பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, January 30, 2018

கிரகணத் தொழுகை

கிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு!

*கிரகணம் தென்பட்டால் மட்டுமே தொழுகை*

இன்ஷா அல்லாஹ்...
நாளை 31-01-2018  புதன்கிழமை அன்று  சூப்பர் ப்ளு  எனும் சந்திரகிரணம் ஏற்படும் என்றும், இந்தியாவில் பல பகுதிகளில் சந்திரகிரணம் தெரியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாலை 5.18 மணிக்கு சந்திர கிரகணம்  தொடங்கும்

மாலை 6.21மணி முதல் 
இரவு 7.37 மணி வரை
முழு சந்திர கிரகணம் இருக்கும். 

இரவு 7.37மணி முதல் கிரகணம் விலக ஆரம்பித்து இரவு 8.41மணிக்கு முழுமையாக விலகி விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரகணம்  கண்ணுக்கு தென்பட்டால் நபி (ஸல்) அவர்கள் சிறப்புத் தொழுகை நடத்த அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதன் அடிப்படையில் எங்கு கிரகணம் ஏற்பட்டது தெளிவாக தெரிகிறதோ அங்கு கிரகணத்தை காண்பவர்கள் கிரகண தொழுகை தொழுவது நபிவழியாகும்.

இந்த அடிப்படையில் கிரகணம் தென்படும்பட்சத்தில்  நமது மர்கஸ்களில் சிறப்பு தொழுகையை நடத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்
எம் எஸ். சையது இப்ராஹீம்

*கிரகணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்)*

எந்த மனிதனின் இறப்புக்காகவும் சூரியகிரகணமும் சந்திரகிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எனவே, அவற்றை நீங்கள் கண்டால் எழுந்து,தொழுங்கள்.
(புகாரி 1041, முஸ்லிம் 1670)

கிரகணத்தைப் பார்த்தால்தான் தொழ வேண்டும் என்று நபிகளார் தெளிவாக கூறியுள்ளதால் கிரகணம் தெளிவாக தெரியாத பகுதியில் தொழுகை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கிரகணம் தெளிவாக தெரியும் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியின்படி தொழுகையை கடைபிடிக்க வேண்டும்.

நபிமொழிகளில் கிரகணம் தொடர்பாக வந்துள்ள வழிகாட்டுதல்களை காண்போம்.

கிரகணமும் நபிகளார் காட்டிய வழிமுறைகளும்!

சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்)  காட்டித் தந்துள்ளார்கள்:

கிரகணத் தொழுகை தொழுகும் முறை:

1.கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகைக்கு வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.

2.பள்ளியில் தொழ வேண்டும்.

3.இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.

4.இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்.

5.ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும்.

6.நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்.

7.கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும்.

8.மேலும் திக்ர் செய்தல், பாவமன்னிப்புத் தேடல், தர்மம் செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.

இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:

'நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1046, முஸ்லிம் 1500.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது 'அஸ்ஸலாத்து ஜாமிஆ' என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்கள்: புகாரி 1051, முஸ்லிம் 1515.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள்...
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1046, முஸ்லிம் 1500.

நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1065, முஸ்லிம் 1502.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள்.

பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் - முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம் - ஓதினார்கள்.

பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள்.

பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள்.

இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்.

(தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழந்தார்கள்.

பின்னர் 'இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ, வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1046, முஸ்லிம் 1500.

'நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ' என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் கிரகணம் விலகியது. அன்று செய்த ருகூவுவைப் போல் நீண்ட ருகூவை நான் செய்ததில்லை. அன்று செய்த நீண்ட ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை'என்று ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1515.

'கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; அவனைப் பெருமைப்படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1044,
முஸ்லிம் 1499.

சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவு செய்வது ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அது வரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள்.

(பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவரது மரணத்திற்காகவோ, வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தனது அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும், பிரார்த்திக்கவும்,பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:
அபூ மூஸா (ரலி)
நூல்கள்: புகாரி 1059, முஸ்லிம் 1518.

Wednesday, January 17, 2018

தலாக்_மற்றும்_குலா_வேறுபாடு

#கேள்வி:-

#குலா_என்றால்_என்ன? #தலாக்_மற்றும்_குலா_வேறுபாடு #என்ன?*

#பதில் :-

மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும்.

கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும்.

விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

صحيح البخاري

5273 – حَدَّثَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «لاَ يُتَابَعُ فِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ»

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அவர், ஆம் (தந்து விடுகிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 5273

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை மேற்கண்ட செய்தியிலிருந்து அறியலாம்.

ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர் அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறு கணவனுக்கு கட்டளையிட வேண்டும். திருமணத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்துவிடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவனிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவாகரத்துப் பெற்றதற்குப் பின்னால் பெண்கள் அதிக சிரமத்திற்கு ஆளாக நேர்வதால் இத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. எனவே சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

பிடிக்காத கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பெண்னைக் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட பரீரா என்ற பெண்ணிற்கு பிரிந்த தன் கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பரிந்துரை செய்தார்களே தவிர நிர்பந்திக்கவில்லை.

صحيح البخاري

5283 – حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ زَوْجَ بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَهُ مُغِيثٌ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خَلْفَهَا يَبْكِي وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعبَّاسٍ: «يَا عَبَّاسُ، أَلاَ تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا» فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ رَاجَعْتِهِ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ تَأْمُرُنِي؟ قَالَ: «إِنَّمَا أَنَا أَشْفَعُ» قَالَتْ: لاَ حَاجَةَ لِي فِيهِ

பரீராவின் கணவர் முகீஸ் அடிமையாக இருந்தார். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஃகீஸ், பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா? என்று பரீராவிடம் கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா, (அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 5283

குலா சட்டத்தின் சுருக்கம்

ஒரு பெண்ணிற்குத் தன் கணவனைப் பிடிக்கவில்லையானால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும்.

அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராக எதை வாங்கினாளோ அதைக் கணவனிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும்.

அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளை விட்டுப் பிரிந்துவிடுமாறு அந்தக் கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படாவிட்டாலும் கூட தலைவர் அந்தத் திருமண உறவை இரத்துச் செய்ய வேண்டும்.

கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டியதில்லை.

கணவன் தலாக் கூறும் போது மூன்று மாதவிடாய் காலத்திற்குள் அவளைத் திரும்பவும் அழைத்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு இருப்பது போல் மனைவி குலா செய்து பிரியும் போது அழைத்துக் கொள்ள முடியாது.

தலாக் விடப்படும் போது மூன்று மாதவிடாய்க் காலம் வரை அவள் மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும். #ஆனால்_குலா #அடிப்படையில்_பிரியும்_போது_ஒரே_ஒரு_
#மாதவிடாய்க்_காலம்_வரை
#அவள்_மறுமணம்_செய்யக்_கூடாது.

அதன் பிறகு தான் நாடுபவரை அவள் திருமணம் செய்து கொள்ளலாம். தான் குலா செய்தது தவறு என்று தெரிந்து குலா செய்த கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால் அந்தக் கணவனும் சம்மதித்தால் இருவரும் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.

سنن النسائي

3498 – أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا عَمِّي، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ ابْنِ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنِي عُبَادَةُ بْنُ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ رُبَيِّعَ بِنْتِ مُعَوِّذٍ، قَالَ: قُلْتُ لَهَا: حَدِّثِينِي حَدِيثَكِ، قَالَتْ: اخْتَلَعْتُ مِنْ زَوْجِي ثُمَّ جِئْتُ عُثْمَانَ، فَسَأَلْتُهُ مَاذَا عَلَيَّ مِنَ الْعِدَّةِ؟ فَقَالَ: «لَا عِدَّةَ عَلَيْكِ إِلَّا أَنْ تَكُونِي حَدِيثَةَ عَهْدٍ بِهِ، فَتَمْكُثِي حَتَّى تَحِيضِي حَيْضَةً». قَالَ: «وَأَنَا مُتَّبِعٌ فِي ذَلِكَ قَضَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرْيَمَ الْمَغَالِيَّةِ، كَانَتْ تَحْتَ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ فَاخْتَلَعَتْ مِنْهُ»

நான் என் கணவரிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்தேன். எவ்வளவு நாள் நான் இத்தா இருக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் கேட்டேன். அதற்கு அவர்கள் நீ ஒரு மாதவிடாய்க் காலத்தை அடையும் வரை பொறுத்திரு. இவ்விஷயத்தில் மகாலிய்யா குலத்தைச் சார்ந்த மர்யம் என்வருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்பையே கடைபிடிக்கிறேன். அப்பெண் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார். பின்பு அவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றுக் கொண்டார்  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ருபைஃ பின்த் முஅவ்வித் (ரலி)

நூல் : நஸாயி

Tuesday, January 16, 2018

ஹஜ்_மானியம்_என்றால்_என்ன

#போலி_ஹஜ்_மானியத்தை_ஒழித்துக்_கட்டினால் #அது_முஸ்லிம்களுக்கு_நன்மைதான்!

#ஹஜ்_மானியம்_என்றால்_என்ன?

ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்த முடிவு செய்திருப்பது சரியா.? இதனால் ஹாஜிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
-அபூ அனஸ், பார்வதிபுரம்

முஸ்லிம்கள் இந்த நாட்டில் அதிக சலுகைகளையும், உரிமைகளையும் பெற்று வருகிறார்கள்; இந்துக்களைவிட அவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப் படுகின்றன என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் காவிகள் அதற்கு முக்கிய ஆதாரமாக எடுத்து வைப்பது ஹஜ் மாணியம் என்பதைத்தான்.

