பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, November 4, 2019

ஹதீஸ் மறுப்பு - 15

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -15)

குர்ஆனும் சுன்னாவும் முரண்படாது. ஆனால், சுன்னாவைப் பற்றி செய்தி அறிவிக்கும் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? இதுதான் நாம் பார்க்க வேண்டியது...

அறிவிப்பாளரைப் பொறுத்து ஹதீஸ்கள் பலமானது (ஸஹீஹ்) என்றும், பலவீனமானது (ழயீஃப்) என்றும் ஆவதைப் பார்த்தோம். 

ஒரு அறிவிப்பாளர் நேர்மையானவர் என்றும் மனன சக்தி உள்ளவர் என்றும் எப்படி அறிவது? 

ஹதீஸை அறிவிக்கும் நபர்களின் வரலாறு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அறிவிப்பாளர்களின் பலம் மற்றும் பலவீனம் என அனைத்தும் அந்த அந்த காலத்தில் வாழ்ந்தவர்களால் பதியப்பட்டே வந்திருக்கிறது. 

ஹதீஸ்கள் தொகுக்கப்படுவதற்கு முன்பாகவே, ஹதீஸ் அறிவிப்பாளர்களின் பலம் பலவீனம் பதிவாகத் தொடங்கிவிட்டது. [ இந்த பதிவு மட்டும் இல்லாமலிருந்தால் புஹாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்கள் தொகுக்கப்பட்டிருக்க இடமில்லை]

இந்த கலைக்குப் பெயர் "இல்முர் ரிஜால்". அறிவிப்பாளர்களை விமர்சிக்கும் கலைதான் இது. 

இந்த கலையின்படி ஒருவரை பலவீனமானவர் என்று சொன்னால் அதில் கேவலம் ஏதுமில்லை. அவர் அனைத்து விஷயங்களிலும் பலவீனமானவர் என்ற அர்த்தம் இதற்கு இல்லை.  ஹதீஸை மனனம் செய்து அறிவிப்பதில் மட்டுமே தடுமாற்றம் கொண்டவர் என்று அர்த்தம். 

இந்த கலையியின்படி கேவலமானவர்கள் என்று கருதப்படுபவர்கள் பொய்யர்களும், கொள்கை மாறியவர்களும், இட்டுக்கட்டுபவர்களுமே ஆவர். 

இந்த கேவலமானவர்கள் அறிவிக்கும் எந்த ஒரு செய்தியும் ஏற்றுக்கொள்ளப்படாது. 

இந்த கலையின்படி அறிவிப்பாளர்கள் மூன்றாக பிரிக்கப்படுகின்றனர். 

** பலமானவர்
** பலவீனமானவர்
** கேவலமானவர்

[][] பலமானவர் அறிவிக்கும் செய்தி ஏற்றுக்கொள்ளப்படும்.

[][] பலவீனமானவர் அறிவிக்கும் செய்தி ஒதுக்கி வைக்கப்படும்.

[][] கேவலமானவர் அறிவிக்கும் செய்தி புறந்தள்ளப்படும்.

இதில், மூன்றாவது வகையினர் கேவலமானவர்கள் என்று விமர்சிக்கப்பட்டு தனியாக அடையாளங்காட்டப்பட்டு விட்டனர். இவர்களுடைய செய்திகள் ஏற்கப்படவில்லை/ ஏற்கப்படவும் மாட்டாது. 

ஆனால், முதல் வகையினரையும் இரண்டாம் வகையினரையும் விமர்சிப்பதில்தான் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. 

அறிவிப்பாளர் ஒருவரைப் பற்றி, அவர் பலமானவர் என்றும் பலவீனமானவர் என்றும் இரண்டு விதமாகவும் விமர்சனம் இருப்பதால் இதில் முடிவு எடுப்பதில் தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது. 

அறிவிப்பாளர் ஒருவர் பலமானவராக இருந்தால்தான் அவருடைய அறிவிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டும். பலவீனமானவராக இருந்தால் அவருடைய அறிவிப்பு ஒதுக்கி வைக்கப்படும். (ஆனால், புறக்கணிக்கப்படாது) 

ஒரு செய்தியை ஏற்பதா அல்லது ஒதுக்கி வைப்பதா என்பது, அறிவிப்பாளரைப் பற்றின விமர்சனம்தான் முடிவு செய்கிறது. 

பொய்யன், கொள்கைதவறியவன், இட்டுக்கட்டியவன் என்று கேவலமாக விமர்சிக்கப்படவர்கள்  இடம்பெற்றிருந்தால் அந்த செய்தியை ஏற்பதா மறுப்பதா என்ற பேச்சுக்கே இடமில்லை. நேரடியாகவே குப்பைக்கு போய்விடும்.

இதுதான், நபி(ஸல்) அவர்களுடைய வழிமுறை தொடர்பான செய்திகளை கையாளும் வழிமுறை. 

