பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, November 4, 2019

ஹதீஸ் மறுப்பு - 14

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -14)

நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம் ஆகியவை சுன்னா என்பதை அறிந்தோம். 

நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும், அன்னாரின் மறைவுக்குப் பின்னும் 
இந்த மூன்றிலும் பல சுன்னாக்கள் பெரும்பாண்மை மக்களால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. அதாவது, அடிப்படையான சுன்னாக்கள் பெரும்பாண்மையான மக்களுக்கு தெரிந்திருந்தது. பல சுன்னாக்கள் சிலர் மட்டுமே அறிந்திருந்ததாகவும் இருந்தது. சர்ச்சைகளோ அல்லது பிரச்சினைகளோ எழும்போது மட்டுமே அது தொடர்பான சுன்னாக்கள் பலருக்கும் தெரியவரும். 

நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் எனும் சுன்னா, பிறரிடம் கூறப்படுவது "ஹதீஸ்" எனப்படுகிறது. 

** "நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று ஒருவர் சொன்னால் அது ஹதீஸ்.

** "நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள்" என்று ஒருவர் சொன்னால் அது ஹதீஸ்.

** "நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்/அனுமதித்தார்கள்" என்று ஒருவர் சொன்னால் அது ஹதீஸ்.

நபி(ஸல்) அவர்களின் சுன்னாவை செய்தியாக கடத்துவதுதான் "ஹதீஸ்". 

அதாவது, சுன்னா எனும் வஹியை செய்தியாக கடத்துவதுதான் "ஹதீஸ்". 

இதில்தான் ஒரு தவறான புரிதல் இருக்கிறது. ஹதீஸையும் வஹி என்றே புரிகிறார்கள். இது தவறான புரிதலாகும். 

குர்ஆனும் வஹி, சுன்னாவும் வஹி. இந்த இரண்டு வஹியும் நமக்கு செய்தியாகத்தான் வந்துள்ளது. 

இதில், குர்ஆன் எனும் வஹியைப் பற்றின "செய்தி" அப்படியே கிடைத்திருக்கிறது. அல்லாஹ் இறக்கிய வஹி அப்படியே நம்மிடம் இருக்கிறது. அதில் மனித வார்த்தைகள் ஏதுமில்லை. 

ஆனால், சுன்னா எனும் வஹியைப் பற்றின செய்தி அப்படியே கிடைக்கவில்லை. சுன்னா எனும் வஹி மனித பலவீனங்களுடன்தான் நமக்கு செய்தியாக வந்திருக்கிறது. 

குர்ஆன் எனும் வஹியானது அது இறங்கிய அதே நிலையில் வஹியாகவே நம்மிடம் இருக்கிறது.

சுன்னா எனும் வஹியானது நபி(ஸல்) அவர்களுடன் மட்டும் தொடர்புடையது. அந்த வஹியானது மனிதர்கள் விவரித்த வடிவத்தில்தான் நம்மிடம் செய்தியாக வந்துள்ளது. அந்த செய்திதான் "ஹதீஸ்". 

பொதுவாக, ஒரு செய்தியானது ஒருவரின் மனன சக்தியைப் பொறுத்தே சரியான விதத்தில் பிறரை அடையும். அதைக் கேட்பவரின் மனன சக்தியைப் பொறுத்தே அவருக்குப் பிறகுள்ளவரை அடையும்.

அதேபோல, ஹதீஸ்களும் ஒருவரின் மனன சக்தியைப் பொறுத்தே கடத்தப்பட்டன. 

*சொல் எனும் சுன்னாவின் செய்தி*

நபி(ஸல்) அவர்கள் கூறியதை கேட்ட ஒருவரின் மனன சக்தியைப் பொறுத்து அந்த வஹியானது பிறருக்கு போய்ச் சேரும். 

** மனன சக்தி வலிமையானவர் நபிகளார் கூறியதுபோலவே அப்படியே பிறரிடம் கூறிவிடுவார்.

** மனன சக்தி குறைவானவர் அவருடைய பலவீனத்தின் அடிப்படையில் நபிகளார் கூறியதிலிருந்து சில வார்த்தைகளை  கூடுதல் குறைவாக பிறரிடம் கூறிவிடுவார்.

