பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, November 28, 2019

தவறான வாதங்கள்:

இறைவனுடைய கட்டளைக்கு மாறுசெய்ய வேண்டுமென்றோ, இறைத்தூதரின் வழிகாட்டுதலைப் புறக்கணிக்க வேண்டுமென்றோ எந்த முஸ்லிமும் எண்ண மாட்டான்.

இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்பவர்கள் தங்கள் தரப்பில் சில நியாயங்கள் வைத்திருக்கிறார்கள். அதனடிப்படையிலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கின்றனர். சிந்தித்துப் பார்க்கும் போது அவர்களது வாதங்கள் யாவுமே அர்த்தமற்றதாக அமைந்துள்ளதை உணரலாம்.

பரிந்துரையை வேண்டுவது குற்றமாகுமா?

‘பெரியார்களைப் பிரார்த்திக்கும் நாங்கள் அவர்களுக்கு இறைத்தன்மை உண்டு என்று எண்ணவில்லை; மாறாக, அவர்களும் இறைவனின் அடிமைகள்’ என்றே கூறுகிறோம். ‘ஆயினும் அவர்கள் இறைவனது நெருக்கத்தைப் பெற்றுள்ளதால் அவர்கள் இறைவனிடம் பெற்றுத் தருவார்கள்’ என்றே நாங்கள் நம்புகிறோம். ‘சுயமாக எதுவும் அவர்கள் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை; இவ்வாறு நம்புவது எப்படித் தவறாகும்?’

இது இவர்களின் தரப்பில் கூறப்படும் நியாயங்களில் ஒன்றாகும்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் நியாயம் இருப்பது போல் தோன்றினாலும் இதில் எந்த நியாயமும் இல்லை.

இறைவனின் ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்பவில்லை என்பது உண்மையே. ஆனால் மற்றொரு வகையில் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தப் பெரியவர்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இதே போன்ற ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இதன் காரணமாகவே உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரும் அந்தப் பெரியார்களைப் பிரார்த்திக்கின்றனர். தங்களது பிரார்த்தனையை அல்லாஹ் செவிமடுப்பது போலவே பெரியார்களும் செவிமடுக்கின்றனர் என்று நம்பி இந்த விசயத்தில் இறைவனுக்குச் சமமாகப் பெரியார்களை நம்புகின்றனர்.

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணை வைத்தலாகும். இதைப் புரிந்து கொள்ளாததாலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கின்றனர்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 39:3)

மக்கத்துக் காஃபிர்கள் பெரியார்கள் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கையை இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்பதற்காக மட்டுமே பெரியார்களை அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் அதை அல்லாஹ் அங்கீகரிக்காது அவர்களைக் காஃபிர்கள் எனப் பிரகடனம் செய்து விட்டான்.

இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்ற எண்ணத்தில் கூட இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கலாகாது என்பதற்கு இது போதிய சான்றாகும்.

ஆ. உதாரணங்கள் ஆதாரங்களாகுமா?

திருக்குர்ஆனையும், நபிவழியையும் அலட்சியம் செய்துவிட்டு உதாரணங்களைக் காட்டுகின்றனர்.

அதாவது உயர் பதவியிலுள்ள ஒருவரை நாம் நேரடியாக அணுகவோ, சந்திக்கவோ இயலாது. நம்மைப் பற்றி அவரிடம் பரிந்து பேச இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். அவர் மூலமாக நமது காரியத்தைச் சாதித்துக் கொள்கிறோம்.

இவர்களை விட மிக மிக உயர்வான நிலையிலுள்ள அல்லாஹ்வை நாம் எப்படி நேரடியாக அணுக முடியும்? இதற்காகவே பெரியார்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்கின்றனர்.

ஷைத்தான் இவர்களது தீய செயல்களை இவ்வாறே அழகானதாகக் காட்டுகிறான். உண்மையில் இதுவும் முட்டாள்தனமான வாதமேயாகும்.

உயர் பதவிகளில் உள்ளவர்களை நாம் நேரடியாக அணுக முடியாது என்பது உண்மை தான். ஏன் அணுக முடியவில்லை என்றால் அந்த அதிகாரிக்கு நம்மைப் பற்றித் தெரியாது. அந்த உயரதிகாரிக்கு எப்படி நம்மைப் பற்றித் தெரியாதோ அதே போல் இறைவனுக்கும் நம்மைப் பற்றி எதுவும் தெரியாதா? இந்தப் பெரியார்கள் நம்மைப் பற்றிச் சொன்னால் தான் இறைவனுக்கு நம்மைப் பற்றித் தெரியுமா? என்று இவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.

