பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, November 4, 2019

ஹதீஸ் மறுப்பு - 9

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -9)

மத்ஹப் இமாம்கள் பலர் இருந்தாலும் அவர்களுள் நான்கு இமாம்களின் கருத்துக்கள்(மத்ஹப்) மட்டுமே பரவலாக மாறியது. இதற்கு முக்கியமான காரணம், ஆட்சியாளர்கள் அந்த மத்ஹபுகளை அமுல்படுத்தியிருந்ததுதான்.

[இந்த நான்கு இமாம்களின் பெயரால் சொல்லப்படும் கட்டுக்கதைகளுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை]

*ஆட்சியாளர்கள் - மார்க்கச் சட்டம்*

காலம் வேகமாக செல்கிறது. ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டே இருந்தனர். நாட்டை நிர்வகிக்கும் ஆட்சியாளர்கள் இஸ்லாத்தை பரப்புவதையும் கொள்கையாக கொண்டிருந்தார்கள்.

குர்ஆனை பரப்பும் அதே நேரத்தில் குர்ஆனுக்கு விளக்கமாக இருக்கும் நபிமொழிகளையும் பரப்ப வேண்டும் என்ற நிலையில் எவற்றை நபிமொழி என்று பரப்புவது என்ற கேள்வியும் எழுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஒரு ஹதீஸை வைத்து தீர்ப்பளிக்கும்போது அந்த தீர்ப்பு வேறு ஒரு ஹதீஸைக் கொண்டு விமர்சிக்கப்படும் நிலையும் நிலவியது. குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் இருந்து  எடுக்கப்படும் சட்டம் ஒரு பொதுவான விதிமுறையின்கீழ் இருந்தால் நிர்வாகம் செய்வது எளிதாக இருக்கும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் ஏற்படுகிறது. 

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் இருந்து சட்டம் எடுக்கும் ஃபிக்ஹு கலை ஆசிரியர்களுள் சிறந்து விளங்கிய இமாம் அபு ஹனீபா மற்றும் இமாம் மாலிக் அவர்களை ஆட்சியாளர்கள் அணுகுகிறார்கள். 

[இமாம் மாலிக் அவர்களை விட இமாம் அபு ஹனீபா அவர்கள் 13 வயது மூத்தவர் என்றாலும் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்]

*இமாம் அபு ஹனீபா*

கூஃபா (இராக்) நகரத்தில் வாழ்ந்த இமாம் அபு ஹனீபா அவர்களிடம் தீர்ப்பளிக்கும் நீதிபதி பொறுப்பை ஏற்குமாறு ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவருடைய மாணவர் ஒருவரை அதே பதவியில் அமர்த்திவிட்டு அவரை சிறையில் அடைத்தனர் ஆட்சியாளர்கள். சிறையிலேயே அவர் இறந்தார். ஆயினும், அவர் உருவாக்கிய மாணவர்கள் அவருடைய வழியிலேயே பயணித்து அவருடைய ஃபிக்ஹு சட்டங்களை அவருடைய பெயராலேயே தொகுத்தனர். இவ்வாறாக தோன்றியதுதான் "ஹனபி மத்ஹப்".

[இமாமின் பெயரால் பிழையான கருத்துக்கள் பதியப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னாளில், துருக்கி கிலாபத் ஹனபி மத்ஹபின் ஃபிக்ஹு நூல்களின்படி தீர்ப்பளித்ததால் ஹனபி மத்ஹப் உலகம் முழுவதும் பரவியதாகவும் சொல்லப்படுகிறது]

*இமாம் மாலிக்*

மதீனா நகரத்தில் வாழ்ந்த இமாம் மாலிக் அவர்களிடம் குர்ஆன் ஹதீஸ்களில் இருந்து சட்டம் எடுக்க ஒரு பொதுவான விதிமுறையை வரையறுக்குமாறு ஆட்சியாளர்கள் வேண்டினர். ஆரம்பத்தில் மறுத்த அவர் இறுதியாக அதற்கு சம்மதித்தார். பல ஆண்டுகளின் உழைப்பின் பயனாக "முவத்தா" என்ற ஒரு ஃபிக்ஹு நூலை ஆட்சியாளர்களிடம் அளித்தார். 

