பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 24, 2019

TNTJ ஹதீஸ் மறுப்பு - 21

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -21)

மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஹதீஸ் கலை விதிகள் TNTJ விற்கு உகந்தது அல்ல. ஆயினும் அந்த விதிகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்து அந்த விதிகளை நடைமுறைப்படுத்தவும் செய்கிறது. 

இந்த விதிகளோடு சேர்ந்து கூடுதலாக "குர்ஆனுக்கு முரண்படக் கூடாது" என்ற  ஒரு விதியையும் விதிக்கிறது. (அந்த விதியின் அடிப்படையற்றத் தன்மையை ஏற்கனவே பார்த்தோம்) 

சூனியம் தொடர்பான ஹதீஸ்களை தூக்கி வீசுவதற்காகத்தான் அந்த விதியை விதிக்கிறது TNTJ. சூனியம் தொடர்பான ஹதீஸ்களை "எவரோ இட்டுக்கட்டிவிட்டார்" என்பதுதான் TNTJ வைக்கும் வாதம். 

இந்த வாதத்தில் இருக்கும் தவறான புரிதலை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் நம்முடைய ஹதீஸ் கலை ஞானத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ் அந்த ஞானத்தை அதிகப்படுத்திக் கொள்வோம். 

"ஹதீஸ் கலை விதி" என்பது ஒரே நாளில் ஏற்படுத்தப்பட்டதல்ல. 

நபி(ஸல்) அவர்கள் இறந்ததில் இருந்தே 
இந்த ஹதீஸ் கலை விதிகள் தொடங்கிவிட்டன. இந்த விதிகள் ஒவ்வொருவரையும் பொறுத்து மாறுபட்டே இருந்தது.

உதாரணமாக, நபி(ஸல்) அவர்களின் இரு தோழர்களில் ஒருவரான உமர்(ரலி) அவர்கள், ஒரு ஹதீஸை கேள்விப்பட்டால்
அந்த ஹதீஸை அறிவிப்பவர் கூடுதலாக ஒரு சாட்சியையும் கொண்டு வர வேண்டும் என்று விதிவைத்திருந்தார். அந்த சாட்சியத்தை கொண்டுவராத அறிவிப்பாளரின் ஹதீஸை அவர் ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஆனால், வேறு எவரும் அப்படி ஒரு விதியை வைத்திருக்கவில்லை.

இதுபோன்று, ஹதீஸ்களைத் தொகுக்கும் ஒவ்வொரு இமாமின் விதிகளும் மாறுபாட்டிற்குள்ளானதே. 

ஆரம்பகாலத்தில், ஹதீஸ் என்பது  "சொல்லப்படும் செய்தி"யாக மட்டுமே இருந்தது. அந்த செய்தியை அறிவிப்பவர் எவரிடமிருந்து அந்த செய்தியை அறிந்தார் என்பது கேட்கப்படாது. 

அதாவது, மத்தன்(المتن) மட்டுமே ஹதீஸாக கருதப்பட்டது. இஸ்னாது(الإسناد) பற்றி கேட்கப்படவில்லை. 

உஸ்மான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டதற்குப் பிறகு ஸஹாபாக்கள் இரு குழுக்களாக பிரிந்து அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவும், அலி(ரலி) அவர்களின் தலைமையில் குழுவும் தங்களுக்குள்ளேயே சன்டையிட்டுக் கொண்டு பிறகு ஒன்று சேர்ந்தாலும், உடைக்கப்பட்ட கண்ணாடியை ஒட்டி வைத்தது போன்றே அது இருந்தது. 

அலி(ரலி) அவர்களை வரம்பு மீறி புகழும் ஒரு குழு உருவானது. அந்த குழு அபுபக்கர்(ரலி), உமர்(ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோர்களுக்கு காபிர் பட்டமும் கொடுத்தது. [இதற்குப் பிறகே ஜும்ஆ பயானில் இவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக என்று கூறும் முறையை நல்லோர்கள் ஏற்படுத்தினார்கள்]

அலி(ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகு "ஷியா" என்று தனிக்கூட்டமாக மாறி முஸ்லிம்களுக்குள் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.

புகழ்வதிலும் இகழ்வதிலும் வரம்பு மீறிய 
அந்த ஷியா கூட்டம் போலவே கவாரிஜ், முஃதஸிலா போன்ற வழிகெட்ட கூட்டங்களும் தோன்ற ஆரம்பித்தன. இந்த கூட்டங்கள் அறிவிக்கும் ஹதீஸ்களும் சந்தேகத்திற்குள்ளாயின. 

இதுபோன்ற கூட்டத்தினரிடமிருந்து ஹதீஸ்களை கேட்பதை தவிர்ப்தே தங்களுக்கு நலம் பயக்கும் என்று கருதிய நல்லோர்கள், தங்களிடம் ஒருவர் ஒரு ஹதீஸை கூறும்போது அதை உனக்கு அறிவித்தது யார்? அவருக்கு அறிவித்தவர் யார்? என்று கேட்க ஆரம்பித்தனர். 

