*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -10)
ஹதீஸ்களை சேகரிக்கும் பணி தொடங்கியது.
இந்த பணி அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. ஏனென்றால், நபி(ஸல்) அவர்களின் பெயரில் பெருமளவில் ஹதீஸ்கள் உலவியது.
எந்த அளவுக்கென்றால், நபி(ஸல்) அவர்கள் மரணித்ததற்கு பிறகு சுமார் 100 ஆண்டுகளில் இமாம் மாலிக் அவர்களால் எழுதப்பட்ட "முவத்தா" என்ற புத்தகத்தில் சுமார் 1,700 ஹதீஸ்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
அதிலிருந்து, சுமார் 100 ஆண்டுகள் கடந்தபிறகு ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசையுடன் தொகுக்க முயன்றபோது அது சுமார் ஆறு இலட்சம் (6,00,000) ஹதீஸ்களாக பல்கிப் பெருகியிருந்தது.
நபி(ஸல்) அவர்களின் பெயரில் ஹதீஸ்கள் உருவாக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம்.
அலி(ரலி) அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரை சிறப்பிக்கும் வகையில் ஹதீஸ்களை உருவாக்கியிருந்தனர் சுன்னாவைப் பேணாத ஷியாக்கள்.
நன்மைகளை மக்கள் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் சுன்னாவைப் பேணியவர்களாலும் ஹதீஸ்கள் உருவாக்கப்பட்டன.
இந்த போலி ஹதீஸ்கள் மக்களிடம் பரவியிருந்த போதிலும் அவை போலியாக உருவாக்கப்பட்டவை என்பதை அந்த அந்த காலத்தில் வாழ்ந்த நல்லவர்கள் அவற்றை அடையாளப்படுத்தியும், பின்னால் வருவபவர்களுக்கு அந்த பொய்யர்களை அடையாளம் காட்டியும் வைத்தனர்.
ஆயினும், அந்த பொய்களும் ஹதீஸ் என்ற பெயரில் மக்களிடம் இரண்டறக் கலந்துவிட்டது. இதை எப்படி தனியாக பிரிப்பது?
இதை தரம் பிரிப்பதற்குத்தான் ஹதீஸ் சேகரிப்பில் ஈடுபட்ட ஹதீஸ் இமாம்கள் "ஹதீஸ் கலை விதிகள்" என்பதை அறிமுகப்படுத்தினர்.
ஹதீஸ்களை சேகரித்த இமாம்களுள் இந்த விதி மாறுபாட்டிற்குள்ளாகவே இருந்தது.
உதாரணமாக, ஹதீஸ் அறிவிக்கும் அறிவிப்பாளர் வரிசையில் இருக்கும் நபர்களின் வயது ஒருவருக்கொருவர் சமகாலத்தில் இருப்பதாக இருக்க வேண்டும் என்று விதித்தார் ஒரு ஹதீஸ் இமாம்.
வயது முரண்பாடு இல்லாமை மட்டும் அல்லாமல் அவர்களுடைய வாழ்நாளில் சந்தித்திருக்க வேண்டும் என்ற விதியை வகுத்தார் இன்னொரு இமாம்.
ஆனால், ஹதீஸ் கலை இமாம்கள் அனைவரும் பின்பற்றிய ஒரு விதி இருக்கிறதென்றால் அது குர்ஆன் அல் ஹுஜ்ரத் அத்தியாயத்தின் ஆறாவது வசனம்தான்.
இறை நம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், அதைத் தீர்க்கமாக விசாரித்துக்கொள்ளுங்கள்;...(49:6)
இந்த வசனத்தின் அடிப்படையில் ஹதீஸ் அறிவிப்பாளர் நல்லவர் இல்லை என்று முடிவாகிவிட்டால் அவரிடமிருந்து எந்த ஹதீஸையும் ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிடுவது என்பதுதான் ஹதீஸ் இமாம்களிடம் இருந்த ஒருமித்த கருத்து.
இந்த ஒருமித்த கருத்துதான் ஹதீஸ் சேகரிப்பின் முதன்மையான விதி.
ஷியா, கவாரிஜ், முஃதஸிலா போன்ற வழிதவறிய நபர்கள் அறிவிக்கும் எந்த ஒரு ஹதீஸும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. புதுமைகளை தோற்றுவித்த பித்அத்வாதிகளிடமிருந்து கிடைக்கும் ஹதீஸ்களும் எடுத்துக்கொள்ளப்படவில்லை
அத்தகையவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களுள் உண்மையானதும் இருக்கலாம், பொய்யானதும் இருக்கலாம். எது உண்மையானது? எது பொய்யானது? என்று பிரித்தரிவதில் இருக்கும் குழப்பத்தின் காரணமாக இத்தகைய நபர்கள் அறிவிக்கும் எந்த ஹதீஸும் ஏட்டில் ஏறவில்லை.
நினைவில் வைத்துக்கொள்வோம்...
** ஒரு நபரை சரியில்லாதவர் என்று முடிவு செய்துவிட்டால் அவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் ஏற்றுக்கொள்ளப்படாது.
** அவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் உண்மையானதா அல்லது பொய்யானதா என்று ஆராயப்படவும் மாட்டாது.
** அவர் அறிவிக்கும் ஹதீஸ்களுள் உண்மையானது இருந்தாலும் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது.
ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசையுடன் தொகுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட மத்ஹப் இமாம்கள் ஷாபி மற்றும் இப்னு ஹம்பல் அவர்களின் ஆசை நிறைவேறியது.
அவர்களிடம் பாடம் பயின்ற "முஹம்மது இப்னு இஸ்மாயில்" என்பவர் ஒரு ஹதீஸ் புத்தகத்தை தொகுத்தளித்தார்.
அந்த புத்தகத்திற்கு அவர் பெயரும் வைத்தார்.
"அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹூல் முக்தஸர் பின் கனனி ரசூலில்லாஹி வ அய்யமிஹி"
"ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் முறிவுறாத, நிபந்தனைகளுக்குட்பட்ட அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற்ற அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் வாழ்க்கைச் சரிதை குணநலன்கள் அனைத்தும் அமைந்த சன்மார்க்கத்தின் சகல துறைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு"
அஸர் வக்தில் இந்த பெயரை கூற ஆரம்பித்தால் மஃரிப் வக்தில்தான் இதை முடிக்க முடியும் என்ற அளவில் பெரியதாக இருந்த இதன் பெயரை பின்னாளில் வந்தவர்கள் சுருக்கிவிட்டனர்.
இந்த புத்தகத்தின் ஆசிரியரின் கருத்துப்படி இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ்கள் ஸஹீஹானவை (ஆதாரப்பூர்வமானவை) என்பதால் "முஹம்மது இப்னு இஸ்மாயிலின் கூற்றுப்படி இது ஸஸீஹான புத்தகம்" என்றனர்.
"புஹாரா" எனும் ஊரில் பிறந்த முஹம்மது இப்னு இஸ்மாயில் அவர்கள் "புஹாரி" என்று அழைக்கப்பட்டார்.
இதனால், அந்த புத்தகம் "ஸஹீஹுல் புஹாரி" என சுருக்கமாக அழைக்கப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பிறை மீரான்.
Part -11
https://m.facebook.com/story.php?story_fbid=766530470436757&id=100012394330588
Part -9
https://m.facebook.com/story.php?story_fbid=758091037947367&id=100012394330588
No comments:
Post a Comment