இவ்வுலகில் மனிதனை படைத்தத்தின் நோக்கமே அல்லாஹ்வை வணங்கவும், அவனின் தூதரின் கூற்றை பின்பற்றி நடப்பதற்காகவும் தான். அவ்வாறு அல்லாஹ்வை மட்டும் வணங்கி, தூதரின் சொல்லை அப்படியே பின்பற்றி நடக்கும் போது ஷைத்தானின் ஊசலாட்டதால் ஒரு சாரார் வேறொரு வழியை பின்பற்றி நிரந்தர நரகத்திற்குரிய செயல்களை செய்துவிடுகின்றனர்.
அக்காரியங்களை செய்தவர்களுக்கு இறைவன் மறுமை நாளில் கடுமையான தண்டனைகளை வழங்குகின்றான்.
இணைவைப்பு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்து விடுகிறாரோ அவர் நிச்சயமாக நரகம் செல்வார்” என்று கூறியதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : புஹாரி 150
அல்லாஹ்விற்கு யார் இணைவைக்கின்றாரோ அவர் பெறக்கூடிய பாவமோ நிரந்தர நரகம். அதில் அவர் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரை யாராலும் காப்பற்ற முடியாது. அப்போது அவர் தனக்கு ஏற்பட்ட வேதனையால் இதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு இதை விட பன்மடங்கு அதிகமாக்கி கொடுக்குமாறு கூறுவார். ஒருவர் இணைவைத்து அதனை அவர் சரி வர திருத்தி கொண்டாரேயானால் அல்லாஹ் நாடினால் அவரை நரக குழியை விட்டும் பாதுகாப்பு பெற முடியும். ஆனால் அவர் இணைவைத்தவராகவே மரணித்து விட்டால் அவர் செய்த எந்தயோரு நன்மையும் அழிந்து போகும்.
பெரும் பாவங்கள்
நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புஹாரி 2653
மிகுதியாகப் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பது
மக்களில் சிலர் தன் தேவைக்கு அதிகமாக பொருளாதாரம் வைத்திருந்தும் பேராசை அவர்களின் கண்களை மறைத்து விடுகின்றது. அவ்வாறு ஆசைப்படுபவர்களின் மறுமை நிலையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விவரிக்கிறார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்’. வியர்வை வழிந்து மனிதனின் பாதிக் காதை அடையும் அளவுக்கு மறுமை நாளில் சூரியன் மனிதனுக்கு மிக அருகில் வந்துவிடும்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புஹாரி 1474
கஞ்சத்தனம் செய்வோரின் நிலை
அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், “அது தங்களுக்கு நல்லது” என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர் ஆன் 3 : 180)
அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய நல்ல அருளில் யாரும் கஞ்சத்தனம் செய்ய கூடாது. அவ்வாறு செய்வோரின் மறுமை நிலை எதன் மூலம் அவர் கஞ்சத்தனம் செய்கிறாரோ அதன் மூலம் வஞ்சிக்கப்படுவார்.
மோசடி செய்தவர்களின் நிலை
(ஒரு முறை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “யார் மோசடி செய்கிறாரோ அவர், தாம் மோசடி செய்தவற்றுடன் மறுமை நாளில் வருவார்”.
அறிவிப்பவர் : ஷகீக் பின் சலமா (ரஹ்), நூல் : முஸ்லிம் 4860
மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
(அல்குர் ஆன் 3 : 161)
யாரொருவர் இன்னொருவருக்கு மோசடி செய்கிறாரோ மோசடி செய்தவர் அந்த பொருளை மறுமை நாளில் கொண்டு வருவார். ஆகவே, இவ்வுலகில் எதை செய்தாலும் மறுமை நாள் என்று ஒன்று இருக்கின்றது. அங்கு அனைத்தும் விசாரிக்கப்படும். அப்போது யாரையும், எதையும் மறைக்க முடியாது.
ஒப்பாரி வைத்தல் குறித்து வந்துள்ள கடுமையான கண்டனம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவையாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது.
ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.
அறிவிப்பவர் : அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி), நூல் : முஸ்லிம் 1700
பெரும்பாவங்கள் ஏழு
‘அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை எவை?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)’ என்று (பதில்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), நூல் : புஹாரி 2766
தற்கொலை செய்து கொள்பவரின் நிலை
மறுமை நாளில் தற்கொலை செய்தவரின் நிலையானது எதன் மூலம் அவர் தனது உயிரை மாய்த்து கொண்டாரோ அதன் மூலமே அவர் தண்டிக்கப்படுவார் என செய்திகள் கூறுகின்றது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ : மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.
