பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, August 17, 2015

தர்மத்தின் சிறப்புகள்

தர்மத்தின் சிறப்புகள்

தர்மத்தின் சிறப்புகள்
எம். ஷம்சுல்லுஹா
குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே!
ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி), 
நூல்: புகாரி 55
அறம் செய்தோர் அர்ஷின் நிழலில்..
அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கின்றான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போது "நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்' என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர், தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்துபவர் ஆகியோர் ஆவர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 
நூல் : புகாரி 660
இறந்தவருக்காக தர்மம்
ஸஅத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் இது அவருக்குப் பயனளிக்குமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்! என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத் (ரலி) அவர்கள், "நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகின்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), 
நூல்: புகாரி 1388, 2756
வங்கியில் வளரும் தர்மம்
அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: புகாரி 1410
பெருநரகை விட்டு காக்கும் சிறு பேரீச்சம்பழம்
"அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி),
நூல்: புகாரி 6539
மனைவியின் தர்மத்தில் கணவனுக்குப் பங்கு
"ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் அவளது கணவனுக்கும் நன்மை கிடைக்கும். அது போலவே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 
நூல்: புகாரி 1425, 2065
சிறந்த தர்மம் எது?
"தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1426
இறுக்கினால் இறுகி விடும்
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் அருள்) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்'' என்று கூறினார்கள்.
அப்தாவின் அறிவிப்பில், "நீ (இவ்வளவு தான்) என்று வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்'' என்று கூறியதாக உள்ளது.
அறிவிப்பவர்: அஸ்மா (ரலி),
நூல்: புகாரி 1433, 1434
இறைவனிடம் கையேந்தும் இரு மலக்குகள்
ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், "அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!'' என்று கூறுவார். இன்னொருவர், "அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1442
சுவனத்தின் ஸதகா வாசல்
"ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, "அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)'' என்று அழைக்கப் படுவார். தொழுகையாளிகளாக இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர். அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ரய்யான் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே எவரேனும் எல்லா வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகின்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: புகாரி 1897
மரம் நடுதல்
ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து (அதன் விளைச்சலை) ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), 
நூல்: புகாரி 2320
உறவினருக்கு உதவுவதில் உயர்ந்த கூலி
நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்த போது, "அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்து விட்டேனே! அறிவீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ (விடுதலை) செய்து விட்டாயா?'' என்று கேட்க, நான், "ஆம்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அன்னை மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி), 
நூல்: புகாரி 2592
அல்லாஹ் சொல்லும் சேதி
"ஆதமின் மகனே! (மற்றவர்களுக்காக) செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 5352
தர்மமே நமது சொத்து
நபி (ஸல்) அவர்கள், "உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விட தமது வாரிசுகளின் செல்வம் விருப்பமுடையதாக இருக்குமா?'' என்று கேட்டார்கள். தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அனைவருக்குமே எங்களின் செல்வம் தான் விருப்பமானதாகும்'' என்று பதிலளித்தார்கள். "அவ்வாறாயின் ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அது தான் அவரது செல்வமாகும். (இறக்கும் போது) எதைச் விட்டுச் செல்கின்றாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), 