சாதாரண உயர் அதிகாரியின் நிலை எதுவோ அது தான் இறைவனது நிலையும் என்றல்லவா இவர்கள் எண்ணுகின்றனர்!

யாவற்றையும் அறிந்து வைத்திருக்கின்ற, முக்காலமும் உணர்ந்து வைத்திருக்கின்ற, மனதில் மறைத்து வைத்திருக்கின்றவற்றையும் துல்லியமாக அறிகின்ற அந்த வல்லவனை அவனது அடிமைகளில் ஒருவரான அதிகாரிக்குச் சமமாக எண்ணுவதை விடவும் மோசமான உதாரணம் என்ன இருக்க இயலும்?

நம் வழக்குகளில் நாமே வாதாடுவதில்லை. ஒரு வக்கீலை நியமித்துக் கொள்கிறோம். அவ்வாறிருக்க இறைவனிடம் வாதாடும் வக்கீலாக வலிமார்களைக் கருதுவதில் என்ன தவறு? எனவும் இவர்கள் கேட்கின்றனர்.

நீதிபதியிடம் வாதாட வக்கீல் அவசியம் தான். வக்கீல், தன் வாதத் திறமையால்  குற்றவாளியையும் நிரபராதியாக்கி விடுவார்; நிரபராதியையும் குற்றவாளியாக்கி விடுவார். அதை நீதிபதியும் நம்பி தீர்ப்பு அளித்து விடுவார்.

இறைவனின் நிலைமை நீதிபதியின் இந்த நிலைமை போன்றது தானா? திறமையான வாதத்தினடிப்படையில் குற்றவாளியை நிரபராதியென தீர்ப்பளிக்கும் நீதிபதியைப் போல் இறைவனும் தவறான தீர்ப்பை வழங்கக் கூடியவன் தானா?

யார் உண்மையில் குற்றாவளி? யார் நிரபராதி? என்பது நீதிபதிக்குத் தெரியாதது போலவே இறைவனுக்கும் தெரியாது என்கிறார்களா?

இறைவனது நல்லடியார்களின் வேலையும் வக்கீலுடைய வேலை போன்றது தானா? குற்றவாளிகளை நல்லவர்கள் என்று இறைவனிடம் அவர்கள் வாதிடப் போகிறார்களா? இல்லை என்றால் வக்கீல் எதற்காக?

அல்லாஹ்வைப் பற்றிக் கூறுவதென்றால் வக்கீல், நீதிபதி, அதிகாரி என்றெல்லாம் உதாரணம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லாததால் எதையும் உதாரணம் காட்டிப் பேசலாகாது என அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 16:74)

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்

(அல்குர்ஆன் 42:11)

அவனுக்கு நிகராக யாருமில்லை.

(அல்குர்ஆன் 112:4)

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான்.

(அல்குர்ஆன் 36:78)

அல்லாஹ்வுக்கு எதையும் உதாரணமாகக் கூறலாகாது என்பதை இவ்வசனங்கள் அறிவிக்கின்றன.

இ. பாவிகள் கடவுளை எப்படி நெருங்க முடியும்?

‘நாம் பாவங்கள் செய்தவர்கள். இறைவனின் பல கட்டளைகளை மீறியவர்கள். இவ்வாறிருக்க, எப்படி இறைவனிடம் கேட்க முடியும்? எங்கள் மேல் அல்லாஹ் கோபமாக இருக்கும் போது அவனது கோபத்தை அமைதிப்படுத்தத் தான் பெரியார்களைப் பிடித்துக் கொள்கிறோம்’ என்பது இவர்களின் மற்றொரு நியாயம்.

அதாவது இறைவனிடம் கேட்பதற்குரிய தகுதி தங்களுக்கு இல்லை என்று கூறிக் கொண்டு இவர்கள் திசை மாறிச் செல்கிறார்கள்.

