பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, November 4, 2019

ஹதீஸ் மறுப்பு - 11

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -11)

பல பகுதிகளிலும் பரவிக்கிடந்த ஹதீஸ்களை சேகரிக்கும் பணியின் முதல் முயற்சியாக "ஸஹீஹுல் புஹாரி" தொகுக்கப்பட்டது. 

பல நாடுகளுக்கும் பயணம் செய்து பல வருட முயற்சிக்குப்பின் இமாம் புஹாரி அவர்கள் அந்த புத்தகத்தை தொகுத்தளித்தார். 

இமாம் புஹாரி அவர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவரல்ல. ஆனால், தவறுகளைக் குறைத்தவர். சரியான செய்திகளும், தவறான செய்திகளும் இரண்டறக் கலந்திருந்த நிலையில் அதில் இருந்து தவறுகளை பெருமளவில் கழித்துக் கட்டியவர். 

இமாம் புஹாரி அவர்கள் தன்னுடைய பார்வையில் சரியானதாக கருதிய ஹதீஸ்களை பதிவு செய்தார். அதற்காக, அவர் தான்தோன்றித்தனமாக விதிகளை உருவாக்கியிருக்கவில்லை. அறிவிப்பாளர் வரிசையுடன் ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய முந்தையகால அறிஞர்களின் வழியிலேயே விதிகளை கொண்டிருந்தார். 

** அறிவிப்பாளர் வரிசை சரியாக இருக்க வேண்டும்.

** அறிவிப்பாளர்கள் அனைவரும் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் ( ஸஹாபாக்களை இது குறிக்காது, அவர்கள் அனைவருமே நேர்மையாளர்களாகவே கருதப்படுவர்)

** அறிவிப்பாளர்கள் ஹதீஸ்களை பாதுகாப்பதில் மனன சக்தி பெற்றவர்களாக இருக்க வேண்டும் (எழுத்தில் பாதுகாப்பதும் பொருந்தும்)

இந்த விதிகளெல்லாம் முந்தைய கால அறிஞர்களால் வலியுறுத்தப்பட்டவைகளே. 
இவை அல்லாமல் கூடுதலாக ஒரு விதியை இமாம் புஹாரி அவர்கள் கொண்டிருந்தார். 

"ஒரு அறிவிப்பாளர் தான் அறிவிக்கும் ஹதீஸை எவரிடம் இருந்து அறிந்தாரோ, அவரை சந்தித்திருக்க வேண்டும்" என்ற விதியை வகுத்திருந்தார் இமாம் புஹாரி அவர்கள். 

மேற்கண்ட விதிகளின்படி, அந்த புத்தகத்தில் சுமார் 7,300 ஹதீஸ்களை பதிவு செய்தார் இமாம் புஹாரி. [ஒரு ஹதீஸே மீண்டும் மீண்டும் பதிவானதை வைத்துப்பார்த்தால் சுமார் 4,000 ஹதீஸ்கள் என்றும், கருத்தின் அடிப்படையில் சுமார் 2,200 ஹதீஸ்கள் மட்டும்தான் என்றும் கூறப்டுகிறது. எண்ணிக்கையில் ஒருமித்த கருத்தில்லை]

இந்த 7,300 ஹதீஸ்களையும் "ஸஹீஹ்" (صَحِيحُ) என்று கூறினார் இமாம் புஹாரி. 

இங்குதான் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்...

பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்கள் புழக்கத்தில் இருந்த அந்த காலகட்டத்தில், சரியான செய்திகளும், தவறான செய்திகளும் கலந்தே இருந்தன. சரியான செய்திகள் "ஸஹீஹ்" (صَحِيحُ) எனப்பட்டது. தவறான செய்திகள் "ழயீஃப்" (ضَعِيفُ) எனப்பட்டது. 

