பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, June 9, 2016

ஹாரூத், மாரூத் மலக்குகளா ?

ஹாரூத், மாரூத் மலக்குகளா?

இவ்வசனத்தில் ஹாரூத் மாரூத் எனும் இரு பெயர்கள் கூறப்பட்டுள்ளன. ஹாரூத் மாரூத் என்போர் வானவர்களா? கெட்ட மனிதர்களா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
மலகைனி - அந்த இரு வானவர்கள் - என்ற சொல்லைத் தொடர்ந்து ஹாரூத் மாரூத் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ஹாரூத் மாரூத் எனும் வானவர்கள் என்று இவ்விடத்தில் பொருள் கொள்ள வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்கள் கொடுக்கும் அர்த்தத்தின் படி ஹாரூத், மாரூத் எனும் பெயர் கொண்ட இரண்டு மலக்குகள் மனிதர்களிடம் வந்து ஸிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்ற கருத்து வருகிறது.
மலக்குகள் எப்படி சூனியத்தைக் கற்றுக் கொடுக்க முடியும்? என்ற நியாயமான கேள்விக்கு விளக்கமளிப்பதற்காக ஒரு கதையையும் சில விரிவுரையாளர்கள் எழுதி வைத்துள்ளனர்.
மனித சமுதாயத்தை இறைவன் அடிக்கடி புகழ்ந்து பேசுவதைக் கேட்ட வானவர்கள் பொறாமைப்பட்டு இறைவனிடம் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்களாம். மனிதர்கள் செய்யும் பாவங்களைப் பட்டியல் போட்டுக் காட்டினார்களாம். அதற்கு இறைவன் "மனிதர்களுக்கு ஆசை என்ற உணர்வை நான் வழங்கியுள்ளேன். இதனால் அவர்கள் பல சமயங்களில் தவறுகளைச் செய்து விடுகிறார்கள். உங்களில் இரண்டு பேரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களுக்கும் நான் ஆசை எனும் உணர்வை வழங்குகிறேன். அவர்கள் மண்ணுலகம் செல்லட்டும்'' என்றானாம். மலக்குகளில் ஹாரூத், மாரூத் என்ற இருவரைத் தேர்வு செய்தார்களாம். அவ்விருவரும் பூமிக்கு வந்து மனிதர்களை விட அதிக அளவுக்குப் பாவங்கள் செய்தார்களாம். அவர்கள்தான் சூனியத்தையும் கற்றுக் கொடுத்தார்களாம். இப்படிப் போகிறது கதை!
இந்தக் கதையும், இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட மேற்கண்ட அர்த்தமும் சரியானது தானா? என்று நாம் ஆராயும்போது திருக்குர்ஆனின் பல வசனங்களுடன் மேற்கண்ட அர்த்தம் மோதுவதைக் காணலாம்.
மனித சமுதாயத்தை இறைவன் படைக்கவிருப்பதாக அறிவித்ததுமே "மனிதர்கள் குழப்பம் ஏற்படுத்துவார்கள், இரத்தம் சிந்துவார்கள்'' என்று மலக்குகள் கூறியதாக 2:30 வசனம் கூறுகிறது.
ஆதம் (அலை) அவர்களின் சிறப்பையும், தகுதியையும் இறைவன் நிரூபித்துக் காட்டிய பிறகு "நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று கூறி தங்கள் தவறுக்கு மலக்குகள் வருந்தி விட்டனர் என 2:32 வசனம் கூறுகிறது.
அது மட்டுமின்றி ஆதம் (அலை) அவர்களுக்குப் பணிந்து தங்கள் தவறுக்கு வானவர்கள் பரிகாரம் தேடிக் கொண்டதாக 2:34 வசனம் கூறுகிறது.
மனிதனின் தகுதியைப் பற்றி முன்பே விமர்சனம் செய்து அந்த விமர்சனம் தவறு என்று இறைவன் விளக்கிய பிறகு தவறு என்று ஒப்புக் கொண்டவர்கள் வானவர்கள்.
இத்தகைய இயல்பு படைத்த வானவர்கள், இன்னொரு முறை எப்படி இறைவனிடம் ஆட்சேபணை செய்திருப்பார்கள்?
வானவர்கள் தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள் என்று 66:6 வசனம் கூறுகிறது.
வானவர்கள் மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் என்று 21:26,27 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
மேற்கண்ட வசனங்களில் மலக்குகளின் பண்புகளும், இயல்புகளும் தெளிவாக விளக்கப்படுகின்றன. இத்தகைய பண்புகளைக் கொண்ட வானவர்கள் இறைவன் செயல்பாட்டில் குறைகண்டு எப்படி ஆட்சேபணை செய்திருப்பார்கள்?
மனிதனைப் படைப்பதற்கு இறைவன், அவர்களின் கருத்தைக் கேட்ட காரணத்தினாலேயே அவர்கள் தங்கள் கருத்தைக் கூறினார்கள். இதை ஆட்சேபணை என்றோ, அதிகப் பிரசங்கித்தனம் என்றோ கூற முடியாது.
இந்தக் கதையில், மலக்குகளிடம் இறைவன் கருத்து எதுவும் கேட்காத நிலையில், மனிதனைப் படைத்து முடித்து விட்ட நிலையில் மலக்குகள் எதிர்க்கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
இது போன்ற அதிகப் பிரசங்கித்தனம் மலக்குகளின் இயல்புக்கு மாற்றமானதாகும்.
ஸிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்பிப்பது, குப்ர் எனும் இறை மறுப்பாகும். இத்தகைய இறைமறுப்பான காரியங்களை மலக்குகள் ஒருபோதும் செய்திருக்க முடியாது.