ஆண்டுதோறும் ஹஜ் பயணிகளுக்காக மக்கள் வரிப்பணத்தில் இருந்து பல கோடி ரூபாய்களை இந்திய அரசு செலவிடுகிறது என்று நம்பும் இந்துக்கள், முஸ்லிம்கள் மீது அதிக வெறுப்பு கொள்கின்றனர்.

மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரின் புனிதப் பயணத்துக்காக மட்டும் நாட்டின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவிடுவதாகக் கருதும் பெரும்பான்மை மக்கள் வெறுப்படைவது இயல்பானதுதான்.

ஆனால் இதன் உண்மை நிலை வேறாகும். ஹஜ் பயணம் செல்வோருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட மானியமாக வழங்குவதில்லை. மாறாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் பல்லாயிரம் ரூபாய்களைச் சுரண்டுகிறது என்பதே உண்மையாகும்.

இதுபற்றி விபரமாக நாம் அறிந்து கொள்வது மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்கள் கவனத்துக்கும் இதைக் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகும்.

சவூதி அரசாங்கம் இந்திய முஸ்லிம்களில் எத்தனை பேருக்கு விசா வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதோ, அதில் எழுபது சதவிகிதம் பேரை ஹஜ் கமிட்டி மூலம் மத்திய அரசு அனுப்பி வைக்கிறது.

மீதி முப்பது சதவிகிதம் பயணிகள் அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

உதாரணமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செய்ய சவூதி அரசால் அனுமதிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை 1,36,000 ஆகும். (ஒரு லட்சத்தி முப்பத்து ஆறாயிரம்)

இதில் ஒரு லட்சம் பயணிகள் ஹஜ் கமிட்டி மூலம் அனுப்பப்படுவார்கள்.

மீதி 36 ஆயிரம் பயணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படுகிறார்கள். இதற்கும், அரசாங்கத்துக்கும் சம்மந்தம் இல்லை. மானியம் என்ற பேச்சு இதில் எழவில்லை.

அரசின் சார்பில் ஹஜ் கமிட்டி மூலம் பயணம் செய்வோருக்குத்தான் மானியம் வழங்குவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இது குறித்துத் தான் நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் செய்வோர் அதற்கான கட்டணமாக 1.80,000 (ஒரு லட்சத்து என்பதாயிரம்) ரூபாய்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இந்தக் கட்டணம் எதற்காக பெறப்படுகிறது?

சவூதியில் இறங்கியது முதல் திரும்பும்வரை ஏற்படும் உணவு உள்ளிட்ட ஹாஜிகளின் செலவுகளுக்காக 34 ஆயிரத்தை ஜித்தாவில் இறங்கிய உடன் ஹாஜிகளின் கையில் தருவார்கள். இதைக் கழித்தால் ஹாஜிகள் செலுத்தும் தொகை 1,46,000 (ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம்) ரூபாய்கள்.

விமானத்திற்கான அதிகபட்சக் கட்டணம் : 25,000
மக்காவில் தங்கும் வாடகை : 50,000
மதீனாவில் தங்கும் கட்டணம் : 20,000
மக்காவில் ஹஜ் வழிகாட்டி கட்டணம், வாகனங்களில் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்லுதல் கட்டணம்  வகைக்காக 25.000

ஆக ஹஜ் பயணிகளுக்கு ஹஜ் கமிட்டி மூலம் செலவிடும் தொகை 1,20,000 ரூபாய்கள்தான் ஆகிறது. அதாவது ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் மத்திய அரசு அடிக்கும் கொள்ளை சுமார் 25 ஆயிரம் ரூபாய்கள். இது தவிர விமானக் கட்டணத்தின் மூலம் கிடைக்கும் லாபம் வேறு உள்ளது.

இதில் அரசாங்கத்தின் மானியத்துக்கு எந்த வேலையும் இல்லை.

ஹஜ் பயணத்துக்கான அனுமதியை வழங்கிவிட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டால் ஒவ்வொரு ஹஜ் பயணிக்கும் 25 முதல் முப்பதாயிரம் ரூபாய்கள் மிச்சமாகும்.

அப்படியானால் மானியம் என்ற பிரச்சனை எப்படி வருகின்றது?

ஹஜ் கமிட்டி மூலம் பயணம் செய்பவர்கள் இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா, சவூதி அரசுக்குச் சொந்தமான சவூதி ஏர்லைன்ஸ் ஆகிய இரு விமானங்களில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். ஏர் இந்தியாவிடம் போதிய விமானம் இல்லாவிட்டால் பிற நாட்டு விமானங்களை அடிமாட்டு கட்டணத்துக்கு ஏர் இந்தியா வாடகைக்கு எடுக்கும். அதை ஏர் இந்தியா பெயரில் இயக்கும். அதில் தான் பயணிக்க வேண்டும்.

