பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 24, 2019

TNTJ ஹதீஸ் மறுப்பு - 17

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -17)

ஹதீஸ் கலை பற்றி பேசுவதற்கும் வெங்காயத்தை கையில் எடுத்ததற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது காதில் விழுகிறது. சம்பந்தம் இருக்கிறது. 

"உரிக்க உரிக்க ஒன்னுமில்லாத வெங்காயம்" என்பார்கள். அதாவது, வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு ஒவ்வொரு அடுக்காக உரித்துக்கொண்டே 
சென்றால் இறுதியில் ஒன்றுமே இருக்காது. 

அதுபோல, ஹதீஸ் கலை என்பதையும் உரித்துக் கொண்டே சென்றால் இறுதியில் ஒன்றுமே இருக்காது. 

ஹதீஸ்களை தொகுத்த இமாம்கள் ஒவ்வொருவரும் தனித்தனி விதிகளை கொண்டிருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

ஆனால், இவர்கள் அனைவரும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருந்னர். ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் நல்லவரா, மனன சக்தி உறுதியானவரா, மனன சக்தி குறைவானவரா, மனன சக்தி இல்லாதவரா, பொய்யுரைப்பவரா என்பன போன்ற தகவல்களை எடுப்பதில் ஒற்றுமையாக இருந்தனர். 

"இல்முர் ரிஜால்" என்ற இந்த கலைதான் ஹதீஸ் தொகுப்பின் அடிப்படை ஆதாரம். 

ஹதீஸ் அறிவிக்கும் ஒரு நபரைப் பற்றின விபரங்களை அறிவித்து பாதுகாப்பதுதான் அந்தக் கலை. ஹதீஸ் கலையின் விதிகளை உரித்துக்கொண்டே சென்றால் இறுதியில் இந்த "இல்முர் ரிஜால்" என்ற கலையில் கொண்டுபோய் நிறுத்தும். இந்தக் கலைதான் ஹதீஸ் தொகுப்பின் மூல ஆதாரம். 

இந்த மூல ஆதாரத்தையும் உரித்துப்பார்க்க முடியும். 

இல்முர் ரிஜால் எனும் கலையின் இமாம்கள், ஒரு அறிவிப்பாளரை நல்லவர் என்றும் நல்லவர் இல்லை என்றும் இருவிதமாகவும் விமர்சித்து இருக்கும் நிலையில் இதில் எதை எடுப்பது என்பதும் சர்ச்சையில் இருக்கிறது. [ தான் சார்ந்திருக்கும் கொள்கைக்கு ஏதுவாக இருக்கும் ஹதீஸ்களை பலப்படுத்துவதும், கொள்கைக்கு எதிரானதாக இருக்கும் ஹதீஸ்களை பலவீனப்படுத்துவம் இந்த விமர்சனத்தை வைத்துதான்]

ஆக, "இல்முர் ரிஜால்" கலையின் அடிப்படையாகக் கருதப்படும் விமர்சனங்களையும் உரித்துப்பார்த்தால் அதிலும் ஒன்றுமில்லை. 

இறுதியாக, ஹதீஸ் அறிவிப்பாளர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று விமர்சனம் செய்யும் "இல்முர் ரிஜால்" கலையின் இமாம்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று யார் சான்று பகர்வது என்ற கேள்வி எழும். 

இந்த கேள்வி ஒருவருக்கு எழுந்து அவருக்கு பதில் கிடைக்காவிட்டால் அவர்  "ஹதீஸ் நிராகரிப்பாளராக" மாறிவிடுவார்.
[ இவர்கள்தான் "குர்ஆன் மட்டும் போதும்" கூட்டத்தினர்]

இந்த கேள்வி ஒருவருக்கு எழுந்து அவருக்கு பதில் கிடைக்காவிட்டாலும், தன் மனதைத்தேற்றிக் கொண்டு "இல்முர் ரிஜால்" கலையை ஏற்றுக்கொண்டால் அவர் "ஹதீஸ் ஏற்பாளராக" மாறிவிடுவார்.

"கடவுள் அனைத்தையும் படைத்தார்" என்பது "கடவுள் கொள்கை". 

"கடவுளை யார் படைத்தது" என்று கேட்டால் அது "நாத்திகக் கொள்கை". 

இந்த இரண்டு கொள்கைகளுக்கும் இடையில் எந்தத் தடுப்பும் இல்லை. 

அதுபோல, "ஹதீஸ் ஏற்பு" என்ற நிலைக்கும் "ஹதீஸ் நிராகரிப்பு" என்ற நிலைக்கும் இடையில் எந்தத் தடுப்பும் இல்லை. 

ஹதீஸ் கலையை உரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமே இருக்காது. 

ஒன்றுமே இல்லாத இந்தக் கலையைத்தான் "மார்க்கம்" என்று ஸலபுகள் கூறுகிறார்கள். 

ஒன்றுமே இல்லாத இந்த கலையில்தான் ஆறாவது விதியை சேர்க்க வேண்டும் என்று சொல்கிறது TNTJ. 