நூல்: புகாரி 6442
அல்லாஹ்வின் மன்னிப்பு
மிஸ்தஹ் பின் உஸாஸா என்பவர் தமது உறவினர் என்பதால் அபூபக்ர் (ரலி) அவர்கள் அவருக்காக செலவிட்டு வந்தார்கள். "அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன்'' என்று அபூபக்ர் (ரலி) கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், "உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' எனும் (24:22) வசனத்தை அருளினான்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று கூறிவிட்டு மிஸ்தஹுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், "அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு (செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 6679

குறிப்பு: 2004 ஏப்ரல் மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

கப்ரின் மேல் செடி கொடிகளை நடுதல்

கப்ரின் மேல் செடி கொடிகளை நடுதல்
இறந்தவரை அடக்கம் செய்தவுடன் அந்த இடத்தில் ஏதாவது செடி கொடிகளை நட்டு வைக்கும் வழக்கம் தமிழகத்தில் காணப்படுகிறது. பின்வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் அருகில் கடந்து சென்றனர். அப்போது தமது கப்ருகளில் வேதனை செய்யப்படும் இருவரின் சப்தத்தைக் கேட்டார்கள். 'இவ்விருவரும் பெரும் பாவங்களுக்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக் கொள்ளாதவராக இருந்தார்; மற்றொருவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தார்' என்று கூறினார்கள். பின்னர் பேரீச்சை மட்டை ஒன்றைக் கொண்டு வரச் செய்து அதை இரண்டாக முறித்து ஒவ்வொரு கப்ரிலும் ஒரு துண்டை வைத்தார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'இது காய்வது வரை இவ்விருவரின் வேதனை இலேசாக்கப்படக் கூடும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 216, 218, 1361
புகாரியின் மற்றொரு அறிவிப்பில் (211, 1273) 'அந்த மட்டையை இரண்டாகப் பிளந்து பாதியை ஒரு கப்ரிலும், மறுபாதியை மற்றொரு கப்ரிலும் வைத்தார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
இதை ஆதாரமாகக் கொண்டே அடக்கத் தலத்தில் செடி கொடிகளை வைக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தின் இந்த நடவடிக்கையைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாதது தான் இதற்குக் காரணம்.
பேரீச்சை மட்டைகள் ஊன்றி வைத்தால் முளைக்கக் கூடிய தன்மை உடையது அல்ல. அதை இரண்டாகப் பிளந்தால் இன்னும் சீக்கிரத்தில் காய்ந்து போய் விடும்.
கப்ரின் மேலே காலாகாலம் செடி கொடிகள் இருப்பது பயன் தரும் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.
விரைவில் காய்ந்து விடும் தன்மை கொண்ட பேரீச்சை மட்டையைத் தேடி, அதைச் சீக்கிரம் காய்ந்து விடும் வகையில் இரண்டாகப் பிளந்து வைத்ததிலிருந்து செடி கொடிகள் கப்ரின் வேதனையிலிருந்து காக்கும் என்பதற்காகச் செய்யவில்லை என்று அறியலாம். அப்படி இருந்தால் பேரீச்சை மட்டைக்குப் பதிலாக பேரீச்சை மரத்தை அதன் மேல் நட்டியிருப்பார்கள். அல்லது வேறு ஏதாவது செடியை நட்டியிருப்பார்கள்.
அப்படியானால் வேறு எதற்காக வைத்தார்கள்? இது காயும் வரை வேதனை இலேசாக்கப்படக் கூடும் என்று கூறியது ஏன்?
இந்தக் கேள்விக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே விடையளித்து விட்டனர்.
'நான் செய்த துஆவின் காரணமாக இவ்விரு மட்டைகளும் காய்வது வரை வேதனை இலேசாக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5328
தமது உம்மத்தினர் இருவர் வேதனை செய்யப்படுவது இறைத்தூதர் என்ற முறையில் அவர்களுக்குக் காட்டித் தரப்படுகிறது. இதைக் கண்ட பின் அவர்கள் மனம் இவ்விருவருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறது. 'இறைவா! இம்மட்டை காய்வது வரையாவது இவர்களின் வேதனையை இலேசாக்கு' என்று துஆச் செய்திருக்கிறார்கள். அந்த துஆவின் காரணமாகவே வேதனை இலேசாக்கக் கூடும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். மேற்கண்ட அறிவிப்பைச் சிந்திப்பவர்கள் இதை உணரலாம்.
மரம் செடிகளை நடுவது பயன் தரும் என்றால் இறந்த ஒவ்வொருவருக்கும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள். அப்படிச் செய்யவில்லை.
மேலும் நபித்தோழர்களும் இதை நபிகள் நாயகத்துக்கே உரிய சிறப்புச் சலுகை என்று விளங்கியதால் தான் கப்ருகள் மீது அவர்கள் மரம் செடிகள் நட்டதாகக் காண முடியவில்லை.