முக்கியமான விஷயத்துக்கு வருகிறேன்...

ஹதீஸ்களை தொகுத்த இமாம்கள் பலரும் அறிவிப்பாளர்களின் விமர்சனத்தை பொதுவான வரையறையாக வைத்தும், மேலும் சில கூடுதலானா விதிகளை வகுத்தும் ஹதீஸ்களை தொகுத்திருக்கின்றனர். 

இதில்தான் ஒரு புதுவித பிரச்சினை உருவாகிறது. 

** இமாம் புஹாரியின் விதிப்படி பார்த்தால் ஸஹீஹுல் முஸ்லிம் புத்தகத்தில் "ழயீஃப்" ஹதீஸ்களும் இருக்கின்றன.

** இமாம் முஸ்லிமின் விதிப்படி பார்த்தால் திர்மிதி புத்தகத்தில் "ழயீஃப்" ஹதீஸ்களும் இருக்கிறன. 

இதுபோல, ஒவ்வொரு இமாமின் விதிப்படியும் பார்த்தால் பிற ஹதீஸ் புத்தகங்களில் "ழயீஃப்" ஹதீஸ்கள் இருக்கின்றன.

[ மீண்டும் நினைவுபடுத்துகிறேன், "ழயீஃப்" என்றால் கேவலமில்லை. "மவ்ளூ" என்ற இட்டுக்கட்டப்பட்டவைதான் கேவலமானது]

சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட ஹதீஸ் புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள், ஹதீஸ் இமாம்களின் தனித்தனி விதிகளின் பிரகாரம் ஸஹீஹ் மற்றும் ழஃயீப் என இரண்டு வகையான ஹதீஸ்களும் இருக்கும் நிலையில் அவற்றுள் எந்த புத்தகத்தை ஏற்று எந்த புத்தகத்தை மறுப்பது???

ஹதீஸ் இமாம்களின் விதிகளுள் சர்ச்சையை எழுப்பாமல், அவர்களின் விதிகள் அனைத்தையும் சேர்ந்தார்ப்போல் வைத்து, அவர்கள் தொகுத்த ஹதீஸ் புத்தகங்களில் இருந்து "ஸஹீஹ்" மற்றும் "ழயீஃப்" எனும் இரண்டு வகையான ஹதீஸ்களையும் தனியாக பிரிக்க பொதுவிதிகள் உருவாக்கப்பட்டன. [ இது பல காலகட்டங்களாக நடந்து வந்தது]

அதுதான் "உஸூலுல் ஹதீஸ்" எனப்படும் ஹதீஸ்கலை விதிகள். (أصول الحديث)

இவ்விதியின்படி, ஐந்து நிபந்தனைகள் நிறைவேறினால் ஒரு ஹதீஸானது "ஸஹீஹ்" என்ற தரத்தை அடைந்து கொள்ளும். 

அந்த ஐந்து விதிகள் : 

[1] اتصال السند
[2] عدالة الرواة
[3] تمام الضبط
[4] غير شذوذ/ عدم شذوذ
[5] عدم العلة

[1] அறிவிப்பாளர் வரிசை விடுபடாமல் இருத்தல்

[2] ஒவ்வொரு அறிவிப்பாளரும் நேர்மையானவராக இருத்தல்

[3] மனனமாகவோ அல்லது எழுத்து வடிவிலோ ஹதீஸைத் துல்லியமாகப் பாதுகாத்திருத்தல்

[4] நம்பகமான மற்ற அறிவிப்பாளருக்கு மாற்றமாக (ஷாத்) செய்தி இல்லாதிருத்தல்

[5] ஹதீஸைப் பாதிக்கின்ற குறை (இல்லத்) இல்லாதிருத்தல்

இந்த ஐந்து நிபந்தனைகளை ஒரு ஹதீஸ் கடந்துவிட்டால் அது "ஸஹீஹ்" என்ற தரத்தை அடையும். 

இந்த ஐந்து நிபந்தனைகளுள் ஏதாவது ஒன்று குறைந்தாலும் அது "ழயீஃப்" என்ற தரத்தில் மாறிவிடும். 

இந்த ஐந்து விதிகளை நான் அறிவித்ததும் இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த TNTJ சகோதரர் உடனே வேகமாக சப்தமிட ஆரம்பித்தார்...

 "எங்களது முன்னாள் அறிஞர் விதித்த ஆறாவது விதி எங்கே?" என்று சப்தமிட ஆரம்பித்தார் அந்த சகோதரர்.

"குர்ஆனுக்கு முரண்பாடாக ஹதீஸ் இருக்கக்கூடாது" என்று விதித்த விதி எங்கே என்று கூக்குரலிட்டார் அந்த அப்பாவி சகோதரர். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

No comments:

Post a Comment