அல்லாஹ்வின் கட்டளையை நாம் மீறியதால் நாம் அல்லாஹ்விடம் கேட்க முடியாது. அதனால் தான் அவ்லியாக்களிடம் கேட்கிறோம் என்போர் அளவற்ற அருளாளன் என்ற அல்லாஹ்வின் பண்பையே மறுக்கிறார்கள்.

‘அல்லாஹ் கோபக்காரன்; அவ்லியாக்கள் அளவற்ற அருளாளர்கள்’ என நம்பக் கூடியவர்கள் தான் இவ்வாறு வாதிட முடியும். அல்லாஹ்வை விட அவ்லியாக்கள் அதிகமாக அருள் புரிவார்கள் என்பது இணை வைத்தலை விட கொடிய குற்றமாகும். இது அல்லாஹ்வை விட அவ்லியாக்களை உயர்த்தும் கொடுஞ்செயலாகும்.

இவர்களின் இந்த அறியாமையை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன் 39:53)

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்’

(அல்குர்ஆன் 12:87)

மனிதன் எவ்வளவு பாவங்கள் செய்தாலும் தவறை உணர்ந்து தன்னிடம் கேட்டால் தனது அருள் உண்டு என அல்லாஹ் உத்திரவாதம் தருகிறான். பாவிகள் தன்னிடம் வரலாகாது என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக, பாவிகளையே அழைத்து என் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் என்கிறான்.

ஈ. அல்லாஹ்வின் பாதையில்கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர்

வரட்டு வாதங்களைக் கூறி சமாதி வழிபாட்டை நியாயப்படுத்துவது போலவே குர்ஆனிலிருந்தும் கூட தவறான வியாக்கியானம் கொடுத்து இவர்கள் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 2:154)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.

(அல்குர்ஆன் 3:169)

மரணித்த பின்பும் நல்லடியார்கள் வாழ்கிறார்கள் என்று இரண்டு வசனங்களும் கூறுவதால் அவர்களை வழிபடலாம் என்பது இவர்களின் வாதம்.

பல நியாயமான காரணங்களால் இவர்களின் வாதம் முற்றிலும் தவறாகும்.

முதலாவது வசனத்தில் உயிருடன் உள்ளனர், எனினும் (அதை) நீங்கள் உணர மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் தெரிந்து வைத்துள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இதை நீங்கள் உணர முடியாது என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். நாம் உணர்ந்து கொள்ள இயலாத வேறொரு விதமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இரண்டாவது வசனத்தில் தங்கள் இறைவனிடம் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்கிறான். நம்மைப் பொருத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனிடம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் பேசுவதைக் கேட்கவோ, பதிலளிக்கவோ இயலாத நமக்குத் தெரியாத இன்னொரு வாழ்க்கையை அவர்கள் வாழ்வதாகத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றனவே அன்றி இவர்கள் நினைக்கின்ற அர்த்தத்தில் வாழ்கிறார்கள் எனக் கூறவில்லை.

அடுத்து இந்த வசனம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) சொன்ன விளக்கத்தையும் இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.

இந்த வசனம் பற்றி நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள்ளிருந்து சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரிகின்றன’ என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: முஸ்லிம் 3500

உயிருடன் உள்ளனர் என்பதன் பொருள் சொர்க்கத்து வாழ்வு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கிய பின் அதற்கு மாற்றமாக இவர்கள் தரும் விளக்கம் தள்ளப்பட வேண்டியதாகும்.

இந்த நிலை கூட எல்லா நல்லடியார்களுக்கும் பொதுவானதன்று. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கே உரியதாகும். மற்ற நல்லடியார்களுக்கு இந்த நிலைமை இல்லை.

மற்ற நல்லடியார்களின் நிலை என்ன என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.

ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும். அவர் சரியாக பதில் கூறுவர். அதன் பின்னர் ‘புது மணமகனைப் போல் நீ உறங்கு! அல்லாஹ் உன் உறக்கத்திலிருந்து உன்னை எழுப்பும் வரை உறங்கு!’ எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுருக்கம்)

அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.

உயிருடன் இருந்தாலும் கூட கியாம நாள் வரை எழாமல் உறங்கிக் கொண்டே இருப்பவர்களை அழைப்பது என்ன நியாயம்? இதையெல்லாம் கூட விட்டு விடுவோம். இவர்கள் நினைக்கின்ற விதமாக உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.

No comments:

Post a Comment