சூனியத்தின் மூலமாக சில காரியங்களைச் செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் திருக்குர்ஆன் 2:102 வசனத்தை எடுத்துக்காட்டி சூனியத்தினால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என இவ்வசனம் சொல்வதாக வாதிடுகின்றனர்.
இவ்வசனம் சொல்வது என்ன? என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? இது சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது எனச் சொல்கிறதா? எதிராகச் சொல்கிறதா என்பதை நாம் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.
இதன் சரியான பொருளை அறிந்து கொள்வதற்கு முன்னால் மேற்கண்ட வசனத்திற்கு அப்துல் ஹமீது பாக்கவி, ஜான் ட்ரஸ்ட், ரஹ்மத் அறக்கட்டளை ஆகியோர் வெளியிட்ட மொழி பெயர்ப்ப்புகளைக் கீழே தந்துள்ளோம்.
அப்துல் ஹமீது பாக்கவி மொழி பெயர்ப்பு
மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வைகளைப் பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமானோ “நிராகரிப்பவராக” இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் “பாபிலூன்” (என்னும் ஊரில்) “ஹாரூத்” “மாரூத்” என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்தவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) “நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர்களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர, (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். அன்றி, தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! 2:102
ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பு
அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக் கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் – மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்.எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே – கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?2:102
இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் சிவப்பு வண்ணமாக நாம் காட்டியுள்ள சொற்களைத் தான் இது விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் சொல்லப்படுவது என்ன?
இரு வானவர்கள் மக்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுக்க வந்தனர்.
அவ்வாறு கற்றுக் கொடுக்கும் போது சூனியத்தைக் கற்காதே! கற்றால் காபிராகி விடுவாய் என்று சொல்லாமல் அவர்கள் கற்றுக் கொடுக்க மாட்டார்கள்.
இப்படி அவர்கள் எச்சரிக்கை செய்த பின்பும் சூனியத்தைக் கற்க விருப்பம் கொண்டவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டார்கள்.
மேற்கண்ட இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் சூனியத்தைக் கற்க விரும்பியவர்கள் சூனியத்தின் ஒரு வகையான கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டனர் என்ற கருத்து வருகிறது.
சூனியத்தினால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்பதற்கு இது ஆதாரம் என்கின்றனர்.
சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது என்று திருக்குர்ஆனே சொல்வதால் அதை நம்புகிறோம் என்றும் வாதிடுகின்றனர்.
இவ்வாறு மொழி பெயர்ப்பதற்கு இலக்கணப்படி இடம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. வேறு விதமாகப் பொருள் கொள்வதற்கும் இலக்கணப்படி இடமுள்ளது.
இரண்டு வகையாக மொழிபெயர்க்க இலக்கணப்படி இடம் உள்ளது என்ற காரணத்துக்காக விரும்பிய ஒரு வகையைத் தேர்வு செய்ய முடியாது. இரண்டு விதமான மொழிபெயர்ப்புகளில் ஒரு மொழிபெயர்ப்பு இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாகவும், இன்னொரு மொழிபெயர்ப்பு இஸ்லாத்தின் அடிப்படைக்கு ஏற்ற முறையிலும் இருந்தால் இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமில்லாமல் உள்ள மொழிபெயர்ப்பைத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட இரு நிறுவனங்களின் மொழிபெயர்ப்பு இலக்கணப்படி சரியாக இருந்தாலும் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் உள்ளன.
சூனியத்தின் மூலம் கணவன் மனைவியைப் பிரிக்கலாம் என்ற கருத்து மேற்கண்ட மொழிபெயர்ப்பில் இருந்து கிடைக்கும் முடிவாகும்.
கோள் மூட்டி, பொய் சொல்லி கணவன் மனைவியைப் பிரித்தால் அது பாவமாக ஆகும். சூனியத்தின் மூலம் இதைச் செய்வதாக நம்பினால் சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படும் ஆற்றல் உள்ளவன் என்று ஆகிறது.
கணவன் மனைவி இருவரையும் மந்திர சக்தி மூலம் பிரிக்கலாம் என்று நம்புவது இணைகற்பித்தலில் சேரும். இந்தக் காரணத்தினால் இம்மொழிபெயர்ப்பு தவறு என்று ஆகிறது.