இந்த அறிவிப்பாளர்களுள் வழிதவறிய கூட்டத்தினரோ, பொய்யரோ இருந்தால் அந்த ஹதீஸை மறுக்க ஆரம்பித்தனர். 

நாம் தற்போது பின்பற்றும் ஹதீஸ் கலை விதிகளின் தொடக்க விதி இவைதான். 

"மத்தன்" என்பது மட்டுமே ஹதீஸாக பார்க்கப்பட்ட நிலைக்கு மாற்றமாக "இஸ்னாது" சரியாக இருந்தால்தான் அதை ஹதீஸாக ஏற்பது என்ற விதி முஸ்லிம் சமூகத்தில் அறிமுகமாகிறது. 

ஒரு செய்தி (மத்தன்) ஏற்புக்குரியதாக இருக்க வேண்டுமானால் அந்த செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் (இஸ்னாது) நம்பகமான வரிசையுடன் அறிவிக்கப்பட்டால்தான் ஏற்பது என்பது அறிமுகமாகிறது. இதுதான் ஹதீஸ் கலையின் ஆரம்பகால விதி. 

ஒரு மத்தன் ஏற்கப்பட வேண்டுமானால் அதன் இஸ்னாதில் மூன்று அம்சங்கள் இடம்பெற வேண்டும்.

(1) அறிவிப்பாளர் வரிசை சரியாக இருக்க வேண்டும்.

(2) அறிவிப்பாளர்கள் உண்மையாளர்களாக இருக்க வேண்டும்.

(3) ஹதீஸை எழுத்து வடிவிலோ அல்லது மனனத்தினாலோ பாதுகாத்திருப்பவர்களாக இருக்க வேண்டும். 

இந்த மூன்றும்தான் ஆரம்பகாலத்தில் ஹதீஸ் கலை விதிகளாக இருந்தது. 

இவைதான் ஹதீஸ் கலையின் நிபந்தனைகளாக ஆரம்பகாலத்தில் கருதப்பட்டது. 

ஒரு செய்தியானது இந்த மூன்று நிபந்தனைகளை கடந்தால் அந்த செய்தி (மத்தன்) பலமான (ஸஹீஹ்) செய்தியாக கருதப்பட்டது. 

இந்த மூன்று நிபந்தனைகளுள் ஒன்றில் குறை இருந்தாலும் அந்த செய்தி (மத்தன்) பலவீனமான (லயீஃப்) செய்தியாக கருதப்பட்டது. 

ஒரு ஹதீஸ் ஸஹீஹா அல்லது லயீஃபா என்று பார்க்கும் ஹதீஸ் கலையின்  விதிகள் ஆரம்பகாலத்தில் இந்த மூன்றும்தான் இருந்தது. பின்னாளில்தான் அது ஐந்தாக மாற்றப்பட்டது.

ஐந்தாக ஏன் மாற்றப்பட்டது? இதுவும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதான். அதற்கு முன்பாக முதல் மூன்று விதிகளையும் செயல்படுத்தும் முறையைப் பார்ப்போம். 

(1) அறிவிப்பாளர் வரிசை : 

ஒருவர் ஒரு ஹதீஸைக் கூறும்போது அந்த ஹதீஸை தனக்குக் கூறியது யார் என்பதையும், அவருக்குக் கூறியது யார் என்பதையும் சேர்த்து அப்படியே நபி(ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்வது "அறிவிப்பாளர் வரிசை"யாகும். 

(2) அறிவிப்பாளர் உண்மையாளர் :

ஒரு மனிதனின் மறதியை நாம் குற்றமாக கருதுவதில்லை. அவன் சாதாரணமாக சொல்லும் சிறு பொய்களையும் குற்றமாகக் கருதுவதில்லை. 

ஆனால், ஹதீஸ் அறிவிக்கும் ஒரு மனிதன் 
மறதியாளராகவோ பொய் பேசுபவராக இருந்துவிட்டால் அவர் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படாது. 

வழிகெட்ட கொள்கையில் போய்விட்ட ஒருவர் அறிவிக்கும் ஹதீஸும் ஏற்கப்படாது. 

(3) மனனம்

ஒரு செய்தியை எப்போது அறிவித்தாலும் ஒரேமாதிரியாக அறிவிக்கும் ஒருவரை மனன சக்தி உள்ளவராகக் கூறுவோம்.

பல சமயங்களில் ஒரே மாதிரியாகவும் சில சமயங்களில் வார்த்தைகளை மாற்றியும் அறிவிப்பவரை மனன சக்தி தடுமாற்றம் கொண்டவர் என்போம். 