மேலும் கப்ரு வேதனையைத் தமது காதுகளால் கேட்டதன் அடிப்படையில் தான் மட்டையை ஊன்றினார்கள். கப்ரு வேதனையைக் கேட்காத மற்றவர்கள் நபிகள் நாயகத்துடன் போட்டியிடுவது என்ன நியாயம்?
தோண்டி எடுத்த மண்ணை மட்டும் போட்டு மூட வேண்டும்.
உடலை அடக்கம் செய்த பின் எந்த அளவு மண்ணை வெட்டி எடுத்தோமோ அதை மட்டும் போட்டு மூட வேண்டும்.
உயரமாக கப்ரு தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக மண்ணை அதிகமாக்கக் கூடாது.
கப்ருகள் மீது கட்டுவதையும், அதில் அதிகப்படுத்தப்படுவதையும், பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: நஸயீ 2000, அபூதாவூத் 2807
மண்ணைக் கூட அதிகமாக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டுள்ள போது சிமிண்ட், செங்கல் போன்றவற்றால் நிரந்தரமாகக் கட்டுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை நாம் அறியலாம்.
கப்ரின் மேல் எழுதக் கூடாது
அடக்கத் தலத்தின் மேல் மீஸான் என்ற பெயரில் கல்வெட்டை ஊன்றி வைக்கும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது. சில ஊர்களில் இதற்காகக் கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு வசதி படைத்தவர்கள் மட்டும் இவ்வாறு கல்வெட்டு வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். சமரசம் உலாவும் அடக்கத் தலத்திலும் இறந்த பிறகு கூட அநியாயமான இந்தப் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது.
கப்ருகள் மீது எழுதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: அபூதாவூத் 2807
மேலே சுட்டிக் காட்டிய ஹதீஸில் கப்ரின் மேல் எழுதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். இத்தடையில் மேற்கண்ட செயலும் அடங்கும் என்பதில் ஐயமும் இல்லை.
மக்கள் தொகை அதிகரித்து அடக்கத்தலம் சுருங்கிவிட்ட இன்றைய காலத்தில் ஒரு இடத்தில் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டால் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அதே இடத்தில் மற்றொருவரை அடக்கினால் தான் நெருக்கடி குறையும். வசதி படைத்தவர்கள் அடக்கத்தலத்தில் தங்களுக்கென ஒரு இடத்தை நிரந்தரமாகச் சொந்தமாக்கிக் கொண்டால் எதிர் காலத்தில் அடக்கம் செய்ய அறவே இடம் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கப்ருகளைக் கட்டக் கூடாது.
ஒருவர் இறந்து விட்டால் அவர் எவ்வளவு பெரிய மகான் என்று நாம் கருதினாலும் அவரது அடக்கத் தலத்தின் மேல் கட்டுமானம் எழுப்பக் கூடாது.
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
நபியின் மனைவியரான உம்மு ஹபீபா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் அபீஸீனியாவில் தாங்கள் பார்த்த ஆலயத்தைப் பற்றியும், அதில் உள்ள உருவங்களைப் பற்றியும் நபிகள் நாயகத்திடம் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேலே வழிபாட்டுத் தலத்தை கட்டிக் கொள்கிறார்கள். அவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுகிறார்கள். கியாமத் நாளில் இவர்கள் தான் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 34, 1341, 3850, 3873
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மரணம் நெருங்கிய போது தமது போர்வையை முகத்தில் போட்டுக் கொண்டார்கள். காய்ச்சல் தணிந்ததும் முகத்தைத் திறந்தார்கள். இந்த நிலையில் இருக்கும் போது 'யஹூதிகள் மீதும் நஸாராக்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உள்ளது. (ஏனெனில்) அவர்கள் தங்களது நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர்' என்று கூறினார்கள். அவர்களின் செயலை எச்சரிக்கும் வகையில் இவ்வாறு கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 436, 3454, 4444, 5816
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்ட அந்த நோயின் போது 'யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக (தர்காவாக) ஆக்கிக் கொண்டனர்' என்று குறிப்பிட்டார்கள். இவ்வாறு எச்சரிக்கை செய்து இருக்காவிட்டால் அவர்களின் கப்ரையும் உயர்த்தி இருப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1330, 1390, 4441
'உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்கள் மற்றும் நல்லோரின் கப்ருகளை வழிபாட்டுத் தலங்களாக (தர்காக்களாக) ஆக்கி விட்டனர். எச்சரிக்கை! கப்ருகளை தர்காக்களாக ஆக்காதீர்கள். இதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன்'என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் ((ரலி)
நூல்: முஸ்லிம் 827
நல்லடியார்கள் ஆனாலும் அவர்களின் அடக்கத் தலங்களைக் கட்டுவதையும், அதன் மேல் ஆலயம் எழுப்புவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு கடுமையாகக் கண்டித்துள்ளனர் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து அறியலாம்.