சூனியத்தால் மெய்யாகவே பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றால் 10:77 வசனத்துக்கு இது முரணாக உள்ளது. மூஸா நபி அற்புதங்கள் செய்து காட்டிய போது அதை சூனியம் என்று காஃபிர்கள் கூறினார்கள். அதற்கு மறுப்பளித்த மூஸா நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
“உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
திருக்குர்ஆன் 10:77
சூனியம் என்பது உண்மை இல்லை, அது பொய். ஆனால் நான் கொண்டு வந்தது அற்புதம். இதை எப்படி சூனியம் என்று சொல்லலாம் என்று மூஸா நபி கூறுகிறார்கள்.
இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் என்றால் பித்தலாட்டம் தானே தவிர அதில் கடுகளவும் உண்மை இல்லை என்று மூஸா நபி வழியாக அல்லாஹ் விளக்கி விட்டான்.
அந்த விளக்கத்துக்கு மாற்றமாக மேற்கண்ட மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. 10:77 வசனம் சூனியம் என்பது பொய் என்று சொல்ல, இந்த மொழிபெயர்ப்போ அதை மெய் என்று காட்டுவதால் இந்த மொழிபெயர்ப்பு சரியானதல்ல.
மேலும் இம்மொழி பெயர்ப்பு 7:116 வசனத்துக்கும் எதிராக அமைந்துள்ளது.
116. “நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள்கொண்டு வந்தனர்.
நாட்டில் உள்ள பெரிய மந்திரவாதிகளை மூஸா நபிக்கு எதிராக ஃபிர்அவ்ன் கொண்டு வந்தான். அவர்கள் போட்டியின் போது செய்து காட்டியது பெரிய சூனியம் என்று இவ்வசனம் சொல்கிறது. பெரிய சூனியக்காரர்கள் பெரிய சூனியத்தைச் செய்தனர் என்று சொல்லும் இவ்வசனம் மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள் என்று சொல்கிறது.
பெரிய சூனியத்தின் மூலம் எந்த மாற்றத்தையும் அவர்கள் செய்யவில்லை. மாறாக கண்கட்டு வித்தைதான் செய்தார்கள். அதாவது மக்களின் கவனத்தைத் திருப்பி உண்மையாகவே அவர்கள் மந்திரம் செய்ததாக்க் காட்டுவதுதான் கண்கட்டு வித்தை.
பெரிய சூனியக்காரர்கள் செய்யும் பெரிய சூனியமே கண்களை ஏமாற்றுவது தான் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் சொல்லிக்காட்டும் போது அதற்கு மாற்றமாக சூனியத்தின் மூலம் கணவன் மனைவியைப் பிரிக்கலாம் என்று இம்மொழி பெயர்ப்பு அமைந்துள்ளதால் இம்மொழி பெயர்ப்பு சரியானது அல்ல.
மேலும் 7:118-120 வசனங்களுக்கும் இம்மொழி பெயர்ப்பு எதிராக அமைந்துள்ளது.
118. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.
119. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர்.
120. சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்
சூனியக்காரர்கள் நிஜமாகவே மந்திரம் செய்து இருந்தால் மூஸா நபியின் செயல் நம்மை விட பெரிய சூனியம் என்று தான் முடிவுக்கு வந்து இருப்பார்கள். மூஸா நபியை பெரிய சூனியக்காரன் என்ற அளவுக்குத் தான் ஒப்புக் கொண்டு இருப்பார்கள். ஆனால் நடந்தது என்ன?
இவர்கள் செய்தது பொய்த்தோற்றம். சூனியத்தால் இதைத் தான் செய்ய முடியும். ஆனால் மூஸா நபி செய்தது மெய்யானது. அதில் தந்திரமோ, ஏமாற்றுதலோ இருக்கவில்லை என்பதால் தான் தங்களின் தோல்வியை சூனியக்காரர்கள் ஒப்புக் கொண்டதுடன் அல்லாஹ்வை நம்பி இஸ்லாத்திலும் சேர்ந்தனர் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
சூனியத்துக்கு உண்மையில் ஆற்றல் இல்லை என்பது சூனியக்காரர்களுக்குத் தான் நன்றாகத் தெரியும். எனவே தான் தாங்கள் செய்த தந்திரம் வேறு, மூஸா நபி செய்த அற்புதம் வேறு என விளங்கி மூஸா நபி மார்க்கத்தில் சேர்ந்தனர்.
