பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 24, 2019

TNTJ ஹதீஸ் மறுப்பு - 16

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -16)

குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ் இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் "முன்னாள் அறிஞரின் ஆறாவது விதி".
அந்த விதி எங்கே? என்று கேட்டுக்கொண்டேயிருந்தார் அந்த TNTJ சகோதரர். 

ஹதீஸ் கலை பற்றின விவரங்களை நான் சுருக்கமாகவே கூறியிருந்ததால் அவருக்கு அது சரியாகப் புரியவில்லை என்பதை அறிந்து கொண்டேன். அது தொடர்பாக விரிவான விளக்கம் தருவதன் மூலமே அந்த கேள்வியின் தரத்தை உணர்த்த முடியும் என்பதை அறிந்து கொண்டு தொடர ஆரம்பித்தேன்...

சகோதரரே! என்று தொடங்கினேன்...

நிறுத்து! "குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படுமா?" என்ற கேள்விக்கு பதில் சொல்லத் துப்பில்லை!! மணிக்கணக்காக பேசிக் கொண்டே போகிறாய்!!! என்று கடும் கோபம் கொண்டார் அந்த கொள்கைச் சகோதரர். 

TNTJ வும் ஒரு கிறிஸ்தவ அமைப்பும் வி"வாதம்" செய்த ஒரு நிகழ்வுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. 

பைபிள் முரண்பாட்டை பட்டியலிட்டது TNTJ. அந்த முரண்பாடுகளை ஏற்காமல், அதற்கு எல்லாம் எதிர்தரப்பினர் விளக்கம் கொடுத்துக் கொண்டே வந்தனர். ஒருகட்டத்தில், குர்ஆனில் கூறப்படும் "விதி" (தலைவிதி) என்பதில் முரண்பாடு இருக்கிறதே? என்று கேட்டது எதிர்தரப்பு. 

"ஆமாம்!" முரண்பாடு இருக்கிறது என்று கூறிவிட்டு, ஆனால் அதை முரண்பாடில்லாமல் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியது TNTJ. மேலும், விதியை முரண்பாடில்லாமல் புரிந்து கொள்வது எப்படி என்று விவரித்தும் பேசினார்கள். 

இறுதியில், அந்த விளக்கம் எதற்கும் செவிகொடுக்காமல், குர்ஆனில் முரண்பாடு இருப்பதை TNTJ வினர், அவர்களின் வாயாலேயே ஒத்துக்கொண்டனர் என்று கட்டிங்கை மட்டும் வெளியிட்டது எதிர்தரப்பு. 

ஆக, சில கேள்விகளுக்கு ஒற்றை வரியில் பதிலளிப்பது ஆபத்தானது. நமது விளக்கத்தை முழுவதும் கொடுத்து விட்டு இறுதியில் அந்த கேள்விக்கு ஒற்றை வரியில் பதிலளிப்பது சிறந்ததாக இருக்கும் என்று கருதுவதால்தான் இத்தனை பதிவுகள் போடுகிறேன் என்று அந்த சகோதரரிடம் கூறினேன். அந்த சம்பவத்தை கேட்டவர் கொஞ்சம் அமைதியானார். தொடர்ந்தேன்...

மார்க்கத்தின் ஆதாரம் குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்று கூறப்படுகிறதே, இதில்
"ஹதீஸ்" என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்று அந்த சகோதரரிடம் கேட்டேன்.

"புஹாரி, முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா, திர்மிதி, நஸாயி போன்ற புத்தகங்களில் உள்ள ஹதீஸைத்தான்" என்று பதிலளித்தார் அந்த சகோதரர். 

மேலும், எப்படித் தொழுவது, எப்படி நோன்பு பிடிப்பது, எப்படி ஜக்காத் கொடுப்பது, எப்படி ஹஜ் செய்வது என்பதையெல்லாம் ஹதீஸ் புத்தகங்களில் இருந்துதான் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர ஹனபி ஷாஃபி என மத்ஹபு வழியில் செல்லக்கூடாது என்றும் விளக்கமளித்தார் அந்த சகோதரர். 

ரைட்.  இதுதான் விஷயம். இதைத்தான் பார்க்கப்போகிறோம். 

நபி(ஸல்) அவர்களின் வழிமுறையான சுன்னா என்பது இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது. 

** கட்டாயமான சுன்னா
** விருப்பத்திற்குரிய சுன்னா

தொழுகை, நோன்பு(ரமலான்), ஜக்காத், ஹஜ் போன்ற சுன்னாக்கள் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டிய சுன்னா. இவற்றை செய்வது கட்டாயக்கடமை. 