நல்லடியார்களில் நபிமார்கள் தான் முதலிடத்தில் உள்ளவர்கள். மற்றவர்களை நல்லடியார்கள் என்று நாம் திட்டவட்டமாகக் கூற முடியாது. நம்மால் நல்லடியார்கள் எனக் கருதப்பட்டவர்கள் மறுமையில் கெட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நபிமார்கள் நல்லடியார்கள் தான் என்பதில் ஐயமில்லை.
நபிமார்களுக்குக் கூட தர்காக்கள் கட்டக் கூடாது என்றால் மற்றவர்களுக்கு எப்படிக் கட்டலாம்?
மேலும் நமது முன்னோர்கள் அவ்வாறு கட்டிச் சென்றிருப்பார்களானால் நமக்குச் சக்தியும், அதிகாரமும் இருந்தால் அவற்றை இடித்துத் தள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை எதற்கு அனுப்பினார்களோ அதற்காக உன்னை நான் அனுப்புகிறேன். எந்தச் சிலைகளையும் தகர்க்காது விடாதே! உயர்த்தப்பட்ட எந்தச் சமாதியையும் தரை மட்டமாக்காமல் விடாதே!' என்று அலீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ்
நூல்: முஸ்லிம் 1609
இவ்வளவு தெளிவான கட்டளைக்குப் பின்னரும் போலி மார்க்க அறிஞர்கள் இந்த நபிமொழிக்குத் தவறான பொருள் கூறி மக்களை வழி கெடுத்து வருவதையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
மேற்கண்ட நபிமொழியில் 'கப்ரைத் தரை மட்டமாக்காமல் விடாதே' என்று கூறப்படவில்லை. மாறாக 'கப்ரைச் சீர்படுத்து' என்று தான் உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
'தரை மட்டமாக்கு' என்று நாம் பொருள் கொண்ட இடத்தில் ஸவ்வைத்தஹு என்ற மூலச் சொல் இடம் பெற்றுள்ளது. ஸவ்வா என்பதிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் 'சீர்படுத்துதல்' என்பது தான் எனவும் வாதிடுகின்றனர்.
கப்ரை அழகான முறையில் கட்ட வேண்டும் என்பதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது என்று சாதிக்கின்றனர்.
வானத்தை ஒழுங்குபடுத்தினான் என்று பல வசனங்களில் இதே ஸவ்வா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் வானத்தைத் தரை மட்டமாக்கினான் என்று பொருள் கொள்வீர்களா? என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர்.
ஸவ்வா என்பதன் பொருள் சீர்படுத்துவது தான். ஒவ்வொன்றையும் சீர்படுத்தும் முறைகள் வெவ்வேறாகவுள்ளதால் இடத்திற்கு ஏற்ப அதற்குப் பொருள் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை இவர்கள் அறியாததே இந்த விளக்கத்துக்குக் காரணம்.
கிழிந்த துணியைச் சீராக்கு என்று கூறினால் அதைத் தைக்க வேண்டும் என்று பொருள்.