உண்மை நிலைத்தது சூனியம் தோற்றது என்றால் அதிலிருந்து சூனியம் என்பது உண்மை அல்ல என்று தெளிவாக தெரிகின்றது.
இதற்கு மாற்றமாக மேற்கண்ட மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது.
மேலும் 20:66 வசனத்துக்கு எதிராகவும் இம்மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது.
“இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.
சூனியக்காரர்கள் சூனியம் செய்த போது என்ன நடந்தது என்பதை அல்லாஹ் தெளிவாகச் சொல்கிறான். சீறியது என்று அல்லாஹ் சொல்லாமல் சீறுவது போல் தோற்றமளித்தது என்று கூறுகிறான்.
கயிறுகள் நிஜமாக பாம்பாக மாறி இருந்தால் பாம்பாக மாறியது என்று அல்லாஹ் சொல்லி இருப்பான். மூஸா நபி செய்த அற்புதத்தைச் சொல்லும் போது பாம்பாக மாறியது என்று சொல்லும் இறைவன் சூனியக்காரர்கள் செய்ததைச் சொல்லும் போது பாம்பு போல் தோற்றமளித்தது என்று சொல்கிறான்.
சூனியம் என்றால் தந்திர வித்தை தானே தவிர மந்திர சக்தியால் கணவன் மனைவியைப் பிரிப்பது அல்ல என்று இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
மேலும் 20:69 வசனத்துக்கும் இம்மொழி பெயர்ப்பு எதிராக அமைந்துள்ளது.
“உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும்.அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.)
அல்லாஹ் யாரை மிகப்பெரும் சூனியக்காரர்கள் என்று சொன்னானோ அவர்கள் செய்ததைப் பற்றி கூறும் போது சூனியக்காரர்கள் செய்தது சூழ்ச்சி என்கிறான்.
சூழ்ச்சி என்றால் தந்திரம் செய்து ஏமாற்றுவது என்பதை அனைவரும் அறிவோம். மேலும் சூனியக்காரர்கள் மெய்யாக ஒன்றும் செய்வதில்லை என்பதால் அவர்கள் வெற்றி மாட்டார்கள் என்றும் சொல்கிறான்.
ஆனால் இந்த மொழிபெயர்ப்பு சூனியத்தால் நிஜமாக கணவன் மனைவியப் பிரிக்க முடியும் என்று சொல்கிறது.
மேலும் சூனியக்காரன் வெற்றி பெறமாட்டான் என்று இவ்வசனம் சொல்வதற்கு மாற்றமாக சூனியக்காரன் கணவன் மனைவியைப் பிரிப்பதில் வெற்றி பெறுவான் என்று இம்மொழிபெயர்ப்பு சொல்கிறது. எனவே இம்மொழி பெயர்ப்பு முற்றிலும் தவறு என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.
மேலும் 52:13,14,15 வசனங்களில் சூனியத்தின் அர்த்தத்தை அல்லாஹ் சொல்லித் தருகிறான். அந்த வசனங்களுடன் இம்மொழி பெயர்ப்பு நேரடியாகவெ மோதுகிறது.
13. அந்நாளில் அவர்கள் நரகில் ஒரேயடியாகத் தள்ளப்படுவார்கள்.
14. நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே.
15. இது சூனியமா? அல்லது (இந்த நரகத்தை) நீங்கள் பார்க்க மாட்டீர்களா?