ஹஜ் நேரத்தில் விமானக் கட்டணத்தை 25 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்துவார்கள். இந்தக் காலகட்டத்தில் மற்ற விமானங்களில் 20 ஆயிரமே கட்டணமாக இருக்கும். ஆனால் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வானவர்கள் அந்த விமானங்களில் பயணிக்க அனுமதி இல்லை.

அதாவது விமானக் கட்டணம் 25 ஆயிரத்தை ஒரு லட்சமாக உயர்த்துவதால் நம்மிடம் வாங்கிய தொகையில் மீதமிருந்த 25 ஆயிரத்தையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஹஜ் பயணிக்காகவும் ஏர் இந்தியாவுக்கு (அதாவது தனக்குத்தானே) அரசு ஐம்பதாயிரம் ரூபாய்களை மானியம் என்ற பெயரில் வழங்கும். ஹாஜிகளுக்கு வழங்காது.

மானியம் என்பது ஹஜ் பயணிகளுக்கு அல்ல. இந்திய அரசின் விமான நிறுவனத்துக்குத்தான். அதைத்தான் ஹஜ் மானியத்துக்கு இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களையும், முஸ்லிமல்லாத மக்களையும் ஒரே நேரத்தில் மூடர்களாக்கி வருகிறார்கள்.

ஏர் இந்தியாவின் வருமானத்தைப் பெருக்க ஒவ்வொரு ஹாஜியிடம் இருந்தும் கூடுதலாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்களை ஏமாற்றிப் பறித்துக் கொண்டு மானியம் வழங்குவதாகக் கூறுவது பச்சை அயோக்கியத்தனமாகும்.

மேலும் ஹஜ் பயணிகளில் பாதிப் பேர் ஏர் இந்தியா மூலம் பயணம் செய்தால் மீதிப் பேர் சவூதி ஏர் லைன்ஸ் மூலம் பயணிக்கிறார்கள். பாதி மாணியத்தை சவூதி ஏர் லைன்ஸுக்கு வழங்க வேண்டுமல்லவா? அப்படி வழங்குவதில்லை. செய்யாத பயணத்துக்கான பொய்யான அந்த மானியத்தையும் ஏர் இந்தியாவே அதாவது இந்திய அரசே எடுத்துக் கொள்கிறது.

புனிதப் பயணம் மேற்கொள்ளும் மக்களிடம் இப்படி கொள்ளையடிக்கும் நாடுகள் உலகில் எங்குமே இருக்காது. கொள்ளையும் அடித்து விட்டு மானியம் அளிப்பதாகக் கூறும் நாடுகளும் உலகில் இருக்காது.

முஸ்லிம்களில் வசதி படைத்த மக்கள்தான் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். அரசின் மூலம் பயண வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஐந்து லட்சம், ஆறு லட்சம் என செலவிட்டு தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொண்டும் இருக்கிறார்கள்.

அனைத்து மக்களுக்குமான வரிப்பணத்தில் இருந்து இந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை. அது தேவையும் இல்லை என்பதை இதிலிருந்தே அறியலாம். இந்தக் கேடுகெட்ட மானியத்தை முஸ்லிம்கள் கேட்கவும் இல்லை.

எனவே இந்தப் போலி ஹஜ் மானியத்தை ஒழித்துக் கட்டினால் அது முஸ்லிம்களுக்கு நன்மைதான்.

ஏர் இந்தியாவில்தான் பயணிக்க வேண்டும் என்ற கொள்ளை அடிக்கும் கொள்கையைக் கைவிட்டு, ஹாஜிகள் தமக்கு விருப்பமான எந்த விமான சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு மானியத்தை நிறுத்தட்டும். அப்படிச் செய்தால் முஸ்லிம்கள் அதைப் பெரிதும் வரவேற்பார்கள்.

டிரான்சிட் முறையில் பயணித்தால் 15 ஆயிரம் கட்டணத்தில் ஜித்தா போக முடியும். பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்தால் இன்னும் குறைந்த கட்டணத்தில் புனிதப் பயணம் செய்து ஒவ்வொரு ஹாஜியும் முப்பதாயிரத்துக்கு மேல் மிச்சப்படுத்த முடியும்.

போலி ஹஜ் மானியம் ஒழிக்கப்படுவதை நாம் வரவேற்கிறோம். ஹாஜிகளின் பணத்தைக் கொல்லைப் புறமாக அரசு சுரண்டுவதையும் கண்டிக்கிறோம்.

நன்றி : உணர்வு வார இதழ் (குரல் 22 : 09)