*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -6)
"TNTJ ஹதீஸ் மறுப்பு" செய்கிறது என்ற வாதமே தவறு என்றும் தாங்கள் வஹியை மறுக்கவில்லை என்றும், அது வஹியே அல்ல என்றுதான் கூறுகிறோம் என்றும் அந்த TNTJ சகோதரர் கூடுதலாகவும் கூறினார்.
அதாவது, தாங்கள் ஹதீஸை மறுக்கவில்லை என்றும், "ஹதீஸே அல்ல" என்றுதான் மறுக்கிறோம் என்றும் கூறினார்.
இதைக் கேட்டவுடன் டாஸ்மாக் தொடர்பான சட்டத்தின் ஓட்டைதான் எனக்கு நினைவில் வந்தது.
மது போதையில் நிகழும் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகளின் அருகில் 500 மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.
ஆயிரத்துக்கும் அதிகமான கடைகளை மூட வேண்டும் என்ற சூழ்நிலையில்தான் சாலையின் பெயரையே மாற்றி அதிரடியாக அறிவிப்பு வந்தது. தேசிய நெடுஞ்சாலையின் பெயரை மாவட்ட நெடுஞ்சாலையாக மாற்றியதன் மூலமாக மதுபான கடைகளை அகற்ற வேண்டிய தேவையில்லாமல் ஆனது.
தேசிய நெடுஞ்சாலையை அது தேசிய நெடுஞ்சாலை இல்லை என்று அறிவித்தபிறகு அதற்கு அருகாமையில் மதுபான கடைகள் வைத்திருப்பதற்கு தடையில்லாமல் ஆனது. தேசிய நெடுஞ்சாலையில் மதுபான கடைகள் இல்லை என்று அரசு நிர்வாகம் அறிவித்தது.
அதுபோல, ஒரு ஹதீஸை அது ஹதீஸே இல்லை என்று அறிவித்த பிறகு அதை மறுப்பது ஹதீஸை மறுத்ததாக ஆகுமா? என்று அந்த சகோதரர் கேட்டது சட்டத்தில் ஓட்டையை ஏற்படுத்தி மதுபான கடைகளை தொடரச் செய்த அரசு நிர்வாகத்தின் சாதுர்யம் போன்றதே.
ரைட். விஷயத்துக்கு வருவோம்...
ஹதீஸ் மறுப்பு என்றால் என்ன?
ஹதீஸ் மறுப்பு என்பது TNTJ கண்டுபிடித்தது அல்ல. அது காலம் காலமாகவே இருந்து வருகிறது.
ஒரு ஹதீஸை ஏற்பதும் அல்லது அதை ஏற்க மறுப்பதும் நாம் சார்ந்திருக்கும் கொள்கைதான் முடிவு செய்கிறதே தவிர வேறொன்றுமில்லை.
பல ஆயிரம் ஹதீஸ்களை அறிந்த ஒருவர், அலி(ரலி) அவர்களை வரம்பு மீறி கற்பனை செய்ததால் அவருடைய அறிவிப்புகளை ஏற்காமல் விட்டுவிட்டது ஹதீஸ் உலகம்.
செத்துப்போன ஹாரிஜியாக்களையும், முஃதஸிலாக்களையும் பேசுவதால் கால விரயம் ஏற்படுகிறதே தவிர நாம் சொல்ல விரும்பும் செய்தி மக்களை அடைய முடிவதில்லை. நமக்குத் தெரிந்த கூட்டத்தினரை வைத்தே ஹதீஸ் மறுப்பை புரிய வைக்க முயல்கிறேன்.
"குர்ஆனும் ஹதீஸும் ஒன்னுதான்" என்று உறுதியாக நம்பும் ஸலபுகள் கூட ஹதீஸை மறுக்கத்தான் செய்கிறார்கள்.
பிறை தொடர்பாக பேசும் "வாகனக் கூட்டம் ஹதீஸ்" ஒரு பிரபல்யமான ஹதீஸ் ஆகும். இது அனைவராலும் ஏற்கப்பட்டிருக்கிறது.
தமிழ்பேசும் ஸலபுகள் பிறைக் கொள்கையில் பல அணியாக உள்ளனர். சர்வதேப் பிறையைக் கொள்கையாகக் கொண்ட "சர்வதே பிறை ஸலபுகள்" இந்த ஹதீஸை சரியானது என்று ஏற்கின்றனர்.
