு, ஹதீஸ், ஃபிக்ஹ், அரபு இலக்கணம், கவிதை, மொழித்திறன், வீரம், குதிரையேற்றம், தைரியம், இரவுத் தொழுகை, தொடர் நோன்பு, தாராள குணம், வியாபார நேர்மை..." என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே சென்று, கடைசியில் "அவரிடம் இல்லாத நற்பண்புகளே இல்லை" என்று வியந்து முடித்தார்கள்.

முழுப் பெயர்: அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் அல்-ஹன்ழலீ அல்-மர்வாஸீ.
சிறப்புப் பெயர்: அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீஸ் (ஹதீஸ் கலையின் தலைவர்).
காலம்: ஹிஜ்ரி 118-ல் (துர்க்மெனிஸ்தானின் 'மர்வ்' நகரில்) பிறந்து, ஹிஜ்ரி 181-ல் (ஈராக்கின் 'ஹீத்' நகரில்) மரணமடைந்தார்.
பின்னணி: இவருடைய தந்தை முபாரக் ஒரு அடிமையாக இருந்து தன் நேர்மையால் உயர்ந்தவர்.

இப்னுல் முபாரக் ஒரு மாபெரும் வியாபாரி. பல நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்தார். ஒருமுறை அவரிடம், "நீங்கள் ஒரு மாபெரும் மார்க்க அறிஞர், எதற்காக இப்படிப் பொருள் தேடி உலகத்தின் பின்னால் ஓடுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் சொன்ன பதில் வரலாற்றுப் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது: "நான் எனக்காகச் சம்பாதிக்கவில்லை. சுஃப்யான் அஸ்-ஸவ்ரீ, ஃபுளைல் இப்னு இயாழ் போன்ற மாபெரும் ஹதீஸ் அறிஞர்கள், வறுமையின் காரணமாக அரசர்களிடமோ அதிகாரிகளிடமோ கையேந்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் சம்பாதிக்கிறேன். என் செல்வத்தைக் கொண்டு அவர்களின் குடும்ப வறுமையைப் போக்கிவிட்டால், அவர்கள் முழுநேரமும் இந்த உம்மாவுக்காக ஹதீஸ்களைத் தொகுப்பார்கள் அல்லவா!" என்றார்.

பொதுவாக மார்க்க அறிஞர்கள் என்றால் பள்ளியிலோ, நூலகத்திலோ முடங்கிக் கிடப்பவர்கள் என்ற பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறிந்தவர் இவர். இஸ்லாமிய வரலாற்றில் ஜிஹாத் குறித்து முதன்முதலில் ஒரு முழுமையான நூலை (கிதாபுல் ஜிஹாத்) எழுதியவர் இவர்தான். அதை அவர் வெறும் மையால் எழுதவில்லை, தன் ரத்தத்தால் எழுதினார். ரோமானியப் படையினருக்கு எதிரான ஒரு போரில், எதிரிப் படையின் மாவீரன் ஒருவன் சண்டைக்கு அழைத்தான். முஸ்லிம் படையிலிருந்து முகமூடி அணிந்த ஒரு வீரர் சென்று, அவனை வீழ்த்தினார். அடுத்தடுத்து வந்த எதிரிப் படை வீரர்களையும் அந்த முகமூடி வீரர் சாய்த்தார். போர் முடிந்த பின் அந்த முகமூடியை விலக்கிப் பார்த்தால்... அது தியானக் கூடத்தில் கண்ணீர் வடிக்கும் மாபெரும் ஹதீஸ் அறிஞர் இப்னுல் முபாரக்! தன் புகழ் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக முகத்தை மறைத்துப் போரிட்டிருக்கிறார் அந்த மாவீரர்.

ஹதீஸ்களுக்கான அறிவிப்பாளர் தொடர் என்பதும் மார்க்கத்தின் ஒரு பகுதியாகும்; அது மட்டும் இல்லையென்றால், எவர் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் மார்க்கத்தின் பெயரால் பேசியிருப்பார்கள்" - இன்று நாம் ஹதீஸ்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யப் பயன்படுத்தும் இந்த இரும்பு போன்ற விதியை உலகிற்கு உரக்கச் சொன்னவர் இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்).

ஹதீஸ்களைச் சேகரிப்பதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் மலைக்கத்தக்கவை. குராசான், ஈராக், ஹிஜாஸ் (மக்கா, மதீனா), ஷாம் (சிரியா), எகிப்து என அன்றைய இஸ்லாமிய உலகின் ஒவ்வொரு மூலைக்கும் அவர் பயணித்தார். வெறுமனே தகவல்களைச் சேகரிக்கவில்லை; அந்தந்த ஊர்களில் வாழ்ந்த மாபெரும் அறிஞர்களின் 'இல்மை' அப்படியே உள்வாங்கினார். இதனால்தான் இவரை "அறிஞர்களின் சங்கமம்" என்று அழைப்பார்கள்.