என அறிவித்தார்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), நூல் : புஹாரி 5778
போரில் ஏற்பட்ட காயம் தாங்க முடியாமல் தன்னை மாய்த்து கொண்டவர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹுனைன் போரில் கலந்து கொண்டோம். அப்(போரின்) போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்முடன்) இருந்த முஸ்லிம் என்று கருதப்பட்ட ஒருவரைப் பற்றி “இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அந்த நபர் கடுமையாகப் போரிட்டார். அதனால் அவருக்குக் காயங்கள் ஏற்பட்டன. அப்போது (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் யாரைப் பற்றி “இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று சொன்னீர்களோ அவர் இன்றைய தினம் கடுமையாகப் போரிட்டு இறந்துவிட்டார்” என்று கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “அவர் நரகத்திற்குத்தான்” என்றார்கள். உடனே முஸ்லிம்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றை) சந்தேகப்படும் அளவுக்குச் சென்றுவிட்டார்கள்.
நிலைமை இவ்வாறிருக்க, “அந்த மனிதர் (போரில்) இறக்கவில்லை. அவருக்குக் கடுமையான காயம்தான் ஏற்பட்டது” என்று கூறப்பட்டது. பின்னர் இரவு வந்தபோது அவரால் வலி பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ் மிகவும் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியானும் அவனுடைய தூதரும் ஆவேன் என்று நான் உறுதி கூறுகிறேன்” என்றார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் “(துன்பங்களை எல்லா நிலைகளிலும் சகித்துக்கொண்டு அடிபணிந்து வாழ்ந்த) முஸ்லிமான மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழைவார். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமும் வலுவூட்டுகிறான்” என்று மக்களிடையே அறிவிப்புச் செய்யுமாறு கூறினார்கள். அவ்வாறே பிலால் (ரலி) அவர்கள் மக்களிடையே அறிவிப்புச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி 178
இரட்டை வேடை போடுபவரின் மறுமை நிலை
மனிதர்களில் சிலர் இரட்டை வேடம் போடுவதை நாம் பார்க்கின்றோம். பேச்சுகளில் தனித்துவம் இருக்காது. மாறாக, இங்கு ஒன்றும் அங்கு ஒன்றும் என அவர்களின் பேச்சுகளில் வேற்றுமை இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு மறுமை நாளில் கிடைக்கும் தண்டனையோ இரட்டை நெருப்பினால் ஆன நாக்கு பொருத்தப்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரட்டை வேடை போடுபவர் மறுமை நாளில் நரகத்தில் நெருப்பினாலான இரண்டு நாக்குகளை உடையவர்களாக இருப்பார்கள்.
நூல் : அபு தாவூத் 4873
மனைவிமார்களிடையே நீதமாக நடக்காதவரின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவரொருவர் தன் மனைவிக்கு துரோகம் செய்தவராகவும், நீதமாக நடக்காமல் இருப்பவர் மறுமையில் தோல் புஜங்கள் சாய்ந்தவர்களாக வருகை தருவார்கள்.
நூல் : நஸயீ 3881
ஜகாத்தை நிறைவேற்றாததால் ஏற்படும் தண்டனைகள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்’ ‘நானே உன்னுடைய புதையல்’ என்று கூறும்.’ இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.’ என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), நூல் : புஹாரி 1403
அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், “அது தங்களுக்கு நல்லது” என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில்1 கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள்507மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர் ஆன் 3 : 180)
நரகவாசிகளின் நிலை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகத்திற்கே உரியவர்களான நரகவாசிகள் நரகத்தில் இறக்கவுமாட்டார்கள்; வாழவு மாட்டார்கள். ஆனால், “தம் பாவங்களால்” அல்லது “தம் குற்றங்களால்” நரக நெருப்பிற்கு ஆளான மக்களை உடனே இறைவன் இறக்கச் செய்துவிடுவான். அவர்கள் (எரிந்து) கரிக் கட்டையாக மாறிவிடும் போது (அவர்களுக்காகப்) பரிந்துரை செய்ய (சொர்க்கவாசிகளான இறைநம்பிக்கையாளர்களுக்கு) அனுமதி வழங்கப்படும். உடனே அவர்கள் தனித் தனிக் கூட்டங்களாகக் கொண்டுவரப்பட்டு, சொர்க்க நதிகளின் படுகையில் பரப்பி வைக்கப்படுவர். பிறகு (சொர்க்கத்திலிருப்பவர்களிடம்) “சொர்க்கவாசிகளே! அவர்கள்மீது தண்ணீரை ஊற்றுங்கள்” என்று கூறப்படும். (அவ்வாறே ஊற்றப்படும்.) உடனே அவர்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) மாறி விடுவார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி 306
தான் செய்யாததை பிறருக்கு ஏவியவரின் நிலை
மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, ‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்’ என்று கூறுவார்.
