சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதிகள்:
மறுமை நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு நரகம் பற்றி அதிகமாக எச்சரிக்கை செய்யப்படுவதைப் போன்று சொர்க்கம் பற்றி அதிகம் நினைவு கூறப்படுவதில்லை. சொர்க்கத்தின் இன்பங்கள் பற்றி பேசப்படும் அளவிற்கு அதில் நுழைவதற்கான தகுதிகள், மட்டும் இதர விஷயங்கள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. எனவே சொர்க்கம் பற்றிய குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறும் முக்கிய தகவல்களை சுருக்கமாக இன்று பார்க்க இருக்கிறோம்!
தகுதி
சொர்க்கத்தில் நுழைய யார் தகுதி பெறுவார்கள் என்பதை குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடுத்துகிறது. ஒவ்வொரு இடங்களிலும் பல்வேறு தகுதிகளை அது குறிப்பிடுகிறது. முதலாவதாக இணை வைப்பு இல்லாத, நல்லறங்களுடன் கூடிய இறைநம்பிக்கை கொண்டவரே சொர்க்கம் செல்ல தகுதியானவர் என்பதைப் பல வசனங்களில் இறைவன் அழுத்தமாகக் கூறியுள்ளான்.
இணைவைப்பு இல்லா இறைநம்பிக்கை
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத ஏகத்துவவாதிகள் மட்டுமே சொர்க்கம் செல்லத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டாரோ அல்லது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றை நம்ப மறுத்து விட்டாரோ அவர் சொர்க்கம் செல்லும் தகுதியை இழந்து விடுகிறார்.
குர்ஆன் சொர்க்கவாசிகளைப் பற்றி பேசும் அநேக இடங்களில் நல்லறங்களைப் புரியும் முஃமின்களே சொர்க்கத்திற்குத் தகுதியானவர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றது.
இணை கற்பிக்காதவரே குர்ஆன் கூறும் முஃமின்கள் பட்டியலில் இடம் பெறுவார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
“நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன” என்று நற்செய்தி கூறுவீராக!அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் “இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது” எனக் கூறுவார்கள்.ஹஇதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 2 25
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம்.ஹஅவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள்.அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர்.மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.
அல்குர்ஆன் 4:57
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே சொர்க்கவாசிகள்.அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.எவரையும் அவர்களின் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்துவதில்லை.
அல்குர்ஆன் 7:42
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது.இதுவே மகத்தான வெற்றி.
அல்குர்ஆன் 9 72
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக இன்பம்ஹநிறைந்த சொர்க்கச் சோலைகளில் அவர்களின் இறைவன் அவர்களைச் சேர்ப்பான். அவர்களுக்குக் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.
அல்குர்ஆன் 10:9
நல்லறங்கள் புரிந்து நம்பிக்கை கொண்டவராக அவனிடம் வருவோர்க்கே உயர்வான பதவிகள் உள்ளன. நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி. அல்குர்ஆன் 20:75,76
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் “அய்யாமுத் தஷ்ரீக்’ நாட்களில் அனுப்பி, “இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்; “மினா’வின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்” என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.
அறிவிப்பவர் கஅப் பின் மாலிக் (ரலி),
முஸ்லிம் 2100
உறுதியான நம்பிக்கை
நம்பிக்கை கொண்டால் மாத்திரம் போதாது. கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருப்பதும் மிக முக்கியமானதாகும்.
எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பின்னர் உறுதியாகவும் நின்றோருக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்களே சொர்க்கவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாகும்.
அல்குர்ஆன் 46:13,14
இறைவனிடம் இறைஞ்சுதல்
சில இடங்களில் சொர்க்கம் நுழைய அல்லாஹ்விடம் இறைஞ்சுதல், தர்மம் செய்தல் போன்ற தகுதியும் வேண்டும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.ஹ
அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்.நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார். அல்குர்ஆன் 32 16, 17
பொறுமை
சொர்க்கம் செல்ல பொறுமை எனும் தகுதியும் மிக அவசியம். இதையும் சொர்க்கவாசிகளின் பண்பாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.ஹ
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.ஹஉழைத்தோரின் கூலி அழகானது. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்.தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
அல்குர்ஆன் 29:58, 59
பின்வரும் செய்தியிலிருந்தும் பொறுமை சொர்க்கவாசிகளுக்குரிய தகுதி என்பதை அறியலாம்.ஹ
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிப் பெண்களிடம், “உங்களில் ஒருவருடைய மூன்று பிள்ளைகள் (பருவ வயதை அடைவதற்குமுன்) இறந்தும் அப்பெண் நன்மையை எதிர்பார்(த்து பொறுமை கா)த்தால், அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்.ஹ
அப்போது அப்பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! இரு பிள்ளைகள் இறந்தாலுமா?” என்று கேட்டார். “இரு பிள்ளைகள் இறந்தாலும்தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.ஹ
அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி),
முஸ்லிம் 5129
அல்லாஹ்விடமே திரும்புதல்
எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் இறைவனிடமே திரும்பும் குணம் சொர்க்கவாசிகளின் குணம் என அல்லாஹ் கூறுகிறான்.பிறகு எப்படி அதைக் குறிப்பிடாமல் இருக்க இயலும்?