நிர்வாக ரீதியாக உள்ளூர் பிறையை சரிகண்டு அதை கொள்கையாகக் கொண்ட "லோக்கல் பிறை ஸலபுகள்" இந்த ஹதீஸை சரியில்லை என்று கூறி ஏற்க மறுக்கின்றனர்.
ஹதீஸ் கலை விதிகளை வைத்தே இந்த ஹதீஸ் ஏற்பும் ஹதீஸ் மறுப்பும் நியாயப்படுத்தப்படுகிறது.
ஆக, ஹதீஸ் மறுப்பு என்பது ஸலபுகளிடமும் இருக்கிறது. ஒரு ஹதீஸை ஏற்பதும் அதை மறுப்பதும் கொள்கைதான் முடிவு செய்கிறது. ஹதீஸ் கலை விதிகள் கொள்கைக்கு தோதாக விளக்கப்படுகிறது.
தங்களுடைய காலண்டரை மார்க்கத்தின் ஒரு பகுதியாக மாற்ற நினைக்கும் ஹிஜிரா கமிட்டியினர் தங்களுடைய கொள்கைக்கு இடைஞ்சலாக இருக்கும் ஹதீஸ்களை மறுக்கின்றனர்.
உதாரணமாக, பிறை பார்த்த சாட்சிகள் தங்களுடைய சாட்சியத்தை பகிரும் ஹதீஸ்களை அவர்கள் மறுக்கின்றனர். ஹதீஸ் கலை விதிகளை வைத்துதான் அவர்களும் அந்த ஹதீஸ்களை மறுக்கின்றனர்.
காலண்டர் கொள்கையை ஏற்றவர்களுக்கு, அந்த ஹதீஸ்களை மறுப்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் சரியாகத் தெரிகிறது. அதனால் அந்த கூட்டம் அந்த ஹதீஸை மறுக்கிறது.
மனிதன் வகுத்த ஹதீஸ் கலை விதிகளை பயன்படுத்தி ஒரு ஹதீஸை ஏற்கவும் முடியும், அதை மறுக்கவும் முடியும் என்பதை தவ்ஹீத் பேசும் மக்களிடம் இருந்தே அறிந்து கொண்டோம். இதை நினைவில் வைத்துக்கொள்வோம்.
பிற மதத்தினருடன் கருத்து பரிமாற்றம் செய்யும்போது அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் திருமண வயது தொடர்பான சர்ச்சை வருவதை தவிர்ப்பதற்காக திருச்சியைச் சேர்ந்த நஜாத் கூட்டத்தினர் அன்னையின் திருமண வயது தொடர்பான ஹதீஸ்களை மறுக்கின்றனர்.
ஆக, ஹதீஸ் மறுப்பு என்பது ஏகத்துவம் பேசும் எல்லோரிடமும் ஏகத்துக்கும் இருக்கிறது என்பதுதான் உண்மை.
சிறுவயதில் லாட்டரிச் சீட்டு விற்பவர்கள் "அதிர்ஷ்டம் என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமான அபூர்வ ராகம் அல்ல, அது அனைவருக்கும் சொந்தமான ஆனந்த ராகம்" என்று வசனம் பேசுவதை கேட்டிருக்கிறேன்.
அதுபோல, "ஹதீஸ் மறுப்பு என்பது TNTJ-க்கு மட்டும் சொந்தமான அபூர்வ கொள்கை அல்ல, அனைவருக்கும் சொந்தமான ஆனந்த கொள்கை" என்றே அழைக்கத் தோன்றுகிறது.
முக்கியமான விஷயத்தை பார்க்காமல் நான் என்ன கூறினாலும் உங்கள் மனது எதையும் ஏற்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும்.
குரானும் ஹதீஸும் அல்லாஹ்வின் வஹிதான் என்றால் ஹதீஸில் மட்டும் தரம்பிரிப்பது ஏன்? என்ற இந்த கேள்விக்குத்தான் பதில் வேண்டும்.
இந்த கேள்விக்கு பதில் தெரிய வேண்டுமானால் "கக்கூஸ்" என்று அசிங்கமாக காட்டப்பட்ட வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பிறை மீரான்.
Part -5
https://m.facebook.com/story.php?story_fbid=752885551801249&id=100012394330588
Part - 7
https://m.facebook.com/story.php?story_fbid=756687348087736&id=100012394330588
No comments:
Post a Comment