இந்த நபிமொழி மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்படுகிறது.
அறிவிப்பவர் : அபூ வாயில்(ரஹ்), நூல் : புஹாரி 3267
நரகிலிருந்து பிரித்தெடுக்கும் நபர்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம்(அலை) அவர்களை நோக்கி, ‘ஆதமே!’ என்பான். அதற்கு அவர்கள், ‘இதோ! வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்’ என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், ‘நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள். என்று கூறுவான். ஆதம்(அலை) அவர்கள், ‘எத்தனை நரகவாசிகளை?’ என்று கேட்பார்கள். அதற்கு அவன், ‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத தொண்ணுற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்)’ என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான்; கர்ப்பமுற்ற பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள்.
ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்’ (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நரகத்திலிருந்து (வெளியே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்களில் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளியேறாமல் அதனுள்) இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) ‘அல்லாஹுஅக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)’ என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள்.
உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) ‘அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)’ என்று கூறினோம். உடனே அவர்கள், ‘சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினோம். அவர்கள், ‘சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்), ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறினோம். அப்போது அவர்கள், ‘நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போன்றே இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போன்றே (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி), நூல் : புஹாரி 3348
(மக்களில்) சிலர் தம் முகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிர மற்ற (அங்கங்கள்) யாவும் கரிந்துவிட்டிருக்கும் நிலையில் நரகநெருப்பிலிருந்து வெளியேறி, சொர்க்கத்திற்குள் நுழைவார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல் : புஹாரி 319
அக்கிரமக்காரனிற்கு ஏற்படும் பிடி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் அக்கிரமக்காரனுக்குவிட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்’ என்று கூறிவிட்டு, பிறகு, ‘மேலும் அக்கிரமம் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்’ எனும் (திருக்குர்ஆன் 11:102 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி), நூல் : புஹாரி 4686
உருவப்படங்களால் ஏற்படும் தண்டனை
நாங்கள் மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அவர்களுடன் யஸார் இப்னு நுமைர்(ரஹ்) அவர்களின் இல்லத்தில் இருந்தோம். அப்போது யஸார்(ரஹ்) அவர்களின் வீட்டுத் திண்ணையில் சில சிலைகள் இருப்பதை மஸ்ரூக்(ரஹ்) கண்டார்கள். உடனே ‘அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் செவியேற்றதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூற கேட்டேன்’ என்று மஸ்ரூக்(ரஹ்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஸ்லிம் இப்னு ஸுபைஹ்(ரஹ்), நூல் : புஹாரி 5950
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்னுடைய திரைச் சீலையொன்றால் நான் என்னுடைய அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, ‘மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்’ என்று கூறினார்கள். பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரண்டு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி), நூல் : புஹாரி 5954
ஒளுவை சரிவர செய்யாதவருக்கு நரக வேதனை
தம் குதிகால்களைக் கழுவா(மல் உளூச் செய்துகொண்டிருந்)த ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது (உளூவில் சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனை தான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி 408
அமானிதம்
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். அப்போ(ரின்போ)து நாங்கள் தங்கத்தையோ, வெள்ளியையோ போர்ச் செல்வங்களாகப் பெறவில்லை. உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றையே போர்ச் செல்வங்களாகப் பெற்றோம். பிறகு நாங்கள் (மதீனா அருகிலுள்ள) “வாதீ(அல்குரா)” எனுமிடத்தை நோக்கி நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய (மித்அம் என்றழைக்கப்படும்) ஓர் அடிமையும் இருந்தார். அவரை “பனுள்ளுபைப்” குலத்திலுள்ள ஜுதாம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அவர் “ரிஃபாஆ பின் ஸைத்” என்று அழைக்கப் பட்டார்.
