பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, November 8, 2019

ஜின்களை ஏவிவிட்டு சூனியம் செய்யப்படுகிறதா❓

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது இணை வைப்பாக இருக்கிறது என்று நாம் கூறும் போது அதை மறுப்பதற்காக இன்னொரு வாதத்தை எடுத்து வைத்துச் சமாளிக்கிறார்கள்.

சூனியக்காரன் தானாக இதைச் செய்வதில்லை. அவன் ஜின்களை வசப்படுத்தி வைத்துக் கொண்டு செய்கிறான். எந்த சாதனத்தையும் அவன் பயன்படுத்தாவிட்டாலும் ஜின்களை ஏவிவிட்டு சூனியம் செய்கிறான். ஜின்கள் போய் பாதிப்பை ஏற்படுத்துவது நம் கண்களுக்குத் தெரியாததால் அல்லாஹ்வைப் போல் சூனியக்காரன் செயல்படுவதாக மக்களுக்குத் தெரிகிறது என்று புது விளக்கம் கொடுக்கிறார்கள்.

இவர்கள் மனமறிந்து பொய் சொல்கிறார்கள் என்பது இந்த வாதத்தின் மூலம் தெரிகிறது.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளது என்பதற்கு இவர்கள் எதை ஆதாரமாகக் காட்டினார்கள்?

யூதன் ஒருவன் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைத்து அவர்களை முடக்கிப்போட்டான் என்ற செய்தியைத் தான் ஆதாரமாகக் காட்டினார்கள்.

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஹதீஸில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

சீப்பு, உதிர்ந்த முடி, பேரீச்சம்பாளை ஆகிய பொருட்களில் லபீத் எனும் யூதன் சூனியம் வைத்து தர்வான் எனும் கிணற்றில் புதைத்து வைத்ததாகவும், அந்தக் கிணற்று நீரை இறைத்து அப்பொருட்களை அப்புறப்படுத்திய பிறகுதான் நபிகள் நாயகம் (ஸல்) குணமடைந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

யூதன் ஜின்களை ஏவிவிட்டு அந்த ஜின்கள் நபிகள் நாயகத்தைத் தாக்கியதால் தான் அவர்கள் மனநோய்க்கு ஆளானார்கள் என்று அந்த ஹதீஸில் இருந்தால் தான் இவர்கள் இவ்வாறு வாதிட முடியும்.

இவர்களே நம்பாத ஒரு காரணத்தைப் புதிதாக கற்பனை செய்து சொல்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.

முஸ்லிம் பெயர் தாங்கி ஒருவன் சூனியம் வைத்தால் அவன் ஜின்களைப் பற்றி அறிந்துள்ளதால் ஜின்களை வசப்படுத்தி சூனியம் செய்தான் என்று சொல்ல முடியும்.

ஆனால் இந்துக்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள் இன்னும் பல மதத்தினரும் சூனியம் செய்வதாகச் சொல்லிக் கொள்கின்றனர். இஸ்லாத்தில் இருந்து கொண்டே சூனியத்தை ஆதரிப்பவர்களும் இதை ஒப்புக் கொள்கின்றனர். இவர்கள் ஜின்கள் என்று ஒரு படைப்பு உள்ளதாக நம்ப மாட்டார்கள். ஜின்களையே அறியாத இவர்கள் எப்படி ஜின்களை ஏவி விட்டு சூனியம் செய்வார்கள்? இவர்களுக்கு இந்த வாதம் பொருந்தாதே?

முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஒருவன் சூனியம் செய்வதைத் தான் நாங்கள் நம்புகிறோம். ஜின்களை நம்பாத பிற மதத்தவர்களுக்கு ஜின்களைப் பற்றி நம்பிக்கை இல்லாததால் அவர்களால் சூனியம் செய்ய முடியாது என்பது தான் எங்கள் நம்பிக்கை என்று சொல்லப் போகிறார்களா?

அப்படிச் சொல்வார்களானால் யூதன் சூனியம் வைத்தான் என்ற ஹதீஸை இவர்களே மறுத்தவர்களாகி விடுவார்கள்.