இந்த சுன்னாவை பேணாவிட்டால் அதற்கு கேள்விக் கணக்கும் தண்டனையும் உண்டு. இந்த சுன்னாதான் "ஃபர்ளு" (فَرْضُ) எனப்படுகிறது. [ ஃபர்ளு என்பதும் சுன்னாதான். அதன் முக்கியத்துவம் கருதி அது தனியாக பெயரிடப்பட்டுள்ளது]

மற்றவை செய்தால் நன்மை செய்யாவிட்டால் பாவமில்லை என்ற வகையில் இருக்கும் சுன்னா. [இந்த வகையான சுன்னாவில் இருந்து "வாஜிப்" என்ற வகையையும் பிரிக்கிறார்கள்]

ஃபர்ளு எனும் சுன்னா முஸ்லிமாக இருக்கும் அனைவரையும் அடைந்துவிடுகிறது. இதற்கு எந்த புத்தகமும் தேவையில்லை. 

ஹதீஸ் புத்தகங்களை தொட்டிராத, குர்ஆனை வாசிக்கத் தெரியாத  ஒரு முஸ்லிம் நபர், 

** ஐங்காலத் தொழுகையில் சூரத்துல் பாத்திஹாவையும் சில துனை சூராக்களையும் ஓதி நபி(ஸல்) அவர்களின் சுன்னாவை நிறைவேற்றிவிடுகிறார்.

** ரமலான் மாதத்தை அடைந்ததும் நோன்பு நோற்று நபி(ஸல்) அவர்களின் சுன்னாவை நிறைவேற்றிவிடுகிறார்.

** இஸ்லாம் கூறும் பொருளாதார நிலையை அடைந்ததும் ஜக்காத் கொடுத்து 
நபி(ஸல்) அவர்களின் சுன்னாவை நிறைவேற்றிவிடுகிறார்.

** சக்தி பெற்றால் ஹஜ் செய்து நபி(ஸல்) அவர்களின் சுன்னாவை நிறைவேற்றிவிடுகிறார்.

நபி(ஸல்) அவர்களின் சுன்னாவில் அடிப்படையானவற்றை முஸ்லிம்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர். இந்த அடிப்படை சுன்னாக்கள் முந்தைய கால முஸ்லிம்களின் நடைமுறையால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு  தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. 

நபி(ஸல்) அவர்கள் மரணித்த பிறகு இந்த சுன்னாக்களை எப்படி செய்வது என்று ஸஹாபாக்கள் எவரும் மன்டையை உடைத்துக்கொண்டிருக்கவில்லை. நபி(ஸல்) அவர்களின் சுன்னா தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டே இருந்தது/ இருக்கிறது/ இருக்கும்.

குடும்ப சட்டம், சொத்து, தண்டனைச் சட்டம் போன்ற இன்னபிறவற்றில் நபி(ஸல்) அவர்களின் நடைமுறை எவ்வாறு இருந்தது என்பதை ஸஹாபாக்கள் அனைவரும் அறிந்திருக்கவில்லை. அதுபோன்ற சமயங்களில் நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்ற "செய்தி"யை அறிந்து கொள்ள முயல ஆரம்பித்தார்கள். 

அதாவது, நபி(ஸல்) அவர்களின் சுன்னா தொடர்பான செய்திகளை அறிய முற்பட்டார்கள். இதற்குப் பிறகு, நபி(ஸல்) அவர்களின் சுன்னா தொடர்பான செய்தி "ஹதீஸ்" (حديث‎) எனப்பட்டது. (ஹதீஸ் என்ற அரபு வார்த்தைக்கு "புதிய செய்தி" என்பதே நேரிடையான அர்த்தம்)

நபி(ஸல்) அவர்களின் சுன்னா என்பது  வஹியில் நிகழ்ந்த ஒன்று. அதாவது, சுன்னா என்பது "வஹி". 

சுன்னாவைப் பற்றி செய்தி அறிவிக்கும் "ஹதீஸ்" என்பது வஹி அல்ல. 

"சுன்னா" எனும் "வஹி"யைப் பற்றின செய்திதான் "ஹதீஸ்".

நபி(ஸல்) அவர்களின் சுன்னாவைப் பற்றின "புதிய செய்தி"களை அறிந்து அவை அனைத்தையும் பாதுகாக்க இஸ்லாமிய உலகம் முற்பட்டது. 

அதாவது, நபி(ஸல்) அவர்களின் சுன்னாவைப் பற்றின ஹதீஸ்களை அறிந்து அவற்றைப் பாதுகாக்க 
இஸ்லாமிய உலகம் முற்பட்டது. 

ஹதீஸ் கலை உருவாகத் தொடங்கியது.

இதுதான் ஹதீஸ் கலை உருவான வரலாற்றின் தொடக்கம். 

இந்த விஷயத்தை கூறி முடித்தபோது அந்த TNTJ சகோதரர் குறுக்கிட்டு, அது என்ன சுன்னா மற்றும் ஹதீஸ் என்று இரண்டாகப் பிரிக்கிறாய்? என்று கேட்டார். 