நாங்கள் அந்த (வாதில் குரா) பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டார். அதுவே அவரது இறப்புக்குக் காரணமாக அமைந்தது. அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் பேறு கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்!” என்று கூறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது” என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) மக்கள் திடுக்குற்றனர். அப்போது ஒரு மனிதர் “ஒரு செருப்பு வாரை” அல்லது “இரண்டு செருப்பு வார்களை”க் கொண்டு வந்து “(இதை) நான் கைபர் போரின்போது எடுத்துக் கொண்டேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இது சாதாரண செருப்பு வார் அன்று; இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இதுவே) “நரகத்தின் செருப்பு வார்” அல்லது “நரகத்தின் இரு செருப்பு வார்கள்” ஆகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி 183
பொய் சத்தியம் செய்பவரின் நிலை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்துவிட்டான்” என்று கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர், “அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே!” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா அல்ஹாரிஸீ (ரலி), நூல் : புஹாரி 218
நரகத்தை விட்டு வெளியேறும் கடைசி மனிதனின் நிலை
“கருவேலமரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், “ஆம் (பார்த்திருக்கிறோம்), அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்றுதான் இருக்கும். ஆயினும், அதன் பருமன் என்னவென்று அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்ப கவ்விப்பிடிக்கும். அவர்களில் தமது (பாவச்) செயலால் (அங்கு) தங்கிவிட்ட இறைநம்பிக்கையாளரும் இருப்பார்.
இன்னும் அவர்களில் தண்டனை அளிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்படுபவரும் இருப்பார். இறுதியாக இறைவன், அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்த பின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரைத் தனது கருணையினால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். அதன்படி அல்லாஹ்விற்கு எதையும் இணைகற்பிக்காமல் இருந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று உறுதிகூறியவர்களில், தான் கருணைகாட்ட நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு இறைவன் ஆணையிடுவான். வானவர்கள் நரகத்திலிருக்கும் அவர்களை சஜ்தாவின் அடையாளங்களை வைத்து இனம் கண்டுகொள்வார்கள். மனிதனி(ன் உடலி)ல் உள்ள சஜ்தாவின் அடையாளத்தைத் தவிர மற்றப் பகுதிகளை நரகம் தீண்டுகிறது. சஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஆகவே, அவர்கள் அங்கமெல்லாம் கரிந்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
நரகத்தை முன்னோக்கியபடி ஒரு மனிதர் மட்டும் எஞ்சியிருப்பார். அந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார். அவர் “என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரிக்கிறது. ஆகவே, நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிடுவாயாக!” என்று கூறி, அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனைகளைச் சொல்லி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார். பிறகு அல்லாஹ், “இ(ப்போது நீ கோரிய)தை உனக்கு நான் செய்(து கொடுத்)தால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?” என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், “(இல்லை;) வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டு, அல்லாஹ் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார்.ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு (வேறு பக்கம்) திருப்பிவிடுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி 299
அனைத்து பாவங்களையும் செய்து விட்டு அல்லாஹ்விற்கு மட்டும் இணைவைக்காமல் இறந்தவனின் இறுதி நிலையே இவ்வாறு இருக்கும்போது அல்லாஹ்விற்கு இணைவைத்தவரின் நிலையை பற்றி சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
நரகம் விடும் இரு மூச்சுகள்
நரகம் தனது இறைவனிடம், “என் இறைவா! என்னுடைய ஒருபகுதி மறுபகுதியைத் தின்கிறதே?” என முறையிட்டது. எனவே, இறைவன் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதாம் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி 1087
நரகில் கிடைக்கும் குறைவான தண்டனை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர், நெருப்பாலான இரு காலணிகளை அணி(விக்கப்படு)வார். அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்க
முடிவுரை
நரகத்தில் கிடைக்கப்பெறும் பல்வேறு தண்டனைகளை பற்றி விரிவாக பார்த்தோம். இவ்வுலகில் சர்வ சாதாரணமாக செய்யும் செயலுக்கு கூட நரகம் கிடைக்கப்பெறும் என்றும் மேலும், அது பற்றி சிறிதும் அச்சமில்லாமல் மனோயிச்சையை மட்டுமே பின்பற்றி வாழ்பவர்கள் தாம் அதிகமாக காண முடிகின்றது. இவ்வுலகம் மிக அற்பமானதாக தான் இறைவன் படைத்திருக்கான். ஆனால், இவ்வுலகை தவிர வேறொன்றும் இல்லை என்ற அளவிற்கு மனிதர்கள் இவ்வுலகின் மேல் ஆசை கொண்டு பல தீய காரியங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்து வருகிறான். ஆக, மேற்கூறப்பட்ட நரகத்தின் கடுமையான தண்டனைகளை பற்றி தெரிந்து ஒரு விழிப்புணர்வு பெற்று இனி வரும் காலங்களில் தன்னை தற்காத்து கொள்ளக்கூடிய மனிதர்களாக அனைவரும் வாழ வேண்டும்.
No comments:
Post a Comment