பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 24, 2019

TNTJ ஹதீஸ் மறுப்பு - 18

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -18)

TNTJ விதித்திருக்கும் "குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படக்கூடாது" எனும் அருமையான ஆறாவது விதியை (or) பிரதான விதியை பார்ப்போம். 

குர்ஆனுக்கு முரண்பட்டால் அந்த செய்தியை குப்பையில் வீசுவதற்கு முஸ்லிம் சமுதாயம் தயங்காது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு தொடர்வோம்.

ஹதீஸ்களின் கட்டமைப்பு மற்றும் அதன் விதிகளை ஏற்கனவே பார்த்தோம். மனிதர்களால் உருவாக்கப்பட்ட அந்த ஹதீஸ் கலை விதிகளின் அனைத்து அம்சங்களையும் பார்த்தோம்.

இப்போது குர்ஆனின் கட்டமைப்பை பார்க்கப்போகிறோம். 

வஹியின் மூலம் குர்ஆனை இறக்கியருளிய அல்லாஹுத்தஆலா குர்ஆனின் அடிப்படை கட்டமைப்பையும் கூறியிருக்கிறான். 

உம்முல் கிதாப் (أُمُّ الْكِتَابِ) என்ற வசனங்களும் அது அல்லாத வசனங்களையும் கொண்டு குர்ஆனை கட்டமைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். 

கருத்துக்கள் தெளிவுபடுத்தப்பட்ட வசனங்களைத்தான் உம்முல் கிதாப் என்று குர்ஆன் வர்ணிக்கிறது. அந்த வசனங்களை "முஹ்கமாத்" (مُّحْكَمَاتٌ) என்று குர்ஆன் அழைக்கிறது. 

அது அல்லாமல், பல கருத்துக்களுக்கு இடமளிக்கக்கூடிய வசனங்களும் இருப்பதாகக் குர்ஆன் கூறுகிறது. அவற்றை, "முத்தஸாபிஹாத்" (مُتَشَابِهَاتٌ)
என்றும் குர்ஆன் அழைக்கிறது. 

** கருத்துக்கள் தெளிவுபடுத்தப்பட்ட வசனங்கள் [முஹ்கமாத் (مُّحْكَمَاتٌ)]

** பல கருத்துக்களுக்கு இடமளிக்கும் வசனங்கள் [முத்தஸாபிஹாத் (مُتَشَابِهَاتٌ)]

எனும் இந்த இரண்டு கட்டமைப்பில்தான் குர்ஆன் வசனங்கள் வஹியாக நபி(ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்டிருக்கிறது. 

இதுதான் நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படையான விஷயம்.

இதில், "முஹ்கமாத்" எனும் தெளிவுபடுத்தப்பட்ட வசனங்களை பற்றியதில் தவறான புரிதலும் இருக்கிறது. 

அதாவது, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற மார்க்க அடிப்படைகளையும், குற்றவியல் தண்டனை, திருமணம் மற்றும் மணமுறிவு, சொத்துப் பங்கீடு போன்றவைகளையும் பேசும் வசனங்கள் 
"முஹ்கமாத்" வசனங்கள் என்றும் ஒரு புரிதல் இருக்கிறது. 

இந்த வசனங்கள் மேலோட்டமாக பார்க்கும்போதே புரிந்து விடும் என்ற எண்ணமும் இருக்கிறது. அது உண்மையா? என்பதைப் பார்ப்போம். 

எந்த நேரம் வரை உண்ணலாம் பருகலாம் என்பன போன்ற நோன்பின் கால அளவு தொடர்பாக  வசனம் (2:187) இறங்கியபோது, கறுப்புக் கயிறையும் வெள்ளைக் கயிறையும் தலையணைக்குக் கீழே வைத்து விடிய விடிய பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஸஹாபியின் செயலை வைத்தே இந்த கருத்து தவறானது என்பது விளங்கிவிடும். 

இரவின் கருமையும் பகலின் வெண்மையும் தெளிவாகப் பிரியும் நேரம் (வைகறைப் பொழுது) என்பதுதான் அது என்று அந்த வசனம் நபி(ஸல்) அவர்களால் 
தெளிவுபடுத்தப்பட்டது. 

ஆக, மேலோட்டமாகப் படித்தாலே போதும்! சில வசனங்கள் புரிந்து விடும் என்பது அர்த்தமில்லாதது. 

"முஹ்கமாத்" என்ற வார்த்தை "செயப்பாட்டு" (Passive) வடிவத்தில் இருக்கிறது. 

இதற்கு "தெளிவானது" என்று அர்த்தம் கொடுக்க முடியாது. "தெளிவாக்கப்பட்டது" என்றே அர்த்தம் கொடுக்க முடியும். 

அப்படியென்றால், முஹ்கமாத் வசனங்கள் எவரோ ஒருவரால் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அந்த ஒருவர் யார்? 