இவர்கள் தமது வாதத்தில் பொய்யர்கள் என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

அடுத்து மனிதன் ஜின்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வசப்படுத்த முடியுமா? இதற்கு ஆதாரம் உண்டா? என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பகுத்தறிவு இல்லாத ஜீவன்களை மனிதனுக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்துள்ளான். இதற்கு ஆதாரங்கள் உள்ளன.

45:12, 45:13, 14:32, 16:14, 22:36, 22:37, 22:65, 31:20, 43:13 ஆகிய வசனங்களில் அல்லாஹ் இதைத் தெளிவாக கூறுகிறான்.

ஆனால் மனிதனைப் போல் பகுத்தறிவும், மனிதனை விட அதிக ஆற்றலும் கொண்ட ஜின்களை மனிதன் வசப்படுத்த முடியும் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறானா? ஜின்களை எவ்வாறு வசப்படுத்துவது என்ற வழிமுறையை அல்லாஹ்வோ அவனது தூதரோ கற்றுத் தந்துள்ளார்களா? இதற்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டி விட்டுத் தான் ஜின்களை வசப்படுத்தி சூனியம் செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். ஒரு ஆதாரமும் இல்லாமல் தப்பித்துக் கொள்வதற்காக உளறக் கூடாது.

நெருப்பால் படைக்கப்பட்ட ஜின்கள் எனும் படைப்பு மனிதர்களின் கண்களுக்குத் தென்படாது. ஆனாலும் மனிதனைப் போல் பகுத்தறிவு கொடுக்கப்பட்ட படைப்பு என்பதற்கு ஆதாரம் உண்டு.

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

திருக்குர் ஆன் 51:56

ஜின், மனித சமுதாயமே! “உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?” (என்று இறைவன் கேட்பான்). “எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. “(ஏகஇறைவனை) மறுத்தோராக இருந்தோம்” எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.

திருக்குர்ஆன் : 6:130

இதிலிருந்து ஜின்களுக்கும் தூதர்கள் உண்டு; ஜின்களுக்கும் வேதங்கள் உண்டு; ஜின்களும் பிரச்சாரம் செய்கின்றன என்று அறிந்து கொள்ளலாம்.

மதிப்பு மிக்க (மனித, ஜின் ஆகிய) இரு இனத்தவர்களே! உங்களுக்காக (விசாரிக்க) நேரம் ஒதுக்குவோம்.

திருக்குர்ஆன் 55:31

“உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களான ஜின்களுடனும், மனிதர்களுடனும் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!” என்று (அவன்) கூறுவான்.

திருக்குர்ஆன் 7:38

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

திருக்குர்ஆன் : 7:179

“மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன்” என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.

திருக்குர்ஆன் 11:119

நாம் நினைத்திருந்தால் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான நேர்வழியைக் கொடுத்திருப்போம். மாறாக “அனைத்து (கெட்ட) மனிதர்களாலும், ஜின்களாலும் நரகத்தை நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து சொல் முந்தி விட்டது.

திருக்குர்ஆன் 32:13

மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப எப்படி சொர்க்கம் நரகம் வழங்கப்படுகிறதோ அது போல் ஜின்களுக்கும் வழங்கப்படும் என்பதையும், ஜின்களுக்கும் வணக்க வழிபாடுகள் செய்யும் கடமை உண்டு என்பதையும் இவ்வசனங்கள் கூறுகின்றன.

7:179 வசனம் ஜின்களுக்குப் பகுத்தறிவு உள்ளது என்று தெளிவாகச் சொல்கிறது.

பகுத்தறிவு இல்லாத மிருகங்களை மனிதன் வசப்படுத்தலாம். பகுத்தறிவுள்ள ஜின்னை எப்படி மனிதனால் வசப்படுத்த முடியும்?

பகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறிவுள்ள இன்னொரு மனிதனை வசப்படுத்த முடியாது எனும் போது பகுத்தறிவுள்ள ஜின்களை எப்படி வசப்படுத்த முடியும்.

இது மட்டுமில்லாமல் ஆற்றலில் மனிதர்களை மிஞ்சியது ஜின் இனம்.

“பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?” என்று (ஸுலைமான்) கேட்டார். “உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்”  என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் “நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ (தமக்காகவே நன்றி மறக்கிறார்.) என் இறைவன் தேவைகளற்றவன்; கண்ணியமிக்கவன்.

திருக்குர் ஆன் 27:38,39,40

சுலைமான் நபி உட்கார்ந்த இடத்தில் எழுவதற்குள் அந்த சிம்மாசனத்தைக் கொண்டு வருகிறேன் என்று இஃப்ரீத் எனும் ஜின் சொன்னது. அதைவிட வலிமை மிக்க மற்றொரு ஜின் கண்மூடித் திறப்பதற்குள் கொண்டு வருகிறேன் என்று சொன்னது. அவ்வாறே அதைக் கொண்டும் வந்தது.

இதில் இருந்து ஜின்கள் மனிதனை விட பல்லாயிரம் மடங்கு ஆற்றல் பெற்றவை என்று அறிந்து கொள்ளலாம்.

ஜின்கள் பேசிக் கொண்டதை அல்லாஹ் நபியவர்களுக்கு அறிவித்துக் கொடுத்த அல்ஜின் அத்தியாயத்தில் 8,9 வசனங்களைப் பாருங்கள்

வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.

திருக்குர்ஆன் 72:8,9

இந்த நவீன உகத்திலும் மனிதனால் சென்றடைய முடியாத வானுலகுக்கு ஜின்கள் சாதாரணமாகப் போக முடியும் என்றால் ஜின்களின் ஆற்றல் எத்தகையது என்று அறிந்து கொள்ளலாம்.

ஜின்களுக்கு மனிதர்களைப் போல் பகுத்தறிவு இருக்கிறது. ஆற்றலில் மனிதனை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. அப்படி இருக்கும் போது மனிதனை வேண்டுமானால் ஜின்களால் வசப்படுத்த முடியுமே தவிர ஜின்களை மனிதனால் வசப்படுத்தவே முடியாது என்பது உறுதியாகிறது.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் மனிதனால் ஜின்களை வசப்படுத்தவே முடியாது என்பதற்குத்தான் ஆதாரங்கள் உள்ளன.

சுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தது பற்றி கூறும் வசனங்களைக் கவனியுங்கள்!

ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.

திருக்குர்ஆன் : 21:82

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது  இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம். அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. “தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்” (என்று கூறினோம்.)

திருக்குர்ஆன் : 34:12

ஒவ்வொரு விநாடியும் ஜின்கள் சுலைமான் நபிக்குக் கட்டுப்படுகிறதா என்று அல்லாஹ் கண்காணித்த காரணத்தால் தான் அவரால் ஜின்களை வசப்படுத்த முடிந்தது.

சுலைமான் நபிக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தான். பறவையை வசப்படுத்திக் கொடுத்தான். எறும்புகள் பேசுவதைப் புரிய வைத்தான். இதுபோல் தான் ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.

மனிதர்களால் ஜின்களை வசப்படுத்த முடியும் என்றால் சுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம் என்று சொல்வது அர்த்தமற்ற சொல்லாகிவிடும்.

சுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான் என்பது மனிதர்களால் ஜின்களை வசப்படுத்த முடியாது என்ற கருத்தை உள்ளடக்கி இருக்கிறது.

அல்லாஹ்வின் இந்த மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்த சுலைமான் நபியவர்கள் எனக்குக் கொடுத்தது போன்ற ஆட்சியை யாருக்கும் கொடுக்காதே என துஆவும் செய்து விட்டார்கள்.

“என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்” எனக் கூறினார்.

திருக்குர்ஆன் 38:35

இந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என ஹதீஸில் ஆதாரமும் இருக்கின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள், நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள். பிறகு அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக (38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது என்று கூறினார்கள்.

புகாரி 461

சுலைமான் நபியவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் நபிகளாருக்கு நினைவுக்கு கொண்டு வந்து ஜின்னை வசப்படுத்தும் நிலையில் இருந்து நபியவர்களைத் தடுத்து விட்டான். சுலைமான் நபியின் பிரார்த்தனை இதையும் உள்ளடக்கியது தான் என்பதற்கும் இது ஆதாரமாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதை இதிலிருந்து நாம் அறிய முடியும்.