அதிகமான ஹதீஸ்களை 
(சுமார் 1700) உள்ளடக்கி தொகுக்கப்பட்ட முதல் ஃபிக்ஹு நூல் அதுதான். 

குர்ஆனுக்கு அடுத்த நிலையில் ஒரு புத்தகம் பூமியில் இருக்கிறதென்றால் அது இமாம் மாலிக் அவர்களின் "முவத்தா" தான் என அப்போது சிலாகிக்கப்பட்டது.

எனினும், இமாம் மாலிக் அவர்கள் அந்த பாராட்டுதல்களை ஏற்கவில்லை. குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் விளக்கங்களை ஒரு புத்தகத்திற்குள் அடக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். 

அப்போதைய ஆட்சியாளர்கள் அந்த புத்தகத்தை ஒரு பொதுவான சட்ட புத்தகமாக வைத்துக்கொண்டனர். அதாவது, மாலிக் மத்ஹபுதான் அப்போதைய ஆட்சியாளர்களின் மத்ஹப். 

*இமாம் ஷாபி*

மக்காவில் வாழ்ந்த இமாம் ஷாபி அவர்கள் கல்வியை அதிகப்படுத்திக் கொள்வதற்காக மதினா சென்று இமாம் மாலிக் அவர்களிடம் மாணவராக சேர்ந்துகொள்கிறார். அவரிடம் பாடம் பயின்றதோடு அல்லாமல் ஹனபி மத்ஹபின் சட்டங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் பின்னாளில் பெறுகிறார். இளம் வயதிலேயே மார்க்கத் தீர்ப்பு அளிக்கும் நிலைக்கு உயர்கிறார். அரசாங்கப் பணிகளையும் அடைகிறார். 

ஒருகட்டத்தில், ஹனபி மத்ஹப் மற்றும் மாலிக் மத்ஹபின் சட்டங்களுக்கு மாற்றுக் கருத்துக்களை வெளியிடுகிறார். 

நபி(ஸல்) அவர்கள் மரணித்து சுமார் 150 ஆண்டுகள் கடந்த நிலையில் ஹதீஸ்களும் ஃபிக்ஹுகளும் இரண்டறக் கலந்த நிலையில் இருந்ததைக் கண்டார். 
அதாவது, ஹதீஸ்கள் மற்றும் அவற்றைக் கொண்டு எடுக்கப்பட்ட சட்டங்களும் ஒன்றுபோலவே கலந்துவிட்டதைக் கண்டார்.

அவற்றை, முஸ்லிம்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்த செயல்கள் என்ற அடிப்படையில் "முஸ்லிம்களின் சுன்னா" என்றும், குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் இருந்து பெறுவதை "நபி(ஸல்) அவர்களின் சுன்னா" என்றும் இரண்டாக பிரித்தார்.

[நபி(ஸல்) அவர்களின் சுன்னா என்பது குர்ஆன் மற்றும் ஹதீஸ். முஸ்லிம்களின் சுன்னா என்பது மேற்கண்ட இரண்டுடன் இஜ்மா மற்றும் கியாஸ் ஆகியவற்றையும் சேர்த்து புழங்குவது]

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் இருந்து சட்டம் எடுக்கும் ஃபிக்ஹு கலையை ஒரு வரையறைக்குள் கொண்டுவந்து "அல் ரிஸாலா" என்ற புத்தகத்தை எழுதினார். 

இதன் அடிப்படையில், ஃபிக்ஹு கலையை மேம்படுத்தி "அல் உம்மு" என்ற புத்தகத்தை எழுதினார். இதுதான் ஷாபி மத்ஹபின் சட்ட புத்தகமாக மாறியது. 

ஃபிக்ஹுவுடன் கலக்காமல் ஹதீஸ்களை தனியாக பிரிக்க வேண்டும் என்ற சிந்தனையை தோற்றுவித்தது இமாம் ஷாபி அவர்கள்தான். 

*இமாம் அஹ்மத் (இப்னு ஹம்பல்)*

"குர்ஆன் படைக்கப்பட்டது" என்ற வாதத்தை முன்வைத்து அதை ஏற்காதவர்களை சித்ரவதை செய்த முஃதஸிலாக்களின் ஆட்சியில் வாழ்ந்தவர் இமாம் அஹ்மத் அவர்கள். 