["ஸஹீஹ்" (صَحِيحُ) என்ற அரபு வார்த்தைக்கு "ஆரோக்கியமானது" என்ற பொருள் இருந்தாலும், ஹதீஸ் கலையில் இந்த வார்த்தை "சரியானது" என்ற அர்த்தத்தில் கையாளப்படுகிறது]

[ "ழயீஃப்" (ضَعِيفُ) என்ற அரபு வார்த்தைக்கு "பலவீனமானது" என்ற பொருள் இருந்தாலும், ஹதீஸ் கலையில் இந்த வார்த்தை "தவறானது" என்ற அர்த்தத்தில் கையாளப்படுகிறது]

மக்களிடம் இருந்த பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்களுள் இந்த 7,300 ஹதீஸ்களை மட்டும் "ஸஹீஹ்" (صَحِيحُ) என்று கூறினால் 
புஹாரியில் பதிவு செய்யப்படாத மற்ற ஹதீஸ்கள் "ழயீஃப்" (ضَعِيفُ) என்றாகிவிடும்.

அதாவது, புஹாரியில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்கள் "பலமானது" என்றும், அதில் பதிவு செய்யப்படாத அனைத்து ஹதீஸ்களும் "பலவீனமானது" என்றும் ஆகிவிடுகிறது. 

இந்நிலையில்தான், ஹதீஸ் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த மற்றொருவர் இமாம் புஹாரியின் விதியை தளர்த்தி, அவரால் பலவீணமாக்கப்பட்ட ஹதீஸ்களுள் சிலவற்றை தன்னுடைய புத்தகத்தில் சேர்த்தார். 

"ஒரு அறிவிப்பாளர் தான் அறிவிக்கும் ஹதீஸை எவரிடம் இருந்து அறிந்தாரோ, அவரை சந்தித்திருக்க வேண்டும்" என்ற  இமாம் புஹாரியின் விதியை, 
"சந்திக்க வாய்ப்பிருந்தாலே போதும்" என்று தளர்த்தினார் "முஸ்லிம் இப்னுல் ஹஜ்ஜாஜ்" என்ற ஹதீஸ் சேகரிப்பாளர். 

இவர்தான் "முஸ்லிம்" என்று அழைக்கப்படுகிறார். இவருடைய புத்தகம் "ஸஹீஹுல் முஸ்லிம்" என அழைக்கப்படுகிறது. 

இந்த இருவரின் ஹதீஸ் புத்தகமும் "ஸஹீஹ்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது, இவ்விருவரின் புத்தகத்தில் உள்ள செய்திகள் "பலமானது" என்று அர்த்தம். இந்த பலமான செய்திகளை வைத்து அமல் செய்யலாம் என்று அர்த்தமாகிறது. 

ரைட். விஷயத்துக்கு வருவோம்...

இந்த இருவரின் புத்தகத்தில் உள்ள ஹதீஸ்கள் மட்டுமே பலமானது என்று கூறினால், மற்ற செய்திகள் அனைத்தும் "பலவீனமானது" என்றாகிவிடுகிறது. 

மற்ற ஹதீஸ்கள் அனைத்தும் புறந்தள்ளக்கூடியதாக மாறிவிடுகிறது. 

புறந்தள்ளப்பட்ட செய்திகளுள் இட்டுக்கட்டட்டதும் இருக்கும், மனனப் பிழையும் இருக்கும். இந்த இரண்டும் சமமாக பாவிக்கப்படும் நிலை உருவானது. 

அறிவிப்பாளர்கள் அனைவரும் ஒன்றுபோல் பாவிக்கப்படும் நிலையும் உருவானது. நபி(ஸல்) அவர்களின் ஹதீஸை மனனம் செய்து அறிவிப்பதில் தடுமாறிய ஒருவரும், அன்னாரின் பெயரால் பொய்யாக ஹதீஸை அறிவித்த ஒருவனும் ஒன்றுபோல் கருதப்படும் நிலை உருவானது. 

இது நியாயமாக இருக்குமா? 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

Part -10
https://m.facebook.com/story.php?story_fbid=759191627837308&id=100012394330588

No comments:

Post a Comment