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, தமது இறைவனை நோக்கித் திரும்பியோரே சொர்க்கவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 11 23
இறைபயம்
மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவோம் என்ற இறை பயம் சொர்க்கம் செல்வோரின் முக்கியத் தகுதியாக அங்கம் வகிக்கின்றது.ஹ
தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அல்குர்ஆன் 55:46
உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 3 133
(இறைவனை) அஞ்சுவோர் சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அல்குர்ஆன் 15:45
அல்லாஹ், ரசூலுக்கே முதலிடம்
அல்லாஹ் ரசூலுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அதை ஏற்க மாட்டார்கள், அவர்கள் பெற்றோராக இருப்பினும் அல்லாஹ் ரசூலுக்கே முன்னுரிமை வழங்குவார்கள் என்று அல்லாஹ் சொர்க்கவாசிகளை பற்றி தெரிவிக்கிறான்.ஹ
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமுதாயத்தினர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர்.அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே!அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான்.ஹதனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.ஹஅவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்.அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். அல்குர்ஆன் 58:22
இனிய பண்புகள்
திருக்குர்ஆனின் மேலும் சில இடங்களில் அல்லாஹ் சொர்க்கவாசிகளின் பண்புகளை, சொர்க்கம் செல்ல தகுதியானவர்களை மிக விரிவாகவே விளக்குகிறான்.பல்வேறு குணங்களை குறிப்பிட்டு அவை யாவும் சொர்க்கம் செல்ல விரும்புவோரிடம் குடிகொண்டிருக்கும் என்பதாக அல்லாஹ் தெரிவிக்கிறான்.ஹ
அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள்.உடன்படிக்கையை முறிக்க மாட்டார்கள்.இணைக்கப்பட வேண்டும் என அல்லாஹ் கட்டளை இட்டவற்றை (உறவினரை) இணைத்துக் கொள்வார்கள்; தமது இறைவனுக்கு அஞ்சுவார்கள்; கடுமையான விசாரணைக்கும் அஞ்சுவார்கள்.அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள்.ஹதொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள்.ஹஅவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு. அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள்.வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும் அவர்களிடம் வருவார்கள். நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு) நல்லதாக உள்ளது (என்று வானவர்கள் கூறுவார்கள்).ஹ
அல்குர்ஆன் 13 20,21,22,23,24
அல்முஃமினூன் எனும் 23வது அத்தியாயத்தின் துவக்கத்தில் முஃமின்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று சொல்லிவிட்டு அந்த வெற்றிக்கு வித்திட்ட குணங்கள் யாவை என்பதை அல்லாஹ் பட்டியலிட்டு கூறுகிறான். இவைகள் தான் முஃமின்களை வெற்றி பெறச் செய்து சொர்க்கம் நுழைய தகுதியாக்கியது என்று பின்வரும் வசனங்கள் சான்றளிக்கின்றன.ஹ
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்.