குர்ஆன் என்ற வஹியை நபி(ஸல்) அவர்களின் வாய்மொழி மூலம் கேட்டு அது அச்சுபிசகாமல் அப்படியே பிறரிடம் சேர்க்கப்பட்டதுபோல், சுன்னா என்ற வஹி பிறரிடம் போய்ச்சேரவில்லை. 

நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுறப்பட்ட ஒரு சுன்னாவானது, செவியுற்றவரின் மனன சக்தியைப் பொறுத்தே பிறரிடம் போய்ச் சேர்ந்தது. 

இதுதான் "சொல்" எனப்படும் சுன்னாவின் செய்தி. அதாவது, "சொல்" எனப்படும் சுன்னாவின் "ஹதீஸ்" (செய்தி)

*செயல் எனும் சுன்னாவின் செய்தி*

நபி(ஸல்) அவர்கள் செய்ததைப் பார்த்து பிறர் அறிவிக்கும் செய்தி இது. 

நபி(ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டு அறிவிப்பதிலேயே மனித பலவீனம் இடம்பெற்றுவிடுகிறது. இந்நிலையில், அன்னார் செய்ததைப் பார்த்துவிட்டு, அதை ஒருவர் தன்னுடைய வார்த்தைகளால் விவரிக்கும்போது அதில் பலவீனம் இடம்பெறக்கூடிய வாய்ப்பை சொல்லத் தேவையே இல்லை. 

ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு விதமான வார்த்தைகளாலேயே விவரிப்பர். 

நபி(ஸல்) அவர்களின் தொழுகையை விவரித்தவர்களின் வார்த்தைகளால் இன்றைக்கு "தொழுகைச் சன்டை" நடப்பதே இதற்கு சாட்சி. 

இதுதான் "செயல்" எனப்படும் சுன்னாவின் செய்தி. அதாவது, "செயல்" எனப்படும் சுன்னாவின் "ஹதீஸ்" (செய்தி)

*அங்கீகாரம் எனும் சுன்னாவின் செய்தி*

நபி(ஸல்) அவர்கள் செய்ததைப் பார்த்து அறிவிப்பதிலியே மனித பலவீனங்கள் இடம்பெற்றுவிடுகிறது என்ற நிலையில், அன்னார் தடுத்தயையும், அனுமதித்ததையும் பற்றி பிறர் விவரிக்கும்போது எழக்கூடிய கருத்துமோதலை சொல்லத்தேவையே இல்லை. 

நபி(ஸல்) அவர்கள் உடும்புக்கறியை தள்ளி வைத்தார்கள் என்பதை வைத்து "உடும்புக்கறி ஹராம்" என்றும், அதை சாப்பிட்ட ஒருவரை தடுக்கவில்லை என்பதால் "உடும்புக் கறி" ஹலால் என்றும் சர்ச்சை நடப்பதே இதற்கு உதாரணம். 

இதுதான் "அங்ககீகாரம்" எனப்படும் சுன்னாவின் செய்தி. அதாவது, "அங்ககீகாரம்" எனப்படும் சுன்னாவின் "ஹதீஸ்" (செய்தி)

சுன்னா எனும் வஹியைப் பற்றின செய்திதான் "ஹதீஸ்". 

ஹதீஸே வஹி அல்ல. 

நபி(ஸல்) அவர்கள் குர்ஆன் மற்றும் சுன்னா என இரண்டு வகையான வஹியுடன் தொடர்பில் இருந்தார்கள். 

** குர்ஆன் என்பது வஹி. 
** சுன்னா என்பதும் வஹி.

குர்ஆன் எனும் வஹியுடன் நபி(ஸல்) அவர்கள் இருந்த அதே தன்மையுடன் Perfect ஆக நம்மிடம் வந்துள்ளது. 