ஆறாவது விதியை சேர்க்க வேண்டும் என்று TNTJ கூறுவதன் மூலம் ஹதீஸ் கலையின் விதிகளை TNTJ ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தமாகிறது. 

எதன் அடிப்படையில் ஹதீஸ் கலை விதிகளை TNTJ ஏற்றுக்கொள்கிறது? 
இதுதான் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வி. 

குர்ஆன் மற்றும் நபிவழி மட்டும்தான் மார்க்கம் என்று உறுதியாகச் சொல்லும் TNTJ, ஹதீஸ் கலை விதிகளை குர்ஆனில் இருந்து பெற்றுக்கொண்டதா? அல்லது, நபிவழியில் இருந்து அதை அறிந்து கொண்டதா? 

குர்ஆனிலோ நபிவழியிலோ ஹதீஸ்கலை விதிகளைப் பற்றி ஏதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஹதீஸ் சேகரிப்பில் ஈடுபட்ட ஹதீஸ் கலை இமாம்கள் அடிப்படையாகக் கொண்டிருந்த குர்ஆன் வசனத்திற்கு முரண்பாடாகவே ஹதீஸ் கலை விதிகள் இருக்கின்றன. 

"இறை நம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், அதைத் தீர்க்கமாக விசாரித்துக்கொள்ளுங்கள்..." (49:6)

இந்த வசனத்தின்படி செய்தியைக் கொண்டு வருபவன் "தீயவன்" (فَاسِقٌ) என்று தெரிந்தால்தான் அதை விசாரிக்க வேண்டும் என்கிறது வசனம். 

மேலும், அந்த செய்திகளை புறக்கணிக்க சொல்லவில்லை. விசாரிக்கவே சொல்கிறது வசனம். 

"மனனம் சரியில்லாத ஒரு அறிவிப்பாளர் இருந்தால் அவருடைய எந்த அறிவிப்புகளையும் ஏற்கக்கூடாது" என்பது ஹதீஸ் கலை விதி. குர்ஆன் வசனத்திற்கு முரணாக அல்லவா இந்த விதி இருக்கிறது!

தீயவனும் மனனம் குறைவானவரும் ஒன்றா? 

மேலும், செய்தியை விசாரிக்காமலேயே அதை புறக்கணிப்பது குர்ஆன் வசனத்திற்கு முரண்தானே!! 

எந்த வகையில் பார்த்தாலும் ஹதீஸ் கலை விதிகள் TNTJ வின் கொள்கைக்கு பொருத்தமில்லாதது. தனது கொள்கைக்கு பொருத்தமில்லாத ஹதீஸ்கலை விதிகளில் ஆறாவது விதியை சேர்க்க வேண்டும் என்று சொல்வது யாரை ஏமாற்ற? 

ஹதீஸ் கலை விதிகளையும் ஏற்றுக்கொண்டு, குர்ஆனுக்கு முரண்பாடு இருக்கக்கூடாது என்பதையும் பிரச்சாரம் செய்வது "பூனைக்கு நண்பன் பாலுக்கு காவல்" என்பது போன்ற தன்மையே. 

இந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த TNTJ சகோதரர் பேச ஆரம்பித்தார். 

ஹதீஸ் கலை விதிகளுள் பிரதானமாக இருக்கும் ஐந்து விதிகளுடன் சேர்த்து ஆறாவதாக அந்த விதியை வைப்பதை விட, குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ் இருக்கக்கூடாது என்பதைத்தான் துவக்க விதியாகக் கருதவேண்டும் என்பதே எங்களுடைய உண்மையான கருத்து என்றார். 

"குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ் இருக்கக்கூடாது" என்ற விதியை எடுத்துக்கொண்டால் மற்ற ஐந்து விதிகளும் தேவையில்லைதானே என்று கேட்டேன். 

குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, அது நபி(ஸல்) அவர்கள் சொன்னதுதானா என்பதை உறுதி செய்வதற்காக ஹதீஸ் கலை விதிகள் வேண்டும்தான் என்று ஒரு புதுமையான கருத்தை சொன்னார் அந்த TNTJ சகோதரர். 

அவர் கூறியது எனக்கு புரிந்தது மாதிரியும் இருந்தது, புரியாதது மாதிரியும் இருந்தது. எனினும் புரிந்ததுபோல் சரி என கூறிவைத்தேன். 

எது புரிந்ததோ புரியவில்லையோ! ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.

ஹதீஸ் கலை விதிகள் எனும் வெங்காயத்தை உரித்துப்பார்த்து அதில் ஒன்றும் இல்லை என்று சொல்வதை விட, "குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ் இருக்கிறதா?" என்று பார்ப்பதே அருமையான விதியாகத் தெரிகிறது. 

இந்த அருமையான விதியையும் உரித்துப் பார்ப்போம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்

பிறை மீரான்.

Part - 18

https://m.facebook.com/story.php?story_fbid=781862248903579&id=100012394330588

No comments:

Post a Comment