(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள்.அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள்.பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்குர்ஆன் 23:1 11
சொர்க்கவாசிகள் மூவர்
ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் சொர்க்கவாசிகளின் தகுதிகளை அதிகம் காண்கிறோம். நபிகள்ஹநாயகம் ஸல் அவர்களும் சொர்க்கம் செல்ல தகுதி பெறச் செய்யும் பண்புகள் யாவை என்பதை விலாவரியாக விளக்கிக் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்தியில் சொர்க்கம் செல்லும் மூன்று நபர்களை பற்றி விளக்கி இம்மூன்று குணங்கள் முக்கியத் தகுதி என்பதை வலியுறுத்துகிறார்கள்.ஹ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:
மேலும், சொர்க்கவாசிகள் மூவர் ஆவர்.ஒருவர், நீதிநெறி வழுவாமல் வாரி வழங்கி நல்லறம் புரிய வாய்ப்பளிக்கப்படும் அரசர்.இரண்டாமவர், உறவினர்களிடமும் மற்ற முஸ்லிம்களிடமும் அன்புடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்பவர். மூன்றாமவர், குழந்தை குட்டிகள் இருந்தும் (தவறான வழியில் பொருளீட்டிவிடாமல்) தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்கின்ற மனிதர்.ஹ
அறிவிப்பவர் இயாள் பின் ஹிமார் (ரலி), முஸ்லிம் 5498
(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
அல்லாஹ் ரசூலுக்குக் கட்டுப்படுதல்
அல்லாஹ் ரசூலுக்குக் கட்டுப்படும்போதுதான் ஒருவன் உண்மை முஸ்லிமாக இருக்கிறான். சொர்க்கம் செல்ல தகுதி பெறச் செய்யும் குணங்களில் அல்லாஹ் மற்றும் அவன் தூதருக்கு கட்டுப்படுதல் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.
இதை பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் வலியுறுத்துகின்றன.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் யார் கட்டுப்படுகிறாரோ அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்.
அல்குர்ஆன் 48:17
இவை அல்லாஹ்வின் வரம்புகள்.அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
அல்குர்ஆன் 4:13
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர” என்று கூறினார்கள்.மக்கள், “அல்லாஹ்வின் தூதரே!ஏற்க மறுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி), புகாரி 7280
இறையில்லம் அமைத்தல்
அல்லாஹ் மட்டுமே வணங்கப்படவும், துதிக்கப்படவும் பள்ளிவாசலை கட்டிட பொருளாதார உதவியை செய்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை பரிசாக அளிப்பதிலிருந்து சொர்க்கவாசிகளின் தகுதிகளில் இதுவும் அடங்கும் என்பதை புரியலாம்.
உஸ்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (நபியவர்களின் காலத்திலிருந்த அமைப்பை மாற்றி விரிவுபடுத்திக்) கட்டத் திட்டமிட்டபோது அது குறித்து மக்கள் (ஆட்சேபனை) கூறினர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்) “நீங்கள் (உங்கள் எதிர்ப்பை) அதிகமாக்கி விட்டீர்கள். யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்), புகாரி 450
பள்ளியுடன் தொடர்பு
சொரக்கம் செல்லும் தகுதி பெற்றவர் பள்ளிவாசலுடன் அதிகத் தொடர்பில் இருப்பார் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் பள்ளிவாசலுக்கு (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாளிகையை ஆயத்தப்படுத்துகிறான்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), புகாரி 662
நோயாளியை நலம் விசாரித்தல்
நோய்வாய்ப்பட்டவர்களை நலம் விசாரிப்பது சொர்க்கவாசிகளின் குணமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர், திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி), முஸ்லிம் 5017
நல்லறங்களின் சங்கமிப்பு
ஒரு அடியார் நல்லறங்கள் சங்கமிக்கும் சங்கமமாக இருப்பார் எனில் அவர் சொல்லும் தகுதியைச் சந்தேகமறப் பெறுகிறார் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
அபூபக்கர் ரலி அவர்கள் தொடர்புடைய நிகழ்வில் நபிகள் நாயகம் கூறிய இத்தகவலை பின்வரும் நிகழ்வில் அறிந்து கொள்கிறோம்.
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள்.
அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி), முஸ்லிம் 1865
உபரி தொழுகைகள்
கடமையல்லாத நாமாக விரும்பித் தொழும் உபரியான தொழுகைகளும் சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்யும் ஓர் தகுதியாகும். இதைத் தெரிவிக்கும் சான்றுகள் கணக்கற்ற வகையில் இருந்தாலும் பிலால் (ரலி) அவர்களின் நிகழ்விலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
(ஒரு நாள்) அதிகாலைத் தொழுகையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக. ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.
அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும், நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக உளு செய்தாலும், அந்த உளூ மூலம் நான் தொழ வேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகை யை)த் தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி), முஸ்லிம் 4854
சொர்க்கம் செல்பவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், எதையெல்லாம் சொர்க்கவாசிகளுக்குரிய தகுதிகளாக அல்லாஹ், ரசூல் குறிப்பிடுகிறார்கள் என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அறிந்து கொண்டோம். இந்த அடிப்படையில் நன்மைகளைச் செய்து, நல்லடியார்களாக மரணிக்கிற பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்து அருள்புரிவானாக!
No comments:
Post a Comment