இதை ஒரு உதாரணத்தின் மூலம் கூறுகிறேன் சகோதரா என்று கூறினேன்.

ஹதீஸை படித்துப் பார்த்துதான் எல்லாத்தையும் செய்வேன் என்று கூறும் நீங்கள், ஆஷுரா நோன்பு பற்றி கூறுங்கள் என்றேன். 

தமிழ்பேசும் நல்லுகம் மறந்திருந்த  சுன்னத்தான நோன்புகளுக்கு நாங்கள்தான் உயிர் கொடுத்தோம். ஹதீஸைப் படித்து மார்க்கத்தை விளங்கி  எங்களால் நினைவுபடுத்தப்பட்ட ஒரு சுன்னத்தான நோன்புதான் "ஆஷுரா நோன்பு". முஹர்ரம் மாதத்தின் ஒன்பது மற்றும் பத்தாம் நாளில் பிடிக்க வேண்டிய இரண்டு நோன்புகள்தான் அது என்று ஒரு சிறிய உரையே நிகழ்த்தினார் அந்த TNTJ சகோதரர். 

நபி(ஸல்) அவர்கள் இரண்டு நோன்புகள் வைத்தார்களா என்று அவரிடம் கேட்டேன். 

நபி(ஸல்) அவர்கள் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் மட்டும்தான் நோன்பிருந்தார்கள். ஆனால், அடுத்த வருடம் உயிரோடிருந்தால் ஒன்பதிலும் சேர்த்து நோன்பிருப்பேன் என்று கூறினார்கள். அதனால்தான் நாங்கள் ஒன்பது மற்றும் பத்து ஆகிய இரண்டு நாட்களிலும் நோன்பிருக்கிறோம் என்றார் அந்த சகோதரர். 

"ஒன்பதிலும் சேர்த்து நோன்பிருப்பேன்" ஏன்ற வாசகம் ஹதீஸில் இருக்கிறதா என்று கேட்டேன். 

இல்லாமலா நாங்கள் இரண்டு நாட்களில் நோன்பிருக்கிறோம்! எங்கள் தலைமை இரண்டு நாட்களும் ஸஹர் மற்றும் இப்தார் ஏற்பாடு செய்கிறதே!! ஹதீஸில் ஆதாரம் இல்லாமலா செய்வார்கள்!!! என்று கேட்டார் அந்த சகோதரர். 

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தியில், "அடுத்த ஆண்டு ஒன்பது மற்றும் பத்தில் நோன்பிருப்போம்" என்ற வாசகம்  இல்லை என்பதை கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைகளை எடுத்துக் காட்டினேன். 

// فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ – إِنْ شَاءَ اللَّهُ – صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ//

//இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். //

அதாவது, "ஒன்பதாவது நாளில் நோன்பிருப்போம்" என்று மட்டுமே ஹதீஸில் வாசகம் உள்ளது. 

ஆனால், முஹர்ரம் மாதத்தின் ஒன்பது மற்றும் பத்து ஆகிய இரண்டு நாட்களிலும் நாம் ஆஷுரா நோன்பை நோற்கிறோம். 

நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தான நோன்புகளுக்கு உயிர் கொடுத்த TNTJ வும் இரண்டு நாட்கள் நோன்பை பிடிக்கிறார்கள். 

ஆஷுரா நோன்பு இரண்டு நாட்கள் பிடிக்க வேண்டும் என்ற வழிமுறை தான் நபி(ஸல்) அவர்கள் இறந்ததில் இருந்து தொடர்ந்து வரும் நடைமுறை. 

முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்து ஆகிய இரண்டு நாட்களில் நோன்பிருப்பது "சுன்னா". 

அந்த சுன்னாவைத்தான் அனைவரும் பின்பற்றுகிறோம். (ஹதீஸை ஆராய்ந்து ஒன்பதில் மட்டுமே நோன்பிருக்க வேண்டும் என்று ஒரு பித்அத் கிளம்பியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்) 

நபி(ஸல்) அவர்களின் சுன்னா நமது முன்னோர்கள் வழியாக வந்துவிட்டது. ஹதீஸ் புத்தகங்கள் பின்னர்தான் வரத்தொடங்கியது. 

உங்களது தலைமை சொல்வதால்தான் இரண்டு நோன்புகள் வைக்கிறீர்களே தவிர, ஹதீஸை படித்து அல்ல என்று கூறி முடித்தேன். 

அந்த சகோதரர் அமைதியானார். 

ஹதீஸ் கலையை விவரிக்கலாம் என்று முடிவு செய்து '"வெங்காயத்தை" கையில் எடுத்தேன். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

Part -17 

https://m.facebook.com/story.php?story_fbid=778540589235745&id=100012394330588

No comments:

Post a Comment