ஆனால், சுன்னா எனும் வஹியுடன் நபி(ஸல்) அவர்கள் இருந்த அதே தன்மையுடன் Perfect ஆக நம்மிடம் வரவில்லை. 

சுன்னாவைப் பற்றின செய்தியை கூறுபவரின் மனனத்தன்மையை பொறுத்தே ஹதீஸ் பரவியது. 

மனன சக்தி உள்ளவரின் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்த முஸ்லிம்கள், 
மனன சக்தி குறைவாக உள்ளவரின் செய்திக்கும், மனன சக்தி இல்லாதவரின் செய்திக்கும் முக்கியத்துவம் தரவில்லை. 

ஹதீஸை அறிவிப்பவரின் மனன சக்தியின் அடிப்படையிலேயே ஒரு ஹதீஸ் பலமானதாகவும் பலவீனமாகவும் பார்க்கப்பட்டது. இது ஆரம்ப நிலை. 

ஷியா, கவாரிஜ், முஃதஸிலா என கொள்கைக் குழப்பம் ஏற்பட்டதற்குப் பிறகு ஹதீஸை அறிவிப்பவரின் கொள்கையும் முக்கியத்துவம் பெற்றது. கொள்கை பிறழாத ஒருவரின் ஹதீஸ் அறிவிப்பைத்தான் ஏற்க வேண்டும் என்ற நிலை உருவானது. 

நபி(ஸல்) அவர்களின் சுன்னாவை நம்பும் உண்மையாளரான ஒருவரின் ஹதீஸ் அறிவிப்பு அவரின் மனன சக்தியைப் பொறுத்து பலமானதாகவும் பலவீனமானதாகவும் பார்க்கப்பட்டது. 

இதற்குப் பிறகே "ஹதீஸை உனக்கு அறிவித்தவர் யார்?" என்று கேட்கும் முறை ஆரம்பமானது. அந்த அறிவிப்பில் சுன்னாவை நம்பும் உண்மையான நபர் மனன சக்தி உள்ளவராக இருந்தால் அந்த ஹதீஸ் ஏற்கப்படும். 

** அறிவிப்பாளர் வரிசை சரியா?
** அறிவிப்பாளர் உண்மையாளரா?
** அறிவிப்பாளர் மனன சக்தி உள்ளவரா? 

என்பதுதான் ஒரு ஹதீஸ் பலமானதா பலவீனமானதா என்பதை தீர்மாணிக்கும் காரணிகளாக மாறியது. 

இவைதான், ஒரு ஹதீஸை ஏற்பதிலும் அதை மறுப்பதிலும் இருந்த ஆரம்ப நிலை. 

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமானது என்னவென்றால்...

நபி(ஸல்) அவர்களின் சுன்னா பற்றின செய்தி சரியாகத்தான் நம்மிடம் வந்திருக்கிறதா என்பதை நம்புவதற்காகத்தான் மேற்கண்ட விதிமுறைகளை வகுத்தார்களே தவிர, அந்த ஹதீஸ் வஹியா? வஹி இல்லையா? என்பதை ஆராய்வதற்காக அல்ல. 

நபி(ஸல்) அவர்களின் சுன்னாவானது குர்ஆனுக்கு கூடுதல் விளக்கமாகவே இருக்குமே தவிர குர்ஆனுக்கு எக்காலத்திலும் முரண்படவே முரண்படாது. 

குர்ஆனும் அல்லாஹ்வின் வஹி. சுன்னாவும் அல்லாஹ்வின் வஹி. 

இந்த இரண்டும் முரண்பட வேண்டிய தேவை ஏதுமில்லை. 

குர்ஆனுக்கு முரணாக சுன்னா இருக்காது என்றால், சுன்னாவைப் பற்றின செய்திகளைக் கூறும் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? 

தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதப்பட்டு பதிலுக்காக காத்திருக்கும் TNTJ வின் கேள்விக்கு முடிவுரையை எழுதிவிடுவோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

Part -15
https://m.facebook.com/story.php?story_fbid=771320576624413&id=100012394330588

No comments:

Post a Comment