அழுக்குத் துணியைச் சீராக்கு என்றால் அதைக் கழுவு எனப் பொருள்.
அளவுக்குப் பொருந்தாமல் பெரிதாகத் தைக்கப்பட்ட ஆடையைச் சீராக்கு என்றால் அதிகப்படியானதை வெட்டிக் குறைத்தல் என்பது பொருள்.
இச்சொல்லுடன் சேர்க்கப்படும் அடைமொழிக்கேற்ப பொருளும் மாறும். கிழிந்த, அழுக்கான, பெரியதாக என்பன போன்ற அடை மொழிகள் சேர்க்கப்படும் போது அந்த அம்சத்தைச் சரி செய்ய வேண்டும் என்ற பொருளைத் தரும்.
உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும் என்ற சொற்றொடரில் உயரமாக்கப்பட்ட என்ற அடைமொழி காரணமாக உயரத்தை நீக்குவது தான், அதாவது இடிப்பது தான் இங்கே சரி செய்வது எனக் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவி கட்டிய இடத்தில் சில குட்டிச் சுவர்கள் இருந்தன. அதைச் சரி செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.
(புகாரி 410, 1735, 3963)
இந்த இடத்திலும் ஸவ்வா என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது.
குட்டிச் சுவருக்கு வெள்ளை அடித்து அழகு படுத்த வேண்டும் என்று நபித்தோழர்கள் பொருள் கொண்டிருந்தால் மஸ்ஜிதுன்னபவிக்குள் இன்று வரை அந்தக் குட்டிச் சுவர்கள் நின்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்தக் குட்டிச் சுவர்கள் இடிக்கப்பட்டு சரிசமமாக ஆக்கப்பட்டன.
'உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும் சரிப்படுத்தாமல் விடாதே!' என்பதற்கு 'தரை மட்டமாக்காமல் விடாதே!' என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ள முடியாது. மேலும் கப்ரின் மேல் வெளிப் பொருள்களால் அதிகப்படுத்தக் கூடாது என்பதை முன்னரே நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
அதன் அடிப்படையில் சிந்திக்கும் போது கப்ரிலிருந்து எடுக்கப்பட்ட மண் நாளடைவில் படிந்து தரை மட்டமாகி விடும். அதற்கு மேல் இருப்பது அனைத்தும் அதிகமாக்கப்பட்டவை தான். அதிகமாக்கப்பட்டதை அப்புறப்படுத்துவது தான் மேற்கண்ட கட்டளையைச் செயல்படுத்துவதாக அமையும்.
நபிகள் நாயகத்தின் கப்ர் மீது குப்பா எழுப்பப்பட்டதையும் இவர்கள் ஆதாரமாகக் காட்டுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த ஒன்றை மற்றவர்கள் செய்தால் அது எப்படி ஆதாரமாகும் என்பதைக் கூட இவர்கள் விளங்க மறுக்கின்றனர்..
ஸுஃப்யான் அத்தம்மார் என்பவர் நபிகள் நாயகத்தின் கப்ரை உயரமாகப் பார்த்தார் என்று புகாரி (1302) செய்தியையும் எடுத்துக் காட்டுகின்றனர்.
ஸுஃப்யான் அத்தம்மார் என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகத் தடை செய்த ஒன்றை இது போன்ற செய்திகளால் முறியடிப்பதில் இவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
நபிகள் நாயகத்தின் பெயராலேயே அவர்களின் கட்டளையை மீறுவதை ஷைத்தான் இவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளான்.
கப்ருகளைப் பூசக் கூடாது
அடக்கம் செய்து மண்ணை அள்ளிப் போட்டதும் ஆரம்பத்தில் சற்று உயரமாகத் தான் இருக்கும். உள்ளே உடல் வைக்கப்பட்டதாலும் வெட்டி எடுக்கப்பட்ட மண் அழுத்தம் குறைவாகி விட்டதாலும் உயரமாக இருப்பது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. சில நாட்களில் மண் இறுகி, பழைய நிலைக்கு வந்து விடும்.