அந்த ஒருவர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறு எவருமில்லை. 
குர்ஆனை வஹியின் மூலம் பெற்று அதை விளக்குவதும் நபி(ஸல்) அவர்களின் தூதுத்துவபணி. 

** நபி(ஸல்) அவர்களால் தெளிவுபடுத்தப்பட்ட வசனங்கள் "முஹ்கமாத்" வசனங்கள். 

** நபி(ஸல்) அவர்களால் விவரிக்கப்படாத வசனங்கள் "முத்தஸாபிஹாத்" வசனங்கள். 

நபி(ஸல்) அவர்களால் தெளிவுமடுத்தப்பட்ட வசனங்களுக்கும் சுய விளக்கம் கொடுக்கும் கூட்டம் வழிகெட்ட கூட்டமாக மாறிவிடுகிறது. 

உதாரணமாக, இரவு மற்றும் பகல் என இரு பொழுதுகளிலும் ஐந்து வேளைத் தொழுகை என்பதுதான் தொழுகை தொடர்பான குர்ஆன் வசனங்களுக்கு நபி(ஸல்) அவர்களால் கொடுக்கப்பட்ட தெளிவுரை. 

இதை மீறி, அந்த வசனங்களை சுயமாக புரிந்து கொள்கிறோம் என்று கிளம்பிய சிலர் இறுதியில் மூன்று வேளைத் தொழுகை மட்டுமே குர்ஆனில் இருக்கிறது என்று சுயமாக "தெளிவு"பெற்றார்கள். இந்த "தெளிவு" வழிகேடே. 

நபி(ஸல்) அவர்களால் தெளிவுபடுத்தப்பட்ட வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுப்பது வழிகேடு. 

இதுஅல்லாமல், பல அர்த்தங்கள் கொடுக்க முடிந்த வசனங்களும் இருக்கின்றன. அவைதான் "முத்தஸாபிஹாத்" வசனங்கள். அது என்ன பல அர்த்தங்கள் கொடுப்பது? 

ஒரு உதாரணத்தின் மூலம் இதைப் பார்ப்போம்...

குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. 

விஞ்ஞானக் கருத்துக்கள் மாறும்போதெல்லாம் குர்ஆன் வசனங்களுக்கு கொடுக்கப்படும் விளக்கமும் மாறிக்கொள்கிறது. பல அர்த்தம் கொடுப்பதற்குத் தோதான அரபு வார்த்தைகள் குர்ஆனில் இடம்பெற்றிருக்கிறது. 

** பூமியைத் தட்டையாக மனிதன் கருதியபோதும் அதற்கு குர்ஆன் வசனங்கள் முரண்படவில்லை. 

** பூமியை உருண்டையாக மனிதன் கருதியபோதும் அதற்கும் குர்ஆன் வசனங்கள் முரண்படவில்லை. 

** சூரியன் பூமியைச் சுற்றுவதாக மனிதன் கருதியபோது அதற்கு குர்ஆன் வசனங்கள் முரண்படவில்லை. 

** சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்று மனிதன் கருதியபோது குர்ஆன் வசனங்கள் அதற்கும் முரண்படவில்லை. 

சுபஹானல்லாஹ். கியாமத் நாள்வரைக்கும் எந்த ஒரு காலகட்டத்தின் சிந்தனைக்கும் முரண்படாத வகையில் வசனங்களை அமைத்த அல்லாஹ் தூயவன்.

ரைட். விஷயத்துக்கு வருவோம்...

குர்ஆன் வசனங்களிலிருந்து எடுக்க முடிந்த பல அர்த்தங்களுள் 

** உருண்டை பூமியைப் பற்றி மட்டும்தான் வசனங்கள் பேசுகிறது என்று ஒருவர் கூறினால் அது "கோளாறு". 

** தட்டை பூமியைப் பற்றி மட்டும்தான் வசனங்கள் பேசுகிறது என்று ஒருவர் கூறினால் அது "கோளாறு". 

இந்த கோளாறை மனதில் கொண்டவர் அது தொடர்பான விளக்கங்களை மட்டும் குர்ஆனில் தேடி அதை மட்டுமே விளக்கமாகவும் கருதி அந்த விளக்கத்தை மட்டுமே குர்ஆன் கூறுகிறது என்று வாதிடுகிறார். 

** தட்டை பூமியைத்தான் குர்ஆன் வசனங்கள் பேசுகிறது என்று தற்போது கூறினால் அது முரண்பாடு. 

** 1400 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த சமுதாயத்திடம் "உருண்டை பூமியை"த்தான் குர்ஆன் பேசுகிறது என்று கூறினால் அந்த காலத்தில் அது முரண்பாடு.