மனிதனால் ஜின்களை வசப்படுத்த முடியாது என்று திருக்குர்ஆனில் தெளிவாகச் சொல்லப்பட்ட பின் அதற்கு மாற்றமாக சூனியக்கரனால் ஜின்களை வசப்படுத்த முடியும் என்று வாதிடுவதை எப்படி ஏற்க முடியும்?

ஜின்களை வைத்து சூனியம் செய்தால் அதற்கு ஏன் முடி, காலடி மண் தேவைப்படுகின்றது. ஒரு கட்டளை பிறப்பித்தால் ஜின்களே செய்து விடும்.

நாங்கள் தான் ஜின்களை வைத்து சூனியம் செய்கின்றோம் என்று சூனியக்காரர்களே சொல்லாமல் இருக்கும் போது சூனியத்திற்கு முட்டுக் கொடுக்கும் உலமாக்கள் இப்படிச் சொல்வது தான் வேதனை.

சூனியக்காரன் ஜின்களை வசப்படுத்தி வைத்து இருந்தால் தனது தேவைகளுக்கு மக்களிடம் கையேந்திக் கொண்டு இருப்பானா?

ஜின்னை வசப்படுத்தி வைத்திருப்பவனிடம் போய் நான் உன்னை அடிக்கின்றேன். நீ எதுவும் செய்யக்கூடாது. நீ வசப்படுத்தி வைத்துள்ள ஜின்தான் என்னைத் தடுக்க வேண்டும் என்று சொன்னால் அவன் ஏற்றுக் கொள்வானா?

ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பது உண்மையானால் மண்ணில் புதைந்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கதைக் கொண்டு வருமாறு ஜின்களுக்குக் கட்டளையிடலாமே?

அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாடுகளுக்கு நாலு ஜின்களை அனுப்பினால் அந்த நாடுகளை உண்டு இல்லை என்று பண்ணிவிடலாமே? ஜின்களுக்கு அவ்வளவு ஆற்றல் உள்ளதே?

எங்கோ இருந்த சிம்மாசனத்தை கண்மூடித் திறப்பதற்குள் கொண்டு வரும் ஆற்றல் படைத்த ஜின்களுக்கு இவர்கள் கட்டளையிட்டால் பெண்டகனில் உள்ள எல்லா ஆயுதங்களயும் அழித்து விட முடியுமே?

ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பதாக புளுகும் இவர்கள் சில்லரை வேலைகளைத்தான் பார்க்கிறார்கள். ஜின்கள் பார்க்கும் எந்த வேலையையும் அவர்கள் பார்ப்பதில்லை.

அறிவுப்பூர்வமாக சிந்தித்தால் கண்களுக்குத் தெரியாத பகுத்தறிவுள்ள படைப்புக்குத் தான் வசப்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருக்கும். ஜின்கள் நம்மைப் பார்க்கும். நாம் ஜின்களைப் பார்க்க முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

திருக்குர் ஆன் 7:27

ஜின்கள் நம் தலையில் தட்டி நான் சொல்வதைக் கேள் என்று சொன்னால் அதை மனிதன் மீறமாட்டான். ஏனெனில் கண்களுக்குத் தெரியாததால் எந்தப் பக்கம் இருந்து அடுத்த அடி விழும் என்று தெரியாது. எனவே ஜின்களை எதிர்க்க இயலாமல் மனிதன் ஜின்களுக்குக் கட்டுப்படும் என்றால் அதை நம்பலாம்.

மனிதனைப் போல் பகுத்தறிவும், மனிதனை விட அதிக ஆற்றலும், கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதன் மூலம் கூடுதல் ஆற்றலையும் பெற்றுள்ள ஜின்களை மனிதனால் ஒருபோதும் வசப்படுத்த முடியாது.

ஜின்களைக் கொண்டு ஜின்கள் செய்யத் தக்க எந்த வேலையையும் இவர்கள் செய்வதில்லை. மாறாக மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்குத் தான் சூனியம் என்று பயம் காட்டுகின்றனர்.

No comments:

Post a Comment