நரகத்தில் காஃபிர்கள் தள்ளப்படும் போது இது சூனியமா? நீங்கள் பார்க்க மாட்டீர்களா என்று அல்லாஹ் கேட்பான் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
உங்கள் கண்முன்னே காட்சியளிக்கும் நரகம் பொய்த்தோற்றமா? முழு நிஜமா? என்று கேட்பதற்குப் பதிலாகத் தான் இது சூனியமா என்று அல்லாஹ் கேட்கிறான். நன்றாக உற்றுப்பார் இது நிஜம் எனத் தெரியும் என்று கேட்பதற்குப் பதிலாகத் தான் இதை நீங்கள் பார்க்க மாட்டீர்களா என்று கேட்கிறான்.
நிஜம் என்பதற்கு எதிர்ப்பதமாக சூனியம் என்ற சொல்லை அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான். இந்த மொழி பெயர்ப்புகளோ சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று கூறி சூனியத்தை நிஜம் என்று சொல்கிறது.
இந்த மொழி பெயர்ப்புகள் தவறானவை என்பதற்கு அறிவுப்பூர்வமான காரனங்களும் உள்ளன.
சூனியத்தைக் கற்றுக் கொண்டால் காபிராகி விடுவீர்கள் என்று இருவரும் எச்சரிக்கை செய்த பிறகும் காபிராக ஆனாலும் பரவாயில்லை எங்களுக்குக் கற்றுத் தாருங்கள் எனக் கூறி கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டார்கள் என்று இம்மொழி பெயர்ப்புகள் கூறுகின்றன.
சூனியத்தைக் கற்றால் காபிராகி விடுவீர்கள் என்ற எச்சரிக்கை அவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால் அவர்கள் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் மிகச் சிறிய சூனியத்தை ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்?
சிறியதைக் கற்றாலும் காபிராகத் தான் ஆவார்கள். பெரியதைக் கற்றாலும் காபிராகத் தான் ஆவார்கள் எனும் போது ஏன் சிறியதைக் கற்க வேண்டும்?
சூனியம் என்பது சூனியக் கட்சியினரின் நம்பிக்கைப்படி ஏராளமான வித்தைகளைச் செய்யத்தக்க கலையாகும். kaaகாஃபிராக ஆனால் ஆகிவிட்டுப் போகிறோம் என்று துணிந்தவர்கள் அனைத்து வகை சூனியத்தையும் அல்லவா கற்று இருப்பார்கள்?
ஒன்றே ஒன்றை, அதுவும் மிகவும் சிறியதைத் தேர்வு செய்து கற்பார்களா? ஒரு சூனியம் கற்றாலும் காஃபிர் ஆவது உறுதி. ஆயிரம் சூனியம் கற்றாலும் காஃபிர் ஆவது உறுதி. இப்படி இருக்க ஏன் அனைத்தையும் அவர்கள் கற்காமல் விட்டார்கள்?
பொருளீட்டுவதற்காகவும் உலக ஆதாயங்களை அடைவதற்காகவும் தான் சூனியத்தைக் கற்க முன்வந்திருப்பார்கள். ஒரே ஒரு சூனியத்தைக் கற்றால் குறைவாகவே பொருளீட்ட முடியும். அதிகமான சூனிய வகைகளைக் கற்றுக் கொண்டால் அதிகமாகப் பொருளீட்ட முடியும்.
உலக ஆதாயத்துக்காக காஃபிராவதைப் பற்றி கவலைப்படாதவர்கள் அனைத்து வகை சூனியத்தையும் தானே கற்று இருப்பார்கள் என்று சிந்திக்கும் போது இம்மொழி பெயர்ப்பில் கருத்துப் பிழை இருப்பது தெளிவாகிறது.
எனவே திருக்குர்ஆனின் இதர வசனங்களுக்கு முரணில்லாத வகையிலும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணில்லாத வகையிலும் பொருள் செய்தாக வேண்டும்.
இதை முன்னரும் நாம் விளக்கியுள்ளோம்.
அதே அடிப்படையில் தான் 2:102 வசனத்தையும் நாம் விளங்க வேண்டும்.
எனவே தான் பின்வருமாறு இவ்வசனத்தை நாம் மொழி பெயர்த்துள்ளோம்.
ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். “நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!” என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். “இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை” என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?
இவ்வாறு மொழி பெயர்த்து விட்டு நமது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் பின்வருமாறு விளக்கமும் கொடுத்துள்ளோம்.
No comments:
Post a Comment