கியாமத் நாள் வரைக்கும் வரக்கூடிய மக்களும் முரண்பாடில்லாமல் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பல பொருள் பதிந்த குர்ஆன் வசனங்களை அல்லாஹ் அமைத்திருக்கிறான் என்பதில் உறுதியாக இருந்து, கிடைக்கக்கூடிய விளக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் வசனத்தில் இருந்தே கிடைக்கிறது என்பதை, சிந்திக்கும் திறனுள்ள மக்கள் அறிந்து கொள்வார்கள் என்று குர்ஆன் வசனம் (3:7) கூறுகிறது.

"அவனே உம்மீது இவ்வேதத்தை இறக்கியிருக்கிறான். இதில், தெளிவுபடுத்தப்பட்ட வசனங்கள் இருக்கின்றன. அவைதான், இவ்வேதத்தின் தாய். மற்றவை, முத்தஸாபிஹாத் (எனும் பல பொருள் கொண்ட வசனங்கள்) ஆகும்.
உள்ளத்தில் கோளாறு கொண்டோர்  அதற்கு ஒத்ததான குழப்பமானதை நாடியும், அதன் விளக்கத்தைத் தேடியும் பின்பற்றுகின்றனர். அதன்  விளக்கமனைத்தையும் அல்லாஹ்வைத் தவிர அறிவோர் இல்லை. கல்வி ஞானமுள்ளவர்களோ, "தங்களின் ரப்பிடமிருந்தே (விளக்கங்கள்) ஒவ்வொன்றும்" என்று நம்புவதாக கூறுகிறார்கள். சிந்திக்கும் திறனுடையோர்களைத் தவிர மற்றவர்கள் படிப்பினை பெறுவதில்லை." (3:7)

இதுதான் நாம் பார்க்க வேண்டிய விஷயம். 

தெளிவுபடுத்தப்பட்ட வசனங்களும், பல பொருள் கொண்ட வசனங்களும் குர்ஆனில் இருக்கிறது என்பதுதான் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான ஒன்று. 

அதிலும், பல பொருள் கொண்ட முத்தஸாபிஹாத் வசனங்கள் கியாமத்நாள் வரைக்கும் பற்பல அர்த்தங்களைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும். அந்த அர்த்தங்களுள் ஒன்றை மட்டும்தான் ஏற்பேன் என்று ஒருவர் கூறினால், அவர் "கோளாறு" கொண்டவர் என்று அர்த்தம். 

ஹதீஸையும் குர்ஆனையும் ஒப்பிடக்கூடிய ஒருவருக்கு ஹதீஸின் விளக்கமும் குர்ஆனின் விளக்கமும் தெரிந்திருக்க வேண்டும். 

குர்ஆனின் கருத்திற்கு மாற்றமாக ஹதீஸ் இருந்தால் அதை தூக்கிவிடலாம்தான். 

ஹதீஸின் விளக்கம் இது, குர்ஆனின் விளக்கம் இது என்று தெளிவாக விளக்கியதற்குப் பிறகு, குர்ஆனின் இன்னின்ன வசனங்களுக்கு எதிராக இந்த ஹதீஸ் இருக்கிறது என்று கூற முடிந்தால் அப்போது அந்த ஹதீஸை தூக்கிவிடலாம்தான். 

இதில்தான் பிரச்சினை...

ஒரு ஹதீஸின் விளக்கத்தையாவது ஓரளவுக்கு கொடுத்துவிட முடியும். ஆனால், குர்ஆன் வசனங்களுக்கு இதுதான் அர்த்தம் என்று கியாமத்நாள் வரைக்கும் கூறவே முடியாது. 

குர்ஆன் வசனதிற்கு இதுதான் அர்த்தம் என்று கூறினால் அது "கோளாறு".

அந்த கோளாறை வைத்து ஹதீஸை மறுப்பது "மனநலக் கோளாறு". 

ஹதீஸ் கலை விதிகளை வெங்காயத்துடன் ஒப்பிட்டு  அதை உரித்துக் காண்பித்தேன். அதுபோல, TNTJ வின் விதியை உரித்துக்காட்டத் தேவையேதுமில்லை. ஏனென்றால், அது அழுகிய வெங்காயம். அதை உரிக்க முடியாது. நேரடியாகவே குப்பைத்தொட்டிக்கு போய்விடும்.

வெங்காயம் போன்று உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத ஹதீஸ் கலை விதிகளை, "மார்க்கம்" என்று கூறி கன்னத்தில் போட்டுக்கொள்கின்றனர் ஸலபுகள். 

அந்த வெங்காயத்துடன் தன்னுடைய "அழுகிய வெங்காயத்தையும்" சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அப்படிச் செய்யாவிட்டால் ரத்தம் கக்கி சாவான் என்ற ரீதியில் பீதியைக் கிளப்புகிறது TNTJ. 

"குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்படக்கூடாது" என்பது மனநலக் கோளாறின் அடையாளம். 

இந்த "மனக் கோளாறுக்கு" மருந்தளிப்போம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

பிறை மீரான்.

No comments:

Post a Comment