ஆனால் அந்த நிலையைத் தக்க வைப்பதற்காக கப்ரின் மேல் சுண்ணாம்பு, காரை, சிமிண்ட் போன்ற பொருட்களால் பூசக் கூடாது.
கப்ருகளைப் பூசுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610
கட்டுவது மட்டுமின்றி பூசுவதும் தெளிவாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சிமிண்ட் சுண்ணாம்பு போன்றவற்றால் பூசுவதும், சந்தனம் பூசுவதும், வேறு எதனைப் பூசுவதும் குற்றமாகும். யாருடைய கப்ருக்கும் இதில் எந்த வித்தியாசமும் இல்லை.
நபிகள் நாயகத்தின் கப்ரும், பள்ளிவாசலும்
நபிகள் நாயகத்தின் அடக்கத் தலம் பள்ளிவாசலை ஒட்டி அமைந்திருந்த அவர்களின் வீட்டில் தான் இருந்தது. அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) ஆகியோரின் ஆட்சிக் காலம் முழுவதும் நபிகள் நாயகத்தின் அடக்கத் தலம் பள்ளியின் ஒரு பகுதியாக ஆக்கப்படவில்லை.
பின்னர் வலீத் பின் அப்துல் மாலிக் (இவர் இஸ்லாத்தை அறவே பேணாதவர்) ஆட்சியில் ஹிஜ்ரி 88ஆம் ஆண்டு மஸ்ஜிதுன் நபவி இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டது. இவ்வாறு கட்டும் போது தான் நபிகள் நாயகத்தின் அடக்கத் தலத்தையும் பள்ளிவாசலுக்குள் அவர் கொண்டு வந்தார்.
இந்தச் சமயத்தில் மதீனாவில் எந்த ஒரு நபித் தோழரும் உயிருடன் இருக்கவில்லை. நபித்தோழர்களில் மதீனாவில் கடைசியாக மரணித்தவர் ஜாபிர் (ரலி) அவர்கள். இவர்கள் ஹிஜ்ரி 78ஆம் ஆண்டு மரணித்தார்கள். மதீனாவில் ஒரு நபித்தோழரும் உயிருடன் இல்லாத 88ஆம் ஆண்டு தான் இந்தத் தவறை வலீத் என்ற மன்னர் செய்தார்.
உஸ்மான் (ரலி) அவர்கள் தான் கப்ரை பள்ளியில் சேர்த்தார் என்பது கட்டுக் கதையாகும். அவர்கள் காலத்தில் பள்ளிவாசலை விரிவுபடுத்திய போது நபிகள் நாயகத்தின் அடக்கத் தலத்தையும் நபிகள் நாயகத்தின் மனைவியர் வசித்த அறைகளையும் தவிர்த்து விட்டுத் தான் விரிவுபடுத்தினார். அவர் மரணித்து சுமார் 50ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வலீத் இக்காரியத்தைச் செய்தார்.
கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல்
உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாறாங்கல்லை தூக்க முடியாமல் தூக்கி வந்து அவரது தலைமாட்டில் வைத்தார்கள். 'எனது சகோதரர் உஸ்மானின் கப்ரை நான் அடையாளம் கண்டு என் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் இவருக்கு அருகில் அடக்குவதற்காக இந்த அடையாளம்' என்றும் கூறினார்கள்.
நூல்: அபூ தாவூத் 2791
இது கப்ரைக் கட்டக் கூடாது என்பதற்கு மேலும் வலுவான சான்றாகவுள்ளது. அவரது கப்ரை அடையாளம் காண விரும்பிய போதும் அந்த இடத்தில் ஒரு கல்லை எடுத்துப் போட்டார்களே தவிர நிரந்தரமாக இருக்கும் வகையில் கல்வெட்டு கூட வைக்கவில்லை. நினைத்தால் அப்புறப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு பொருளை அடையாளம் காண்பதற்காக வைத்தால் தவறில்லை.