*குழந்தை வளர்ப்பு*
*மூன்று வயது குழந்தைக்காக அகீகா கொடுக்கலாமா?*
*பதில்*
*அகீகா என்பது குழந்தை பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன.*
*ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும்.*
*அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி)*
*நூல் : அபூதாவூத் (2455)*
*ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.*
*السنن الكبرى للبيهقي – كتاب الضحايا*
*وأخبرنا أبو الفتح هلال بن محمد بن جعفر الحفار ببغداد , أنبأ الحسين بن يحيى بن عياش القطان ثنا الحسن بن محمد بن الصباح ، ثنا عبد الوهاب بن عطاء ، عن إسماعيل بن مسلم ، عن قتادة ، عن عبد الله بن بريدة ، عن أبيه ، عن النبي صلى الله عليه وسلم قال : ” العقيقة تذبح لسبع , ولأربع عشرة , ولإحدى وعشرين ”*
*அகீகா(வாக கொடுக்கப்படும் பிராணி) ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர் : புரைதா (ரலி)*
*நூல் : பைஹகீ (பாகம் 9 பக்கம் 303)*
*இந்த ஹதீஸ் அல்முஃஜமுல் அவ்ஸத் மற்றும் அல்முஃஜமுஸ்ஸஹீர் போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்ற பலகீனமானவர் இடம் பெறுகிறார்.*
*இவர் பலவீனமானவர் என்று நஸாயீ, அபூசுர்ஆ, அபூஹாதிம் அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அலீ பின் மதீனி, தஹபீ, இப்னு ஹஜர் மற்றும் பல அறிஞர்களும் கூறியுள்ளனர்.*
*பெற்றோர்கள் தனக்கு அகீகா கொடுக்காததால் பெரியவராக ஆன பின்பு தனக்குத் தானே அகீகா கொடுக்கலாமா? என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் எதுவும் இல்லை.*
*அகீகா என்ற வணக்கம் குழந்தை பிறந்து ஏழாவது நாள் செய்யப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அன்று தான் இவ்வணக்கத்தைச் செய்ய வேண்டும். இந்த நாளைக் கடந்த பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக ஆகும். அகீகா கொடுப்பதற்குரிய நன்மை கிடைக்காது.*
*அகீகா கடமையான வணக்கமல்ல. பின்பு இதை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் தனக்காகவோ அல்லது தமது தோழர்களுக்காகவோ அகீகா கொடுக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இந்த புதிய வழிமுறையை நாம் ஏற்படுத்தக் கூடாது.*
*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தமக்காக அகீகா கொடுத்தார்கள் என்று சில ஹதீஸ்கள் வருகின்றன. இவையனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐
No comments:
Post a Comment