ஹனபி மத்ஹபின் சட்டதிட்டங்களைப் பயின்று சிறந்து விளங்கிய இமாம் அவர்கள் ஹதீஸ்களைத் தெரிந்து கொள்வதற்காக பெரும் பயணம் மேற்கொண்டார். ஒருகட்டத்தில் இமாம் ஷாபி அவர்களிடமிருந்து ஃபிக்ஹு கலையின் வரையறையையும் கற்றார். 

குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சுன்னா மட்டுமே மார்க்கம் என்பதில் உறுதி கொண்டார். இஜ்மா மற்றும் கியாஸ் ஆகியவற்றை ஹதீஸ்களுடன் இணைத்திருப்பதை ஏற்க முடியாது என்றார். எதிர்காலத்தில் இவற்றை மக்களால் இனம் காண முடியாமல் அனைத்தையும் நபிவழி என்று நம்பும் நிலை வரலாம் என்று அஞ்சினார். 

நபிகளாரின் பெயரால் சொல்லப்படும் அனைத்தும் ஹதீஸ் என்று நம்புவதை குறை கூறினார். ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசையுடன் தொகுக்க வேண்டும் என்ற யோசனையை அவர் மொழிந்தார். 

இஜ்திஹாத் என்ற பெயரில் சட்டங்களை குவிப்பதை அவர் வெறுத்தார். அதனால்தான் இவரை "இஜ்திஹாத்தின் முத்திரை" என்று அழைக்கிறார்கள். 

இமாம் அவர்கள் விரிவான முறையில் நிறைய புத்தகங்கள் எழுதியிருந்தாலும் மற்ற இமாம்கள் எழுதியதுபோல் சட்டதிட்டங்களை தொகுத்து எந்த ஒரு புத்தகமும் எழுதவில்லை. 

பின்னாளில், இமாம் அவர்களின் புத்தகங்களின் கருத்துக்கள் அடிப்படையில் இவருடைய மாணவர்கள்தான் சட்ட புத்தகங்களை எழுதினர். அஹ்மது இப்னு ஹம்பல் என்ற இமாமின் பெயராலேயே "ஹன்பலி மத்ஹப்" என்று அழைக்கப்படுகிறது.

எனினும், குர்ஆன் மற்றும் ஹதீஸ்தான் மார்க்கம் என்ற கருத்தை அழுத்தமாக பதியவைத்தவர் இமாம் அஹ்மத்  அவர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

குர்ஆன் என்பது படைக்கப்பட்டதல்ல அல்லாஹ்வின் வார்த்தை தான் அது என்பதை ஆழப் பதியவைப்பதற்காக தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்த இமாம் அஹ்மத் அவர்களின் தியாகம் வரலாற்றில் அழிக்க முடியாதது. 

குர்ஆனின் விளக்கத்தை அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் ஹதீஸ்கள் முழுவதையும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்த மக்கள், வழிகெட்ட கொள்கைகளில் இருந்து தங்களுடைய ஈமானை பாதுகாத்து கொள்வதற்கு இந்த இமாம்களின் வழியில் ஒதுங்கியது நல்ல விஷயமே. 

இந்த வரலாற்றை "ஹனபி கக்கூஸ்", "ஷாபி கக்கூஸ்" என்று அசிங்கப்படுத்தும் TNTJ அன்பர்கள் சிந்திக்கட்டும்.

ரைட். விஷயத்துக்கு வருவோம்...

இந்த இமாம்கள் காட்டிய வழியில்தான்  அறிவிப்பாளர் வரிசையுடன் ஹதீஸ்கள் தொகுக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை தோன்றியது. ஹதீஸ்கள், அறிவிப்பாளர் வரிசையுடன் எழுதப்பட்டது இந்த இமாம்களின் சிந்தனையால்தான். 

ஹதீஸ் மனனம் செய்வதில் ஆர்வம் உள்ள பலரும் இந்த முயற்சியில் தங்களை ஈடுபத்திக்கொண்டனர். (அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக) 

பலரும் ஹதீஸ் சேகரிப்பில் ஈடுபட்டனர். 

நபி(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின்னர் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு ஹதீஸ்களை சேகரிக்கும் பணி தொடங்கியது. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

Part -10

https://m.facebook.com/story.php?story_fbid=759191627837308&id=100012394330588

Part -8 

https://m.facebook.com/story.php?story_fbid=757176351372169&id=100012394330588

No comments:

Post a Comment