பெரும்பாலான சமயங்களிலும் ஒரே செய்தியை மாற்றி மாற்றி பேசுபவரை மனன சக்தி இல்லாதவர் என்போம். 

அதுபோல, ஹதீஸ் துறையில் ஹதீஸை அறிவிப்பவரின் மனன சக்தியைப் பொறுத்து மனன சக்தி உள்ளவர், மனன சக்தி தடுமாற்றம் கொண்டவர், மனனம் கெட்டவர்(இல்லாதவர்) என்றெல்லாம் வகைப்படுத்தியுள்ளனர். 

எழுத்தில் பாதுகாத்து வைத்திருந்தால் அதில் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை. 

ரைட். விஷயத்துக்கு வருவோம்...

ஒரு அறிவிப்பாளர், சரியான வரிசையில்தான் இருக்கிறார் என்பதையும், அவர் கொள்கை மாறாத பொய் பேசாத உண்மையாளர் என்பதையும், மனன சக்தி உள்ளவர்தான் என்பதையும் எப்படி அறிந்து கொள்வது? 

அது ஒரு தனி கலை. 

அந்த கலையின் பெயர்தான் "இல்முர் ரிஜால்". "ஹதீஸை அறிவிக்கும் மனிதர்களைப் பற்றின அறிவு" என்பதுதான் அதன் விளக்கம். 

ஹதீஸை அறிவிக்கும் ஒரு அறிவிப்பாளர், 

** எங்கு பிறந்தார்
** எங்கு வாழ்ந்தார்
** எந்த வருடம் இறந்தார்
** எங்கெல்லாம் பயணம் செய்தார்
** எவரிடமெல்லாம் கற்றார்
** எவருக்கெல்லாம் கற்றுக்கொடுத்தார்
** மனன சக்தி எத்தகையது
** பொய் பேசுபவரா
** கொள்கை மாறாதவரா

போன்ற பல தகவல்களை உள்ளடக்கிய ஒரு ஆழ்ந்த அறிவுசார் கலைதான் "இல்முர் ரிஜால்". 

ஹதீஸ் அறிவிப்பாளர்களின் சமகாலத்தில் வாழ்ந்த மற்றவர்களால் அறியப்பட்ட இந்த தகவல்கள் பின்னால் வருபவர்களுக்கு கடத்தப்பட்டது. (ஒருகட்டத்தில் அது எழுதப்பட்டும் பாதுகாக்கப்பட்டது)

இந்த தகவல்களின் அடிப்படையில்தான், ஒரு ஹதீஸ் ஸஹீஹா அல்லது ழயீஃபா என்று பார்கும் ஹதீஸ் கலையின் அடிப்படையான மூன்று விதிகளும் செயல்படுத்தப்பட்டது. 

இந்த "இல்முர் ரிஜால்" கலையிலும் சில சிக்கல்கள் இருக்கிறது.

ஒரு அறிவிப்பாளர் மனன சக்தி உள்ளவர் என்றும், மனனத் தடுமாற்றம் உள்ளவர் என்றும், மனனம் கெட்டவர் என்றும் பல விதத்தில் விமர்சிக்கப்படும் நிலையும் இருக்கிறது. 

இதுபோன்ற நிலைகளால்தான் ஸஹீஹாக கருதப்படும் ஹதீஸ்கள் திடீரென ழயீஃபாக மாறிவிடுகிறது. 
ழயீஃபாக கருதப்படும் ஹதீஸ்கள் திடீரென ஸஹீஹாகவும் மாறிவிடுகிறது. 

ஆனால், ஒன்றில் மட்டும் உறுதியாக ஹதீஸ் கலை இருக்கிறது...

அதாவது, ஒரு அறிவிப்பாளர் மனனம் இல்லாதவர் என்று உறுதியாகிவிட்டால், அவர் இடம் பெறும் அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாக (ழயீஃப்) மாறிவிடும். 

ஆக, ஒரு ஹதீஸை ஸஹீஹாகவோ அல்லது ழயீஃபாகவோ மாற்றுவதற்குரிய வாசல் ஹதீஸ் கலையில் திறந்தே இருக்கிறது. இல்முர் ரிஜால் கலையில் ஞானமுள்ளவர்கள் அந்த வாசலை திறந்து "தஸ்ஹீஹ்" ஆடலாம். 

ஆனால், ஹதீஸ் கலையில் ஒரு கதவு மூடப்பட்டே இருக்கிறது. 

அந்த கதவு மூடியிருக்கும் வரையிலும்தான் ஹதீஸ்களின் நம்பகம் நிலைத்திருக்கும். அந்த கதவைத் திறந்துவிட்டால் ஹதீஸ்களின் நம்பகம் கேள்விக்குறியாகிவிடும். 

மூடப்பட்டிருக்கும் அந்த கதவு எது? 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

No comments:

Post a Comment