ஹாரூத் மாரூத் என்போர் மலக்குகள் என்று நாம் கருதினால் மலக்குகளை எவ்வாறு நம்ப வேண்டுமோ அதற்கு மாற்றமாக மலக்குகளை நம்பும் நிலை ஏற்படும். எனவே எவ்வாறு பொருள் கொள்வது மலக்குகளின் இலக்கணத்துக்கு ஏற்ப அமைந்துள்ளதோ அந்தப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும்.
இதற்கு வானவர்களின் இலக்கணத்துக்கு எதிரான கருத்து வராமல் வேறு விதமாகப் பொருள் கொள்ள முடியுமா என்று நாம் பார்க்க வேண்டும்.
அந்த இரு வானவர்கள் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த இரு வானவர்கள் என்று சொல்லப்பட்டால் இதற்கு முன்பு அல்லது முன்னுள்ள வசனங்களில் இரு வானவர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளதா என்று நாம் தேடினால் 2:98 வசனத்தில் ஜிப்ரீல் மீகாயீல் எனும் வானவர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
ஜிப்ரீல், மீகாயீல் எனும் வானவர்களுக்கு எதிராக நடக்கும் யூதர்கள் இவ்வசனத்தில் கண்டிக்கப்படுகின்றனர்.
யூதர்களின் இந்தப் போக்கை அல்லாஹ் கண்டித்து விட்டு அதன் தொடரில் தான் (2:102 வசனத்தில்) அவ்விரு வானவர்களுக்கும் சூனியம் அருளப்படவில்லை என்று குறிப்பிடுகிறான். ஜிப்ரீல், மீகாயீல் ஆகிய இரு வானவர்கள் வழியாகவே எங்களுக்கு சூனியக்கலை வந்து சேர்ந்தது என்று கூறிய யூதர்களுக்கு மறுப்பாக இதை அல்லாஹ் கூறுகிறான்.
ஜிப்ரீல், மீகாயீல் என்ற வானவர்களுக்கும், சூனியக் கலைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதுதான் இதன் கருத்தாகும்.
2:98 வசனத்தில் யூதர்கள் ஜிப்ரீல் மீகாயீல் எனும் வானவர்களுக்கு எதிரிகளாக இருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு விளக்கமாக இவ்வசனம் அமைந்துள்ளது. ஜிப்ரீல், மீகாயீல் ஆகிய இரு வானவர்கள் சூனியத்தைக் கற்றுத் தந்தார்கள் எனக் கூறி இரு வானவர்கள் மீது யூதர்கள் சுமத்திய பழியை இதன் மூலம் அல்லாஹ் நீக்குகிறான்.
அப்படியானால் ஹாரூத், மாரூத் என்போர் யார்? அவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன.
ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததையே இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று இவ்வசனம் துவங்குகின்றது.
ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்தார்கள் என்றால் ஷைத்தான்களே நேரடியாகக் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது தீய மனிதர்களை இங்கே ஷைத்தான்கள் என்று குறிப்பிடப்படுகின்றதா?
இதை முதலில் நாம் விளங்க வேண்டும்.
'ஷைத்தான்' என்ற சொல் உண்மையான ஷைத்தானுக்குப் பயன்படுத்தப்படுவது போலவே, மோசமான மனிதர்களுக்கும் 2:14, 6:112, 114:5,6 ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தனியாகப் பயணம் செய்பவன் ஷைத்தான் என்றும், (அபூதாவூத் 2240, திர்மிதீ 1597) கவிஞர்களை ஷைத்தான் என்றும் (முஸ்லிம் 4548) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் ஷைத்தான்கள் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. இந்த ஷைத்தான்கள் என்பது உண்மையான ஷைத்தான்களைக் குறிக்கின்றதா? அல்லது கெட்ட மனிதர்களைக் குறிக்கின்றதா என்ற ஐயம் எழுகின்றது. இந்த ஐயத்தை அகற்றுவதற்கே இறைவன் ஹாரூத், மாரூத் என்கிறான்.
அதாவது சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் யாரெனில் ஹாரூத், மாரூத் எனும் பெயர் கொண்ட மோசமான மனிதர்கள் தான் என்று அடையாளம் அல்லாஹ் காட்டுகிறான்.
அரபு மொழியில் பல அர்த்தங்களுக்கு இடமுள்ள சொல்லைப் பயன்படுத்திவிட்டு அதன் பிறகு விளக்கமாக மற்றொரு சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. இதை அரபு இலக்கணத்தில் என்று கூறுவார்கள். ஷைத்தான்கள் என்பதன் (பத்ல்) விளக்கமே ஹாரூத், மாரூத் என்பது.
யூதர்களுக்கு சூனியக் கலையைக் கற்றுத் தந்தது ஸுலைமான் நபியுமன்று. ஜிப்ரீல், மீகாயீல் என்ற மலக்குகளும் அல்லர். மாறாக ஹாரூத், மாரூத் என்ற மனித ஷைத்தான்களே கற்றுத் தந்தனர் என்பது இதுவரை நாம் கூறியவற்றின் சுருக்கமான கருத்தாகும்.
தப்ஸீர் கலையில் மேதையாகிய இமாம் குர்துபி அவர்கள் "இந்த வசனத்திற்குப் பல்வேறு வகையில் அர்த்தம் செய்யப்பட்டாலும் இதுவே மிகச் சிறந்த விளக்கமாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
குர்துபி அவர்களின் இந்த விளக்கத்தை இப்னு கஸீர் அவர்களும் தமது தப்ஸீரில் எடுத்தெழுதுகிறார்கள்.
சூனியம் குறித்து முழுவிபரங்களை அறிய 28, 285, 357, 395, 468, 495, 499 ஆகிய குறிப்புக்களையும் பார்க்கவும்.