ஹதீஸ் துறையில் ஒருவருக்கு வழங்கப்படும் ஆகச்சிறந்த பட்டம் இது. இமாம் புகாரி, முஸ்லிம் போன்றவர்களுக்கு முன்பே இந்தப் பட்டத்திற்கு முழுத்தகுதியுடையவராக இவர் திகழ்ந்தார். அது தான் அமீருல் முஃமினீன் பில் ஹதீஸ்.  ஹதீஸ்களை அறிவிப்பதில் அவர் காட்டிய நம்பகத்தன்மை எவ்வளவு என்றால், ஒரு ஹதீஸில் 'இப்னுல் முபாரக்' பெயர் வந்துவிட்டால், ஹதீஸ் விமர்சகர்கள் அந்த ஹதீஸை எந்தத் தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்வார்கள்.

யார் அறிவிக்கும் ஹதீஸை ஏற்கலாம், யாரை நிராகரிக்கலாம் என்று அறிவிப்பாளர்களைத் தரம் பிரிக்கும் நுணுக்கமான கலையில் இவர் ஒரு தேர்ந்த நீதிபதியாகத் திகழ்ந்தார். தன் நண்பர்களாக இருந்தாலும், மார்க்க விஷயத்தில் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டத் தயங்கியதில்லை. "இஸ்லாம் என்பது தூய்மையானது, அதில் மனிதக் கற்பனைகளுக்கு இடமில்லை" என்பதில் அவர் மிகவும் கறாராக இருந்தார்.

அவருடைய நூற்கள்.

கிதாபுல் ஸுஹ்த்: ஹதீஸ்களின் அடிப்படையில் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவது மற்றும் உலகப்பற்றற்ற நிலை குறித்து எழுதப்பட்ட மிகத் தொன்மையான நூல்.
முஸ்னத் இப்னுல் முபாரக்: அவர் சேகரித்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தொகுப்பு. இவை தவிர தப்ஸீர் மற்றும் வரலாறு குறித்தும் அவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: "நான் இப்னுல் முபாரக் மற்றும் வக்கீஃ இப்னுல் ஜர்ராஹ் ஆகியோரின் நூல்களை முழுமையாக மனனம் செய்திருந்தேன்." ஹதீஸ் உலகையே கட்டி ஆண்ட இமாம் புகாரிக்கே இப்னுல் முபாரக் அவர்களின் எழுத்துக்கள்தான் ஆரம்பகால உத்வேகமாக இருந்தது என்றால், அவருடைய சேவையின் ஆழத்தை நாம் உணரலாம்.

அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் அவர்கள் ஒரு மாபெரும் வியாபாரியாக இருந்தும், "அறிவிப்பாளர் தொடர்  இல்லாத ஹதீஸ்கள் வெறும் வெறும் கூச்சல்கள்" என்று நிரூபித்தார். இன்று நாம் மிகத் தெளிவான, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைப் படிக்கிறோம் என்றால், அதற்கு அன்று அவர் போட்ட அறிவிப்பாளர் ஆய்வு என்ற அடித்தளமே மிக முக்கிய காரணம்.

அவருடைய மரணச் செய்தி மாபெரும் அறிஞரான ஃபுளைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்களுக்கு எட்டியபோது, அவர் சிறு குழந்தையைப் போலக் குலுங்கி அழுது, "கிழக்கும் மேற்கும் இவரோடு இறந்துவிட்டது!" என்று கண்ணீர் வடித்தார். கலீஃபா ஹாருன் அர்-ரஷீத் இந்தச் செய்தியைக் கேட்டவுடன், "அறிஞர்களின் தலைவர் மரணித்துவிட்டார்" என்று சோகத்தில் மூழ்கினார்.

மார்க்கப் பற்று என்றால் ஏழ்மையாக இருப்பதுதான், உலகத்தைத் துறப்பதுதான் என்ற தவறான புரிதல் நம்மிடம் இருக்கிறது. ஆனால், மாபெரும் கோடீஸ்வரராக இருந்து கொண்டும், போர்க்களத்தில் வாளேந்தும் மாவீரராக இருந்து கொண்டும், ஹதீஸ் கலையின் முடிசூடா மன்னராகத் திகழ முடியும் என்பதற்கு அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்களின் வாழ்வு ஒரு மாபெரும் உதாரணம். செல்வம் நல்லவர்களின் கைகளில் இருக்கும்போது அது சமுதாயத்தின் இருளைப் போக்கும் பேரொளியாக மாறும்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #AbdullahIbnAlMubarak #HadithScholar #WarriorScholar #Generosity #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups